எஸ்.வி. விஜயராகவாச்சாரியார் (செவிலிமேடு வேணுகோபாலாச்சாரியார் விஜயராகவாச்சாரியார்; எஸ்.வி.வி: ஆகஸ்ட் 25,1880 – மே, 31, 1950) தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர். 40/50-களில் விகடனில் இவருடைய கதை, கட்டுரை, நாவல்களைப் படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.
பொது வாசிப்புக்குரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஆங்கிலத்திலும் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
தம் வாழ்வின் இறுதிக்காலம் வரை ஹிந்து மற்றும் ஆனந்த விகடன் இதழ்களுக்காகவே எழுதிய எஸ்.வி.வி., உடல்நலக்குறைவால் மே 31, 1950-ல் காலமானார்.
தமிழ்ப் படைப்புகள்
- உல்லாஸ வேளை
- செல்லாத ரூபாய்
- ராமமூர்த்தி
- கோபாலன் ஐ.சி.எஸ்
- சம்பத்து
- ராஜாமணி
- புது மாட்டுப்பெண்
- வசந்தன்
- வாழ்க்கையே வாழ்க்கை
- பொம்மி
- சௌந்தரம்மாள்
- சபாஷ் பார்வதி
- சிவராமன்
- ரமணியின் தாயார்
- ஹாஸ்யக் கதைகள்
- தீபாவளிக் கதைகள்
ஆங்கில நூல்கள்
- Soap Bubbles
- More Soap Bubbles
- Holiday Trip
- Alliance At A Dinner
- Mosquitoes At Mambalam
- Much Daughtered
- The Marraige
- Thiry Years a Lawyer
இவரைப் பற்றி 11.08.1940 ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதிலிருந்து…
`நான் சென்னைக்கு வந்த புதிதில், `இந்த எஸ்.வி.வி யார்… உங்களுக்குத் தெரியுமா?’ என்று சென்னையில் நான் சந்தித்தவர்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி என்னைக் கேட்கும்படியாகச் செய்தது அப்போது புதிதாக வெளியாகியிருந்த `ஸோப் ப்ளஸ்’ என்கிற புத்தகம்தான். இந்தப் புத்தகத்தில் முதல் விஷயம் `கோவில் யானை’ என்னும் கதைதான். இதைப் படித்தபோது நான் சிரித்ததை இப்போது நினைத்தால்கூட வயிற்றை வலிக்கிறது. புத்தகத்தைப் படிக்கையில் இப்படிச் சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்தது. படித்து முடித்த பிறகோ, பெருமை பொத்துக்கொண்டு போயிற்று. `நம்முடைய தமிழ்நாட்டில் இப்படி எழுதக்கூடிய ஒருவர் இருக்கிறாரே?’ என்று நினைக்க நினைக்க கர்வம் ஓங்கி வளர்ந்தது. தமிழ்நாட்டைக் குறித்து முன் எப்போதும் இல்லாத கௌரவ உணர்ச்சியும் உண்டாயிற்று. `தமிழ்நாட்டின் இலக்கிய ஊற்று’ என்பது அடியோடு வற்றிப்போய்விட்டது என நினைத்ததெல்லாம் சுத்த தவறு. இவ்வளவு நகைச்சுவையுடன் எழுதக்கூடிய மனிதர் ஒருவர் இருக்கும்போது, தமிழ்நாட்டில் ஜீவசக்தி இல்லை என்று சொல்ல முடியாது.
ஒருநாள் எஸ்.வி.வி-யைப் பார்ப்பதற்காக இரண்டு நண்பர்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்றோம். இரவு 11 மணிக்கு அவருடைய வீட்டைக் கண்டுபிடித்து, கதவை இடித்தோம். எஸ்.வி.வி-யே வந்து கதவைத் திறந்தார். `யாரோ கட்சிக்காரர் அவசர கேஸ் விஷயமாக வந்திருக்கக்கூடும்’ என அவர் நினைத்திருக்கலாம். நாங்கள் விஷயம் இன்னதென்று சொன்னதும், இடி இடி என்று சிரித்தார். ராத்திரி 11 மணிக்கு வந்து கதவை இடித்து, தூக்கத்திலிருந்து எழுப்பி `ஒன்றும் காரியமில்லை. வெறுமனே உங்களைப் பார்ப்பதற்காக வந்தோம்’ என்று சொன்னால் யாருக்குத்தான் சிரிப்பு வராது?
