கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 401 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘நமது வாழ்க்கையில் பேரின்பப் பேறு மின்னலைப் போன்று, கணநேரக் கலவியிலே தான் சித்திக்கின்றது….’ 

அவன் முப்பொழுதும் ஸ்நானஞ் செய்து, அக்கினி காரியஞ் செய்து, வெயிற் காலத்தில் நெருப்புக்குச் சமீபத் திலும், மழை காலத்தில் தண்ணீரிலும், பனிகாலத்தில் வெளியிலும் இருந்து தவஞ்செய்து, வேத சிரசுகளாகிய உபநிஷத்துக்களையே பாராயணஞ் செய்து வந்தான். இப்படி வானப்பிரஸ்தாச்சிரமத்திலிருந்து, மிகுந்த வைராக்கியம் அடைந்தபோது, சந்தியாச்சிரமத்திலே பிரவேசித்தல் வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக உதிக் கலாயிற்று. 

தான் ஈடுபட்டுத் திளைத்த கிருகஸ்த வாழ்க்கை அவனுக்கு மிக மங்கலான கனவாகத் தோன்றலாயிற்று. பிதா, மாதா, பெண்டிர், பிள்ளை முதலானோரிடத்தும், பொருள் முதலானவைகளிடத்தும் பற்றுக்களைத் துறந்து காஷாயந் தரித்துப் புறப்பட்டான். 

வழியில்… 

அல்லி விட்டங்களை அலர்த்தி மேடைகள் அமைத்து, அமுதம் இருக்கும் இடத்தைக் காட்டும் வழிகாட்டிக் கோடுகளை நிர்வாணமாகத் தெளித்தும் சிருங்காரம் பிழிகின்றது மலர்மொய். அதன் மீது காமுற்ற தேனீ ஒன்று மலர்க் குறிகளை இடித்தும், மகரந்தக் கூடுகளைக் குழைத்தும், தேன் மாந்தியும் களிப்புக் கொள்ளுகின்றது. 

அவனுடைய உள்ளத்தில் அருவருப்பு உணர்வின் உற்றுக்கண் உடைத்தது! 

‘மலர் மொய்யே! நீ காமத்தில் அழிந்துபோவதை உணர வில்லையா? இறை தியானத்தில் ஈடுபட்டு, பரமபதம் அடைதலே முக்தி’ என்றான். 

‘ஓகோ, காஷாயம் தரித்து சந்நியாச தத்துவம் பேசு கிறாயா?’ என மலர்மொய் நகைத்தது. 

‘யான் அநுபவத்திலிருந்து பேசுகிறேன். சிற்றின்பம் புல்லியது; போலி; மாயத்திரை. அதனையும் அதன் விளைச்சல்களையும் துறந்தேன். உண்மையின் தரிசனம் வாய்த்தது. வீட்டின்பப் பேற்றினை நாடிச் செல்லுகின்றேன்….” 

‘உன் அநுபவம் ஒரு தலைப்பட்சமானது. உணர்ச்சி நிலையில் சிற்றின்பத்தை நாடினாய்; அதன் பலாபலன்களை அறிவு நிலையில் விசாரணை செய்கின்றாய். கரிப்புச் சுவை புகுந்ததற்கு அதுதான் காரணம். எனக்கு உணர்ச்சியும் அறிவும் ஒரே தளத்தவை. அதனால், என்னுடைய அநுபவம் வேருக இருக்கின்றது. நமது வாழ்க்கையில் பேரின்பம் பேறு மின்னலைப் போன்று, கணநேரக் கலவியிலேதாள் சித்திக்கின்றது. 

அக்கலவியிலே, என்னையே முற்றாக இழந்து, நானே இல்லையான, ஆனால் நானேயான புதுப் பிறவி எடுக்கின்றேன். தன்னையே அழித்து, தன்னில் தன்னையே உருவாக்கும் அற்புதக்கலையே கலவி. ‘கலவியினால் சாகாமல் இருத்தல் கூடும்’ என்ற தத்துவ வழி நடந்து, பிஞ்சாகிக் காயாகிக் கனியாகி நான் அமரத்துவம் அடைகிறேன். இறப்பு அற்ற நிலையே பேரின்பம்….’ என்றது மலர்மொய். 

‘சிவ சிவா….’ என அவன் செவிகளைப் பொத்தினான். மலர்மொய் தேனீயுடன் கலவியில் ஒன்றுபட்டு, தன்னையே இழந்து மறந்தது! 

புதிய உண்மையின் தரிசனம் பெற்றவனாக இவன் நடக்கத் தொடங்கினான்.

தூரத்திலே, அவன் முன்னர் துறந்து சென்ற வீடு தெரிகின்றது.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *