அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.
ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.
துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.
அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.
துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.
துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”
”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ஸ்வாமி?” – கேட்டார் ராமபிரான்.
”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!
– ஸ்ரீ.ஸ்ரீ (நவம்பர் 2009)
கதை சிறுக்கதையாக இருந்தாலும் கருத்து மிக பெரியது. சிறுக்கதை எழுதியதிற்கும், அதை பகிரிந்துகொண்டதற்கும் மிக்க நன்றி.