சிங்கை பெர்னாட்ஷா சே.வெ.சண்முகம்
சே.வெ.சண்முகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெய்வாசலில் 1933ல் பிறந்தார். 1951ல் சிங்கப்பூருக்கு வந்த இவர், துறைமுகத்தில் பணியாற்றினார். 1961ல் கிடங்குப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்று 1991ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
1949ல் எழுதத் தொடங்கிய இவரது முதல் சிறுகதை “வேறு வழியில்லையா?” மதுரையிலிருந்து வெளியாகும் “நேதாஜி” இதழில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இவர், சிறுகதைகள், தொடர்கதைகள், குட்டிக்கதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கவிதைகள், மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், மாணவர் இலக்கிய நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், நாவல் நாடகத் தொடர்கள் என பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தார்.
சிங்கப்பூர் பெர்னாட்ஷா என புகழப்பட்ட இவர் எழுதிய பதினொரு நாடகங்களை சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அரங்கேற்றியுள்ளது. “மாப்பிள்ளை வந்தார், கல்யாணமாம் கல்யாணம், அதுதான் ரகசியம், மீன் குழம்பு, நாலு நம்பர், சின்னஞ் சிறுசுகள், குடும்பத்தில் குழப்பங்கள், சிங்கப்பூர் மாப்பிள்ளை, கள்ளோ? காவியமோ?, காடி புதுசு ரோடு பழசு, ஏமாந்தது யார்?” ஆகியவை அந்த நாடகங்கள்.
“ராஜ கோபுரம்” என்னும் நாடகத்தை சிங்கப்பூர்த் தமிழர் பேரவையும் “சிங்கப்பூர் மருமகள்” நாடகத்தை சிங்கப்பூர்த் தமிழர் பேரவையும் அரங்கேற்றியுள்ளன. “சின்னஞ் சிறுசுகள்” தொலைக்காட்சி நாடகமாகத் தயாரிக்கப்பட்டு மூன்று பாகங்களாக ஒளிபரப்பானது.
இவரது “சுகம் எங்கே?” என்னும் நாடகம் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது.
ஜார்ஜ் எலியட்சின் “அன்புச் சூழல்” உள்ளிட்ட ஆங்கிலப் படைப்புகளை தமிழில் நாடக வடிவமாக்கினார்.
அலெக்சாண்டர் டூமாவின் “மோன்ட்டி கிறிஸ்டோ பெருமகன்”, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் “புதையல் தீவு”, சார்லஸ் டிக்கன்சனின் “இரு நகரங்களின் கதை”, “ஆலிவர் டிவிஸ்ட்”, ஷேக்ஸ்பியரின் “வெனிஸ் வணிகன்”, “பன்னிரண்டாம் இரவு”, “விரும்பிய வண்ணமே”, “கிளியோபாட்ரா”, “”மன்னன் லியர்”, பாரதிதாசனின் “பாண்டியன் பரிசு”, புரட்சிக்கவி நா.பார்த்தசாரதியின் “குறிஞ்சி மலர்”, குயிலி ராஜேஸ்வரியின் “அன்பு சுடும்”, அ.சம்பந்தமூர்த்தியின் “வஞ்சிக்கொடி”, தி.மாணிக்கவாசகத்தின் “பாண்டியன் திருமகள்” ஆகியவற்றை வானொலிக்கு நாடகமாக்கியதுடன் “பொட்டு விடு தூது”, “குண்டலகேசி” ஆகியவற்றையும் வானொலிக்காகப் படைத்தார்.
இத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்த இவர் 18.06.2001ல் இவ்வுலகைவிட்டு மறைந்தார்.
பெற்ற பரிசுகள் / விருதுகள்:
- “திரையழகி” என்னும் சிறுகதை – 2ஆம் பரிசு – தமிழ் முரசு – 1951
- “கள்ள நோட்டு” என்னும் சிறுகதை – முதல் பரிசு – புதுயுகம் – 1955
- “மீண்ட வாழ்வு” சிறுகதை – முதல் பரிசு – தமிழ் மலர் – 1967
- “சிங்கப்பூர்க் குழந்தைகள்” சிறுகதை – முதல் பரிசு தமிழாசிரியர் சங்கம் – 1975
- “சான் லாய் செங்”, “பாட்டி” ஆகிய சிறுகதைகள் – முதலாம், இரண்டாம் பரிசு – சமூக வளர்ச்சி அமைச்சு
- “மற்றொன்று” சிறுகதை முதல் பரிசு – தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் – 1988
- “தமிழச்சியின் தைரியம்” சிறுகதை பாரிசில் நடத்தப்பட்ட உலகளாவிய போட்டியில் பரிசை வென்றது – 1994
- “புதிய சாவித்திரி” சிறுகதை, தேசிய கலை மன்றமும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சும் இணைந்து நடத்தியதில் $3,000.00 பரிசு பெற்றது – 1995
- “சிங்கப்பூர் பெர்னாட்ஷா” என்னும் பட்டத்தை சங்கொலி இதழின் சோலை இருசன் வழங்கினார் – 1974
- சிறந்த நாடகாசிரியர் விருது – சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் – 1984
- “எழுத்துச் சுடர்” பட்டம் – 1989 “கலைச்செம்மல்” பட்டம் – 1990 – சிங்கப்பூர் கலைஞர் சங்கம்
- “தமிழவேள் விருது” – சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் – 1996
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:
- மீன் வாங்கலையோ (நகைச்சுவைக் கதைகள்)
- சிங்கப்பூர் மாப்பிள்ளை (நாடகம்)
- இரணியூர் நாகரத்தினத் தேவர் (வாழ்க்கை வரலாறு)
- பழத்தோட்டம் (நாடகம்)
- சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதைகள்)
அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:
- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
- “மனோகரன்” இதழுக்கு சுமார் ஒன்பது ஆண்டுகளாகத் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.
என்னுரை
இடுக்கண் வருங்கால் நகுக…” என்கிறது தமிழ்வேதம்.
இடுக்கண் வராதபோது…? இயல்பாகவே சிரிக்க வேண்டும் மனிதர்கள்.
சிரிக்கிறோமா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதாக நினைத்துக்கொண்டு, எத்தனையோ திட்டங்களை மனத் தில் உருவாக்கியபடி, எண்ணற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு அவற்றில் ஒன்றைக்கூடச் சமாளிக்க வழி தெரியாமல் அன்றாடம் அவதிக்கும் அல்லலுக்கும் உள்ளாகித் தவியாய்த் தவிக்கும் நமக்குச் சிரிப்பாவது, வருவதாவது!
சிரிப்பு என்று இங்குக் கூறப்படுவது களங்கமற்ற பளிங்குச் சிரிப்பு! கள்ளமில்லாத பால் சிரிப்பு! பசுமை குலுங்கும் மலர்ச் சிரிப்பு! தெய்வீக மழலைச் சிரிப்பு! குளுமையான பனிச் சிரிப்பு!
இந்த அழகுச் சிரிப்புக்குத்தான் இன்றைய உலகில் கடும் பஞ்சம். ஆனால், தண்ணீர் படும்பாடு- விஷம் தோய்ந்த வஞ்சகச் சிரிப்பிலிருந்து வெளியேற்றும் ஆணவச் சிரிப்பு வரையுள்ள கொடுமையான சிரிப்பு வகைகளுக்கு.
அவ்வளவும் அழுக்குச் சிரிப்புகள்!
சந்திரமண்டலப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மனிதகுலம் தலைகுனிய வேண்டிய நிலைமை.
இந்த நிலைமையைத் தலைகீழாகத் திருப்புவதற்குப் பல துறைகளையும் சேர்ந்தவர்கள் பல முனைகளிலும் பாடுபட்டுக்கொண்டு தானிருக்கிறார்கள். எழுத்து அம் முனைகளுள் ஒன்று. எழுதுகோல் ஏந்துகிறவர்கள், அவர்களில் ஒரு பகுதியினர்.
அவர்களிலும் முதலிடம் பெறுகிறவர்கள் மக்களைச் சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களே!
சிரிப்பூட்டும் சேவை சிறந்த சேவை. மக்களுக்குத் தேவைப்படும் சேவை.
நகைச்சுவைக் கதைகள் எழுதுவதற்குத் தூண்டு கோலாக எனக்குத் தோன்றும் எண்ணம் இது.
“மீன் வாங்கலையோ!” என்னும் இந்தத்தொகுப்பு நூலில் நான் எழுதிய பதினைந்து சிரிப்புக் கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
சிங்கப்பூர் மலேசியச் சூழ்நிலையும் வாழ்க்கைப் பின்னணியும், நடைமுறைப் பழக்க வழக்கங்களும் இன்ன பிறவும் காணக் கிடக்கின்றன இவற்றிலே.
சாதாரணச் சம்பவங்கள் தாம். எளிய நிகழ்ச்சிகள் தாம். குடும்பமென்னும் தோட்டத்தில் சின்னஞ் சிறு செடிகளில் அழகும் மணமும் நெஞ்சை அள்ளும்படி யாகப் பூக்கும் வ்ண்ண மலர்கள் தாமே மலர்கள் தாமே சிரிப்புச் சித்திரங்கள்!
சிரிப்புச் சித்திரங்களாக இவை சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைகளில் வெளிவந்தபோது இங்குள்ள வாச கர்கள் உற்சாகம் நிறைந்த வரவேற்பும் மகிழ்ச்சி மிகுந்த ஆதரவும் வழங்கினார்கள்.
இவர்களைப்போலவே, வேறு எங்கெங்கும் உள்ள வாசகர்களும் இக் கதைகளை வாசித்துப் பார்த்தால் கட்டாயம் குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்வார்கள் என்னும் நம்பிக்கையோடு தொகுப்பு நூலாகப் படைக் கின்றது சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம்.
இம் மன்றத்தாருக்கும், இந்நூல் வெளிவரப் பெரு முயற்சி மேற்கொண்ட கவிஞர் திரு. ஐ. உலக நா தன் அவர்களுக்கும், அன்போடு சிறப்புரை, அணிந்துரை, இன்னுரை, அறிமுகம் ஆகியன வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும், அச்சிட்டுத் தந்த மாருதி அச்சகத் தாருக்கும், துணை நின்று உதவும் பாரி நிலையத் தாருக்கும், அழகாக முகப்புச் சித்திரம் வரைந்தளித்த ஓவியர் சோமு அவர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி என்றென்றும் உரியது. வணக்கம்!
அடடே, அதற்குள் வாசிக்கத் தொடங்கிவிட்டீர்களா? நல்லது. சிரிப்பொலி கேட்கிறதே…ஆமாம். விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள். வயிறு வலிக்கப் போகிறது-எச்சரிக்கை!
20-10-68
சிங்கப்பூர்
அன்பன்,
சே.வெ.சண்முகம்