கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 13, 2023
பார்வையிட்டோர்: 6,075 
 
 

விஜய் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துவிட்டான்.

அணைக்க, அரவணைக்க யாரும் இல்லா அனாதையான விஜய், தன் நண்பன் வங்கியில் வாங்கிய 25 லட்சம் ரூபாய் கடனுக்காக கியாரண்ட்டி கையெழுத்து போட, அந்த நண்பன் பணத்தை பெற்றுக்கொண்டு ஓடிப்போய்விட, கியாரண்டர் விஜய்யின் சொத்துக்களை வங்கி எடுத்துக்கொள்ள 32 வயதில் அவன் வாழ்க்கை சூன்யம்.

தற்கொலை செய்துகொள்ள தகுதியான இடம் தேடி கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் நடந்து கொண்டிருந்தான்.

சாலையில் ஒரு கார் வேகமாக வந்தது. விஜய் லிப்ட் கேட்டான். எதிர்பாராதவிதமாக கார் டிரைவர் ராமு விஜய்யை காரில் ஏற்றிக்கொண்டான். காரை வேகமாக ஓட்டிக்கொண்டே ராமு “எங்கே போகணும்?” என்று புருவத்தை உயர்த்தி விஜய்யை கேட்டான்.

“தற்கொலை செய்ய ” என்ற விஜய்யின் பதிலைக்கேட்டு ராமு அதிர்ந்தான். “ஏன்? எதற்காக?”

ஓரிரு நிமிடத்தில் விஜய் தன் வாழ்க்கை தடம் புரண்ட விதத்தை சொன்னான். ராமு ஆழ்ந்து மௌனமானான். ராமு ஒரு வங்கி டிரைவர். வயது 30. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவனும் அவன் வங்கித்தோழன் வடிவேலுவும் அனைத்து ஏ.டி.எம் மெஷின்களிலும் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தனர். கோடிக்கணக்கில் பணம் கையாண்டாலும் அவர்கள் சம்பளம் சொற்பம்.

கோவையில் ஒரு ஏ.டி.எம் மெஷினில் பணம் நிரப்பியபோது வடிவேலுவுக்கு வந்தது ஒரு போன் கால்!. “அவன் மனைவி ஒட்டிச்சென்ற ஸ்கூட்டியை கழிவு நீர் லாரி மோதி அவள் ஆஸ்பத்திரியில் சீரியஸ்”.

வடிவேலு மானேஜரிடம் போனில் சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு பறந்தான். மானேஜர் ராமுவிடம் ஜாக்கிரதையாக மற்ற ஏ.டி.எம் மெஷின்களிலும் பணம் நிரப்பிவிட்டு விரைவில் நேரே வங்கிக்கு வரச்சொன்னார்.

காரில் இன்னும் 25 லட்சம் பணம் பாக்கி இருந்தது. பணம் பாதாளம் வரை செல்லும்போது கேரளா பார்டர் வரை செல்லாதா? கோவையிலிருந்து தமிழ்நாடு பார்டர் தாண்டி கேரளாவுக்குள் நுழைந்து விட்டால் ராமு தனிக்காட்டு ராஜா, 25 லட்சம் ருபாய் பணத்துடன்!

போலீஸ் அவனைத்தேடும்போது, ராமு தனியாகத்தான் சென்றான் என்று மானேஜர் கூறியிருக்கக்கூடும். எனவே போலீஸ் தனி ஒருவன் ஓட்டும் காரைத்தான் முதலில் குறி வைக்கும் என்று அனுமானித்த ராமு, வழியில் விஜய் லிப்ட் கேட்க, அது ராமுவிற்கு சௌகர்யமாகப்போக, போதாக்குறைக்கு, விஜய்யின் கதை, பழம் நழுவி பாலில் விழுந்த யோகம் ராமுவிற்கு!

ஆம்! விஜய்தான் சாவதற்கு ரெடியாக இருக்கிறானே? வழியில் எங்காவது விஜய்யை போட்டுத்தள்ளிவிட்டு அவன் உடைகளை தான் அணிந்து கொண்டு, தன் உடைகளை இறந்த அவன் உடலுக்கு அணிவித்துவிட்டு, டிரைவர் இருக்கையில் அவனை அமர்த்தி காரிலிருந்து பெட்ரோலை எடுத்து காரை கொளுத்தி சாம்பலாக்கிவிட்டு, பணத்துடன் கேரளா சென்று விட நினைத்தான் ராமு.

“கார், பணம், டிரைவர் ராமு விபத்தில் எரிந்து அனைத்தும் சாம்பல்” என்று கேஸ் முடிக்கப்படும்.

“25 லட்சத்தை வங்கி காந்திக்கணக்கில் ரைட் ஆப் செய்து விடும்” என்று திட்டம் தீட்டிய அவன் சிந்தனை ஓட்டம், பின்னால் சைரன் ஒலி எழுப்பிக்கொண்டு வந்த போலீஸ் கார் தன்னைத்தான் தேடி வருகிறதோ என்று ராமு நினைத்து, அவசரம் அவசரமாக, காரை ரோட்டோரத்தை ஒட்டி இருந்த மணற்பாதையில் திருப்ப எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பெரிய மரத்தில் மோதி கார் கண்ணாடி நொறுங்கி மரக்கிளை ஒன்று ராமுவின் நெஞ்சில் குத்த ராமு ஸ்பாட்டிலேயே அவுட்!

லேசான சிராய்ப்பு காயத்துடன் தப்பிய விஜய் ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்தான். பிரமை பிடித்து அப்படியே இருக்கையில் அமர்ந்திருந்த அவன் சுதாரித்துக்கொண்டு பின் இருக்கையை பார்க்க, விபத்தால் திறந்திருந்த பெட்டியின் உள்ளே எக்கச்சக்கமாக பணம்!

ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் நூறு நூறாக பண்டல் பண்டலாக கட்டப்பட்டு ஒவ்வொரு பண்டலிலும் “பாரத் வங்கியின் ரப்பர் ஸ்டாம்ப்!” எந்த வங்கி கியாரண்டர் என்ற பேரில் நண்பனின் கடனுக்காக அவன் சொத்துக்களை கபளீகரம் செய்ததோ அதே பாரத் வங்கி பணம் ஏராளமாக இப்போது அவன் கையில் !

ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் கார் நொறுங்கிக்கிடந்த இடத்தில் நல்ல வேளையாக ஆள் அரவம் ஏதும் இல்லை. ராமுவுக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு பணப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு , பெட்ரோல் டாங்க்கை திறந்து, ஒரு எரியும் தீக்குச்சியை அதற்குள் போட்டுவிட்டு கார் சாம்பலாகும்வரை காத்திருந்துவிட்டு சூட்கேஸை எடுத்துக்கொண்டு கேரளா எல்லைக்குள் சென்றான் விஜய் புதிய வாழ்க்கையைத் தொடங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *