அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 – ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.
அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.