ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பின்னணியும், மகிமையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 12,551 
 
 

நம் பாரத தேச இதிஹாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது.

அபாரமான வேத தர்மங்களையும், ரகசியங்களையும், கதைகளோடும் உப கதைகளோடும், உபதேசங்களோடும் தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்த சாதனமாக அளித்துள்ளார் வேத வியாச மகரிஷி.

பிரஸ்தான த்ரயத்தில் ஒன்றாக புகழ் பெற்ற பகவத் கீதை கூறும் பரமார்த்தத்தையே ‘ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம்’ விளக்கமாக எடுத்துக் கூறுகிறது.

இந்த ஆயிரம் நாமங்களின் படைப்பு இக, பர நலன்களை அளிக்கக் கூடிய ஒரு மஹா மந்திரப் பூங்கொத்து.

மகாபாரதத்தின் அனுசாசனிக பர்வத்தின் உட்பகுதியான இந்த இரத்தின மஞ்சரி, பீஷ்மாச்சாரியார் மூலமாக யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கப்பட்டது.

மஹாபாரத யுத்தம் முடிந்த பின், யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க எண்ணி, யுதிஷ்டிரன் சென்றான். அச்சமயத்தில் பரமாத்மா தியானத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டு அந்த யோகீஸ்வரனை வணங்கி நின்றான் யுதிஷ்டிரன்.

ஸ்ரீ கிருஷ்ணன் தியானத்திலிருந்து வெளி வந்தபின் தர்மபுத்திரன், அந்த ஜகத்குருவைப் பார்த்து, “ஸ்வாமி! ‘யோகி ஹ்ருத் த்யான கம்ய’ மான நீ தற்போது யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று விநயமாகக் கேட்டான்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணன்,

“சரதல்ப கதோ பீஷ்ம: சாம்யன்னிவ ஹுதாசன:I
மாம் த்யாதி புருஷவ்யாக்ர: ததோ மே தத்கதம் மன: II”

–“அம்புப் படுக்கையின் மேல் அணையும் அக்னி போலிருக்கும் பீஷ்மப் பிதாமகர் என்னை தியானிக்கிறார். அதனால் என் மனம் பீஷ்மரிடம் சென்று சேர்ந்து விட்டது” என்றான்.

மேலும், “குரு வம்சத்தின் பிதாமகரும், சத் சரித்திரம் கொண்டவருமான அந்த மகாத்மா நான்கு வேதங்களுக்கும், கால ஞானத்திற்கும் நிதி. பிரம்மரிஷிகள் முதற்கொண்டு அவருடைய உபதேசங்களை ஒப்புக் கொள்வார்கள். சகல தர்ம சூட்சுமங்களும் அவருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போன்றவை. ஆகவே, அந்த மகானுபாவரிடமிருந்து சகல தர்மங்களையும் அறிந்து கொள்வது உன் கடமை” என்று எடுத்துக் கூறி யுதிஷ்டிரனோடு சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றான்.

பீஷ்மர், மகரிஷிகளின் கூட்டத்தால் சூழப்பட்டு, பாணங்கள் ஏற்படுத்திய படுக்கையின் மேல் பிரகாசமான ஒரு ஒளி போல் படுத்திருந்தார். ஜகத்குருவான முகுந்தனைக் கண்டவுடனே கங்கா புத்திரன் பக்தியோடு கை கூப்பினார்.

குசலம் விசாரித்த பின், “தர்ம விஷயங்களை உன் ஆசீர்வாத பலத்தால் யுதிஷ்டிரனுக்கு கூறுவதற்கு நான் தயார்தான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். சர்வ வேதங்களுக்கும் ஜகத்குருவும், சகல தர்மங்களுக்கும் விக்கிரக உருவமும் ஆகிய நீ உபதேசிக்காமல் எனக்கு இந்த பொறுப்பை அளித்திருப்பதிலுள்ள உட்பொருள் என்ன?” என்று விநயத்தோடு வினவினார் பீஷ்மாச்சாரியார்.

“மகாத்மா! இப்போது நான் உபதேசிப்பதால் எனக்கு புதிதாக கிடைக்கப் போகும் கீர்த்தி எதுவும் இல்லை. சந்திரனைப் பார்த்து ‘ குளிந்த கிரணங்களை உடையவன்’ என்று சிலாகிப்பதில் சிறப்பு என்ன இருக்கிறது? பரமேஸ்வரனான நான் உபதேசிப்பதை விட உத்தம தர்ம மய வாழ்க்கை நடத்திய உம் போன்ற மனித சிரேஷ்டர் தர்மோபதேசம் செய்வதே சிறப்பு. அது உமக்கு கீர்த்தியளிக்கக் கூடியது. பல பிரம்ம ரிஷிகளை வணங்கி, வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்து, தவம், தியானம்,அனுஷ்டானம் இவற்றின் பலனாக மகா சக்தி பொருந்தியுள்ள நீர் உபதேசிப்பதே உசிதமானது,” என்று பரமாத்மா பதிலளித்தான்.

இதில் இன்னொரு சிறப்பு கூட உள்ளது. பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறைக்கு தர்மத்தையே சேர்த்து வைக்க வேண்டும். பீஷ்மரைப் போன்று தர்மத்தை அனுஷ்டித்தவர் தனக்குப் பின் பரிபாலனம் செய்ய உள்ள புனிதமான சக்ரவர்த்திக்கு தர்ம விஞ்ஞானச் செல்வத்தை அளிப்பது கடமை. இத்தகு பரம்பரையையும் சம்பிரதாயத்தையும் காப்பாற்றுவது ஜகத்குருவான ஜனார்தனனின் பிரதான உத்தேசம்.

பகவானின் சொற்களைச் செவிமடுத்த பிதாமகர், “பரமாத்மாவான உன் ஆக்கினையை விட உயர்ந்தது வேறு இல்லை. உன் அனுகிரக பலத்தால் உன் சந்நிதியில், பிரம்ம ரிஷிகளின் முன்னிலையில் தர்ம பரம்பரையை போதிப்பது என் பாக்கியம்” என்று கூறி வாசுதேவனுக்கு வந்தனம் சமர்ப்பித்து, யுதிஷ்டிரனுக்கு அநேக தர்மங்களை உபதேசித்தார் பிதாமகர்.

அவ்விதம் சாந்தி பர்வத்தைத் தொடர்ந்து அனுசாசநிக பர்வத்தில் 148 அத்தியாயங்கள் பூர்த்தி ஆனபின் பீஷ்மாச்சாரியார் 149 வது அத்தியாயத்தில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம ஸ்தோத்திரத்தை உபதேசித்தார்.

பீஷ்மர் என்றால் தீவிர நிஷ்டையோடு கூடிய வைராக்யசாலி, சத்ருக்களுக்கு பயங்கரமானவர். வெளி நோக்கி பாயும் குணம் கொண்ட புலன்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி உள்நோக்கிச் செலுத்தும் யோக சாதனையில் வல்லமை பெற்று காமம், க்ரோதம், லோபம் போன்ற ஆறு உட்பகைவர்களையும் அடக்கிய சாமர்த்தியசாலி. இது ஒரு ஆச்சாரியனுக்கு இருக்க வேண்டிய லட்சணம்.

யுத்தத்தில் நிலையாக இருப்பவனே ‘யுதிஷ்டிரன்’. மற்றுமொரு பெயர் தர்ம புத்திரன். அங்குமிங்கும் அலையாத ஏகாக்ர சித்தத்திற்கும், தர்ம நடத்தைக்கும் குறியீடு இந்தப் பெயர். இது சீடனுக்கு இருக்க வேண்டிய லட்சணம். இங்கு ஆச்சாரியர், சீடர் இவ்விருவரின் பெயர்கள் கூட அவர்களின் அருகதையைப் பிரகடனம் செய்கின்றன.

மகிமை:-
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் வெறும் துதி நூலோ, நாமங்களின் வரிசையோ அல்ல. இதில் அநேக மர்மங்கள் உள்ளன.

பிரதானமாக இது ஞான விஷயத்தை முன்னிறுத்துகிறது. ‘சர்வம் பிரம்ம மயம் ஜகத்’ என்ற விஷயத்தை அனுபவத்திற்குக் கொண்டு வருவதே ஞானம். எங்கும் நிறைந்திருப்பது ஒரே பரமாத்மா என்ற நினைவை ஏற்படுத்தும் ஞானம், இந்த நாமங்கள் நமக்கு அளிக்கும் முக்கியமான பலன்.

மறுபக்கம் நாராயணனின் லீலை வைபவங்களையம், அவதார விசேஷங்களையும், மாதுர்யம் மிகுந்த நாமங்கள் வழியே நினைக்க வைத்து, பக்தி பாவனையில் படிப்போரை மூழ்கடிக்கக்கூடிய, பக்தியை பிரதானமாகக் கொண்ட துதி இது.

பாவங்களை போக்கி, அதன் மூலம் மனதின் மலினங்களை நீக்கி, சித்த சுத்தியை அடைவித்து, ஞான வைராக்கியங்களை ஏற்படுத்தும் சக்தி இந்த நூலின் பராயணத்தில் உள்ளது.

ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னுமுள்ள நாமங்களிடையே உள்ள தொடர்பை கிரகித்தறிந்தால் பிரதி நாமத்திலும் ஒரு பிரத்தியேக ரகசியம் இருப்பது தெரியவரும்.

இந்த நாமங்கள் வெறும் அட்சரக் குவியல் அல்ல. நாராயணனின் சப்த சொரூபங்கள். மொத்தத்தில் இந்த ஸ்தோத்திரம் விஷ்ணுவின் சப்தமய மூர்த்தி. ஞானத்தை விளக்கிக் காட்டும் தத்துவ நூல் ஆதலால் இது நாம வித்யையாக, அக்ஷர வித்யையாக பூஜிக்கப்படுகிறது.

