சிரார்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 14,330 
 

கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார்.

அவர் பெயர் ஆபஸ்தம்பர்.

அவருக்கு, பதிவிரதையான அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற மகனும் இருந்தனர்.

ஒரு பிரார்த்தனையையும் இரு மந்திரங்களையும் கொண்ட ‘க்ருஹ்ய சங்கரஹசூத்ரா’ என்பதை அருளியவர் ஆபஸ்தம்பர்.

ஸ்மிருதி கர்த்தாக்களில் ஒருவரான ஆபஸ்தம்பர் க்ருஹ்ய சூத்திரத்தை இயற்றியதோடு ச்ரெளத சூத்திரமும் இயற்றியுள்ளார். க்ருஹ்ய சூத்திரங்களை இயற்றியுள்ள மஹரிஷிகள் இருபத்தைந்து பேர்கள் உள்ளனர்.

எதிர்காலத்தில் வருகின்ற சிஷ்ய ஜனங்கள், காலத்தின் கோலத்தினால் புத்திக் குறைவு ஏற்பட, அதனால் அந்தந்த கிரியைகளுக்கு உரிய மந்திரங்களை அந்தந்த காலத்தில் எடுத்து உபயோகிக்கத் தடுமாறுவர் என்பதை உணர்ந்து சிறந்த யுக்தியுடன் சூத்ரத்தை இவர் அமைத்து அதனாலேயே சிறந்தவரானார்.

ஜாதகர்மம் முதல் அக்னி ஹோத்ரம் வரை உள்ள பூர்வ சம்ஸ்காரங்களுக்கும்; பிரானோத் க்ரமண சமயம் முதல் பிதூர் லோக பிராப்தி வரையிலான அபர சம்ஸ்காரங்களுக்கும் உரிய வேத மந்திரங்களைக் கோர்வையாக எடுத்து மந்த்ரப் ப்ரச்னம் என்று இரு ப்ரச்னங்களை இவர் நன்றாகச் செய்து அருளியதால் சூத்ரக்காரர்கள் பலர் இருப்பினும், இவருக்கு மட்டும் சிறந்த சூத்திரதாரர் என்ற பெயர் அமைந்துவிட்டது.

இவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் வந்த வரலாறு சுவையான ஒன்று…

ஒரு ஊரில் வேதங்களை நன்கு கற்ற பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்மார்த்த கர்மங்களில் சிரத்தை உடையவராக இருந்து அவற்றை நல்ல முறையில் அனுஷ்டித்து வந்தார். சிரார்த்த காலங்களில் வேதங்களை நன்கு உணர்ந்த உத்தமமான அந்தணர்களையே அவர் அழைப்பது வழக்கம். அப்படி பார்த்து பார்த்து வேத வித்துக்களை அழைத்து வந்து மனத் திருப்தியோடு சிரார்த்தம் பண்ணுவார். அப்போதுதான் பித்ருக்களின் ஆசீர்வாதம் தனக்குக் கிடைக்கும் என்று திடமாக நம்பினார்.

ஒரு சமயம் அவர் சிரார்த்தம் செய்ய விழைந்தபோது அவர் எண்ணியபடி ஒரு பிராமணர் அவருக்குக் கிடைக்கவில்லை. ஆகவே சகடம் என்று சொல்லப்பட்ட ஒரு விதியைக் கடைப்பிடிக்க எண்ணினார். அந்த விதியின் படி கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹனம் செய்து அதன் பிறகு சிரார்த்தம் செய்ய எண்ணினார்.

அவரது இந்த எண்ணத்தை மஹரிஷி ஆபஸ்தம்பர் அறிந்தார். உலக ஷேமத்தை மட்டும் பிரதானமாக மனதில் எண்ணிய அந்த மஹரிஷி; மிகுந்த அறிவைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும் பிரம்ம காயத்ரியை எவன் ஒருவன் முறையாக உபதேசம் பெற்று ஜபிக்கிறானோ அவன் யோக்கியனாகிறான் என்றும்; படிப்படியாக அவனும் கற்றறிந்தவர் அடையும் நிலையை அடைகிறான் என்பதையும் உலகத்தாருக்கு உணர்த்த எண்ணினார்.

அதனால் உடனே தானே ஒரு பிராமணர் வேடம் பூண்டு மேற்சொன்ன சிரார்த்தம் செய்ய விழைந்த பிராமணர் வீட்டுக்குச் சென்றார். ஆபஸ்தம்பரைக் கண்ட அந்தப் பிராமணர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். அவரை மரியாதையுடன் நடத்தினார். அர்க்ய பாத்திரம் முதலியவற்றால் உபசரித்து அவரை சிரார்த்தம் செய்யுச் செய்தார். அதன் பிறகு சிரார்த்த போஜனத்திற்கும் அழைத்தார்.

சிரார்த்தம் முறையாக நன்கு நடந்தேறியது. பிறகு சிரார்த்த போஜனமும் முறைப்படி நடைபெற்றது. உணவு உண்டு முடித்த பின்னர், சிரார்த்த காலத்தில் கடைசியில் கேட்க வேண்டிய முறைப்படி அந்த பிராமணர் ஆபஸ்தம்பரை நோக்கி “அன்னமும் திரவ பதார்த்தங்களும் நன்றாக இருந்ததா? தங்களுக்கு எல்லாம் திருப்திதானா?” என்று பவ்யமாகக் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு பதிலாக பொதுவாக போஜனம் கொண்டவர் எப்போதுமே ‘திருப்தி’ என்று சொல்வதுதான் மரபு. ஆனால் ஆபஸ்தம்பரோ, வழக்கத்திற்கு மாறாக “அன்னமும் தயிரும் சற்று கொண்டு வாரும்…” என்றார்.

இதைக்கேட்ட சிரார்த்த கர்த்தா, ‘இப்படிக் கேட்பதானது சிரார்த்த தர்மத்திற்கு விரோதமாயிற்றே; செய்த சிரார்த்தம் வீணாகி விட்டதே’ என்று எண்ணி மிகுந்த கோபம் அடைந்தார். உடனே கையில் ஜலத்தை எடுத்து அவரை சபிப்பதற்காக பூமியை நோக்கி விட்டார்.

அதைக்கண்ட ஆபஸ்தம்பர் புன்சிரிப்புடன், அந்தத் தண்ணீரை கீழே விழச் செய்யாமல் அப்படியே அந்தரங்கத்தில் ஸ்தம்பிக்கச் செய்தார். தண்ணீர் அப்படியே நின்றது.

இந்த அதிசயித்தைக் கண்ட சிரார்த்த கர்த்தா, இவர் ஒரு மஹாத்மா என்பதை உணர்ந்துகொண்டு அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். தனது சாபப் பிரயோகம் தன்னை வந்து சாராமல் இருக்க அனுக்கிரஹிக்கும்படி வேண்டினார்.

அந்த பிராமணர் மீது இறக்கம் கொண்ட ஆபஸ்தம்பர் அவரை மன்னித்து அருளியதோடு, தான் யார் என்பதை அவருக்குத் தெரிவித்தார். பிறகு தான் அங்கு வந்த காரணத்தையும் சொன்னார்.

அதாவது, சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை அதிக பரிசோதனை இல்லாமல் அவர்களை ஆதரிப்பதே உத்தமம் என்றும்; கூர்ச்சத்தில் பிராமணர்களை ஆவாஹித்து சிரார்த்தம் செய்வது மத்திமம் என்று கூறினார்.

இதனால் அன்று முதல் சிரார்த்தத்திற்கு வரும் பிராமணர்களை யாரும் அதிக சோதனை செய்வதில்லை என்ற வழக்கம் ஏற்பட்டது.

குலம், கோத்திரம் விசாரித்து, அவர்கள் காயத்ரி சொல்லும் பிராமணர்தானா என்பதை மட்டும் பார்த்தால் போதும் என்ற வழக்கம் ஏற்பட்டது.

அதன் பிறகு ஆபஸ்தம்பர் அந்த பிராமணரால் மரியாதை செய்யப்பட்டு, தன் ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

தண்ணீரை அப்படியே ஸ்தம்பித்து நிற்க வைத்த இந்த சம்பவத்தால் அவருக்கு ஆபஸ்தம்பர் என்ற பெயர் ஏற்பட்டது.

இதைப்போல் ஆபஸ்தம்பரைப் பற்றி ஏகப்பட்ட சம்பவங்கள்…

ஆபஸ்தம்பரைப் பற்றி பிரம்ம புராணம் கூறும் இன்னொரு சம்பவம் இது:

ஒருமுறை அகஸ்திய மஹரிஷி, ஆபஸ்தம்பரின் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். அப்போது ஆபஸ்தம்பர் தன் சிஷ்யர்களுடன் ஆசிரமத்தில் இருந்தார். அகஸ்திய மஹரிஷியை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரித்தார்.

பின்னர் ஆபஸ்தம்பர் அகஸ்திய மஹரிஷியிடம், “பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இந்த மூவரில் எவர் மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்? எவரிடமிருந்து சுகானுபவத்தையும், முக்தியையும் அடைய முடியும்? எவர் அன்ன தாதா? எவர் அழிவற்றவர்? எவர் தேவர்களுக்கெல்லாம் தேவர்? எவர் யாகங்களால் பூஜிக்கப் படுகிறார்? வேதங்கள் யாருடைய புகழை விசேஷித்துச் சொல்கின்றன? எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்தச் சந்தேகங்களைத் தயவுசெய்து தீர்த்தருள்வீராக…” என்றார் பவ்யமாக.

இது எவ்வளவு பெரிய கேள்வி?

மஹரிஷி அகஸ்தியர், உடனே ஆபஸ்தம்பரை சற்று நேரம் உற்று நோக்கினார்…. பிறகு ஒரு நீண்ட பதிலை உரைத்தார். அதை அடுத்து பார்க்கலாம்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *