மஹரிஷிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 14,386 
 

(இதற்கு முந்தைய ‘சிரார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

மஹரிஷி அகஸ்தியர் ஆபஸ்தம்பரிடம் பொறுமையாகச் சொல்ல ஆரம்பித்தார்:

“அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்குமே உலகில் உலகியல் பிரமாணமாகச் சொல்லப் படுகிறது. இந்த நான்கு சப்தங்களை விட, வேத சப்தமே முக்கியமான பிரமாணமாகச் சிறப்பித்துச் சொல்லப் படுகிறது.

வேதத்தால் எவர் துதிக்கப் படுகிறாரோ, அவரே பராத்பரர்.

அபரர் என்பது யார் என்றால் ம்ருதர். அதாவது அழிவை அடைபவர். பரர் என்பது யார் என்றால் அம்ருதர். அதாவது அழிவை அடையாமல் என்றும் இருப்பவர். எவர் சரீரம் இல்லாதவரோ அவரே பரர். சரீரம் உள்ளவர் அபரர்.

ஆபஸ்தம்பர் ஆச்சர்யத்துடன் கேட்கலானார்…

“அபரன் என்பது குணம், ரூபம், வியாபகம் ஆகிய இவற்றின் வேறுபாடுகளினால் – அதாவது பேதங்களால் மூன்று விதங்களாக மாறுகிறது. ஒருவரே பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாகச் சொல்லப் படுகிறார். இம் மூன்று பேர்களில் அறியத்தக்கதான பதார்த்தம் ஒன்றுதான்… அதுதான் பரம் என்று சொல்லப்படும். அந்தப் பரம் என்ற பொருளே உலகத்தின் நன்மையின் பொருட்டு வியாபகம்; குணம்; செயல் ஆகிய பேதங்களாக இப்படி மூன்று ரூபங்கள் உள்ளதாக ஏற்படுகிறது.

இதுவே முக்கியமான உண்மை. இதை எவன் ஒருவன் அறிகிறானோ அவனே கற்றறிந்த வித்வான். இந்த விஷயத்தில் எவன் ஒருவன் பேதத்தைச் சொல்கிறானோ அவன் லிங்கபேதி என்று சொல்லப்படுகிறான். அப்படிப்பட்டவனுடைய பாவத்திற்கு பிராயச்சித்தமே கிடையாது.

இந்த மூன்று தேவர்களுடைய மூர்த்தி பேதமானது வேதத்தில் தனித் தனியே விரிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. சரீரம் இல்லாமல் இருக்கும் படியான அந்த ஒரே பதார்த்தமாகிய பரம் மேற்சொன்ன மூன்றிலும் மேலானதாகும்…”

இப்படிக் கூறி முடித்தவுடன் அகஸ்தியரை நோக்கி ஆபஸ்தம்பர், “தாங்கள் கூறிய இந்த பதிலில் எனக்கு எந்தவித நிச்சயமும் ஏற்படவில்லை… என்றாலும் கூட அதற்குள் ரகசியமாய் இருக்கும் விஷயத்தை எனக்கு எடுத்துச் சொல்வீராக…” என்றார்.

அகஸ்தியர் உடனே, “இந்த மூன்று உலகங்களிலும் ஒருவருக்கொருவர் பேதம் என்பதே கிடையாது என்ற போதிலும் மங்கள ரூபமாய் இருக்கின்ற சிவனிடமிருந்தே எல்லா சித்திகளும் உண்டாகின்றன. அவரே இந்த ஜெகத்திற்கு காரணம். அவரே ஜோதி ரூபமாக விளங்குகிறார். ஆகவே தண்டகாவனத்தில் உள்ள கெளதமி நதிக்கரை ஓரத்தில் சேவிப்பவர்களின் பாவத்தைப் போக்கும் பரமசிவன் இருக்கிறார். அங்கு சென்று மிகுந்த பக்தியுடன் அவரை பூஜித்து வாரும்…” என்றார்.

இதைக்கேட்ட ஆபஸ்தம்பர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

நேராக கங்கை நதிக்குச் சென்று அதில் ஸ்நானம் செய்து பரமசிவனை நோக்கி மிகுந்த பக்தியுடன் ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார். “கட்டைகளில் நெருப்பும்; மலர்களில் வாசனையும்; விதைகளில் மரமும்; கற்களில் தங்கமும் போல எல்லாப் பிராணிகளிலும் எவர் மறைந்திருக்கிராரோ அப்பேர்ப்பட்ட சோமநாதரை நான் சரண் அடைகிறேன்…

எந்த பரமசிவன் விளையாட்டினால் ஜெகங்களை சிருஷ்டித்துக் காப்பாற்றி வருகிறாரோ, எவர் விஸ்வரூபரோ, எவர் ஸத்துக்கும் அஸத்துக்கும் மேலானவரோ; எந்த ஒருவரை நினைத்த மாத்திரத்தில் ஒருவன் தரித்திரம், பாபம், சாபம், ரோகம் ஆகியவற்றின் கொடுமைகளில் இருந்து பாதிக்கப் படாமல் இருக்கிறானோ; எவரால் ஆதியில் பிரம்மா முதலியவர்கள் வேதத்தில் சொல்லப்பட்ட தர்மத்தை அறிந்து அதில் ஆசை கொண்டார்களோ; யாரால் இவ்விதம் இரு சரீரங்களை அடைந்தார்களோ மந்திரத்தினால் பரிசுத்தமாய் இருக்கிற நமஸ்காரமும், அக்னியில் ஹோமம் செய்யப்பட்ட பதார்த்தமும் எவரைச் சென்று அடைகிறதோ, எவரைக் காட்டிலும் வேறொரு பிரசித்தமான வஸ்து இல்லையோ; எவரைக் காட்டிலும் பெரிது, சிறிது வேறொன்றும் இல்லையோ; எவரது ஆணையால் இந்த உலகம் ஆச்சரியமாகவும், பெரிதாகவும் இருக்கிறதோ;

எவரிடத்தில் ஐஸ்வர்யம், கர்த்தத்துவம், மகத்துவம், அன்பு, கீர்த்தி, சுகம், சாஸ்வதமான தர்மம் ஆகிய அனைத்தும் இருக்கின்றனவோ; யார் எல்லோரையும் காக்கிறாரோ; சரணம் அடைந்தவர்களிடம் யார் ஒருவர் பிரியமுடன் இருக்கிறாரோ; அந்த சோமேஸ்வரரை நான் சரண் அடைகிறேன்..”

இந்த ஸ்தோத்திரத்தினால் மஹாதேவர் பரமசிவன் சந்தோஷமடைந்து ஆபஸ்தம்பர் முன் தோன்றினார்.

ஆபஸ்தம்பர் பரமசிவனிடம் “யார் ஒருவர் இவ்விடத்தில் ஸ்நானம் செய்கிறார்களோ அவர்கள் இஷ்டப்படி அனைத்தையும் அடைய வேண்டும்” என்று தனக்காகவும் மற்ற அனைத்து மக்களுக்காகவும் இவ்வாறு வேண்டினார்.

பரமசிவனும் “அப்படியே ஆகுக” என்று கூறி அனுக்கிரஹனம் செய்தார்.

அது முதல் அந்தத் தீர்த்தம் ஆபஸ்தம்பர் தீர்த்தம் என்ற பெயரில் பிரசித்தம் அடைந்தது.

அதில் ஸ்நானம் செய்பவர்கள் வெகு காலம் தன்னைத் தொடர்ந்து வரும் அஞ்ஞான இருளில் இருந்து மீண்டு ஞான ஒளியைப் பெறுவான் என்கிற நிலை உருவானது.

மஹரிஷி ஆபஸ்தம்ப சூத்ரத்தை அனுஷ்டிப்போர் இன்றும் ‘ஆபஸ்தம்ப சூத்ர’ என்று தங்கள் சூத்ரத்தைச் சொல்வது வழக்கமாக உள்ளது…

ஆன்மீகப்படல உதவி : மஹாஸ்ரீ லண்டன் ச.நாகராஜன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *