முன்னுரை – வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்), தமிழ்க் கமலம் பதிப்பகம்.
வாசகப் பெருமக்களே நான் ஒரு நடிகன், கவிஞன், எழுத்தாளன், ஆம் உங்கள் இல்லத்துக்கு உங்கள் அனுமதியோடு உலா வருகின்ற நக்க்ஷத்திரம், உங்கள் தொலைக் காட்சியில், உங்கள் கணிணியில், உங்கள் அனுமதியோடு உங்கள் இல்லத்துக்கு வரும் உங்கள் சகோதரன், தமிழ்த்தேனீ (Thamizh Thenee) அதுவும் உங்கள் மேல் அன்பும்,அக்கறையும்,பாசமும், நேசமும், கொண்ட உங்கள் சகோதரன் தமிழ்த்தேனீ. நான் ஒரு திரைப்பட நடிகன், தமிழ் எழுத்தாளன், நாடகாசிரியர். இணையதள எழுத்தாளன், என்னுடைய படைப்புகளில் மனிதம் தான் சிறந்தது என்று வலியுறுத்தி உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்.
‘அனைத்துயிருக்கும் அவனே ஆதி!
அவனைவிடவா உயர்ந்ததது ஜாதி?’
நம் இந்திய தேசத்தின் சுதந்திரம் பிறந்த வருடம் 1947, நான் பிறந்த வருடமும் 1947, எனக்கும் சுதந்திரத்துக்கும் வயது 67, திரு ரங்கசாமி கமலம்மாள் தம்பதிகளின் புதல்வன் “கிருஷ்ணமாச்சாரி” என்னும் “தமிழ்த்தேனீ “. இந்த ப்ரபஞ்சத்திலுள்ள மலர்களில், தமிழ் மொழியில் தமிழ்ப்பூக்களில் உள்ள மகரந்தத்தை சுவைத்து அதிலுள்ள தேனை உரிஞ்சி சேகரித்து வைத்து அந்தத் தேனை உங்களுக்கு அளித்து மகிழ மனம் கொண்டதனால், தமிழ்த்தேனீ என்று மிகவும் விரும்பி பெயர் வைத்துக் கொண்டேன்.
நான் பிறந்து இதுவரை வாழ்ந்து அன்றாடம் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை என் மனதில் இருத்திக்கொண்டு அவற்றை அசைபோட்டு அதன் வாயிலாக கிடை டத்த உணர்வுகளை, பெற்ற ஞானத்தை, உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு என்னுடைய சிறு வயது முதற்கொண்டு நடந்த அனைத்து ரசமான நிகழ்வுகளை அப்படியே உங்களிடம் பகிர என்னுடைய நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைத்திருக்கிறேன், அவற்றில் பல உங்களுக்கு பயன்படலாம் என்னும் கருத்தில் உங்களுடன் பகிர்கிறேன்.
உறக்கமில்லாத,விழிப்புமில்லாத ஒரு மோன நிலையில் நான் என்னுள் மூழ்கியிருந்த ஒரு இதமான வேளையில், என் நினைவுத் தடாகத்தில் சிந்தனை மீன்கள் நீந்தத் தொடங்கின, வாழ்க்கை என்னும் தடாகத்தில் கல்லெறிவோரும் உண்டு, மீன் பிடிப்போரும் உண்டு, முங்கிக் குளித்து பேறு பெருவோரும் உண்டு,பாசம் வழுக்கி நீரில் அழுந்தி எழமுடியாது போவோரும், தளைகளை அறுத்து மீண்டும் எழுவோரும் உண்டு,அது அவரவர் வழி,அதை விதி என்று ஏற்போரும் மதியின் அதிகப்ரசங்கித்தனம் என்று வாதிடும் முற்போக்குச் சிந்தனை கொண்டோரும், அனைவருமே தம்முடைய நினைவுத் தடாகத்தில் மூழ்கி சிந்தனைப் பெருங்கடலில் கலக்க முயல்வர் எனபது தெளிவு.
நான் என்னுடைய வாழ்க்கைத் தடாகத்தில் ஓரளவு முங்கி,மூச்சு முட்டும்போது வெளியே எட்டிப்பார்த்து, கடினமான மற்ற நேரங்களில் மல்லாந்து படுத்து மிதந்து, தாமரை அல்லித் தண்டுகள் போன்ற தாவரங்களின் வேர்களிலிருந்து வரும் தண்டுகள் போன்ற பலவிதமான இன்னல்களிள் மாட்டிக்கொண்டு, முயன்று விடுவித்துக்கொண்டு, அந்த வாழ்க்கைத் தடாகத்திலே ஓரளவு நேர்மை என்னும் குணத்தை கைக்கொண்டு, நீந்திக்கொண்டிருப்பவன்.
அதனால் நீர்க்குமிழிகள் போன்ற நினைவலைகள் எப்போதும் என்னைச் சுற்றி ஊதியும், பெருத்தும் உடைந்தும், மீண்டும் துளிர்த்தும், அதன் சுவாரஸ்யத்தில் நான் என்னை மறந்து அந்தக் கதிரவனின் ஒளிக்கதிர்களால் ஏற்படும் வர்ணஜாலங்களை ரசித்துக்கொண்டே என் மனதைப் பறிகொடுத்து அந்த நீர்க்குமிழிகளிலேயே உட்புகுந்து, வெளிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என் உள் மனம்.
என்னதான் உடைந்து போனாலும், உருவானாலும் அந்த நீர்க்குமிழிகளின் துகள்களிடையே நினைவுத்தடமாய் அணுவிலும் அணுவாய் இருந்தாலும் அவற்றிலும் அப்படியே அழுந்தி ஆழமாய்ப் பதிந்து இரண்டறக் கலந்து என் ஆழ் மனதுக்குள்ளே அப்படியே நினைவுத் தடமாய்ப் பதிந்து இருக்கும் உணர்வுகள், எண்ணங்கள் அனைத்தையும் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு ஊறிப்போய் அப்படியே மீண்டும் நீர்க்குமிழியாய் வெளிவந்து ஊதும்போது அந்த நீர்க்குமிழிகளில் நிறைந்து மறுபடி மறுபடி புதுப்பித்துக்கொண்டு கால ஓட்டத்தின் நினைவுகளையும் கனவுகளையும் சுமந்துகொண்டு ஒளிர்ந்துகொண்டிருக்கிறேன்.
அதனால் எப்போது உடையும் என்றே தெரியாத நீர்க்குமிழி ஆனாலும் உள்ளே பொதிந்திருக்கும் நினைவு தடங்களின் தாக்கம் குறையாமல் மீண்டும் மீண்டும் புதியதாய்த் தோன்றிக்கொண்டே இருக்கிறேன், அதனால் என் சுழற்சிக்கு முடிவே கிடையாது. ஆம் அந்த முடிவில்லாத சுழற்சியும், அவை பதிக்கும் நினைவுத் தடங்களும் எப்போதும் இளமை குன்றாதவை, ஆர்வமும், ஆச்சரியமும், அதிர்ச்சியும், ஆனந்தமும், ரகசியமும், இளமைத் துள்ளலும், எப்போதும் என் கைவசமிருக்கும் அரிய சொத்துக்கள்.
அந்த நினைவு சுரங்கத்தை தோண்டிக்கொண்டே இருப்பதால் அவ்வப்போது சிலபல நல்ல நிகழ்வுகளும், வாழ்க்கையின் ரகசியம் புரியவைத்த இடர்ப்பாடுகளும், இனிய நிகழ்ச்சிகளின் இனிய நினைவுகளும், அனுபவ பாடங்களாக இழையோடிக்கொண்டே இருப்பதால் அந்த நினைவுகளை உங்களோடு பகிர வேண்டும் என்னும் விழைவால் பகிர்கிறேன், கூடவே வந்து அனுபவிக்கத் தயாராய் இருப்பவர்கள் வாருங்கள்.
அழைத்துச் செல்கிறேன், முரண்பாடான மாற்று எண்ணம் கொண்டவர்களும் முரண் தீர்ந்தால் மீண்டும் என்னோடு இணையுங்கள், ப்ரயாணத்தை தொடர்வோம், இப்ரயாணத்தில் உங்களின் அனுபவமும் இணைவதால் என்னுடைய அனுபவம் நிச்சயம் வளரும், உங்களுக்கும் ஏதேனும் நல்ல அனுபவம் கிடைக்கலாம்.
ஒரு எழுத்தாளன் எந்த மொழியில் எழுதினாலும் அவன் அந்த மொழியில் உள்ள சொற்களை எடுத்தாளாமல் ஒரு கவிதையோ, கட்டுரையோ, கதையோ அல்லது எந்தப் படைப்புகளும் உருவாகாது, அதனால் எழுத்தாளர்களை எடுத்தாளர்கள் என்றும் அழைக்கலாம் தவறில்லை என்று தோன்றுகிறது, எழுத்தாளனாக இருந்தாலும், எடுத்தாளனாக இருந்தாலும் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்க ஆரம்பிக்கும் முன்னர், அவன் மூளையில் அவன் படைக்கவிருக்கும் படைப்பைப் பற்றிய சிந்தனை ஊற்றாகப் பெருக்கெடுக்க வேண்டும், உள்ளுக்குள்ளே உணர்ந்து உணர்ந்து, உருப்போட்டு, உருப்போட்டதை உள்வாங்கி உள்வாங்கியதை ஒரு கர்ப்பிணியின் ப்ரசவ காலம் போல பல வலிகளைத் தாங்கி, அந்தப் படைப்பை அவன் தன்னுடைய குழந்தையைப் போல ப்ரசவித்து, ப்ரசவித்த அந்தக் குழந்தையை, ஒரு தாய் எப்படி சீராட்டி பாலூட்டி, கவனமாய் வளர்க்கிறாளோ அப்படி மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை, அவனுடைய கற்பனைக் குழந்தையை படித்துப் பார்த்து அதன் குறைகளைக் களைந்து, ஒரு சிறந்த படைப்பாக, அந்தப் படைப்புக் குழந்தையை மிளிரச் செய்வதுதான், ஒவ்வொரு படைப்பாளியின் முக்கியமான கடமை.
அது மட்டுமல்ல அவன் படைப்பை படிக்கும் வாசகன் அந்தப் படைப்பை படித்து அதன் மூலமாக ஒரு புத்தி கொள்முதல் பெற்றால், அது அந்தப் படைப்பாளிக்கு வெற்றி! அந்தப் படைப்பு இறை அருள், உழைப்பு, கடினமான உழைப்பு, கற்றல், கற்றவற்றை ஆராய்ந்து அறிதல், போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்னும் மெருகேறி உள்ளுக்குள்ளே இயல்பாக ஊறி, ஊற்றாகப் பெருக்கெடுத்து நதியாகப் புறப்பட்டு அதே வேகத்துடன் தாமாய் இயல்பாக வந்து விழும் சொற்கள் கொண்ட படைப்புகள் தரமான படைப்புகளாக மலர்கின்றன,கருத்துக்கேற்ப சொற்கள் தாமாக வந்து அமையுமானால் அந்தப் படைப்பு சிறந்த படைப்பாக வெளிவர வாய்ப்புகள் அதிகம்..
”அதாவது ஒரு கற்பனாவாதி எழுத்துக்களை ஆள்கிறான் என்பதை விட, எழுத்துக்கள் ஒரு நல்ல கற்பனாவாதியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கற்பனாவாதியை ஆண்டு தரமான படைப்புகளாக தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன, எழுத்துக்கள் எழுத்தாளனை ஆள்கிறது” என்றுதான் தோன்றுகிறது, நம் ரத்தத்தில் உள்ள நம் முன்னோர்களின் ஜீவ அணுக்களால் விளைந்த இந்த தேகத்தில்,அந்த முன்னோர்கள் கற்ற கலைகள், தாமாகவே உள்ளிருந்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வெளிப்படுவதும் உண்டு.
என்னுடைய தாயார் ஒரு எழுத்தாளர், அவருக்கு இயல்பாகவே கதை, கவிதை நாடகம், கட்டுரை, எழுதும் திறமை இருந்தது, ஒரு காலத்தில் அவர் எழுதிய அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனும் நிலை இருந்தது, எழுத்தாளர் லக்ஷ்மி டாக்டர் திரிபுர சுந்தரி, வை மூ கோதைநாயகி அம்மாள், போன்ற எழுத்தாளர்கள் அவருக்கு நண்பர்கள்.
அவர் வாழ்நாளின் இறுதித் தறுவாயில் கூட அவர் எழுதிய ” கிருஷ்ண தீர்த்தம் ” என்னும் கதை, அமுத சுரபி, உயர்திரு சங்கராச்சாரியாரால் ஏற்படுத்தப்பட்ட ஜன் கல்யாண் என்னும் அமைப்பு, மற்றும் பாரத ஸ்டேட்வங்கி மூவரும் சேர்ந்து 1980ம் ஆண்டு நடத்திய கதைப் போட்டியில் முதற்பரிசு பெற்று திரு சங்கராச்சாரியார் அவர்களால் அவர்களின் தங்கக் கரங்களாலே தங்க நாணயம் பெற்றவர், மற்றும் அவர் எழுதிய பாடல்கள் திரு எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கப்பட்டு, திருமதி பம்பாய் சகோதரிகள் எனப்படும் திருமதி லலிதா, மற்றும் திருமதி சரோஜா அவர்களால் பாடப்பட்டு, சங்கீதா நிறுவனத்தாரால் ”தெய்வீகப்பாமாலை ” என்னும் ஒலி நாடாவாக வெளியிடப்பட்டது.
என் எழுத்துக்கள் என்னை வளர்க்கின்றன, ஒவ்வொரு நாளும் என் மனதில் அறிவு விசாலத்தை ஏற்படுத்துகின்றன, ஒரு செய்தியைப் பற்றி எழுதும்போதே அந்தச் செய்தியை தவறில்லாமல் எழுதவேண்டுமே என்னும் பொறுப்பு கூடுகிறது, அதன் விளைவாக அந்த செய்தியைப் பற்றி மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது.
ஆகவே எழுத ஆரம்பித்தாலே படிக்க ஆரம்பிப்போம், படிக்க ஆரம்பித்தாலே நிறைய எழுத செய்திகள்
கிடைக்கும், இது ஒரு அறிவுச் சக்கரம், இந்த அறிவுச்சக்கரத்தில் நாம் சுழன்றால் மேன்மேலும் நம் ஞானத்தைப் பெருக்கிக்கொள்ளமுடியும்.
‘ஆன்றோர் செரித்த அறு சுவையின் வெளிப்பாடே
இங்கே நமக்கு அகப்பாடு,
எங்கே அறிவு வெளிப்படினும் அதுவே நமக்கு முதல் ஈடு’
இறைவன் அருளால் எனக்கு கற்பனை குதிரை அபரிமிதமாக துள்ளும் என் மனதில்,அப்படிப்பட்ட நேரங்களில் பணியிலிருந்தாலும், அல்லது நல்ல தூக்கத்தில் இருந்தாலும் வரும் கற்பனையை நினைவு வைத்துக்கொண்டு உடனே எழுதி வைப்பது என் வழக்கம், அப்படி நான் எழுதிய கவிதைகள், கட்டுரைகள்,கதைகள் ஏராளம், அந்த மொத்தக் கற்பனைப் படைப்புகளையும் அப்படியே சேமித்து வைத்தேன், அவற்றையெல்லாம் இப்போது தட்டச்சுகூடத் தெரியாத நான் சுயமாகக் கணிணி கற்றுக்கொண்டு அந்தக் கணிணியிலே என் படைப்புக்களை எழுத்து வடிவில் கோப்புகளாக சேமித்து வைக்கின்றேன், அது மட்டுமல்ல இன்று இணையத்தில் பல குழுக்களில் நான், தமிழ்த்தேனீ என்னும் புனைப் பெயர் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன், என்னுடைய ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் பல பாடங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
என்னுடைய எல்லாக் கலைகளுக்கும் காரணமான, மற்றும் எங்களுக்கு கிடைத்த அனைத்து செல்வங்களுக்கும் ஆசிகளுக்கும் காரணமான ” நானும் என் எழுத்தும்” எனும் ஒலி இது என் அன்னையின் ஒலியே, அவரின் ஆக்கமே அவரின் எழுத்தே, அவரின் படைப்பே அதனால் இதை அவர்களுக்கே மன நெகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன், மீண்டும் தொடர்ந்து எழுத இறைவனின் கருணை எனக்கு உண்டு என்னும் நம்பிக்கையோடு உங்களை மீண்டும் என் எழுத்தின் மூலமாக சந்திக்கின்றேன்.
நான் பிறந்த இந்த பாரத தேசத்தின் நலனுக்காகவும், இங்கே இருக்கும் என் மக்களின் நலனுக்காகவும் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தேன்.அதன் விளைவாக ஐம்பத்து மூன்று வயது வரை நான் அனுபவித்த இன்பங்கள், துன்பங்கள், துயரங்கள், வினோதங்கள், யாத்திரைகள், ஆன்மீக உணர்வுகள், ஆகியவற்றின் மூலமாக எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பதிவு செய்து நான் வாழ்க்கையில் கற்ற பாடங்களை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் படைப்புகளாக மாற்றும் பணியில் மும்மரமாக ஈடுபட்டேன்.
“இந்த சமூகத்தில் இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி அவர்களை அவர்களின் கடமைகளை ஒழுங்காகச் செய்யவைத்து, அவர்களுக்கு நன்மை செய்யவும் நாட்டிற்கு நன்மை செய்யவும் ஆளுவோருக்கு நல்ல அறிவுரைகளை துணிச்சலோடு எடுத்துக் கூறுபவனாக தன்னை வரித்துக்கொண்டு எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
முதலாளியின் பெருமைகளை உணர்ந்து, அவர் நடத்தும் தொழிலின் மேன்மையை உணர்ந்து அதை தொழிலாளர்களுக்கு எடுத்து சொல்லி உண்மையாக உழைக்கும் படி தொழிலாளர்களை அறிவுறுத்தி மேன்மைப்படுத்தி, தொழிலாளர்களுக்காகவும் பரிந்து பேசி அவர்களுக்கும் முதலாளிக்கும் தொழிலுக்கும் நன்மை செய்வதையே தலையாய குறிக்கோளாகக் கொண்டவனாக, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே பாலமாக செயல்படும் சங்கத்தின் தலைவன் போல எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
பெற்ற தாய் தன் குழந்தைகளுக்கு வேண்டுவனவற்றை இனிமையான வேளை பார்த்து கணவனிடம் இதமாக பதமாக எடுத்துக்கூறி, தன் குடும்ப நிலவரங்களை சரியாகப் புரிந்துகொண்டு கணவனுக்கும் பாரம் இல்லாத யோசனைகளைக் கூறி குழந்தைகளின் வேண்டுகோளையும் நிறைவேற்றும் பாசமிக்க தாயைப் போல நடு நிலை தவறாத குறிக்கோளோடு எழுத்தாணியைப் பிடிக்க வேண்டும் ஒரு எழுத்தாளன்.
இப்படிப்பட்ட குறிக்கோள்களை என் மனதில் விதைத்த என் தாயார் ஆர்.கமலம்மாள் அவர்களின் அறிவுறைப்படி என்னை வடிவமைத்துக் கொண்டுதான் எழுதத் தொடங்கினேன். அதே பாதையில்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மனதில் ஒரு திடமான எண்ணத்துடன் எழுத்தாளனாக மலர்ந்தவன் நான். என்னுடைய இந்த முதல் நூலான ”வெற்றிச் சக்கரம்” சிறு கதை தொகுப்பிலும் என்னுடைய குறிக்கோளை நான் விதைத்திருப்பதைக் காண முடியும்.
ஆகவே என் எழுத்துக்களில் பாசம், பந்தம், குடும்ப நெளிவு சுளிவுகள், அனுசரித்துப் போகும் தன்மை. அறிவுறுத்தும் தன்மை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் தன்மை இருக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுத்தாணி ஏந்தியவன் நான். ஆகவே மனிதம் என்னுடைய அடித்தளம். உலகில் மனிதம் தான் சிறந்த மதம் என்பதை வலியுறுத்தி என்னுடைய கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இருக்கும்.
அன்றாடம் நாம் சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து நாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, அதே நேரத்தில் தேவையான விழிப்புணர்வு பெறும் வகையில் உங்கள் மனதுக்கும் இதமான கதைகளை வெளியிடுகிறேன்.
“வெற்றிச் சக்கரம்” சிறுகதைத் தொகுப்பு என்னும் இ புத்தகத்தை கணிணிகளிலும், கையடக்க இணையக் கருவிகளில் படிக்க எளிதாக வெளியிடுகிறேன் . என் கதைகளில் வரும் பல நல்ல வித்யாசமான அனுபவங்கள் உங்களையும் என்னையும் சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வைக்கும் அளவுக்கு நம் சிந்தனைகளைத் தூண்டப் போகின்றன.
எப்போதுமே அழகாக மின்னும் விளக்கில் சுடர் விட்டு எரியும் ஜோதியை இன்னும் ப்ரகாசமாக ஜொலிக்கவிட வேண்டுமென்றால் அந்த விளக்கில் இருக்கும் திரியை தூண்டிவிட வேண்டும். அதுபோல ஏற்கெனவே அறிவாளியான உங்களை மேலும் ப்ரகாசிக்க வைக்கவேண்டுமென்றால் நம்முடைய நல்ல உணர்வுகளை,அதாவது நகைச்சுவை உணர்வுகள், போன்ற நவரச உணர்வுகளைத் தூண்டிவிடவேண்டும் .அப்படித் தூண்டினால் நிச்சயமாக நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.. அப்படி தினமும் நாம் நம் நல்ல உணர்வுகளைத் தூண்டும் அளவுக்கு நம்முடைய மனங்கள் இணையட்டும், ஒருவருக்கொருவர் உங்களிடமிருந்து நானும் என்னிடமிருந்து நீங்களும் புத்துணர்வைப் பெறலாம்.
அன்புடன்
தமிழ்த்தேனீ
வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) – கல்கி – நூல் அறிமுகம்
வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) – நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் – 2012
இயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்
கடவுள் துணை
24/04/2011
அன்புள்ள திரு சாரி அவர்களுக்கு
நான் உங்களுக்கு கடிதமாகவே எழுதுகிறேன். நல்ல நண்பர்களுக்குள் அணிந்துரை, முகவுரை, பொழிப்புரை, பதவுரை, எல்லாம் வேண்டாம்.அது நட்புக்கு வில்லனா இருக்கும். அதுக்கு முன்னாடி உங்களைப் பத்தி வாசகர்களுக்கு நான் சொல்ல வேணாமா? எங்கண்ணன் மறைந்த திரு எம் ஆர் ராஜாமணிக்கு ஒரு நாடகக் குழு இருந்துது. அது MRR தியேட்டர்ஸ், எனக்கு ஒரு நாடகக் குழு இருந்துது, அது விஸ்வசாந்தி. நாங்கள் இருவரும் தனித்தனியே நாடகக் குழுக்கள் வைத்து இருந்தாலும் எங்கண்ணன் நாடகக் குழுவுக்கு நான் அவ்வப்போது கதை, வசனம் எழுதுவேன். அவரது நாடகங்களை இயக்கவும் செய்வேன்.
எனக்கும் எங்கண்ணனுக்கும் மிகப்பெரிய வித்யாசம் உண்டு, கதைக்குத் தகுந்தா மாதிரி ஆட்களைத் தேடுபவர் அவர். எனது நாடகக் குழுவில் இருந்த என் நண்பர்களுக்கு தகுந்தா மாதிரி பாத்திரங்களை உருவாக்குவேன் நான். In Shorts, He who more bothered About The Quality Of His Plays And I Was More Bothered About Retaining My Friends With Me.
“கீழ்வானம் சிவக்கும்” அப்பிடீங்கற கதையை எங்கண்ணன் நாடகமா போட ஆசைப்பட்டு அதை டைரக்ட் பண்ண என்னக் கூப்பிட்டார். அந்த நாடகம்தான் பிற்காலத்தில் சிவாஜி சார் நடிச்சு அதே பேர்லே வெளிவந்த சூபர் ஹிட் படம்.
அப்படி அந்த நாடகத்தை தயாரிக்க நினைச்சபோது படத்தில் சரத்பாபு நடிச்சாரே அந்தக் கதாபாத்திரத்திலே, சிவாஜி சார் மகன் கதாபாத்திரத்திலே சரிதா கணவர் கதா பாத்திரத்திலே, நடிக்க அழைத்து வரப்பட்ட இளஞர்தான் Mr சாரி. அந்தக் காலத்திலே அவர் TVS STAFF. பழகின ஒரே நாள்லே தெரிஞ்சிது பக்கா ஜென்டில்மேன்னு. ஆனா அவருக்கு கொடுக்கப்பட்டது பக்கா அயோக்கியன் Role. நல்லா நடிச்சார்,நல்ல நண்பரானார். இதான் எனக்கும் Mr. சாரிக்கும் பழக்கம் ஆரம்பிச்ச கதை.
இப்ப Mr. சாரிக்கு நேரிடையா எழுதறேன்.
Mr. சாரி இடைப்பட்ட காலங்களில் நீங்க பல குழுக்கள்ல நடிச்சது, பல டெலிவிஷன் சீரியல்கள்ல நடிச்சது, TVS லேருந்து சுய ஓய்வு பெற்றது, குழந்தைகுட்டிகளை Settle பண்ணது எல்லாருமே ஒவ்வொரு கோணத்திலேயும் உங்க கடமையை நீங்க ஒழுங்கா செய்யறவர்ன்னு உலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டியது.
இப்ப “தமிழ்த்தேனீ” ங்கற பேர்லே எழுத்தாளனா நீங்க வளந்துட்டு வந்த செய்தி மனதுலே தேனா பாஞ்சுது. “வல்லமை“ அப்பிடீங்கற தலைப்புல 52 சிறுகதைகள் எழுதி அதுக்கு உங்க அணிந்துரை வேணும் சார்ன்னு என் முன்னாடி வந்து நின்னபோது மூணு விஷயங்கள் என் மனசிலே ஓடிச்சு.
ஒரே தலைப்புல பத்து கதாசிரியர்கள் கிட்ட பத்து விதமான கதைகள் வாங்கி, ஒவ்வொரு கதையையும் இரண்டு மணி நேர டீ வீ சீரியல் நாடகமா எடுத்து, அதை ஜெயா டீவீல ஒளிபரப்ப Proposal கொடுத்திருக்கற விஷயம் Mr. சாரிக்கு எப்பிடித் தெரிஞ்சிது? அதுதான் நட்பின் ஒரே கோண சிந்தனையா?
ஒரு கதையை யோசிச்சு 52 பக்கம் எழுதறது ரொம்ப Easy. ஆனா 52 விதமான கதைகளை யோசிச்சு,அதுக்கு ஒரு ஆரம்பம் ஒரு நடு, ஒரு முடிவு கொடுத்து எழுதற் “இம்சை” இருக்கே . Mr. சாரி தைரியசாலி சார் நீங்க. உங்ககிட்ட “வல்லமை ” இருக்கு .
52 கதைகளையும் படிச்சேன், ஒவ்வொண்ணா விமர்சனம் எழுதினா அது அறுக்கும். ஒட்டு மொத்தமா எழுதறேன். நிறையையும் எழுதறேன், குறையையும் எழுதறேன். டீ வீ தயாரிப்பாளர்களுக்கு ஏன் நீங்க உங்களை கதாசிரியரா அறிமுகப் படுத்திக்கலை, அப்பிடி Proper ஆ அறிமுகப் படுத்திகிட்டு இருந்தா ராடன் டீ வீ லேயோ அல்லது அந்த மாதிரி ஒரு பெரிய தயாரிப்பு கம்பனியிலேயோ நீங்கதான் பர்மனன்ட் “கிரீயேட்டிவ் ஹெட்” அந்தத் திறமை உங்ககிட்ட இருக்கு.
வசனங்களுக்கு கொடுக்கற அழுத்தத்தைவிட மனப் போராட்டங்களுக்கு,மன உணர்வுகளுக்கு,மன அழுத்தங்களுக்கு நீங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கறதுனால் Re Recording க்கு Importance கொடுத்து Visuval ஆ ஒரு சீனைப் பார்க்க முடியுது.
கதைகளுக்கு ஆரம்பம் இருக்கு, Build up இருக்கு, Cinima இருக்கு so பூரணமா இருக்கு, பர்சனல் லைப்ல உங்க Character மாதிரியே.
குறைகள்:- ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகு நல்ல எடிட்டரா இருக்கணும். உங்க கதைகளை நீங்களே மறுபடியும் படிச்சுப் பாருங்க, 10 கதைகளையாவது நீங்களே வீசி கடாசிடுவீங்க.
Family Subject தான் நல்லா வருதே, எதுக்காக புதுசு புதுசா Frame பண்ண ஆசைப்படறீங்க? Readers Srilanka வுக்கு Visa கொடுத்தா Srilanka தான் போகணும் Malaysia போகக் கூடாது.
திருவல்லிக்கேணி, மைலாப்பூர்,, மாம்பலம், தாண்டி தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் இங்கெல்லாம் போங்க,
“மன்னி “யைப் பத்தி எழுதுங்க ஆனா “அண்ணியைப் “பத்தியும் எழுதுங்க .அதே சமயம் “மாமா”வைப் பத்தியும் எழுதுங்க.நான் அந்தக் காலத்தில பண்ணின தப்பை பண்ணாதீங்க. Brahminism தலைதூக்குது.
60க்கு அப்புறம் ஆளப் போறீங்க வாழ்த்துக்கள்.
இயக்குனர்
விசு