மன்னனின் மனக்குறை போக்கிய மகேஸ்வரன்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 5,274 
 

மன்னனின் மனக்குறைமதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய நாட்டை அரசாண்ட விக்கிரம பாண்டியனுக்குப் பிறகு, அவன் மகன் ராஜசேகரன் ஆட்சி பீடம் ஏறினான். கல்வி, போர்ப் பயிற்சி உட்படப் பல்வேறு கலைகளை கற்றுத் தேர்ந்த ராஜசேகரன், நடனத்தை மட்டும் பயிலவில்லை. அதை அவசியம் என்று அப்போது அவன் கருதவில்லை.

அதேக் காலத்தில் சோழ நாட்டை கரிகால் பெருவளத்தான் ஆட்சி செய்தான். நடனக் கலை உட்பட அறுபத்துநான்கு கலைகளிலும் தேர்ந்தவன் அவன். ஒரு முறை பாண்டிய மன்னனைச் சந்திக்க, சோழனின் அரசவைப் புலவர் ஒருவர் மதுரைக்கு வந்தார். அவரை உற்சாகத்துடன் வரவேற்றான் ராஜசேகரன். அவர்களது உரையாடலின் நடுவே நடனக் கலை பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ராஜசேகரனுக்கு நடனம் தெரியாது என்பதை உண்ர்ந்த புலவர் ஆச்சரியப்பட்டார். ‘‘நடனக் கலையை ரசிப்பதற்காகவாவது ஓர் அரசன் அதில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்’’ என்று கூறினார் புலவர். மட்டுமின்றி, சோழ மன்னன் நடனக் கலையில் சிறந்தவன் என்றும் எடுத்துரைத்த பின்பு அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.

‘நடனக் கலை தெரியாததால், சோழ மன்னனை விட நீ தாழ்ந்து விட்டாய்!’ என்று தன்னை இடித்துரைக்கவே, சோழநாட்டுப் புலவர் இவ்வாறு கூறியதாகக் கருதினான் ராஜசேகரன். எனவே, உடனே நடனக்கலை வல்லுநரை வரவழைத்து பயிற்சியில் ஈடு பட்டான். விரைவிலேயே அதில் தேர்ச்சியும் பெற்றான் ராஜசேகரன். ‘நடனம் எவ்வளவு சிரமமானது!’ என்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான்.

அதன் பிறகு ஆலயத்துக்குச் சென்ற ராஜசேகரன் வழிபாட்டின்போது வெள்ளியம்பலத்தில் ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் பரமனைக் கண்டான். ‘பரமன் நீண்ட காலமாக ஒற்றைத் திருவடியைத் தூக்கி ஆடிய நிலையில் இருக்கிறார்! அவரின் திருவடிகள் எவ்வளவு துன்பப்படும்?’ என வருந்தினான். எனவே, இறைவன் முன் பக்திப் பரவசத்துடன் நின்று, ‘‘பரமேஸ்வரா… எத்தனை காலம், தாங்கள் ஒற்றைத் திருவடியைத் தூக்கி நிற்கிறீர்கள்… திருவடி நோகாதா? ஐயனே, தூக்கிய பாதத்தை தரையில் பதித்து கால் மாற்றி ஆடி, சிரமம் நீங்கக்கூடாதா?’’ என வேண்டினான்.

உடனே, தன் கால்களை மாற்றி நின்று திரு நடனமாடி ராஜசேகரனின் மனக்குறை போக்கினார் பரமன். இதனால் மகிழ்ந்த அரசன், ‘‘இந்தத் திருக்கோலத்துடனேயே எனக்கு என்றென்றும் காட்சி தர வேண்டும்!’’ என்று வேண்டினான்.

‘‘அப்படியே ஆகட்டும்!’’ என்று அருளினார் பரமன்.

மதுரை வெள்ளியம் பலத்திலும் அருப்புக் கோட்டை அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் வலப் பாதம் தூக்கி ஆடும் நடராஜ மூர்த்தியை தரிசிக்கலாம்.
– வி. பாலு, கும்பகோணம்-1 – ஜூலை 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *