(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீட்டு சேவல் கூவியது. விடிவெள்ளி மறைந்தது. அடிவானம் சிவந்தது. ஆதவன் உதித்தது. இருள் அகன்றது. இடியாப்பசத்தம் கேட்டது.
அதிகாலை எழுந்து ஆறரை மணிக்கு வழக்கம் போல் வீடு சந்திக்கப் புறப்பட்டார் சபை போதகர் பொவனெர்கேஸ் கோபால்.
வாசல் பெருக்கி, முற்றம் தெளித்து,வரவேற்ற வீடு ஒன்றைக் கண்டு, காலிங் பெல் போட்டார் போதகர். ஓடி வந்து, கதவைத் திறந்து கனம் பண்ண முந்திக் கொண்டாள் வாலிபப்பெண் ஜமீல்ராணி. அண்ணன் ஆகாய் லவ்சன் இஞ்சினியரிங் கடைசி செமஸ்டர் தேர்வுக்காய் படித்துக் கொண்டிருந்தான்.
“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்வது போல், நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிரு மகனே(ளே)” (3 யோவான் 2) என்று வாழ்த்தி ஜெபித்து ஆசீர்வாதங் கூறி விட்டு, வாலிபப் பிள்ளை களைப்பார்த்து, “படிப்புதான் சொத்து, நன்றாகப் படித்து முதல் வகுப்பில் பாஸ்பண்ணுங்கள்” என்று அறிவுரை கூறினார் போதகர்.
உடனே, வாலிபன் லவ்சன் குறுக்கிட்டு; ஐயா, இந்தக் காலத்தில் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் சம்பளம் கிடைப்பதில்லை. “விண்ணெட்டும் விலை வாசியில், ஏழாயிரம் ரூபாய் எந்த மூலைக்கு” என்று சோர்வுடன் சொன்னான் லவ்சன்.
போதகர் லவ்சனைப் பார்த்து, “கேளுங்கள், கொடுக்கப்படும்” (மத் 7:7) என்ற நற்செய்தி சொன்ன நாயகன் இயேசுவைஞாபகமூட்டினார்.
உடனே லவ்சன், நான் எவ்வளவு கேட்டாலும் இயேசு தருவாரா? என்று கேட்டான்.
அதற்குப் போதகர், ஆம்! தருவார். உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்? சொல் என்றார் போதகர்.
உடனே லவ்சன், எனக்கு மாதச் சம்பளம் ரூ. 30,000/- சம்பளப்படி ரூ. 7,000/- ஸ்கூட்டர் பெட்ரோல் செலவுக்கு ரூ. 800/- வேண்டும் என்று தன் கால்குலேட்டரில் போட்டுக்காட்டினான் லவ்சன்.
மாதச்சம்பளம் = ரூ. 30,000.00
சம்பளப்படி = ரூ. 7,000.00
ஸ்கூட்டர் படி = ரூ. 800.00
பாட்டிக்கு டானிக்பாட்டல் = ரூ. 18.00
ஆக மொத்தம் = ரூ. 37,818.00
போதகர் அந்தக் கால்குலேட்டரை வாங்கி, அதைத் தலைகீழாகக் காட்டி, லவ்சன் இதை வாசி. முதலாவது இதைப் படித்துவிட்டுப் பின்பு உன் பாடங்களைப்படி. நீ கேட்ட சம்பளம் உனக்கு கிடைக்கும். கர்த்தர் உன் குடும்பத்தை ஆசீர்வதிப்பார். குடும்பத்துக்கு பணப்பயிர் இந்தப் பரிசுத்த பைபிள்தான் என்று வாலிபனை சிந்திக்க வைத்தார் போதகர்.
“வெள்ளியும் என்னுடையது. பொன்னும் என்னுடையது” (ஆகாய் 2 : 8) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
லவ்சன் கால்குலேட்டரை வாங்கி வாசிக்கவும்,
37818
BIBLE
இப்போது BIBLE என்று மாறியிருப்பது கண்டு அசந்து, ஆச்சரியப்படவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக்கடிகாரம் காலை 7 மணி அடித்து, பைபிள் மத்தேயு நற்செய்தி நூல் 6ம் அதிகாரம் 33ம் வசனம் சொல்லிற்று.
“முதலாவது, தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு6:33)
உடனே லவ்சன் தன் நண்பனுக்கு போன் போட்டான். நண்பன் மொபைல்போன் ஓர் அழகான பாடல் பாடிற்று.
“இன்பம் சுரந்திடும் திருமொழிக்கேட்டு என்
இன்னல்கள் மறந்திடுவேன் ஆ! ஆ!
திருமறை இன்னிசை நாதம்
தேனிலும் இனிய வேதம்
தரும் எனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம் ஆ! ஆ!”
– சிலுவை நிழலில்
(பெயர்கள் யாவும் கற்பனையே)
– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.