`எங்களை எத்தனையோ தடவை காரணம் இல்லாமல் சிரிக்கச் சிரிக்க அடித்தீர்கள் அல்லவா! அதற்கு பழிவாங்கிவிட்டோம்’ என்று சொன்னேன்.
இந்தச் சந்திப்பின்போது அவரை தமிழிலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டார் கல்கி. எஸ்.வி.வி-யின் முதல் சிறுகதை `தாட்சாயிணியின் ஆனந்தம்’ என்ற தலைப்புடன் 01-07-1933-ம் ஆண்டில் வெளியானது. அதை ராஜாஜி படித்துவிட்டு அளவற்ற மகிழ்ச்சி தெரிவித்தாராம். `இவ்வளவு நன்றாக எஸ்.வி.வி இங்கிலீஷில் எழுதியதே கிடையாது’ என்று ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரும் பாராட்டினாராம்.’
25.08.1880-ம் ஆண்டு திருவண்ணாமலையில் வேணுகோபாலாச்சாரியாருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் எஸ்.வி.வி. 1934-ம் ஆண்டு வரை திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் பார்த்த அவருக்கு, வக்கீல் தொழில் ஓடவில்லை. அதற்கு, தான் பிராமணராகப் பிறந்ததுதான் காரணம் எனக் குறிப்பிடுகிறார். `பிராமணிய அடையாளங்களையும் அதன் மிச்சங்களையும் நாங்கள் எப்போதோ விட்டொழித்தும், எங்களுக்கு பிராமணப் பட்டம் வேண்டாம் என்று தொண்டை கிழியக் கத்தியும் அது எங்கள் இனத்தின்மேல் நாசமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது. சில பரம்பரைச் சொத்துகள் நம்மை விட்டுப்போகாது’ என்று அவர் குறிப்பிட்டதாக வாசந்தி தன்னுடைய `எஸ்.வி.வி எனும் ரஸவாதி’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
ஆனால், அ.மாதவய்யாவைப்போன்றோ பாரதியைப்போன்றோ தன் எழுத்திலோ வாழ்க்கையிலோ சாதியத்துக்கு எதிராக அவர் இயங்கியதாகவோ எழுதியதாகவோ தடயம் இல்லை. ரசிப்பதற்கான எழுத்து என்கிற ஒரே வகையில் அவரது பயணம் போய்க்கொண்டிருந்தது.
“பழைமைக்கும் புதுமைக்கும் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து, அதில் புதுமைதான் வெல்ல முடியும் என்கிற திட நினைவுடன், அதே சமயம் பழைமையில் ஊறியவராகவே அவர் தன் கதாபாத்திரங்களைச் சிருஷ்டித்து நடமாடவிட்டார்” என்பது க.நா.சுப்பிரமணியன் கணிப்பு. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும்விதமான பல கதைகளைக் காணலாம். `பத்மநாபன்’ என்ற கதை நல்ல எடுத்துக்காட்டு.
பத்மநாபன், சடகோப ஐயங்காரின் ஏகபுத்திரன். சடகோப ஐயங்கார், பெரிய பணக்காரர். அடிநாளில் அவர் பரம ஏழையாக இருந்தார். சொந்தப் பிரயத்தனத்தினாலேயே ஏராளமான பணத்தைச் சம்பாதித்தார். அவருக்கு இரண்டு மூன்று லட்சம் ரூபாய் சொத்து இருக்கும் என்று ஜனங்கள் மதிப்பிடுவார்கள். அவருடைய ஏகபுத்திரன்தான் பத்மநாபன். சடகோப ஐயங்கார் பணக்காரர் மட்டுமல்ல; தேசத் தலைவர்களில் முக்கியஸ்தர் என்று பேரும் பெற்றவர். `தலைவர்’ என்ற பட்டத்துக்குத் தக்கபடி சமூகச் சீர்திருத்த விஷயங்களில் ரொம்ப முற்போக்கான கொள்கை உடையவர். “சாதி வித்தியாசங்கள் அடியோடு தொலைந்தால்தான் இந்தியாவுக்கு `கதி மோட்சம்’ உண்டு. மாதர்களுக்கு நாம் பெரிய அநீதியை இழைத்துவிட்டோம்” என்பதுபோன்ற கருத்துகளை பிரசங்கங்களில் எடுத்துவிடுவார். ஆனால், சொந்த வாழ்வில் பக்கா ஐயங்காராக ஆச்சாரத்துடன் வாழ்ந்தவர்.
அவருடைய பையனான பத்மநாபனோ, பலமான பொதுவுடைமைவாதி. “சாதியாவது மதமாவது… பிராமணனாம் பிராமணம் அல்லாதவனாம், ஹரிஜனாம். இவை எல்லாம் என்ன நான்சென்ஸ்!” என்று பேசுபவன். இவற்றை அப்படியே வாழ்விலும் கடைப்பிடிப்பவன். பத்மநாபன், சாதி மறுத்துக் காதலித்து அப்பா-அம்மா சம்மதம் இல்லாமல் வாரனேஷ் என்கிற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறான். காலப்போக்கில், அந்தப் பெண் மீன் இல்லாமல் சாப்பிட மாட்டாள் என்பதில் தொடங்கி முரண்பாடு முற்றுகிறது. அவன் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, காதல் மனைவிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போகிறான்.
`என்னால் நீ ஒரு சுகமும் கண்டவளல்ல. நான் இறந்தாவது உனக்கு சுகத்தைத் தேடிக்கொடுக்கிறேன். நான் இருக்கும் வரையில் நீ வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சட்டம் இடம் கொடாது. உன் பேரில் எனக்கு ஏற்பட்ட காதல், அணு அளவும் எனக்குக் குறைவில்லை. உனக்கு ஏற்ற புருஷனை நீ மறுமணம் செய்துகொண்டு இன்ப வாழ்க்கையில் இருக்க அவகாசம் கொடுப்பதற்காக, நான் இந்த உலகத்தைவிட்டு மறையத் தீர்மானித்துவிட்டேன்’ என்கிற அவனது கடித வரிகளைப் பார்த்து மனம் திருந்தும் அவள், அவனுடைய அப்பாவுக்கு தந்தி அடித்து வரச்சொல்கிறாள். அப்பா-அம்மாவுடன் ஏற்கெனவே பத்மநாபனுக்காக என நிச்சயிக்கப்பட்ட பெண்ணான ஜயலட்சுமியும் வருகிறாள். அவளைப் பார்த்து “வாரனேஷ் நீ என் தங்கை. இன்று முதல் பத்மநாபன் எனக்கு தம்பிமுறை மாதிரி” என்று சொல்கிறாள். அந்த வருடமே பத்பநாபனுக்கும் ஜயலட்சுமிக்கும் விவாகம் நடக்கிறது.
சாதிமறுப்புத் திருமணத்தை நொடியில் அழித்துவிடுகிறார் கதையில். இதேபோன்ற ஒரு விஷயத்தை புதுமைப்பித்தன் “கோபாலய்யங்காரின் மனைவி’ என்கிற கதையில் வெகு யதார்த்தமாகச் சித்திரித்திருப்பார். புருஷனாகக் கூட வாழ்ந்தவனை சட்டென `தம்பி’ என்று சொல்வதாக நம்ப முடியாத திருப்பத்தை எல்லாம் புதுமைப்பித்தனோ கு.ப.ரா-வோ செய்ய மாட்டார்கள். `மணிக்கொடி’ப் பாரம்பர்யம் அது.
என்றாலும் மேலே தரப்பட்டுள்ள `காதல் பேச்சு’ கதையில் வருவதுபோல நுட்பமான ஒரு மன ஓட்டத்தோடு கூடியதாகத்தான் அவரது நகைச்சுவைக் கதைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. கர்னாடக சங்கீத ரசனை உள்ளவர்களை வலிப்பு வந்ததுபோல முகத்தைக் கோணலாக்கி, `கொய்… கொய்..!’ என்பவர்கள் எனக் கேலி செய்கிறார். கமலா பாத்திரம் வெகு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
அவருடைய எல்லா கதைகளுமே அக்ரஹாரத்தைவிட்டுத் தாண்டி வெளியே வராத கதைகள்தாம். அவருக்குத் தெரிந்த உலகத்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதில் தவறேதும் இல்லை. அந்த எல்லைக்குள் நின்று மாமியார்-மருமகள் சண்டை எனில், மருமகள் பக்கம் நின்று எழுதுவார். அந்த அளவுக்கு அவர் முற்போக்கு. படித்த நாகரிகமான பெண்கள் பற்றி அந்தக் காலத்து மனிதர்களுக்கு இருந்த குழப்பமான பார்வையே அவருக்கும் இருந்தது.
