சொர்க்க வாசல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 7,872 
 
 

இன்று வைகுண்ட ஏகாதசி.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம்.

வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று தவறாமல் அரங்கனைச் சேவித்து விடுவேன். இன்றும் வழக்கம்போல் அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து மணல் வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

திடீரென என் அருகில் ஒரு மெல்லிய குரல் கேட்டது.

“அதான் சொர்க்க வாசலை இப்ப தாண்டியாச்சுல்ல… சரி இப்பவே என்னோட நீ வா போகலாம்…”

குரல் வந்த திசையில் பார்த்தால், சாட்சாத் அரங்கநாதரே கம்பீரமாக கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தார்.

“எங்கே என்னைக் கூப்பிடுகிறீர்கள் பெருமாளே?”

“சொர்க்கத்துக்கு. அங்க போகணும்னு தானே இவ்ளோ நேரம் வரிசையில் நின்று கும்பல்ல முட்டி மோதி முன்னால வந்த… அங்கதான் உன்னை நான் அழைக்கிறேன், என்னுடன் இப்பவே வா.”

“விளையாடாதே ரங்கா, எனக்குக் குடும்பம் இருக்கு; பிள்ளைங்க இருக்காங்க; எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. திடீர்ன்னு இப்படி என்னைக் கூப்பிட்டா, நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு?”

“இந்த உலகத்தையே பாத்துக்கிறவன் நான். உன் குடும்பத்தை நல்லவிதமா பாத்துக்க மாட்டேனா?”

“எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு ரங்கா. நீதானே சொல்லியிருக்க, கடமையை ஒழுங்காச் செய்ன்னு.. அப்புறம் நீயே இப்படிச் சொன்னா எப்படி?”

“அப்போ உன் கடமையைச் செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்கு போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்டே? சாக வேண்டாம், ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? அப்ப உன் பக்தி பொய்யானதா?”

“…………………….”

“நீ பக்தியோட கேட்ட, அதுவும் வருஷா வருஷம், அதான் உன் பக்தியை மெச்சி நானும் உன்னிடம் இப்போ வந்தேன்… இப்போ என்னிடம் சாக்கு போக்கு சொல்லாதே, வா போலாம்.”

“நான் பக்தியோட உன்னிடம் கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல. பின்னாளில் வயசானப்புறம் கண்டிப்பாக ஒரு நாள் சாகத்தானே போறோம், அதுக்காக.”

“ஓஹோ, அப்போ எப்போ நீ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ, எங்கிட்ட வர்றதுக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கிற… அதை வருஷா வருஷம் ரினியுவல் வேற பண்ற… ஆனா இப்போ நானே வந்து நேரில் கூப்பிட்டாலும் வரமாட்டே, அப்படித்தானே?” குரலில் ஏகப்பட்ட கிண்டல்.

“அப்படியேதான் ரங்கா. அதைத்தானே எல்லோரும் செய்யறாங்க, என்னை மட்டும் இப்படிக் கிண்டல் பண்ணுறியே?”

“உன்னை மட்டுமில்ல, எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்றேன். சரி, உன்னிடம் சில கேள்விகள் இப்ப கேக்கறேன், பதில் சொல்லு.”

“என்ன வேண்டுமானாலும் கேள்…”

“சொர்கத்துக்கு போகணுமா? அல்லது பரமனின் பதத்தை அடையணுமா? உனக்கு எது வேணும்?”

“என்னைக் குழப்பாதே ரங்கா.”

“நான் குழப்பலை, நீதான் குழம்பிப்போய் இருக்கிறாய்.”

“அப்போ ரெண்டும் வேற வேறயா?”

“அது உன் எண்ணத்தைப் பொருத்தது.”

“அப்படீன்னா?”

“பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கிறது வேற… பண்ணின பாவத்துக்கெல்லாம் எம கிங்கரர்கள் எண்ணைச் சட்டில போட்டு வேக வச்சிடுவாங்களோ என்கிற பயத்தில், அய்யோ பகவானே என்னை மன்னிச்சு இந்திரன் இருக்கிற சொர்க்கபுரில சேர்த்துடுன்னு நினைக்கிறது வேற…”

“அப்போ சொர்க்கம் நரகம் எல்லாம் நிஜமாவே இருக்கா?”

