இருக்குற 40 சீட்டுல கூட்டணிக்கும் பங்கு ஒதுக்கிதான் ஆகணும். நேத்துதான் மத்த கட்சிகளோட தொகுதி உடன்பாடு ஆச்சு அதுக்குள்ள என்னய்யா பிரச்சனை, என்று தலைவர் காரில் உட்கார்ந்தபடி செல்போனில் அழைத்த வேலுவிடம் கடுப்புடன் கேட்டார்.
தலைவரே, நம்ம தொண்டர்கள் ஒத்துபோக மாட்டேங்கறாங்க, மொத்த சீட்டும் நமக்கே வேணும்னும், வேற கட்சிகளை சேர்க்கக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க என்று பவ்யமாக பதில் சொன்னான் வேலு.
எலக்ஷன் நேரத்தில ஏன்யா குழப்பம் பண்றிங்க. தேர்தல்ல கூட்டணி அமைச்சு தோழமை கட்சிகளும் ஜெயிக்க நாம ஆதரவு தர்றதுதானே கூட்டணி தர்மம்.. எல்லாரையும் அரவணைச்சுதான் போகணும், புரிஞ்சு நடந்துக்குங்கய்யா. சமாதானபடுத்துற வழியப்பாருங்க என்றவரை முடிக்க விடாமல் தலைவரே ஒரு நிமிஷம் என்று அவசரமாக தொடர்ந்தான் வேலு.
மத்த கட்சிங்க அவங்க வழியை பாத்துக்கட்டும்னு தீர்மானமா இருங்காங்க, நம்ம ஆளுங்க. கட்சிப்பேரணிக்கு வர மாட்டோம்னு முடிவா இருக்காங்க. நீங்க கொடுத்த பணத்தில இவ்வளவுதான் முடிஞ்சது. சொல்லப்போனா ஏற்பாடு பண்ணின வண்டியில் மொத்தம் 39 சீட்தான் ஒண்ணு டிரைவர் சீட், எப்படி எல்லாரையும் ஒரே வண்டியில பேரணிக்கு கூட்டிட்டு வர்றது நீங்களே யோசனை சொல்லுங்க என்று எரிச்சலுடன் வேலு கேட்க, சரி… சரி… பணம் அனுப்பி வைக்கிறேன் இன்னொரு வண்டி ஏற்பாடு செஞ்சு எல்லாரும் ஒத்துமையா தாமதிக்காம பேரணிக்கு வந்து சேருங்க என்று பதில் பேசி முடித்தார் தலைவர்.