`தாயைப் பார்த்து மகளைக்கொள்’ என்கிற சிறுகதையில் ஒரு பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவள் தாயாரைப் பார்த்த பிறகு, `இந்தப் பெண் வேண்டாம்’ என்கின்றனர் அவனது பெற்றோர். அவளது தாய் ஒன்றும் நடத்தைக்கெட்டவள் அல்ல. ஆனால், புருஷனைப் பாடாய்ப்படுத்துபவள். கதாநாயகன், `அந்தப் பெண்தான் வேண்டும்’ என அடம்பிடித்து கல்யாணம் செய்துகொள்கிறான். கடைசியில் கதை என்ன ஆச்சு என்றால், அந்தப் பெண் எடுத்ததற்கெல்லாம் ஏட்டிக்குப்போட்டி பேசும் ஆங்காரியாக உருவாகிறாள். தாயைப்போல மகள் என்கிற பழம்பஞ்சாங்கக் கருத்து இறுதியில் வெல்கிறது கதையில்.
ஆனால், அவரது கதைகள் பற்றி இலக்கியத்தர முத்திரையைக் கையில் வைத்திருந்த க.நா.சு., சொன்ன கருத்துகள்தாம் அவரை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன எனலாம். “இந்தத் தலைமுறைக்கும் எஸ்.வி.வி-யின் எழுத்துகள் உகந்ததாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஏனென்றால், இலக்கியத்தரம் என்பது சில எழுத்தாளர்களிடம் தலைமுறைக்குத் தலைமுறை குறைவதில்லை. அப்படிப்பட்ட இலக்கிய ஆசிரியர் எஸ்.வி.வி. இலக்கியரீதியிலும் எஸ்.வி.வி சில எதிர்கால இலக்கிய ஆசிரியர்களைப் பாதிப்பது மிக மிக அவசியம் என்றும் எனக்குத் தோன்றுகிறது” என்று அழுத்தமாக எழுதுகிறார் க.நா.சு.
என்னுடைய வாசிப்பில் அவருடைய `ஹாஸ்யக் கதைகள்’, `தீபாவளிக் கதைகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சம்பத்து, `சபாஷ் பார்வதி’, `புது மாட்டுப்பெண்’ போன்ற நாவல்கள் வழியே அவரை கல்கியைப்போல அகல உழுத ஒரு வெகுஜன எழுத்தாளராக மட்டுமே அடையாளம் காண முடிகிறது. கல்கியிடம் காணும் காந்திய முற்போக்குக் கருத்துகளுக்குக்கூட எஸ்.வி.வி-யிடம் இடமில்லை.
ஆனாலும், சிறுகதை வரலாற்றில் 18 ஆண்டுகளாக பல்லாயிரம் வாசகர்களைக் கட்டிப்போட்ட கதைகளை எழுதிய ஒருவரைப் பற்றிச் சொல்லாமலே எப்படி விட முடியும்?
‘இலக்கிய சாதனையாளர்கள்’ என்ற நூலில் க.நா.சு
ஒரு பத்து பனிரெண்டு ஆண்டுகாலம் எஸ். வி. வி. என்பவர் பிரபலமாக, முக்கியமாக ஆனந்தவிடகன் மூலம் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான, நெருங்கிய பெயராக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பல கட்டுரைகள், கதைகள், தொடர்கதைகளை ஸ்டீபன்’ லீகாக், ஜெரோம்.கே.ஜெரோம் போன்ற அப்போது பிரபலமான ஆங்கில ஹாஸ்ய ஆசிரியர்களைத் தழுவி தொடர்ந்து எழுதினார். பின்னர் 1938, 1939க்குப் பிறகு அவர் எழுதிய கதைகளிலும் கட்டுரைகளிலும் அவருக்கே இயற்கையாக உள்ள ஹாஸ்யமும் சிந்தனைத் தெளிவும் இடம் பெற்றன. பொம்மி, உல்லாச வேளை, ராமமூர்த்தி, ஸம்பத்து, கோபாலன் சி.எஸ். என்று அவர் எழுதிய பல சிறிய – பெரிய தொடர்கள் உண்மையிலேயே ஜனரஞ்சகமாகவும் இலக்கியத் தரமாகவும் அமைந்தன. ஜனரஞ்சகமானது இலக்கியத்தரமானதாக அமையக்கூடாது என்பது ஒன்றும் தவிர்க்க முடியாத விதியல்ல – எஸ்.வி. வி. ஒரு சிறந்த உதாரணம்.
படித்திருக்கிறீர்களா? என்ற க.நா.சு வின் நூலில் ‘உல்லாசவேளை’ என்ற எஸ்.வி.வி யின் படைப்பைப் பற்றிய கட்டுரையின் சில பகுதிகள்:
தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ். வி. வி. யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லி யிருக்கிறார் எஸ். வி. வி.! ஹாஸ்யமாக எழுதியதால் தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பது தான் எஸ். வி. வி. யின் தனிச் சிறப்பு.
உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ். வி. வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி?’ என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்:
”பேனாவை எடுக்கும் போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷ னுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா …? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்க மாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்…”
எஸ். வி. வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும், கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும், அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகுபெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி.
நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ். வி. வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லா விட்டாலும் அநுபவிக்கக்கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ். வி. வி. இதைத் தினசரிப் பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள் தான்.
நேற்று – இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டு தான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ். வி. விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடை யாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று – இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலை முறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்று தான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ , இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லி விட்டு நகர்ந்து விடுகிறார்.
எஸ். வி. வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டது தான் – கலைக்கு அஸ்திவாரம்தான்.
உல்லாச வேளையில் நாம் அறிந்துகொள்கிறவர்கள் எல்லோரும் நம்மைவிட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ். வி. வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில் தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரை தான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ். வி. வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது.
அவர் மறைந்தவுடன், ‘கல்கி’ ஒரு நீண்ட தலையங்கத்தைக் கல்கியில் எழுதினார்.
வான வெளியிலே!
நேற்று நள்ளிரவிலே மீண்டும் வானவெளியில் மலைகளின் குரல்களைக் கேட்க நேர்ந்தது.
“பொதிகையாரே; பொதிகையாரே! விழித்திருக்கிறீரா? நான்தான் விந்திய மலை பேசுகிறேன்!”
இதற்குப் பதிலாகப் பொதிகை மலையின குரல் மிகவும் கம்மிப் போய் வந்தது: ”விழித்துக் கொண்டுதானிருக்கிறேன். இங்கே சாரல் சக்கைப்போடு போடுகிறது. மழை, காற்று, அருவி எல்லாமாகச் சேர்ந்து ஒரே சத்தம். ஆகையால் கொஞ்சம் உரத்துப் பேசுங்கள்.”
“அப்படியா? மழை அங்கே பெய்கிறதா! சந்தோஷம்! இங்கேயும் கொஞ்சம் அனுப்பிவைத்தால் நல்லது; வெப்பம் தாங்க முடியவில்லை.”
“முன்ஷி நடப்போகும் மரங்களை உன்னுடைய பக்கங்களிலேயும் வைக்கச் சொல்லு. மரங்கள் வளர்ந்து காடான பிறகு மழை பெய்யும்.”
”சரிதான்; அதற்குள்ளே என் பாடு அரோகரா ஆகிவிடும் ஆமாம்; அண்ணா மலையாருக்கு என்ன நேர்ந்தது? மறுபடியும் ஏதாவது ஆபத்து உண்டா? பல தடவை அழைத்தேன்; ஏன் என்று கேட்கவில்லையே?”
“பாவம்! அண்ணாமலையாருக்கு மறுபடியும் ஒரு பெரிய கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்ச நாளைக்கு முன்னால் ரமண ரிஷிகள் புறப்பட்டுச் சென்றாரா? திருவண்ணாமலையைச் சேர்ந்த மற்றொரு பிரசித்தமான புருஷர் சென்ற வாரத்தில் விடை பெற்றுக்கொண்டார். அதனால் அண்ணாமலை சோக-சாகரத்தில் மூழ்கிக் கிடக்கிறது!”
“அவர் யார் அப்படிப்பட்ட மனிதர்? திருவண்ணாமலைக்காரர்?”
”எஸ். வி. வி. என்று கேட்டிருக்கிறாயா? ஆனால் நீ எங்கேகேட்டிருக்கப் போகிறாய்? நீதான் நிரட்சர குட்சி யாயிற்றே !”
“எனக்குத் தெரியாவிட்டால் போகட்டும். நீதான் சொல்லேன்!”
“எஸ், வி. வி, என்பவரின் முழுப் பெயர் எஸ்.வி.விஜயராகவாச்சாரியார். பிரசித்தமான எழுத்தாளர். சிரிக்கச் சிரிக்க எழுதுவார். நகைச்சுவையே இன்னதென்று தெரியாத நீ கூட அவர் எழுதின விஷயங்களைக்கேட்டால் சிரித்து மகிழ்வாய். காஞ்சீபுரத்துக் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்பதைப் பற்றி நடந்த ஒரு கோர்ட்டு வழக்கைப் பற்றி எழுதியிருந்தார். அதைக் கேட்டு விட்டு அந்தக் கோயில் யானை கூடச் சிரித்தது என்றால் நீ சிரிப்பதற்குக் கேட்பானேன்?”
“பொதிகையாரே! அந்த எஸ்.வி.வி. என்பவர் தமிழ் மொழியிலேதானே எழுதினார்? அந்த மூன்று எழுத்து ஒரு மாதிரி தொனிக்கிறதே”
“முதலில் இங்கிலீஷ் பாஷையிலே தான் அவர் எழுதிக் கொண்டிருந்தார். எனக்குக்கூடக் கொஞ்சம் வருத்தமாயிருந்தது. பிறகு தமிழ் ரஸீகர்கள் சிலர் தூண்டியதன் பேரில் தமிழில் எழுத ஆரம்பித்தார். பிறகு இங்கிலீஷுக்கே அவர் போகவில்லை. தமிழில் எழுதினால் பெரிய பெரிய அறிஞர்கள் முதல் ஸ்திரீகள், குழந்தைகள் வரை படித்து மகிழ்கிறார்கள் என்பதைக் கண்ட பிறகு இங்கிலீஷில் ஏன் எழுதப் போகிறார்?”
“பெரிய பெரிய அறிஞர்கள் என்றால்…அப்படியார் யார்?”
“ஏன், ராஜாஜி என்ன? ரஸிகமணி என்ன?மகாகனம் சீனிவாச சாஸ்திரி என்ன? இன்னும் எஸ். வரதாச்சாரியார், வி. வி. சீனிவாசய்யங்கார் என்ன ?… இப் படி எத்தனையோ பேர் அவர் எழுதிய தைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள்…”
இந்தச் சமயத்தில் திருவண்ணாமலை யாரின் குரல் தீனமாகக் கேட்டது.
“அண்ணா! விந்தியமலையே! இமய மலையாரிடம் கொஞ்சம் விசாரித்துப் பார்! அந்தப் பக்கமாக எங்கள் ஊர் எஸ்.வி.வி. வந்தாரா என்று?”
விந்திய மலை இடயமலையிடம் கேட்டது. இமயமலை பேசுகிறது என்று குப்பென்று வந்த குளிர்ந்த காற்றிலே யிருந்து தெரிந்தது.
“ஆமாம்; அந்த எஸ்.வி.வி. இந்தப் பக்கமாக வந்துதான் வானுலகத்துக்குப் போனார். எனது சிகரத்துக்கு மேலே கொஞ்ச தூரம் போனதும் அவரைப் பற்றி ஒரு வாக்குவாதம் ஏற்பட்டு விட்டது. யம தூதர்கள் அவரை யமனுலகத்துக்கு அழைத்துப் போவோம் என்றும் தேவ தூதர்கள் சொர்க்கத்துக்கு அழைத்துப் போக வேண்டும் என்றும் தர்க்கம் செய்தார்கள். மத்தியஸ்தம் செய்ய வந்த சித்திரகுப்தன் அவருடைய அபிப்பிராயத்தையே கேட்டுவிடலாம் என்றான். ‘உம்மை எங்கே அழைத் துப் போகவேண்டும்? யமலோகத்துக்கா, சொர்க்கலோகத்துக்கா?’ என்று எஸ்.வி.வி.யைக் கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் ‘இந்தக் கேள்விக்கு ஐயாவைக் கேட்டுத்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்றார், ‘அது யார் ஐயா’ என்று கேட்டார்கள். எஸ்.வி.வி, இலேசாகச் சிரித்துவிட்டு, ‘பூலோகத்தைக் காட்டிலும் இங்கே படிப்பு அதிகம் போலிருக்கிறதே! உங்களை யெல்லாம் எம்.எல்.ஏ.க்கள் ஆக்கி விடலாம் போலிருக்கிறதே!’ என்றார். இதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ஆனால் அந்த யமலோகத் தூதர்களும் சொர்கலோகத் தூதர்களும் ஒன்றும் தெரியாமல் விழித்தார்கள். சித்திரகுப்தன் கோபித் கொண்டு இவர் ‘இவ்வளவு பீடிவாதக்காரராயிருப்பதால் யமலோகத்துக்கே கொண்டு போங்கள்!’ என்று உத்தரவு போட்டுவிட்டான்…”
இமயமலை இப்படிச் சொன்னதும், விந்தியமலை, திருவண்ணாமலை, பொதிகைமலை, நீலகிரிமலை இவ்வளவும் சோந்து “அடடா!” என்று அநுதாபப்பட்டன. “கேளுங்கள் பாக்கியையும்! அதற்குள் அழவேண்டாம். சித்திரகுப்தன் உத்தரவுப்படி எஸ்.வி.வி யை லோகத்துக்குக் கொண்டு போனார்கள். அங்கே அவர் போனதும் யமலோகத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் ஓயாமல் சிரிக்கத் தொடங்கினார்கள். லோகம் என்பதே எல்லாருக்கும் மறந்து போய்விட்டது. நரகவேதகையும் இல்லாமற் போய்விட்டது. உடனே யமன். ‘இவரை இங்கே வைத்திருக்கக் கூடாது’ என்று தீர்மானித்து எக்ஸ்பிரஸ் புஷ்பக விமானத்தில் சொர்க்கலோகத்துக்கு அனுப்பி வைத்தான். யமலோகம் எப்படித் திமிலோகப்பட்டது என்னும் விஷயம் ஏற்கெனவே சொர்க்கத்துக்கு எட்டியிருந்தது. ஆகையால் அங்கே என்ன செய்தார்கள் தெரியுமா?”
”என்ன செய்தார்கள்? சீக்கிரம் சொன்னால் தேவலை! சொர்க்கலோகத்துக்கும் ஆபத்து வந்து விட்டதா?”
“இல்லை இல்லை ! யமலோகத்தைப் போல் சொர்க்கலோகமும் சிரிப்பாய்ச் சிரிக்கக்கூடாது என்று எண்ணி அங்கே எஸ்.வி.வி. வந்ததும், நாரதரின் கையிலிருந்த வீணையைப் பிடுங்கி, எஸ்.வி.வி.யின் கையில் கொடுத்து விட்டார்கள். அதுமுதல் எஸ்.வி.வி வீணையை மீட்டிக் கொண்டு சங்கீத ஆனந்தத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் சொர்க்கம் சிரிப்பாய்ச் சிரிக்காமல் தப்பிப் பிழைத்தது!”
“இமயமலையாரே! இதை யெல்லாம் எங்களுக்குத் தெரிவித்ததற்காக மிக்க நன்றி!” என்றது பொதிகை மலை.
“நான் நெட்டைப் பனைமரம்போல் இருக்கிறேன் என்று நீங்கள் அடிக்கடி பரிகாசம் செய்கிறீர்களே? அப்படி உயரமாயிருட்பதனால்தான் யமலோகத்தையும் சொர்க்கலோகத்தையும் எட்டிப் பார்க்க முடிகிறது வித்தியமலையாரே! திருவண்ணாமலையாருக்கு என்னுடைய அநுதாபத்தைத் தெரிவித்துவிட்டு ஆறுதல் சொல்லும்!” என்றது இமயமலை.
திருவண்ணாமலை தழதழத்த குரலில், “வந்தனம்!” என்று கூறியது.
இமயமலை, “ஆமாம்; நடுவில் ஒரு தடவை நீலகிரியின் குரல் கேட்டாற்போலிருந்தது. அது உண்மையா?” என்றது. ”ஆமாம்; என் குரல்தான்!” என்று நீலகிரி கீச்சுக்குரலில் சொல்லியது.
“நீலகிரியே! உன் குரலைக் கேட்கவே இனிமையா யிருக்கிறது. உன் பக்கங்களில் ஏதாவது விசேஷம் உண்டா? ஏதோ உன் பக்கத்தில் தமிழ் மகாநாடு நடந்தது என்று கேள்விப்பட்டேனே?” என்றது விந்திய பர்வதம்.
”ஆம், ஆம். கோயமுத்தூரில் தமிழ் வளர்ச்சி மகாநாடு நடந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்குப் போட்டியாக இன்னொரு மகாநாடும் நடந்தது…” என்றது நீலகிரி.
“இது என்ன! எஸ்.வி.வி யின் ஹாஸ்யத்தை விடப் பெரிய ஹாஸ்யமாக அல்லவா இருக்கிறது? தமிழையாவது, வளர்க்கவாவது? பொதிகையாரே! உம்முடைய அபிப்பிராயம் என்ன?” என்று இமயமலை கேட்டது.
“எனக்கும் அது வேடிக்கையாகத்தானிருக்கிறது தமிழ் பூரண வளர்ச்சி அடைந்து மூவாபிரம் வருஷம் ஆயிற்று, ஆனாலும் இப்போதெல்லாம் தமிழபிராமானம் போட்டி போட்டுப் பொங்கிக் கொண்டிருப்பது சந்தோஷமான விஷயந்தான். இருந்தாலும் மக்கள் முதலில் தங்கள் இதயங்களை விசாலமாக வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒருவரை யொருவர் துவேஷிப்பது கூடாது. அது தான் இப்போது வேண்டியது. தமிழுக்கு ஒரு குறைவும் இல்லை!” என்றார் பொதிகை மலையார்.
அவர் 1950-இல் மறைந்தவுடன், விகடன் இப்படி எழுதியது :
நாம் தெரிந்து கொண்ட சிலரை அவர்கள் ஆயுட்காலத்திலேயே மறந்துவிடுகிறோம்; இன்னும் சிலரைக் காலமானவுடனே மறந்து விடுகிறோம். ஆனால், என்றைக்கும் மறக்கமுடியாதபடி நம் மனத்தில் ஆழ்ந்து தங்கியிருப்பவர்கள் சிலர் உண்டு. அப்பேர்ப்பட்டவர்களில் காலஞ்சென்ற எஸ்.வி.வி. மிகவும் முக்கியமானவர். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு என்றென்றும் நிலைத்து இருந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுமார் 17 வருஷங்களுக்கு முன் ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டு இருந்த எஸ்.வி.வி.யை எப்படியும் தமிழில் எழுதும்படி செய்யவேண்டு மென்ற எண்ணத்துடன் ஸ்ரீ வாஸனும், ஸ்ரீ கல்கியும் ஒரு நாள் திடீரென்று திருவண்ணாமலைக்குப் புறப்பட்டனர். அங்கே எஸ்.வி.வி. பிரபலமாக வக்கீல் தொழில் நடத்திக் கொண்டிருந்தார். இவர்களை வரவேற்று மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தவர், “கல்கியின் தமிழை ரஸித்த வாசகர்கள் என் தமிழைப் படிப்பார்களா?” என்று ஒரு போடு போட்டார்.
“உங்கள் ஹாஸ்யம் எந்த பாஷையிலும் பிரகாசிக்கும். முக்கியமாக, அது தமிழர்களின் வாழ்க்கை யையே அடிப்படையாகக் கொண்டுள்ளதால் ஆங்கிலத்தை விட, தமிழில்தான் அதிகமாகப் பிரகாசிக்கும். நீங்கள் அவசியம் தமிழில் எழுதவேண்டும். பிறகு ஆங்கிலத்தில் எழுதுவதைக்கூட நீங்கள் நிறுத்தினாலும் நிறுத்தி விடுவீர்கள்” என்று வற்புறுத்தியதன்பேரில் அவர் ஆனந்த விகடனுக்கு எழுத ஒப்புக்கொண்டார். ‘தாகக்ஷாயணியின் ஆனந்தம்’ என்ற அவருடைய முதல் கட்டுரையிலேயே அவர் தமிழிலும் நன்றாக எழுதக் கூடும் என்பதை நிரூபித்துக் கொண்டுவிட்டார். அன்று முதல் அவருடைய கட்டுரைகளையும் கதைகளையும் பிரசுரிக்கும் பெருமை ஆனந்த விகடனுக்கே கிடைத்தது.
எஸ்.வி.வி. வெகு நாளாகவே நோய்வாய்ப்பட்டிருந்து, சென்ற மூன்று மாதங்களில் அது அதிகமாகிக் காலமானார். அத்தனை சிரமத்திலும்கூட அவருடைய ஹாஸ்யம் அவரை விடவில்லை. தேக நிலை கேவலமாகி, ‘ஸ்ட்ரெப்டோமைஸின்’ என்ற ஒளஷதத்தை இஞ்செக்ஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னாராம். அதற்கு எஸ்.வி.வி., “நன்றாகக் கொடுங்கள். எஸ்.வி.வி. ஒரு பெரிய எழுத்தாளர், ஆசிரியர் இல்லையா? கேவலம் ஒரு ‘ஸ்ட் ரெப்டோமைஸின்’கூடக் குத்திக் கொள்ளாமலே அவர் இறந்து போனாரென்றால் உலகம்தான் ஒப்புக்கொள்ளுமா?” என்று பதில் சொன்னாராம்.
எஸ்.வி.வி.யின் பிரிவினால். தமிழ்நாடு ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டது.