“அது மனிதர்களாகிய உங்களுக்குத்தான் தெரியும். நீங்கதானே கலர் கலரா செட் போட்டு; வெள்ளைப் புகையை பறக்கவிட்டு; நாலு அழகான பொண்ணுங்களை நாட்டியமாட விட்டுக் காட்டறீங்க?”

“அப்போ அதெல்லாம் எங்க கற்பனை… நிஜமா ஒண்ணும் இல்லைன்னு சொல்றயா?”

“நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லப் பட்டிருக்கு. நீங்க அதைப் படிச்சுப் பாக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு, அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க… உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை வசதியா விட்டுடறீங்க…”

“……………………..”

“ஆனா கஷ்டம் வந்தா மட்டும் பெருமாளே உனக்கு கண்ணில்லையா, காதில்லையான்னு என்னைத் திட்டறீங்க!”

“அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை, சொர்க்கம் நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றயா?”

“இல்லை இதெல்லாம் தேவைதான். ஆனா நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்ணலைன்னு சொல்றேன்.”

“………………………..”

“புரியலையா? இந்த உலகத்துல இருக்கிற நீங்க அனைவரும், பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்… கடைசில நீங்க வந்து சேரப்போறதும் எங்கிட்டதான். இடையில நீ வாழற இந்த வாழ்க்கைல உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, அதன்பின் எங்கிட்ட வந்து சேரப்போற.”

“அப்படியா?”

“அப்படி எங்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான் சொர்க்கமும் நரகமும். நீ எதை அனுபவிக்கணும், பார்க்கனும்னு நீதான் தீர்மானம் செய்யிற, உன் கர்மாக்கள் மூலமாக…”

“……………………….”

“நீ இறந்த பிறகு எங்கு போகணும்னு யோசிக்கிறதை விட்டுவிட்டு, வாழும்போது எப்படி வாழணும்னு யோசி. சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு. எங்கோ ஆகாயத்துல இல்லை. வாழும்போது சொர்க்கத்தை அடையும் வழியைத்தான் கீதையில் ஏற்கனவே சொல்லப் பட்டிருக்கே… அதை ஆழ்ந்து புரிந்து படி. உன் எல்லாக் கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு. அதை ஞாபகப்படுத்தத்தான் இத்தகைய விழாக்கள்…”

“புரிகிறது பெருமாளே!”

“கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால் சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய். உனக்கு நல்வழி காட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன். உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழி நடத்துகிறேன். இதுதான் தத்துவம்!”

“அப்படியா?”

“அனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதைச் செய்கிறீர்கள்.. பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து தன் தவறுகளை சரிசெய்ய முடிவெடுத்து, நான் காண்பித்த வழியை பின்பற்ற முயற்சிகள் எடுத்தவர்கள் எத்தனை பேர்?”

“உண்மைதான்.”

“பரமபத வாசலைக் கடந்தால், பண்ணின தப்பையெல்லாம் பெருமாள் மன்னிச்சு சொர்க்கத்தில் நம்மைச் சேர்த்திடுவார்… என்பதுதான் உங்களில் பலரின் குருட்டு நம்பிக்கை. வருடா வருடம் பலருக்கு இது ஒரு சடங்கு. இன்னும் சிலர் ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும், அதோட கேசரி, புளியோதரை சாப்பிட்டுவிட்டு; அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம்… போனா சொர்க்கம் இல்லாட்டி சுவையா தோசையாவது கிடைச்சுதே…என்று சந்தோஷிப்பார்கள். உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர்கள் வெகு சிலரே…”

“முற்றிலும் சரி.”

“இன்று நான் உனக்குச் சொன்னேன்! நீ போய் சிலருக்குச் சொல். நீங்கள் என் குழந்தைகள். நீங்கள் அனைவரும் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழிகாட்டிக்கொண்டுதான் இருப்பேன். உங்கள் கைகளை பிடித்து அழைத்துச் செல்லக் காத்திருக்கிறேன், நல்லபடியாக வந்து சேருங்கள்.”

அரங்கன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

ஆயிரங்கால் மண்டபத்தைக் கடந்து வெள்ளைக்கோபுர வாசலை நோக்கி நடந்தேன்.

அங்கு அரங்கன் அபயகரத்தோடு புன்னகையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *