ஆ… ஜேம்ஸ் அலறியபடி மூர்ச்சையாகி விழுந்தான். வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் இயந்திரம் பெரும் சத்தத்துடன் பழுதாகி நிற்க, விபத்தில் சிக்கிய ஜேம்ஸை மீட்க விரைந்தனர் சகதொழிலாளர்கள்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்ட ஜேம்ஸ், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தான். ஆனால் தனது வலது கையை இழந்திருந்தான், காலிலும் ஊனம் ஏற்பட்டிருந்த்து.
உடல்நலம் தேறி, வேலைக்கு சேர வந்தவன் மேனேஜர் ராமனை சந்தித்தான். நீங்க ஒரு நல்ல டெக்னிஷியன். இந்த இளம் வயசிலயே விபத்து துரதிருஷ்டவசமா உங்களை ஊனமாக்கிடுச்சு. உங்களால முன் போல ஃபேக்டரியில வேலை செய்ய முடியாது. அதனால செட்டில்மென்ட் பணம் கம்பெனி அதிகமாவே கொடுக்கும் என்று ராமன் சமாதானம் சொல்ல, அதிர்ந்தான் ஜேம்ஸ்.
சார் என் குடும்பம் இந்த சம்பளத்தை நம்பிதான் இருக்கு. செட்டில்மெண்ட் பணம் என் கடனை அடைக்கவே சரியா போயிடும். இந்த நிலையில நான் பிழைக்கிறது எப்படி சொல்லுங்க என்று விரக்தியுடன் கேட்டான். வேற வேலை ஏதும் தெரியாத உங்களை சும்மா உட்கார வெச்சு சம்பளம் கொடுத்தா மத்தவங்களுக்கு அது உறுத்தலா இருக்கும். நிர்வாகத்துக்கும் நஷ்டம். கடின உழைப்பாளியான உங்களுக்கும் அது ஒப்புதலா இருக்காதுதானே என்ற ராமன் பேச்சிலும் நியாயம் இருந்தது ஜேம்சுக்கு புரிந்தது. சுறுசுறுப்பா ஓடியாடி வேலை செஞ்ச என்னை இந்த விபத்து முடக்கிப் போட்டிடுச்சே. என்னால ஓய்ஞ்சிருக்க முடியாது சார் அதைப் போல கொடுமை என் வாழ்க்கையில வேற ஏதும் இல்லை என்று ஜேம்ஸ் பரிதாபமாகச் சொல்ல, இயலாமையுடன் பார்த்தார் ராமன்.
ஒரு கணம் யோசித்த ஜேம்ஸ், சார், முன்னணி நிறுவனமான இங்க வேலை செய்யுறதை பெருமையா நினைக்கிறேன். நம்ம கம்பெனி தயாரிக்கிற ப்ராடெக்ட்ஸ் பற்றி முழுமையா தெரியும். அதோட நம்ம போட்டி கம்பெனிகளோட பலவீனங்களையும் தெரிஞ்சு வெச்சிருக்கேன். பயிற்சி கொடுத்தா நல்ல தரமான நம்ம கம்பெனி பொருட்களை விற்பனை செய்யிறது எனக்கு சுலபம். மார்க்கெட்டிங் செக்க்ஷன்ல எனக்கு வேலை கொடுங்க. என் திறமையால கம்பெனிக்கு லாபம் சம்பாதிச்சு தருவேன். நான் ஒரு கையைதான் இழந்தேன். நம்பிக்கையை இழக்கலை என்று உறுதியுடன் சொல்ல, புன்னகையுடன் ஆமோதித்தபடி, நிர்வாகத்திடம் பேச செல்போனை எடுத்தார் ராமன்.