விஷ்ணு சகஸ்ர நாமங்களின் கோர்வையில் அபாரமான சப்த சக்தி மறைந்துள்ளது. அந்த சப்த சக்தியில் அளவற்ற தெய்வீக சைதன்யம் பொதிந்துள்ளது. அதனால்தான் பல வியாதிகளுக்கும், கிரக கெடுதல்களுக்கும், நிவாரணமளிக்கும் உபாயமாக சாஸ்திர நூல்களே இந்த சகஸ்ர நாமங்களைப் படிக்கும்படி போதிக்கின்றன.

மணி, மந்திரம், ஒளஷதம் இவற்றை விளக்கும் பல ஆயுர்வேத நூல்கள், ரோக நிவாரண வழிகளைப் பற்றி எடுத்துக் கூறுகையில் விஷ்ணு சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்படி அறிவுறுத்துகின்றன.

மகா ரோகங்களுக்குப் பிராயச்சித்தமாக விஷ்ணு சகஸ்ரநாமத்தை இன்னும் சில நூல்கள் கூட குறிப்பிட்டுள்ளன. புருஷ சூக்த ஜபத்திற்கு மாற்றாகக் கூட விஷ்ணு சஹஸ்ர நாம தோத்திரத்தை குறிப்பிட்டுள்ளார்கள்.

‘சர்வ ஜீவ ரக்ஷணை’ என்று போற்றப்படும் இந்த தோத்திரத்தை பிள்ளை பெற்ற வீட்டில் படித்தால் அனைத்து தரித்திரங்களும் விலகி விடும் என்பது பெரியோர் கூற்று.

அநேக துர்நிமித்தங்களையும், அமங்கலங்களையும் நீக்கி, மகா பாபங்களைக் கூட நசியச் செய்து, இக, பர க்ஷேம சௌக்கியங்களை அளித்து, பரமபதத்தை சித்தியடையச் செய்யும் சக்தி கொண்ட மந்திர அட்சரங்கள் அடங்கிய மாலை இது. தத்துவ சாஸ்திர நிதி இது. நாமங்களைக் கோர்த்த விதத்திலேயே தெய்வீக நாதத்தைத் தன்னுள் கொண்டுள்ளதால், சங்கீதம் ஒலிக்கும் அனுபவத்தை ஓதுபவர் கட்டாயம் அனுபவிப்பர். அந்த நாத நடையிலேயே வாக்குக்கு எட்டாத ஆனந்தம் உணரப்படுகிறது.

மகரிஷிகளால் உரைக்கப்படும் தோத்திரங்களுக்கு தத்துவ பலன், தாந்திரீக பலன் என்று இரண்டு பிரயோஜனங்கள் இருக்கும். முதலாவது ஆன்மிகம். இரண்டாவது லௌகீகம். தத்துவ தரிசனம் புத்தியை ஞானத்தால் நிரப்பி, அதன் மூலம் பரப்பிரமத்தை அடையச் செய்கிறது.

தாந்த்ரீகம், உலகில் ஒவ்வொரு மனிதனும் விரும்பும் கோரிக்கைகளை நிறைவு செய்தும், இஷ்டமிலலாதவைகளை விலக்கியும் பலன்களை அருள்கிறது. ரகசியமான சப்த சக்தி மூலம் நாமத்திற்கு மந்திர சக்தி ஏற்படுகிறது. அவ்வாறு மந்திரமயமான நாமத்தின் உச்சரிப்பு, ஜபம் – இவை விருப்பங்களைத் தீர்த்து, விருப்பமில்லாத ஆபத்துகளையும் வியாதிகளையும் விலக்கி, போகங்களையும், யோக க்ஷேமங்களையும் அடைவிக்கிறது. இதுவே தாந்திரீக பிரயோஜனம்.

இவ்விரண்டும் நமக்கு வேண்டும். இந்த இரண்டையும் கொடுக்கக் கூடிய சக்தி இந்த நாமங்களுக்கு உள்ளது.

ஆயின், இந்த இரண்டையும் தவிர மற்றுமொரு பலனும் இருக்கிறது. அது ஆனந்த அனுபவம். இதனை ‘சாகத்வீக பிரயோஜனம்’ என்று கூறலாம். எந்தப் பலனையும் மனதில் நினைக்காமல் பரமபிரேமையோடு நாம தோத்திரத்தை ஜபித்து, விஷ்ணு அனுபவத்தைப் பெறுவது, ஆனந்தத்தில் லீனமாவது. இது பக்தி சம்பந்தமானது. நிஷ்காமம். இதுவே உண்மையில் மிகச் சிறந்த பிரயோஜனம்.

இதனை நித்திய பாராயணமாகப் பொருளறிந்து படிப்பதன் மூலம் விஷ்ணு மயமான பரமாத்மாவின் நினைவு ஏற்படுகிறது. இந்த நாம வித்யையில் இத்தனை பலன்கள், குணங்கள் இருப்பதால்தான் இது அனைத்து தர்மங்களையும் விட உயர்ந்தது என்று கூறுகிறார் பீஷ்மாச்சாரியார் சீடனான யுதிஷ்டிரனிடம்.

– தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாம வேதம் ஷண்முக சர்மா
– தமிழாக்கம் ராஜி ரகுநாதன்
– தீபம் ஜனவரி 20, 2017ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *