கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 467 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

‘அதுவே ரிஷிகள் வழிவழி வந்த பக்தித் துளி. காய்ச்சித் தூய்மை பெற்ற நிலையில் அதனுடன் ஐக்கியமாதலே உத்தமம்…..’ 

அருள் சிந்த மகாதேவன் முறுவலித்தான். பார்வதி காய்ச்சிய பசும்பாலை இரண்டு பாத்திரங்களிலே சமமாகப் பங்கிட்டாள். கணபதியின் பாலிலே பாகும் தெளிதேனும் சேர்த்துக் கலக்கினாள். 

‘எங்கே முருகன்? அவனுடைய பால் வீணாகக் கிடக் கின்றதே….என்றான் மகாதேவன். 

‘இதிலும் பார்க்கத் தேனும் தினைமாவும் சுவையானது என்ற எண்ணத்தில், அவன் குறத்தியின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம்’ என்று மருமகள் வள்ளியை ஏளனஞ் செய்யும் குரலிற் பார்வதி கூறினாள். 

கணபதி பாலில் பாதியைக் குடித்திருப்பான். இடையில் ஏதோ நினைத்தவனாய், பாத்திரத்தைக் கீழே வைத்து ஓடத் தொடங்கினான். 

‘எங்கே விக்னேஸ்வரன் ஓடுகிறான்?’ எனப் பார்வதி கேட்டாள். 

‘அரசடிக் குளத்தில் ஒருத்தி குளித்துக் கொண்டிருக்கிறாள். அவளும் நீயும் ஒத்த சாயல் என்று பேசிக் கொள்ளுகிறார்கள். அவளைப் பார்க்கத்தான் இவ்வளவு அவசரம்’ என்றான் மகாதேவன், 

‘ஒவ்வொரு பிள்ளைக்கும் சிவன் போக்குச் சித்தம் போக்கு என்பது போலத்தான் புத்தி….’ என்றாள் பார்வதி சற்றுச் சலிப்புடன். 

‘அப்பனோ பித்தன். பித்தன். அவன் அம்ஸம் பிள்ளைகளில் இருக்கக்கூடாதா?’ என்றான் மகாதேவன் பெரு மிதத்துடன். 


முருகனுடைய பால் சீந்துவாரற்றுக் கிடந்தது. மான பங்க உணர்வும், தாழ்வுச் சிக்கலும் அதனை அரிக்கலாயின. துக்கத்தைத் தாங்கமாட்டாது, ‘கோபாலா! கோபி கிருஷ்ணா!’ என அழுத்து. 

கண்ணன் தோன்றினான். அவன் அறியாதன இல்லை. முறுவலித்தான். ஒரு துளி நீரையை எடுத்துப் பாலிலே தெளித்தான். பாலுக்கு உடலெல்லாஞ் சில்லிட்டது. தாங்க முடியாத குளிர். 

‘கோவிந்தா!’ குளிரிலே பற்கள் கிட்டிபோட, பால் அவதியுற்றது. 

‘பேசாமல், சேமமாகத் தூங்கு!’ எனக் கூறிக் கண்ணன் மறைந்தனன், 

‘விக்னேஸ்வரனை இன்னமுங் காணவில்லை. குடித்து மீதம் வைத்த பால் ஒன்றுக்கும் ஆகாது…. ‘ எனத் தெளிந்த பார்வதி அதனைக் குப்பையிலே கொட்டினாள். 

‘முருகனின் பால்?’ ஒன்றுமே அறியாதவனைப் போல மகாதேவன் கேட்டான். 

‘தயிராகிவிட்டது….நடந்த மாயம் என்ன?’ 

‘நான் இங்குதான் நிற்கின்றேன்’ என மொழிந்து கண்ணன் தோன்றினன். 

‘தயிரே, கவனம்! வந்திருப்பவன் கண்ணன்’ என உபதேசித்து மகாதேவன் நழுவினான். பார்வதியும் அரனின் நாரியிலே புகுந்து மறைந்தனள். 

‘கட்டித்த பாலே, உன் சௌக்கியத்தை அறிந்து போகத்தான் வந்தேன்….’ என ஆயிரம் கோபியரை துகட் கணத்தில் மயக்கவல்ல இன்குரலிற் சொன்னான். 

‘நான் இப்பொழுது தயிர். என்னுள் கலந்திருக்கும் வெண்ணெயைத் திருடத்தானே வந்தாய்?  உண்மையைச் சொல்….’ 

‘நீ மேனிலை அடைந்தும், அஞ்ஞானம் உன்னை விட்டு அகலவில்லை. தெளிதேனும் பாகும் கலந்த பால் உடனருந்த நல்லம். ஆனால் ஒரு துளி பிரை! அதுவே ரிஷி கள் வழிவழி வந்த பக்தித் துளி. காய்ச்சித் தூய்மைபெற்ற நிலையில் அதனுடன் ஐக்கியமாதலே உத்தமம். அந்த உத்தம வழி நின்றபடியாற்றான் நீ தயிராகி, உன்னில் வெண்ணெயும் முற்றியது. உன்னுள் பிரையைச் சேர்த்தவன் நான். வெண்ணெய் அதன் பயன்….பயனை அறுவடை செய்தல் எப்படித் திருட்டாகும்?’ எனக் கண்ணன் கேட்டான். 

ஒரு கணம் மௌனத்தின் தவம். 

‘உன் இஷ்டம். நான் உன் பலி!’ என்று பற்றற்ற குரலிலே தயிராகிவிட்ட பால் கூறிற்று.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *