ஜி.நாகராஜன்

 

ஜி.நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

ஜி.நாகராஜன் நெல்லையில் இருக்கும்போதே சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ ஜூன் 8, 1957 அன்று `ஜனசக்தி’ வார மலரில் வெளியானது. ஜனசக்தி’, `சாந்தி’, `சரஸ்வதி’ போன்ற இடதுசாரி இதழ்களில் ஜி.நாகராஜன் தொடர்ந்து எழுதினார்.

1960-ல் மதுரையில் இருக்கையில் அவர் எழுதிய குறத்தி முடுக்கு என்னும் நாவலை 1963-ல் தனது ‘பித்தன் பட்டறை’ வெளியீட்டகம் மூலம் வெளியிட்டார். அவருடைய ‘கண்டதும் கேட்டதும்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை ‘பித்தன் பட்டறை’ மூலம் 1971-ஆம் ஆண்டில் வெளியிட்டார். பல்வேறு பகுதிகளாக வெவ்வேறு ஊர்களில் எழுதி கைவிடப்பட்டிருந்த கைப்பிரதிகளை திரட்டி நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலை 1974-ல் வெளியிட்டார். ஆங்கிலத்தில் சில கட்டுரைகளையும், “With fate conspire” என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார். தீரன் மார்க்ஸ் என்னும் தலைப்பில் ஒரு புனைவுகலந்த கட்டுரைநூலை அவர் எழுதி அதை சுந்தர ராமசாமி வாசித்திருக்கிறார். அது கார்ல் மார்க்ஸ் பற்றிய நூல் அல்ல, ஒரு விவசாயியைப் பற்றியது என்று அவர் கூறியிருக்கிறார்

மறுவருகை

ஜி.நாகராஜன் முறையாகவும் சீராகவும் எதையும் எழுதவில்லை, அவருடைய வாழ்க்கைமுறை அதற்கு உகந்ததாக இல்லை. ஏராளமான கைப்பிரதிகளை வெவ்வேறு இடங்களில் தொலைத்துச் சென்றிருக்கிறார். அதில் பிறருடைய கைப்பிரதிகளும் அடக்கம். அவருடைய படைப்புகள் முறையாக வாசகர்களைச் சென்றடையவுமில்லை. ஆகவே எண்பதுகளில் முழுக்க மறக்கப்பட்டவராகவே இருந்தார். 1982-ல் சி.மோகன் முயற்சியில் க்ரியா பதிப்பகம் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே என்னும் நாவலை அழகிய பதிப்பாக, சுந்தர ராமசாமி எழுதியதாகக் கருதப்பட்ட ஒரு வாழ்க்கைக்குறிப்புடன் வெளியிட்டது. மிகக்கூர்மையான மொழியில் சொல்லப்பட்ட ஜி.நாகராஜன் பற்றிய அந்த வாழ்க்கைக்குறிப்பு ஜி.நாகராஜனுக்கு வசீகரமான ஓர் ஆளுமைச்சித்திரத்தை அளித்தது. சிற்றிதழ்சார்ந்த வாசகர்கள் நடுவே அவர் புகழ்பெற்றார். தொடர்ந்து அவருடைய குறத்தி முடுக்கு நாவலும், சிறுகதைகளும் மறுபிரசுரம் ஆயின. அன்றுமுதல் இன்றுவரை ஜி.நாகராஜன் தமிழிலக்கியத்தில் தொடர்ந்து பேசப்பட்டுவரும் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக நீடிக்கிறார்

நாவல்கள்

நாளை மற்றும் ஒரு நாளே
குறத்தி முடுக்கு

சிறுகதைகள்

எங்கள் ஊர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
யாரோ முட்டாள் சொன்ன கதை
தீராக் குறை
சம்பாத்தியம்
பூர்வாசிரமம்
அக்கினிப் பிரவேசம்
நான் புரிந்த நற்செயல்கள்
கிழவனின் வருகை
பூவும் சந்தனமும்
ஜீரம்
போலியும் அசலும்
துக்க விசாரனை
மனிதன்
இலட்சியம்
ஓடிய கால்கள்
நிமிஷக் கதைகள்