அநுத்தமா

 

அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார்.

அநுத்தமா 22 நாவல்கள், சுமார் 300 சிறுகதைகள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், மற்றும் சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் ‘ஒரே ஒரு வார்த்தை’ – மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல். 1949-ல் இவர் எழுதிய ‘மணல் வீடு’ நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்தது.

இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது ‘கேட்ட வரம்’ நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாற்றாந்தாய்’ சிறுகதைக்கு ‘ஜகன் மோகினி’ இதழில் சிறுகதை போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்க்ருதம் என பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே இரு பெரிய நன்மையை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் ‘பிரம்மா’.

எழுதிய நூல்கள்

  • லக்சுமி
  • கௌரி
  • நைந்த உள்ளம்
  • சுருதி பேதம்
  • முத்துச் சிப்பி
  • பூமா
  • ஆல மண்டபம்
  • ஒன்றுபட்டால்
  • தவம்
  • ஒரே ஒரு வார்த்தை
  • வேப்பமரத்து பங்களா
  • கேட்ட வரம்
  • மணல் வீடு
  • ஜயந்திபுரத் திருவிழா
  • துரத்தும் நிழல்கள்
  • சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
  • ருசியான கதைகள்
  • அற்புதமான கதைகள்
  • பிரமாதமான கதைகள்
  • படு பேஷான கதைகள்
  • அழகான கதைகள்
  • சலங்கைக் காக்கை (பறவை இனங்கள்) (1959, வள்ளுவர் பண்ணை)
  • வண்ணக்கிளி (பறவை இனங்கள்) (1960, வள்ளுவர் பண்ணை)

விருதுகள்

  • அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு
  • மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949.
  • மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
  • தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்

பதிப்புரை – பிரமாதமான கதைகள்

அநுத்தமா’ என்ற பெயரிலேயே, ஒரு பழைமையும். புதுமையும் சேர்ந்து – விசித்திர வீரியமாய்த் தோன்றுகிறது அல்லவா! ஆம்! இவரது கதைகளும் அப்படித்தான். திருமதி ராஜேஸ்வரி பத்மனாபன் ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரில் 1947 வாக்கில் தன்னுடைய எழுத்தைத் தொடங்கி இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். இவரது நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே, பழைமைக்கும், புதுமைக்கும் ஒரு பாலம் போல அமைந்துள்ளது. இவரது கதைகள் பெரும்பாலும் சோகம், விரக்தி, எதிர்பார்ப்புஃ போன்றவற்றில் தொடங்கி, முடிவில் சுபமாக, இன்பமாக, ‘ஹாய்’யாகச் சுதந்திரக் காற்றில் இன்பமாக வட்டமிடுவதைக் காணலாம். 

அறிவுப்பூர்வமும், அநுபவப்பூர்வமும் மிகுந் தவர் என்பதை இவரது கதைகளே எடுத்துக் காட்டும். சுய மரியாதையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்காதவர். ஆனால், அன்பிற்கு அடிமைப் பட்டவர். எதை திடமாகச் சொன்னாலும், பிறர் மனத்தை புண்படுத்தாத மென்மை உள்ளம் கொண்டவர். ராஜாஜி, கல்கி, கி.வா.ஜ. போன்ற பிதாமகர்களின் ஆசி கிடைத்தும், தன் எழுத்துக்களை வெளிக் கொண்டு, அந்த எழுத்துக்களுக்கு புகழ் சேர்த்தாரேயொழிய தான் என்ற மனித்துவத்தை மறைத்துக் கொண்டே வாழ்ந்து விட்டார். விருதுகளும், பட்டங்களும் பல இவரைத் தேடிச் சென்ற போதிலும் அவற்றிற்கு எல்லாம் மயங்காமல் ஒதுங்கியே இருந்து விட்டார். 

காஞ்சி மஹா ஸ்வாமிகள் இவரை, ‘கேட்ட வரம்’ அநுத்தமா என்றுதான் அழைப்பாராம். இவரது நாவலான ‘கேட்ட வரம்’ என்ற நாவலே இவருக்குப் பட்டமாக அமைந்துள்ளது. இதைவிட சிறந்த வேறு ஒரு பட்டம் இவருக்கு என்ன வேண்டும்? இவரது எழுத்துக்களைப் போற்றி, சமீபத்தில் காஞ்சி பெரியவர்கள் இருவரும், இவரைப் பாராட்டி நற்சான்றிதழ் அளித்து ஆசி வழங்கினர். இந்திய நாட்டின் மிகப் பெரிய விருதுகளையும், பட்டங்களையும் வழங்கும் தலைவர்களே, காஞ்சி மஹானின் ஆசியைத் தேடி காஞ்சீபுரம் வருகின்றனர். ஆனால், அந்த காஞ்சி’, ‘ மஹான் ‘அநுத்தமா’ விற்குப் பட்டமும், ஆசியும் வழங்கினர். இதுவே இவரது எழுத்திற்குக் கிடைத்த முத்திரை. 

இப்போது வெளியாகும் இந்த ஐந்து தொகுதிகளில், இவரது பெரும்பாலான கதைகளை தொகுத்துள்ளோம். இந்த அருமையான கதைகளை நூல் வடிவில், எங்களது வெளியீடாக வருவதற்கு சந்தர்ப்பம் அளித்த எல்லாம் வல்ல ஆண்டவனை நமஸ்கரிக்கிறோம்.