சுந்தரமூர்த்தி நாயனார் யட்சகானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை நாடகம்
கதைப்பதிவு: May 16, 2024
பார்வையிட்டோர்: 2,713 
 
 

(இந்நூல் அ.கீ.சு.நூலக ஓலைச்சுவடியிலிருந்து (எண்.ஆர். 2721) பதிப்பிக்கப்படுவதாகும், கி.பி. 1848 ஐ ஒட்டிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5

சுந்தரமூர்த்தி நாயனார் அலறல்!

விருத்தம் 

73. பரனே சிவனே முறையோ முறையோ 
பரமேஸ் வரனே முறையோ முறையோ 

அரனே அரனே முறையோ முறையோ 
வலியாண் டவனே முறையோ முறையோ 

கரமேல் மழுவைத் தரித்தாய் முறையோ 
கண்டகோடாலி கையில் பற்றி 

முரணாய்த் துணிப்பே னென்னவே வந்தான் 
மூவர் முதல்வா முறையோ முறையோ? 

வசனம் 

“இப்படியாக முறையிட்டுக் கொண்டடோடி கோவிலிலே புகுந்து கதவைச் சாத்திக் கொண்டபோது விறல் மிண்டர் போய்க் கதவையிடிக்க சுவாமியார் திருவாய் மலர்ந்த தெப்படியென்றால்” 

(சுவாமியார் சிவன்) 

தண்டிக்க வேண்டாம் என்று சிவன்கூறல்!

விருத்தம் 

74. சுந்தரன் வேறே யல்ல 
சுயமிவ னாமே யாகும் 
எந்தட விருந்தா லென்ன 
எவ்விதம் வந்தா லென்ன? 
நந்தமக் கின்ப மாகும் 
நவில்விறல் மிண்டா நீயே! 
வந்துதெண் டிப்ப தென்னோ? 
மற்றினி ஏகு வாயே! 

வசனம் 

“அந்த விசேஷத்தை விறல்மிண்டர் கேட்டுச் சொல்லிக் கொண்டு போகிற வித மெப்படியென்றால்” (44) 

விருத்தம்

75. ஏதிவை சொல்வ தெல்லாம் 
என்தொண்டுக் கிடையூறாக 
ஓதிய நாயன் கூட 
ஊரனும் புறம்ப தாகும்! 

நீதியில் லாத ஊரில் 
நிற்கவும் ஒண்ணா தென்றும் 
போதுவே னாரு சொல்லைப் 
புலத்தையு மிதிக்கி லேனே! 

வசனம் 

“இப்படியாக விறல்மிண்டர் போனபிறகு சுவாமியார் சுந்தரரைப் பார்த்து திருவாய் மலர்ந்த விதம் எப்படியென்றால்” (45) 

சந்த விருத்தம் 

76. எல்லவர மஞ்சவரு விறல்மிண்ட நாயினார் 
இருந்ததொன்று மறியாம லேமாறி நீயே 

வல்லமைகொண் டாசார மில்லாம லிங்கே. 
வந்தனை கண்டவர் துரத்தி வந்தனை! 

விலக்கிச்சொல் மொழியதனைச் சகியமாற்போனார்
சுந்தரரவர் கோபமகன் றிங்கு வரவே 

தில்லைவா ழந்தணர்தம் மடியார்க்கு மடியோனே 
திருத்தொண்டத் தொகையெடுத் தியம்புவாய் நீயே! 

வசனம் 

“இப்படியாகத் சுவாமியார் சொல்லத் திருத்தொண்டர்தொகைபாடி யாரூரிலே தானே பரவையாருடனே கூடியிருந்து விளையாடுகிற நாளிலே நடக்கிற விதமெப்படி யென்றால்” 

சுந்தரர் பயணம்

திபதை 

77. குண்டையூ ராரூர் கொற்றவ ரருளால் 
குண்டையூர் நல்லூர் குன்றநெற் கொண்டு 
வளவனார் தமதுமந்திரி கோட்டம் புவியார் 
தளபதி நாட்டியத்தான்குடி. நன்றி 

மற்றவ ருதவு மகளிரோ ரிருவர் 
பொற்றொடி யாரைப் புணர்வது விடுத்து 
பொன்னின மாடைகளும் பூஷண வகையும் 
பின்னுமே பொருளும் பெற்றுவந் தருளி 

பங்குனி விழாவிற் பரவையா ரெவற்குஞ் 
செங்கைகா ரெனவே தியாகமே தருக. 
தென்புக லூரிற் சிவன்செங்கல் தன்னை 
அன்புடன் செம்பொன் னாக்கியே தருக 

கொண்டுவந்த தருளி கொங்குநா டளவாய் 
அண்டத்தம் பதிகள் அனைத்தையும் பரவித் 
திருமுது குன்றிற் சென்றுதம் பெருமான் 
அருளிய பன்னீ ராயிரம் பொன்னும் 

மாற்றான் அருளால் மணிமுத்தா நதியில்
முத்துமே விடுத்து முதல்வா ரூரிற்
குளத்திலே யெடுத்து கொண்டுவந் தருளி 
உளத்திலே பரவை யுகந்திட வியந்து 

மற்றுமே வடக்காய் வருகின்ற நாளில் 
கொற்றவெம் பெருமான் குருகாவூ ரருகில் 
வந்துபந்த தலின்கீழ் மறையவ ராகி 
புந்தியே மகிழ்வாய் பொதிசோறும் நீரும் 

தந்திடப் பொசித்து தான்கழுக் குன்றில் 
வந்தன ரருகில் வாழுங்கச் சூரில் 
மேவிய போதில் விமலரந் தணராய் 
தாவியோ டொன்றைத் தன்கையிற் கொண்டு 

இரந்து வந்தனன் இடவுமே பொசித்து 
பரந்தசீர் மகிழ்வாய் பதியெலாம் பரவி 
வெற்றிசேர் குலத்தார் வியந்தெதிர் கொள்ள 
ஒற்றியூர் தன்னி லுகந்துவந் தனரே! 

விருத்தம் 

78. வந்துகோ புரத்து முன்னே 
வணங்கினர் எழுந்து சென்று 
சிந்தையின் மகிழ்வு கூற 
திவ்வியசன் னிதியா வெய்தி 

புந்தியா லுன்னிக் காயம் 
புளகிக் கண்ணீர் வார 
பைந்தமிழ் மாலை பாடி 
பணிந்துவந் தனரே பாங்கே! 

வசனம் 

“இப்படியாக சுந்தரர் ஸ்வாமியாரை சேவித்த பிறகு திருச்சுத்திலே திருப்பணி செய்யுற அடியார்களை துதிபண்ணிக் கொண்டு வருகிற விதம் எப்படியென்றால்”

‘தொண்டர்களுக்குப் பணிசெய்வேன்!’ 

சம்பை 

79. திருவலகு மெழுகுபவர் திருப்பணியுந் திருமெழுக்குஞ் 
செய்குவீ ருமைப்போற்றி உய்குவே னையா!
தூபமகிற் புகைசெய்து தீபவொளி செய்கின்ற 
தொண்டர்கள் நுமக்கெல்லாந் தொண்டன்கா ணையா! 

சந்தனமும் புனுகுசட்ட நதியிலமிர்தஞ் செய்தமத்திற் 
தருகுவீர் உமையெலாம் பரவுவே னையா!
பலமலரும் வில்வமுதல் பறித்துவந்து மாலைசெய்து 
பணிசெய்வீ ருமதேவற் பணிசெய்வே னையா! 

வசனம் 

“இப்படியாக சேவித்துக் கொண்டு வருகிறபோது, மாலை மண்டபத்துக்குள் சங்கிலியார் மாலை போடுகிற விதமெப்படி யென்றால்” (48) 

சங்கிலியார் மாலை கட்டல்! 

சம்பை 

80. பணமான ருத்ராக்ஷம் பசும்பொன்கண் டிகைதன்னை 
கணவாளி ப்ருவாளி காதுதனிற் புனைந்து 

கெம்புமூக் குத்தியிட்டுத் திலகமிட்டு மயிர்முடித்து
செம்பொன் னாகிய மைற்றிரு நீறுசாத்தி 

இக்குமணி முத்துமணி அணிபவள மணிவடமும் 
ஒக்கவே மலைமீதி லூசல்நிக ராடப் 

பட்டுடையு மெத்தாப்பும் பாடகமும் பதிபுரமும் 
கட்டழகி வீசுசெங்கை கடகவளை யொளிர 

அருவமதன் கருப்பு வில்லின்
அலர்வரளி தனைத்தொடுக்கப் 
புருவவில்லின் மைக்கண்டு பூவரளி தொடுத்து 

நெஞ்சுதனி லஞ்செழுத்தை நெகிழாமலே யன்றி
வஞ்சிசங் கிலிகையில் மாலை தொடுத்தனளே! 

வசனம் 

“இப்படிப்பட்ட சங்கிலியைப் பார்த்த சுந்தரர் தம்முட மனசுடனே சொல்லுகிற வசனம் எப்படியென்றால்” (49) 

தரு 

81. மாசுசூழ் சந்திர னென்ன வேதிரை
மறைவில் இருந்தவள் இவளாரோ? 

அலரொன் றெடுத்திவள் தொடுக்கவே
மலரைத் தொடுத்தே மதன்தொடுக்கிறான் 

தொடுக்கவே தொடுக்கவே மலரெல்- லாமனந்
திடுக்கு திடுக்கென்ன யாகுதே! 

பரவையல்லா நிலையெனு மெனக்காண 
திருவரு ளிதுவென்ன வந்ததே! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே சுந்தரரைச் சங்கிலியார் பார்த்து, தன் மனதுடனே சொல்லுகிற வசன மெப்படி யென்றால்”(50) 

குறுந்தாழிசை 

82. இதுவரைக்கு மொருவருக்கு மிடங்கொடா மனந்தனில் 
புதியவரிவ ரார்வந்து புக்கினார் எதுக்கோ? 

பண்டுசொன்ன சொற்படிக்கி பரமரிவ ரைத்தனியே
கொண்டுவந்து விட்டுவிடுவர் காட்டஞ் செய்தனரோ?

ஏதொன்றும் நான்றியேன் இடைதுயிலும் நெகிழுதுகாண்
சூதென்று முலைபசலை சூழ்ந்தவளை கழலுதுகாண்! 

குளிர்தென்றல் தீயாய்க் கொதித்துவரு தீதல்லாற்
றெளிந்தமனமும் மயிலிற் சிக்கினதென் செய்வேனே 

வசனம் 

“அந்தச் சமயத்திலே சுந்தரரிவளாரென்று கேட்க விப்ரவக்கிரன் விசாரிச்சு வந்து சொல்லுகிற வசன மெப்படி யென்றால்” 

விருத்தம் 

83. நாரணு மரபில் மரபால் நாயன் 
கேழ்வ னல்கும் பாவை 
மாயவிழிச் சங்கிலியார் தன்கு லத்தில் 
ஒருவரையும் அவரையே னென்று 

மெய்சிவன் கருணையினாற் கன்னிமா டத்தில் 
வைகி மின்னார் சூழ 
எய்திருச் சன்னதியிற் திருப்பணிகள் செய்து 
தொழுதி ருக்கின் றாளே! 

(நாரணுமரபு – பூக்கட்டும் மரபு) 

வசனம் 

“இந்த விசேஷம் கேட்டு, சுந்தரரொருவிடத்திலே யிருந்து விரகதாபம் படுகிற விதமெப்படி யென்றால்” (52) 

அடதாளம் 

84. அந்தச் சங்கிலி லாடச் சங்கிலி 
ஆசை பூட்டி மனதினைப் 
பந்தித்தே யிருக்கின்ற சங்கிலிப் பரவையர் 
நானேது செய்திட மையற் சங்கிலி 

இரண்டு தாள்களினும் புறம்போதி டாமலே 
இருப்புச் சங்கிலி போது தாச்சு! 
அய்யய்யோ வெகுசங்கிலி துறடானபடியே மயங்கியே 
மெய்யிலே மந்தமாருதத் தழல்வீச லானேன்! 

வசனம் 

“பிள்ளை யெழுந்திருந்து சன்னதியிலேபோய் சுவாமியாருடனே விண்ணப்பம் பண்ணிக் கொள்கிற விதமெப்படி யென்றால்” (53) 

விருத்தம் 

85. பரவை மின்னாள் தருமாசைப் 
பரவையிலே மூழ்கியது பத்தா தன்றோ? 

புரவலர்கண் சங்கிலியார் காதலைச் 
சங்கிலிச் சிக்குப் போட்டா னய்யா! 

பரசிவனே மையல் கொண்ட 
பரிதாபந் தனைப்பார்த்துப் பரவை யாரைத் 

தரவேணு மினியுனது 
பாதார விந்தத்திற் சரணஞ்செய் வேனே! 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரர் சொல்ல, ஸ்வாமியார் பழைய விருத்தப் பிராமணர்போல வந்து சொல்லுகிற வசனமெப்படியென்றால்.” (54) 

விருத்தம் 

86. வருந்திட வேண்டாங் கேளாய் 
வன்தொண்டா அவளைச் சேர்தல் 
அருந்தல மானா லுந்தான் 
ஆயிர நயங்கள் பேசி 

திருந்தவே செய்து நாளை 
திருமண முடிப்பேன் கண்டாய்! 

இருந்தல்லோ படுக்க வேணும் 
இனிக்கணத் தாளு வாயே! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே ராத்திரி வருகிற விதமெப்படி யென்றால்” (55) 

திபதை 

87. இப்படிச் சொல்லியெங்கள் ஈசனு மறைந்து போக 
அப்படியே தானந்த ஆதவன் மறைந்து போக 

நாயகன் போனானென்று நளினங்கள் கதவ டைப்ப
மேயசெங் குமுதமெல்லாம் வீடுகள் திறந்து கொள்ள 

மாலையம் பொழுதுமாயச் செவ்வானமு மேற்கே தோன்ற
வேளையி லிடைவி டாமல் விளங்குசெம் பதுமமென்ன 

பரவிய விருளிலெங்கும் பலபல தீபஞ் தோன்றக்
குருகுகள் கோடுகோடாய் கூண்டினி லளடந்து வாழ்கச் 

சுந்தரர் தனியுந்தாமுந் துலைவிலாக் கங்குல் தன்னில்
தந்திர மதனனூடே சண்டைகொண் டலைந்து நிற்கச் 

சங்கிலி யென்னுநங்கை தனித்திரு இருவென் றோது
மங்கையைத் தூறித்தூறி வைதுகொண் டிருக்கும் போது 

நித்திரை யென்னுநங்கை நினைவினில் கருணை கூர்ந்து
பத்திவிழியாள்தானும் படுத்தனள் பாயின் மீதே! 

வசனம் 

“அந்தச்சமயத்திலே சங்கிலியார் சொப்பனத்திலே ஸ்வாமியார் வந்து சொல்லுகிற வசனமெப்படியென்றால்” (56) 

விருத்தம் 

88. முந்தவே யுனக்கு நாமே 
மொழிந்தகொற் படியே யந்த
சுந்தரன் வந்தா னுன்னைச் 
சுயமதாய் மனைவி யாகத்
தந்திட வேணு மென்றான் 
தந்தனம் நாமே பெண்ணே 
சிந்தையே மகிழ்வு கூரத் 
திருமணம் புரிகு வாயே! 

வசனம் 

“இப்படியாகச் சுவாமியார் சொல்லக் கேட்டுச் சங்கிலியார் சொல்லுகிற வசனமெப்படி யென்றால்” (57) 

விருத்தம் 

89. சென்னிமிசைப் பிறையணியும் நாதா உந்தன் 
திருவுளத்துக் கேற்படி யல்லால் வேறே
என்னிடயிச் சையுமுளதோ வாணா லுந்தான் 
இனியவர்தா னென்னைவிட் டகன்று போந்து
பொன்னுலகில் திருவாரூர்ப் பரவை யாரைப் 
புணர்வதற்குப் போகோனென் றுண்மையாக 
சன்னதிமுன் வந்துநின்று சொன்னா ராகில் 
சம்மதியா மனமெனக்குத் தரிக்குந் தானே! 

வசனம் 

“அந்தச் சமயத்திலே சங்கிலியார் சொன்ன வார்த்தையைக் கேட்டு,விருத்தப் பிராமணர் போலே வந்து சுந்தரருடனே சொல்லுகிற வசனம் எப்படியென்றால்,” (58) 

சிவன் சொன்னது 

“திருவுடைச் சுந்தரா! எந்தன் தோழனே எனைத் தூதனுப்பினை; ஏகி நானுமே அந்த மாதினை இரந்து பிரியமனேகஞ் சொல்லி மனது சம்மதியாகவே செய்த வருத்த மெத்தனை யென்று சொல்லுவேன்? அனகனே அவள் சொல்ல வாய் மொழி பறையக் கேளாய்! என்னை விட்டினி, பரவைப் பக்கலி லேகேனெனக் கோயில் சன்னதி தன்னில் நின்றுன்னைச் சொல்லச் சொல்லினள் சதுரியவளே” (59) 

வசனம் 

“இப்படியாகச் சுவாமியார் சொன்னது கேட்டுச் சுந்தரர் சொல்லுகிற வசன மெப்படியென்றால்” (60) 

அர்த்தசந்திரிகை 

90. நெஞ்சுதனை மாலையுட னேகொண்டு பிணித்தார் 
பிணித்தவுட னேகாமப் பிரமையாகச் செய்தார்
செய்யுமவள் யென்சொலினுஞ் சொல்லவே வேணும்
வேணுமென்று சன்னதிமுன் விளம்பியிடும் போது
போதவே கோவில்தனில் பொருந்தியங் கிராதே! 

வசனம் 

“இப்படியாகச்சுந்தரர் சொன்னவுடனே அந்தப்படி யாகுதென்று சங்கிலியார் சொப்பனத்திலே சுவாமியார் திரும்பிவந்து சொல்லுகிற வசனமெப்படியென்றால்.” (61) 

விருத்தம் 

91. சங்கிலி யாரே நீதான் 
சாற்றிய வசன மெல்லாம் 
அங்கவன் இசையச் சொன்னேன் 
அவன்சபதம் சொல்லும் போது 
தங்கிய கோயில் விட்டுத் 
தருமகி ழடியின் கீழே 
இங்கிதத் திருப்பா யென்றான் 
இவையறிந் திருப்பாய் நீயே! 

(தருமகிழடி – மகிழ மரத்தின்கீழே) 

வசனம் 

“இப்படியாகச் சங்கிலியார் சொப்பனங் கண்டெழுந்திருந்து பாங்கியை யெழுப்பிச் சொல்லுகிற வசனமெப்படி யென்றால்.” (62) 

தரு 

92. தோழியே நானிப் போது 
சொப்பனங் கண்டது கேளாய் 
ஆழியனு மயனுங் காணா 
அந்தணர் வந்தனர் கண்டாய் 

வந்துநின்ற தமது தோழர் 
வருந்தியென்னை வேணு மென்ன 
தந்தமை யிரக்கத் தாமும் 
சம்மதியாந் தருவ மென்றே 

சொன்னதிந்தப் படிகா ணுந்தான் 
சுயபுத்தி யேதென்று கேட்க 
என்னிச்சை யோகசுவாமி யுந்தன் 
இருதயப் படியென்று சொல்லி 

இன்னமு மொன்றுண் டென்று 
என்னைவிட் டாரூர்க் கேகாமல் 
சன்னதிமுன் வந்து சொன்னால் 
சம்மதியா மென்று சொன்னேன் 

சொன்னபொழு தந்தப் பேச்சைக் 
சொல்லியவன் சொன்ன பேச்சை 
என்னருகில் மீணடு வந்து 
எனக்குச்சொல் லுந்திறம் கேளாய்! 

சம்மதியா யீசனுக் கவர்சபதம் 
சொல்லும் வேளை தன்னிற் 
றம்மையந்த மகிழ டிக்கே 
தனித்தி ருக்கச் சொல்லினராம் 

இந்தஅந்த ரங்கப் பேச்சை 
எனக்குரைத்தா ரென்ன எண்ணி 
எந்தை யீசனார் சொன்னதை 
என்னவென்று நான் சொல்லுவேன்? 

வசனம் 

“தோழி யிதனைக்கேட்டு ஆச்சரியப்பட்டுச் சங்கிலியாருடனே சொல்லுகிற வசனமெப்படி யென்றால்” 

தோழி சங்கிலிக்குக் கூறுதல்! 

“பூமன்… பழம் புத்தூரில் வலிய ஆட்கொள்ளுந் தமது தொழும்பன் தனக்கின்று சந்து நடந்துனை யிளக்க யிருக்கார்; கனவிலெழுந்தருளி வந்த கணக்கதனை யென்னாலே கணக்கிடலாமோ? அதுதானும் போகட்டு மவர் சொன்ன மொழியையிது. காணென் றுனக்குரைத்த இயல்பை யென்ன சொல்லுவேன்? கர்த்தர் திருவிளையாட்டைக்கடையேன் நாயே னெத்தனை யென்று ஆச்சரிய மியம்புவேன் பெண்ணே? (64) 

வசனம் 

“இப்படியாக ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிற வேளையிலே விடியநேரம் வந்து தோழிமாரும் சங்கிலியாரும் பு பங் கொய்து வரப் போகிறபோது சுந்தரர் சன்னதிக் கெதிராக வந்து சொல்லுகிற வசனமெப்படி யென்றால்,” (65)

பதம் 

93. போகாதேநீ நில்லடி பெண்ணே! ஒரு 
புத்தி யீதேன்? சொல்லடி! 
தோகாய் இப்போது சுவாமியாருடனே சொன்ன 
வாகான சொல்படி வந்துநான் சொல்வேன் காண்! (போகாதே) 

ஏதுநீ தயவில்லையோ? – பெண்ணே 
மையல் இருவருக்குஞ் சரியல்லவோ? 
காதாருங் கூர்விழிக் கணையையென் மேல்விட்டு 
வாகான சொற்படி வந்துநான் சொல்வேன்காண் (போகாதே) 

சன்னதி யிதுதாண்டி பெண்ணே! சொல்லுஞ் 
சபதஞ் சொல்வேன் நானடி! 
மன்னனை செய்தென்னை மையல்தீரச் செய்தாலுன் 
பின்னே திரிந்து பிழைக்கிறேன் பெண்மானே! (போகாதே) 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரர் குறையிரந்து சொல்லுகிறபோது சங்கிலியாருக்கு நாணம் வந்து தோழிமார் கூட்டத்திலே புகுந்து ஒதுங்கிப் போகையில் அந்த சுந்தரருடனே தலையான தோழி சொல்லுகிற வசன மெப்படி யென்றால்.” (66) 

94. நீர்திருவாய் மலர்ந்தமொழி 
நீபற்றியிந்த நேரத்திலே 
சீர்திருவாய் கோயில்தனில் 
தரித்திருக்க வில்லையன்றோ? 
ஆனதினால் சுவாமியெங்கும் 
அமர்ந்திருப்பர் எனவெண்ணி 
சீதமலர் மகிழடியில் 
திருமுன்பு சொல்வீரே! 

வசனம் 

“இப்படியாகத் தோழி சொன்ன வசனத்தைக் கேட்டுச் சுந்தரரப்படியே யாகுதென்று சொல்லி மகிழமரத்தின் கீழே வந்து சொல்லுகிற வசனம் எப்படி யென்றால்,” (67) 

95. மகிழடி முக்கால் 
வலஞ்செய்து பணிந்து சிந்தை 
நெகிழவே சுவாமி யாரை 
நினைந்துநெக் குருகிக் கையை 
முகிழ்செய்தே யினிநா னாரூர் 
முகங்கொண்டு செல்லே னென்ன 
புகழ்பெறச் சொன்னே னைந்து 
பூதமுஞ் சாட்சி தானே! 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரர் சபதம் செய்த பிறகு சங்கிலியாருந் தோழிமாருந் மெப்போதும் போலே புட்பமெடுத்து வந்த பின்பு ராத்திரியே ஸ்தானத்தார் சொப்பனத்திலே சொன்னபடிக்கு இருவருக்கும் கலியாணம் பண்ணுகிற விதமெப்படி யென்றால்” (68) 

96. சன்னதி திருமுன் பாகச் 
சங்கிலி தன்னை நாவல் 
மன்னனைப் பீட மேற்றி 
மறைச்சடங் கெல்லாஞ் செய்து 
பொன்னுல கிற்பூ மாரி 
பொழிந்திட மேளம் பொங்கச் 
சின்னமார்ப் பரிக்கத் தெய்வத் 
திருமணஞ் செய்வித் தாரே! 

வசனம் 

“இப்படியாகக் கலியாணமான பிறகு நடக்கிற விதமெப்படி யென்றால்” (69) 

கலவித்தரு 

97. பூசிநிலாக் காயத் தென்றற் காற்று
வீசச் சலவைப் பந்தல் தன்னில் 

நின்றுசரச சல்லாபஞ் செய்வர் கூடமதில்
நின்றுகிள்ளை கொஞ்சு முத்தமொழி கேட்பர்! 

மாடமேறிப் பூவணைமேல் மதனகேளி 
கூடிவாழ் யானவன் மலரையொரு 

வேளையிற் கொய்துவந்து தேத்தி தேத்தி 
மாலைசெய்து சிவன்பாத தத்திற் சாத்தி 

வைப்பதொரு வேளையில் சூதாடுவரொரு வேளையில்
இசைப்பாரொரு வேளையில் புட்பங்கள் புனைவர் 

பிணங்கு வார்கள் இணங்கு வார்கள் பின்னையுமே
இணங்குவார்கள் கணந்தனிலு மிடைவிடாமற்
கலந்துவிளை யாடுவரே! 

விருத்தம் 

98. ஆயதோர் கூடல் தன்னில் 
அநேகநாள் நிமிஷ மாகி 
நேயமாய் ஊடல் தன்னில் 
நிமிஷமோ ரூழி யாகிக் 
காயங்கண் மூக்கு நாக்கு 
காதினுட் புலன்க ளைந்து 
ஏயவே மகிழ்வு கூற 
இன்பங்கொண் டிருக்கின் றாரே! 

வசனம் 

“இப்படியாகச் சங்கிலியாரும் சுந்தரரும் போக போக்கியம் அனுபவித்துக் கொண்டிருக்கிற நாளிலே ஒரு நாள் திருவாரூரை நினைந்து கொண்டு சொல்லுகிற வசனமெப்படி யென்றால்” (70) 

பதம் 

99. காண்ப தென்றுகாண்? – ஆரூரைக் 
காண்ப தென்றுகாண்? 
காண்ப தென்றினித் தீர்த்தகம லாலயத்தையும் 
பூம்பெரும் புத்திடம் பூங்கோயில் தன்னையும்! (காண்ப) 

பார்ப்ப தென்று காண்? – ஆரூரைப் 
பார்ப் தென்று காண்? 
பார்ப்ப தென்றினித் தேரும் பங்குனித் திருநாளும் 
ஆர்ப்பந்தோர் மேளமு மலங்கார மானதையும் (பார்ப்ப) 

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கண் குருடானது 

வசனம் 

“இப்படியாக நினைத்துக் கொண்டு திருவாரூருக்குப் போகவேணு மென்றெண்ணிச் சுவாமியாரைச் சேவித்துத் தனியே புறப்பட்டுப் போகையில் திருவொற்றியூரெல்லை தாண்டியவுடனே கண் தெரியாமல் போய்ச் சொல்லுகிற வசன மெப்படியென்றால்” (71) 

ஆகிரி இராகம் 

100. சிவசிவா ஏதுசெய்வேன்? 
தீவினையென் கண்ணொளியை 
அவமாகியோர் படலத்தால் 
மறைத்த தென்னமோ? 

ஆயிரம்பொய் சொல்லியொரு 
ஆயிழையை மணம்புரிதல் 
நியாயமென நானிலத்தில் 
நவிலுவதும் பொய்போகா! 

ஆதலினாற் சங்கிலிக்காய் 
அறைந்த பொய்யைச் சகியாமல் 
நீதியில்லாத படியென்னை 
நேசம்வைத்துக் காத்திடையா! 

பேணியுனக்கு நாசம் 
பிழைசெய்தே னாகிலுங்கைக்(கு) 
ஊணுகோலா னாலும் 
உதவையா யிப்பொழுதே! 

வசனம் 

“இப்படியாகப் புலம்பிக்கொண்டு காலாலே வழி தடவிக் கொண்டு போகிறபோது சொல்லுகிற வசனமெப்படி யென்றால்” (72) 

ஓடத்தரு 

101. அந்தகர்க் கந்தக ரிடத்திற் பிழைசெய்து 
அந்தகன் நானென வந்திடுவீர் போயிடுவீர் 
வழிகாட்டீர் குருடனெனைக் கையில் கோலூன்றித்
தனியோனென வருகின்றீர் வழிகாட்டீர் வழிகாட்டீர் 

கோல் பெற்றார்!

விருத்தம் 

102. இப்படி யாகப் பேசி 
இரங்கியே தளர்ந்து சென்று 
மைப்படி கண்ட முல்லை 
வள்ளலைப் பணிந்து போற்றி 

மெய்ப்படி வெண்பாக் கத்தில் 
விமலனார் இரங்கித் தந்த 
கைப்பிடி யூன்று கோலுங் 
கைக்கொண்டு நடக்கின் றாரே! 

வசனம் 

“இப்படியாக வரச்சே பரிசனங்க எல்லோருங் கூடியப்பாற் போகிற வித மெப்படி யென்றால்” (73) 

கண் திரும்ப வந்தது!

திபதை 

103. பழையனூர்ப் பணிந்து பணிமதி சடையார்
தழைத்திரு வூரல் தன்னையும் பரவி 

காஞ்சிமா நகரிற் கம்பர்தம் மருளால்
வாஞ்சையா யிடக்கண் வரம்பெற் றுகந்து 

மற்றுள பதியும் வணங்கியே பரவி
வெற்றிபூந் துருத்தியில் மெய்ப்பிணி தீர்ந்து 

சிந்தையே மகிழ்ந்து சிவன்பதம் பணிந்து
அந்தியம் போதில் ஆரூர் புகுந்து 

புற்றிடங் கொண்ட புனிதரைப் பணிந்து
மற்றொரு கண்ணும் வரமகிழ் வாகி 

சன்னதி விடுத்தே தனியொரு புறத்தில்
மென்னகை யுடனே வீற்றிருந் தனரே! 

வசனம் 

“இப்படியாக இருக்கிறபோது வேறு சென்மங்களாச்சுது; இனி இவரரிரோ நானாரோ காண்” (74) 

104. இது என்ன சொல்கிறீர் இந்த சென்மந்தனில் 
இனிமுகம் பார்ப்ப துளதோ? 

வருவாரென்ன, எப்பொழுதும் வழிபார்த்துப் பார்த்து 
ஒரு வாசல் குடியாகியே உருகி நிலாவெறி 
நெருப்பு ராத்திரிகள் எத்தனையோ கழிந்தன ஐயகோ! (இது என்ன) 

குறிகள் எத்தனை? குணமான எத்தனை?- மணற் 
கூடல் எத்தனை பார்த்து 
எரிமழைப் பருவமும் இளவேனிலும் கடந்து 
எரியுது சொல்வசமோ? (இது என்ன) 

பாவையென்னைப் பார்வை பண்ணாமலே – சங்கிலி 
பார்க்கும் பார்வை சங்கிலிச் சிக்கிலே
இரவுபகல் சிக்கினா ரென்றநாள் முதல் மணத்(து) 
இருப்புச் சங்கிலி இட்டனள்! (இது என்ன) 

வெண்பா 

105. இத்திறங்காண் சான்றோரே இன்னமுநீர் பேசினக்கால் 
மெய்த்திறந்தால் ஆவி விடுவேன்காண் – அத்திறத்தால்
மாறாமல் என்னை மனச்சிலுகு பண்ணியென்றுங்
கூறாமலே சொல்லுங் கோள்! 

வசனம் 

“இப்படியாகப் பரவை திருவாய் மொழி கேட்டு மருவுத்தரஞ் சொல்லவஞ்சி போகிற போது சுந்தரர் தம்மிலேதாம் சொல்லுகிற வசனமெப்படி யென்றால்,” (75) 

பதம் 

106. இன்னும் வரயில்லை தூதுக்குப் போனவர் 
ஏதுசெய்வேன் மனமே? – அவர் 
முன்னமே போயினர் இந்நேரம் வீதி 
முகப்பினுக் கெய்து வரோ? (இன்னும்) 

வாசல் தலைப்பினில் போம்போது தாதிகள் 
வரவேண்டாம் எனச்சொல்வரோ? – இவர் 
பூசுரர் என்ன விடுத்தாலு மப்பாற் 
போய்மின்னைக் கண்டனரோ? (இன்னம்) 

பெரியவ ரிவாரென்ன இதக்கத்தி னாலொரு 
பேச்சுத்தாஞ் சொல்வளோ? அந்தக் 
கரியபூங் குழழ்மாது முனியுமோ? மகிழுமோ?
கருத்தென்ன கருத்தென்ன மாய்ந்ததோ? 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரர் தம்மிலே தாம் சொல்லிக்கொண்டிருக்கிற போது தூதுக்குப் போன பெரியவர்கள் சுந்தரருடனே சொல்லுகிற வசனம் எப்படியென்றால்,” (76) 

விருத்தம் 

107. அய்யகோ நாங்கள் தூதுக்(கு) 
அணுகிய வயணம் சொல்வோம் 
தையலார் வயிற்றி லெங்கள் 
தலைதனை வைத்திட் டாலும் 

கைதனைப் பிடித்தே யீது 
காலெனச் சொல்லி னாலும் 
வெய்யசொற் புகல்வ தல்லால் 
வேறில்லை வந்திட்டோமே! 

வசனம் 

“இப்படியாக வந்து சொன்ன வசனங் கேட்டுச் சுந்தரர் சுவாமியாரை நினைந்து சொல்லுகிற வசன மெப்படி யென்றால்,” (77) 

திரிபங்கிஷம் 

108. சுத்த மானவர் தாமும் நீரே – எந்தன் 
தோழ னானவர் தாமும் நீரே 
ஆன படியா லொன்று முமையே – அன்றி 
ஆதரிப் பாரெவர் களேஉ மையே 
இன்று பரவை கூட்டி னீரே எந்தன் 
இருதய வேணதுயர் நீக்கு வீரே! 

வசனம் 

“இப்படியாகச் சுந்தரரும் பரிதாபப்படுகிறபோது சுவாமியார் வந்து சொல்லுகிற வசனம் எப்படியென்றால்,” (78)

– தொடரும்…

– கீழ்த்திசைச் சுவடிகள் வெளியீடு எண் : 81

– பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்), பி.எட்., டிப்.வ.மொ. பி.எச்.டி., காப்பாட்சியர், அ.கீ.சு. நூலகம், சென்னை-600 005.

– பொதுப் பதிப்பாசிரியர்: நடன காசிநாதன் எம்.ஏ., இயக்குநர், தொ. பொ.ஆ.துறை, சென்னை-600 113.

– அ.கீ.சு.நூ. 1995

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *