சி.வைத்தியலிங்கம்

 

வைத்தியலிங்கம், சி. (1911 – 1991.05.25) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர், 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் பராசக்தி, நெடுவழி, மூன்றாம் பிறை, பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. 1990 இல் வெளிவந்த கங்காகீதம் ஒரு சிறுகதை தொகுப்பு நூலாகும்.

இவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவர். இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு. ப. . ராஜகோபாலின் சாயல்கள் காணப்படுகின்றது. தூய தமிழ்நடையைச் சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை இவான் துர்க்கனிவ்வின் On the Eve என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். இ சிறுகதை எழுத்தாளர் இலங்கையர்கோனின் உறவினராவார்.

சி.வைத்தியலிங்கம் இலங்கையின் வடபகுதியில் உள்ள ஏழாலை என்ற சிறு கிராமத்தில் பிறந்த இவர், தன் இளமைக்காலம் தொட்டே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 17வது வயதிலிருந்து சிறுகதைகள் எழுதத் துவங்கிய திரு. வைத்தியலிங்கம், புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆகியோரின் எழுத்துக்களுடனும் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் சிறப்பான புலமை பெற்றிருந்த இவர், காளிதாசரின் சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவற்றை மொழி பெயர்த்துள்ளார். ஈழத்து கு.ப.ரா. என்று அழைக்கப்பட்ட திரு வைத்தியலிங்கம் ஈழத்து சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுபவர்.

கொழும்பு மாநகர சபையில் 40 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், சில காலம் ஏழாலையில் வசித்தார். அதன் பின் 1986 இல் லண்டனுக்குக் குடிபெயர்ந்து தன் மகள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் – ஒரு மகன், இரண்டு மகள்கள். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி உடல் நிலை நலிவுற்று தன் 80 வது வயதில் காலமானார்.

கங்கா கீதம் – சிறுகதை தொகுப்பு
முதற் பதிப்பு : Nov 1990
இரண்டாம் பதிப்பு : Dec 1997

1) பாற்கஞ்சி – ( ஆனந்த விகடன் – 1940 )
2) ஏன் சிரித்தார்? – ( கலைமகள் – 1939 )
3) மின்னல் – ( ஈழகேசரி – 1939 )
4) கழனி கங்கைக்கரையில் – ( கலைமகள் – 1939)
5) பார்வதி – ( கலைமகள் – 1939 )
6) தியாகம் – ( கலைமகள் – 1940 )
7) நந்தகுமாரன் – ( கலைமகள் – 1940 )
8) ஏமாளிகள் – ( கலைமகள் – 1941 )
9) பூதத்தம்பிக் கோட்டை – ( கலைமகள் – 1941 )
10) விதவையின் இதயம் – ( ஈழகேசரி – 1941 )
11) மரணத்தின் நிழல் – ( ஈழகேசரி – 1941 )
12) அழியாப் பொருள் – ( கலைமகள் – 1941 )
13) மூன்றாம் பிறை – ( கதைக்கோவை – 1942 )
14) நெடுவழி – ( ஈழகேசரி – 1942 )
15) பைத்தியக்காரி – ( கலைமகள் – 1942 )
16) கங்கா கீதம் – ( கிராம ஊழியன் – 1944 )
17) சிருஷ்டி ரகசியம் – ( ஈழகேசரி – 1948 )
18) உள்ளப் பெருக்கு – ( ஈழகேசரி – 1956 )

1962-இல் கொழும்பில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரை

தமிழ் இலக்கியம் இப்பொழுதெல்லாம் தமிழ் பார்க்கும் போது நான் சிறுவயதில் இராமேஸ்வர தேவாலயத்தின் பிரகாரங்களைச் சுற்றி வந்த பொழுது ஏற்பட்ட ஓர் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. அந்த கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்த பொழுது, அதன் நீளமும், உயரமும், கம்பீரமும், பிரமாண்ட அமைப்பும் என் மனதிலே ‘நான் ஒரு தூசிக்குச் சமானமானவன், எவ்வளவு சிறியவன்’ என்ற உணர்ச்சியைக் கொண்டு வந்தது. இன்று இந்த மகாசபையின் முன் நிற்கும் போதும், உண்மையில் நான் எத்துனை சிறியவன் என்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படுகிறது. இங்கே இச்சபையிலே பேராசிரியர்களும், வித்துவான்களும், பிரபலமடைந்த எழுத்தாளர்களும், இன்னும் பல துறைகளிலும் முன் இடம் வகிக்கும் பெரியார் பலரும் இருக்கிறார்கள். இன்று தலைமை தாங்குவதற்கு ஒரு சாதாரண தொழிலாளியாகிய என்னைத் தலைமை வகிக்கும்படி ஏன் கேட்டிருக்கிரார்கலென்று என் மனம் சிந்திக்கிறது. நான் எழுதியதோ மிகவும் சொற்பம். அதிலும் வெற்றியடைந்தது மிக மிகக்குறைவு. ஒருவேளை எழுத்துத்துறையில், அதாவது சிருஷ்டி இலக்கியத் துறையில் தொடர்பு கொண்ட தொழிலாளிகளில் நான் பழையவர்களில் ஒருவன் என்ற காரணமாயிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். அப்படியானால் எனக்குக் கொடுத்த மதிப்பாகவே நான் கருதுகிறேன்.

இலங்கைத் தமிழ் மக்களின் சரித்திரத்திலே இன்றைய தினம் ஒரு முக்கியமான நாள். இதற்கு முன்னரெல்லாம் இப்படியான மாநாடு, எழுத்தைப்பற்றி ஆராய்வதற்கும், எழுத்தாளரை சிறப்பிப்பதற்கும் கூடவில்லை. இச்சபையிலே இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து எழுத்தாளர்களும், ரசிகர்களும், இலக்கியத்திலே ஈடுபாடுடையவர்களும் இன்று கூடியிருக்கிறோம். இலக்கியம் எதற்காக? எழுத்தாளன் ஏன் எழுதுகிறான்? கவிஞன் ஏன் பாடுகிறான்? சிருஷ்டி இலக்கியத்தில் உருவமா அல்லது கருத்தா முக்கியம்? இப்படியான பல பிரச்சனைகளைப் பற்றியும் நாம் கருத்தரங்கத்திலே கவனிக்கப் போகிறோம். இவைகளெல்லாம் ஓர் எழுத்தாளனுக்கு நிரந்தர பிரச்சனைகளாயிருக்கின்றன.
இவைகளைப் பற்றி நீண்ட காலமாக உலகத்தின் பல பாகங்களிலும் ஆராய்ந்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவைகளுக்கு இதுதான் சரியான விடை என்று எவராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

எங்களில் பலர் யுகம் யுகாந்தரமாய் வந்து கொண்டேயிருக்கும், சம்பிரதாயங்களிலும், பழக்க வழக்கங்களிலும் ஊறிப்போய், பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் சில இலட்சியங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாயிருக்கிறோம். வேறு சிலர் புதுமையான ஒரு சமுதாயத்தையும், சிருஷ்டியையும் படைப்பதற்கு ஆவேச வெறியுடன் உழைத்து வருகின்றார்கள். இன்னொரு சாரார் எழுத்தெல்லாம் ஒரு பிரயோசனத்தைக் கொடுக்க வேண்டும்; அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும், மனிதனைப் பயன்படுத்தி உயர்ச்சிபெற உதவ வேண்டுமென்று கருதுகிறார்கள். வேறு சிலர் போதனையில் இறங்குவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல, எழுத வேண்டும் என்ற ஒரு வேகத்தினால் எழுதிக்கொண்டே போகிறான் என்று கருதுகிறார்கள். இதமான எழுத்திலேதான் கலை பூரணமாய் விசாலிக்கிறதென்று வாதாடுகிறார்கள். இந்த நிலையை எங்கள் மத்தியில் மட்டுமன்றி உலகத்தின் எப்பாகத்திலும் காண்கிறோம்.

இலங்கையில் இப்பொழுது சிருஷ்டி இலக்கியத்துறையில் முன்னொரு பொழுதும் கண்டிராத உத்வேகமும், ஊக்கமும் காணப்படுகிறது. இளைஞர்கள் பலர் எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள், முக்கியமாய் சிறுகதைத் துறையில் ஓரளவு வளர்ந்திருக்கிறோமென்று மதிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் சிறுகதை மாத்திரம் இலக்கியமாகி விடுமா? இலக்கியத்தின் ஏனைய அங்கங்களாகிய நாவலும், நாடகமும், கவிதையும், சரித்திர விஞ்ஞான சம்பந்தமான நூல்களும், தரிசன நூல்களும் இப்படி எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தும் போதுதானே இலக்கியம் பூரணமான வளர்ச்சி பெற்று வருவதாக நாம் கூற முடியும். இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் போதுதான் அது சமுதாயத்தில் ஆணிவேராகி வலுவையும், ஜீவசக்தியையும் கொடுத்து அதை வளம் பெறச் செய்கிறது. ஆகவே எழுத்தாளர்கள் முக்கியமாய் இளம் எழுத்தாளர்கள் இந்த அம்சத்தைத் தங்கள் கவனத்தில் இருத்தி, இந்தக் குறையை நிவர்த்தி செய்வார்களென்று நான் எதிர்பார்கிறேன்.

ஓர் எழுத்தாளன் பாசையைச் சரளமாய் எழுதப்பழகுவதற்கும், கதைகளையோ ஏனைய சிருஷ்டிகளைச் செய்வதற்கும் பத்திரிகைகள் ஒரு நடை வண்டி போல் உதவி செய்கின்றன. இந் நாட்களில், பத்திரிகைகளும் புற்றீசல் போல் வெளிவந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் போது ஏதோ வஞ்சம் தீர்ப்பதற்காக வருகிறது போல் சொல்லத் தோன்றுகிறது. அற்ப விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுத்தாளர் பிரிந்து புதுப் பத்திரிகைகளைத் தொடங்குகிறார்கள். இதனால் ஒருவருக்கும் பயன் ஏற்படுவதில்லை. இலக்கியத்தின் தன்மையில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அது இருக்கவும்தான் வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும். அனால், துவேசதினாலோ, பொறாமையினாலோ பிரிந்து போவதால் ஒரு பத்திரிகையும் உருப்படாமல் போய்விடுகிறது. இப்படியான ஒரு போக்கு சமீப காலத்தில், எழுத்தாளரிடமும் அவர்கள் எழுத்துக்களிலும் காணப்படுவதால்தான் இதை நான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி வந்தது.

இலக்கிய விமர்சனமும் இச் சூழ்நிலையின் அடிப்படையிலே இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம். நிதானமிழந்து, வரம்புமீறிப் பரஸ்பரம் சொற்பிரயோகத்தில் இறங்கிவிடுவது இலக்கிய தர்மமாகாது. ஒரு கவிஞன் மேகத்திலே சஞ்சாரம் செய்கிறான் என்று சொல்வார்கள். மேகத்திலேதான் இடியும் மின்னலும் உண்டாகின்றன. ஓர் சொல்லுக்கு மின்னலின் வேகமும் இடியின் சக்தியும் இருக்கின்றன என்பதுதான் இதன் பொருள். நம் முன்னோர்களும் சொல்லின் பவிந்திரத்தன்மையை உணர்ந்துதான் மந்திரம் என்று அதைப் போற்றினார்கள். ஆகவே அதைப் பாவிக்கும் போது அளந்து நிதானத்துடன் பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் புனிதத் தன்மையை உணர்ந்து விமர்சனம் இயங்க வேண்டும். நாங்கள் செய்யும் சர்சைகள் எல்லாம் இலக்கிய ஆக்கத்துக்கு வழி செய்துவிட வேண்டுமேயொழிய அரும்பி வரும் முனையை முளையிலே கருக்கிவிடக்கூடாது. இப்படியான மார்க்கத்தில் விமர்சனம் இயங்கி வரும்போதுதான் உண்மையில் இலக்கிய வளர்ச்சி பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டுவரும்.

சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் இருந்த எழுத்தாளனுக்கும் மேலாக இன்றைய எழுத்தாளனுக்கும் மேலாக இன்றைய எழுத்தாளருக்குப் பல வசதிகளும் சௌகரியங்களும் ஆதரவும் இருக்கின்றன. அவன் சமூகத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளும் கூடிக் கொண்டே வருகின்றன. அவன் பொதுமக்களை நல்வழிப்படுத்துவதற்காக எழுதினாலென்ன தூண்டி ஆவேசம் மூட்ட எழுதினாலென்ன அல்லது தனது ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதினாலென்ன அவன் தன்னைப் பரி பூரணமாகச் சமுகத்துக்கு அர்ப்பணம் செய்து, தன்னை அவர்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அவனாலே ஆக்கக்கூடும், விஷ்தரிக்கக்கூடும். வளர்ச்சி பெறச் செய்யவும் கூடும். அன்றேல் ஒன்றைப் பாழ்படுத்தவோ அல்லது அழிக்கவோ கூடும். அதனால்தான் அவன் பொறுப்பு அதிகமாகிறது.

இப்பொழுதெல்லாம் நம் நாட்டுச் சரித்திரத்தின் திருப்பு முனையில் நாம் இருக்கிறோம். பெரிய பெரிய மாற்றங்கள் நம் மத்தியிலே நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. சமுக வாழ்வில் எத்தனையோ புரட்சிகள் ஏற்படலாம். நாம் போற்றிவரும் இலட்சியங்களின் மதிப்புக் குறைந்து போகலாம். ஆனால் யுகம் யுகாந்தரமாய் சில நிரந்தரமான இலட்சியங்கள் மனிதனை, மனுஷத்தன்மையில் இருந்து தவறிவிடாமல், மனிதனாக வாழ வழிசெய்து கொண்டு வந்திருக்கின்றன. மாசில்லாத பெருவாழ்வுக்கும் பண்புடைய சீரிய மனோநிலைக்கும், சில உன்னதமான கொள்கைகள் அவசியமென்பதை மனிதன் பல காலமாக உணர்ந்து வந்திருக்கிறான். சத்தியமும் அழகும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்ற தாகம் அவனுக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த உன்னதமான இலட்சியங்களையும் எண்ணங்களையும் திரும்பத் திரும்ப மனிதனுக்கு எடுத்து ஓதுவதில் உங்கள் பேனா தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன் .

(நன்றி – மல்லிகை – மே 1987)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *