சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 35,673 
 
 

அது 1932ம் ஆண்டு, கிருஷ்ண ஜெயந்தி நாள்.

திருநெல்வேலிக்கு அருகில், திம்மராஜபுரம் என்கிற கிராம அக்கிரஹாரத்தில் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிருஷ்ணவேணி என்று பெயரிட்டனர்.

அந்தக் குழந்தை சிறுவயது முதலே பக்தியுடன் நிறைய ஸ்தோத்திரங்களையும், பக்திப்பாடல்களையும் கற்றுக்கொண்டாள்.

பதினைந்து வயதுமுதல், குழந்தைக்கு கோவில்களின்மீது தீராத ஒரு லயிப்பும் ஆர்வமும் ஏற்பட்டது. தன்னால் எவ்வளவு கோவில்களுக்குச்
செல்ல முடியுமோ அத்தனை கோவில்களுக்கும் சென்று, அங்கு இருக்கும் கடவுள்களின் தாத்பர்யம், கோவிலின் தல புராணம் ஆகியவற்றை விவரமாக எழுதி ஒரு பெரிய மரபீரோவில் அடுக்கி அழகாக வைக்க முற்பட்டாள்.

பதினெட்டு வயதில் அவளுக்கு குருவாயூரில் ஒரு சிறந்த பக்திமானுடன் திருமணமாகி, அதன் பிறகும் தன் கணவருடன் தென் இந்தியாவில் இருக்கின்ற ஆயிரக்கணக்கான கோவில்களுக்குச் சென்று, அதன் கோபுர அழகு; அதில் உள்ள சிற்பங்கள்; விக்ரஹங்கள், சன்னதிகள்; அந்தக் கோவிலைக் கட்டியவர் யார்; எந்த வருஷம்…போன்ற பலவிஷயங்களை மாய்ந்து மாய்ந்து சேகரித்தாள்.

அந்தச் சேகரிப்பின்போது, கிருஷ்ணபகவான் மட்டும் அவளது ஆத்மார்த்த கடவுளாகிப் போனார். அவரின் பத்து அவதாரங்களைப் பற்றி ஈடுபாட்டுடன் நிறைய படித்து தெரிந்து கொண்டாள்.

அவளின் முப்பத்தைந்து வயதில், அவள் கணவர் மஞ்சள்காமாலையில் இறந்துபோனார். அந்தச் சோகத்திற்குப் பிறகு திம்மராஜபுரத்திற்கு திரும்பிவந்து, தன் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவர்களும் மூப்பினால் இயற்கை எய்தியவுடன், தற்போது தனிமையில் வாழ்கிறாள்.
குழந்தைகள் இல்லாது போனதால், பகவான் கிருஷ்ணரை தன் ஒரே மகனாக பாவித்து, அவருக்கு சேவை செய்வதே தன் வாழ்நாளின் ஒரே லட்சியமாகக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறாள்.

வருடம் 2017….

தற்போது கிருஷ்ணவேணி பாட்டிக்கு எண்பத்தைந்து வயது. இந்த வயதிலும் திம்மராஜபுரம் கிருஷ்ணன் கோவிலுக்கு தினசரி செல்வாள்.

அன்று எப்போதும்போல் காலை கோவில் கதவைத் திறந்த அர்ச்சகர் மிகவும் திகைத்துப் போனார். அவரது பக்தி மனம் பதறியது. கிருஷ்ண விக்கிரகத்தின் இரண்டு காதுகளிலும் கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்தார்கள் இந்த அபச்சாரத்தை?

நாள் தோறும் இரவு கோவிலைப் பூட்டிக்கொண்டுதான் வீடு செல்கிறார். ஆனால் இன்றுகாலை ஆலயத்தைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தின் காதோரங்களில் கொஞ்சம் பசுஞ்சாணம். . யாரிடம் போய்ச் சொல்வது இதை?

பூட்டிய கோவிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே! யார் உள்ளே வந்து இப்படிச் செய்கிறார்கள்? அர்ச்சகர் விக்கிரகத்துக்கு அபிஷேகம் செய்தவாறே “கண்ணா…என் பக்தியில் ஏதேனும் கோளாறா? கோவில் பூட்டுக்கு வேறு மாற்றுச் சாவி கூட கிடையாதே! இருக்கின்ற ஒரே சாவியையும் தினமும் கவனமாக என் தலைமாட்டில் வைத்துக் கொண்டுதானே தூங்குகிறேன். அப்படியிருக்க எப்படி இவ்வாறு நடக்கிறது? உனக்கு நாள்தோறும் சந்தனக்காப்பு சாத்துகிறேன். இருப்பினும் காலையில் கோவிலைத் திறந்து உன்னைவந்து பார்த்தால் இன்று உன் காதோரத்தில் பசுஞ்சாணம்! ஏன் இப்படி கண்ணா…” என்று அரற்றினார்.

அபிஷேகத்தை முடித்து கண்ணனுக்கு அலங்காரம் செய்தார். பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். அதன்பின் அர்ச்சனை, ஆராதனை என வழக்கமான நடவடிக்கைகளில் அன்றைய பொழுது சென்றது.

இரவு கோவிலைப் பூட்டும்போதுதான் பார்த்தார். நாள் தோறும் கோவிலுக்கு வரும் கிருஷ்ணவேணிப் பாட்டி அன்றும் வந்திருந்தாள். தளர்ந்ததேகம், வயோதிகத்துடன் முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள்.

கிருஷ்ண விக்ரகத்தை பார்த்தவாறே நெடுநேரம் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பரவசம். பல்லாண்டுகளாக தினமும் கோவிலுக்கு வருவதால், அர்ச்சகருக்கு பாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு.

பாட்டிக்கு காது சற்று மந்தம். அதனால் அர்ச்சகர் குரலை உயர்த்தி, “பாட்டி இன்று என்ன வேண்டிக் கொண்டாய்?” என்றார்.

“நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணை சாப்பிட்டு விட்டான். அது அனைத்தும் நல்லபடியாக அவருக்கு ஜீரணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.”

அர்ச்சகர் சத்தம்போட்டு சிரித்தார்.

“அதில்லை பாட்டி, உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?”

“எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது இப்போது? சீக்கிரம் போகப்போகிற கட்டைதானே இது? என் பிள்ளை கண்ணன் சவுக்கியமாக இருந்தால் போதாதா? ஏராளமான பேர் அது வேண்டும், இது வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்…அவர்களை கண்ணன் வலக்கரம் உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கிறான். அவனது வலக்கை வலிக்காதோ!
இவர்கள் தங்களுக்கான வேண்டுதலை கொஞ்சமாவது நிறுத்தினால்தானே, அவன் தன் கைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்க முடியும்?

ஏற்கனவே பாஞ்சாலிக்குப் புடவை வழங்கியும், அர்ஜுனனுக்கு தேரோட்டியும் அவன் கை வலித்திருக்கும். புல்லாங்குழல் அதிக கனமில்லாததுதான் என்றாலும், ஓயாமல் அதைக் கையில் பிடித்து உதட்டருகே வைத்து ஊதிக் கொண்டிருந்தால் அந்தக் கரம் என்னாவது? இதையெல்லாம் யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவற்றைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு ஓய்வேடு என்றால் பகவான் கண்ணன் கேட்பதில்லை… நம் பேச்சை அவன் எங்கே கேட்கிறான்? அவன் பேச்சைத்தான் கீதை என்று உலகம் கொண்டாடிக்கொண்டு கேட்கிறது.

நான் அவனிடம் எனக்கென்று எதுவும் வேண்ட மாட்டேன். அதனால் எனக்கு வலக்கரம் உயர்த்தி ஆசி கூறி, அதனால் அவன் கை வலி இன்னும் சற்றுக் கூட வேண்டாம்!”

அர்ச்சகர் பாட்டியின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

‘கண்ணனை எவ்வளவு உண்மையாக நம்புகிறாள் இவள்?
படிப்பறிவில்லாத ஏழைப் பாட்டி. ஆனால் எத்தனை பக்தி?
இன்று என் கண்ணன் காதுகளில் சாணத்தை அப்பினவன், எப்படி பக்தி செய்வது என்பதை இந்தப் பாட்டியிடம் கற்றுக் கொள்ளட்டும்.’ முனகிக்கொண்டே அர்ச்சகர் ஆலயக் கதவைப் பூட்டினார். பாட்டி கண்ணனை நமஸ்கரித்துவிட்டு தளர்ந்த நடையோடு வீடு நோக்கிச் சென்றாள்.

அன்றிரவு அர்ச்சகர் கண்ணனின் காதோரச் சாணத்தின் மர்மம் புரியாது புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார். பின் எப்போது தூங்கினார் என்று அவருக்கே தெரியாது. தூக்கத்தில், கண்ணன் கலகலவென்று நகைத்துக்கொண்டு அவரது சொப்பனத்தில் வந்தான்.

“அர்ச்சகரே, உம் பக்தியில் எந்தக் கோளாறும் இல்லை…என் காதுகளில் இன்று ஒட்டிக்கொண்ட சாணம், நீங்கள் எனக்குச் சாத்தும் சந்தனத்தை விடவும் புனிதமானது. அதன் மகிமையை அறிய இப்போது உங்கள் உடலை விட்டு விலகி சூட்சும சரீரம் அடைவீர்கள். உடனே கிருஷ்ணவேணிப் பாட்டியின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பதைப் பாருங்கள். பிறகு மறுபடியும் உங்கள் உடலுக்கு நீங்கள் வந்துவிடலாம்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

அடுத்தகணம் அர்ச்சகரின் உடல் கட்டையாய்க் கிடக்க, அவரது சூட்சும சரீரம் வெளியே சென்றது. பாட்டி இல்லத்தில் திறந்திருந்த சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்தது. அர்ச்சகர் பாட்டியின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்தார்.

பாட்டி இரவு மிகவும் தாமதமாக தூங்கப் போனாள். அதற்குமுன் பகவான் கிருஷ்ணன் மேல் தோத்திரங்களைச் சொன்னபடி, வீட்டின் அடுப்பை பசுச் சாணத்தால் மெழுகினாள். அப்படி மெழுகிய பின்னரும் கொஞ்சம் சாணம் அவள் கரத்தில் எஞ்சி இருந்தது. “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்று மனப் பூர்வமாக வாய்விட்டு சொன்ன அவள், சாணத் துணுக்கைச் சாளரத்தின் வழியே வெளியே வீசினாள். என்ன ஆச்சர்யம் ! அட்ச்சகரின் சூட்சும சரீரம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் சாணம் பூட்டிய கோவிலின் உள்ளே புகுந்து, பகவான் கிருஷ்ணன் வலது இடது காதுகளில் போய் ஒட்டிக் கொண்டது.

அதன் பிறகு நன்கு உறங்கிய அவள், அதிகாலையில் மெல்லக் கண்விழித்தாள்.

“கண்ணா, நீ நன்றாகத் தூங்கினாயா? நேற்று இரவு குளிர் அதிகம். போர்வை போர்த்துக் கொண்டுதானே தூங்கினாய்?” என்றவாறே தான் படுத்திருந்த பாயையும், போர்த்திக் கொண்டிருந்த போர்வையையும் மடித்து வைத்தாள். பல் தேய்த்து, வாய் கொப்புளித்து, முகத்தையும் நன்கு தூய்மை செய்துகொண்டு, “தண்ணீர் இன்று மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது கண்ணா. உன் உடம்புக்கு ஆகாது. நீ வெது வெதுப்பான நீரில் முகம் கழுவிக்கொள். இன்று உனக்காக புள்ளி வைத்து கோலம் போடப்போகிறேன்… “ சொல்லிக்கொண்டே கோலமாவோடு வாயிலுக்கு வந்தாள். ஒவ்வொரு புள்ளி வைக்கும்போதும் பாட்டி, “கிருஷ்ணா, முகுந்தா, முராரே” என்று பகவான் கிருஷ்ணனின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே புள்ளி வைத்தாள்.

பின் கண்ணனைப் பற்றிய தோத்திரங்களைச் சொல்லியவாறே இழையிழுத்துக் கோலம் போட்டாள். தொடர்ந்து கிருஷ்ணாஷ்டகம் சொல்லியபடியே, அடுப்பு மூட்டி சமைக்கலானாள்.

உறக்கம் கலைந்து எழுந்தார் அர்ச்சகர். நடந்ததெல்லாம கனவா நனவா?

அன்றும் சரியான நேரத்துக்கு கோவிலுக்குப் போனார். கண்ணன் சிலையின் காதுகளில் ஒட்டியிருந்த சாணத்தைப் பார்த்ததும், அவரது மனம் பக்தியில் தழதழத்தது. சாணத்தை உன்னதமான பிரசாதமாகக் கருதி, அதை வாழை இலையில் பத்திரமாக மடித்து பக்தியுடன் தன் இடுப்பில் செருகிக் கொண்டார். அன்றுமாலை கோவில் நடை சாத்தும்முன் பாட்டிக்காக வெகுநேரம் காத்திருந்தார்.

ஆனால் அன்று அவள் வரவில்லை.

அன்றிரவும் அவர் சொப்பனத்தில் பகவான் கிருஷ்ணன் வந்தார்.

“அர்ச்சகரே! நீங்கள் இன்று எடுத்துவந்த சாணம் உன்னதமான பிரசாதம், அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இனி அது உங்களுக்கு கிடைக்காது”.

“ஏன்?” வியப்போடு கேட்டார் அர்ச்சகர்.

“நாளைகாலை பாட்டியின் ஆன்மா என்னை வந்து சேர்க்கிறது… இன்று அவளுக்கு உடல் நலமில்லை. அதனால்தான் அவள் கோவிலுக்கு வர இயலவில்லை. நாளை அதிகாலை கோவிலுக்கு வருவதற்கு முன்பாக, நீங்கள் அவள் இல்லம் செல்லுங்கள். அங்கே தெரு மக்கள் கூடியிருப்பார்கள். மற்றவர்களுக்குத் தெரியாத சில காட்சிகள் உங்களுக்கு மட்டும் தெரியும். சுயநலமின்றி, தாய்ப்பாசத்தோடு என்னை நேசித்த அவள் பக்தியின் பெருமையை நாளை தாங்கள் முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்.” பகவான் கிருஷ்ணன் மறைந்தார்.

அர்ச்சகர் திடுக்கிட்டு எழுந்தார். அதன்பின், அவருக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

மறுநாள் விடிகாலை மூதாட்டியின் இல்லத்திற்கு விரைந்தார். கூடியிருந்த மக்களை விலக்கியவாறு உள்ளே சென்றார்.

அங்கு பாயில் பாட்டி உடல் கிடத்தப் பட்டிருந்தது. அவள் ஆன்மா அப்போதுதான் அவள் உடலை விட்டுப் பிரிந்திருந்தது. அந்த ஆன்மாவை அழைத்துச் செல்ல விண்ணிலிருந்து ஒரு புஷ்பக விமானம் வருவது அவர் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது.

பாட்டியின் ஆன்மா பேசிய பேச்சை அர்ச்சகர் மட்டும் கேட்டார். “இந்தப் புஷ்பக விமான அந்தஸ்து எல்லாம் ஏழைக் கிழவியான எனக்கெதற்கு? என் பிள்ளை கண்ணனை எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருந்தால் அது போதும் எனக்கு..”

பாட்டியின் சுயநலமற்ற பக்தியின் முன் நிற்க வெட்கப் பட்டதுபோல் அந்தப் புஷ்பக விமானம் சற்றுத் தயங்கியது. பின் பாட்டியின் ஆவியை சுமந்துகொண்டு கிருஷ்ணர் கோவில் விரைந்தது.

உடனே பாட்டியின் ஆன்மாவை எதிர்கொண்டழைக்க பகவான் கிருஷ்ணரே கோவிலின் துவஜஸ்தம்பம் அருகே நேரில் வந்தார்.

“என் தாய் அல்லவா நீ ! எப்போதும் நீ சொல்வதைக்கேட்டு அதன்படிதான் நான் நடக்க வேண்டும்” என்ற பகவான் கிருஷ்ணர் பாட்டியின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தி, பின்பு அந்த ஆன்மாவை இரு குண்டலங்களாக்கித் தன் செவிகளில் அணிந்து கொண்டார்

குண்டலங்கள் தாய்ப்பாசத்தோடு அவர் செவிகளில் ஒட்டிக்கொண்டு சந்தோஷத்துடன் ஆடியது.

அர்ச்சகர் தம் இல்லத்திற்குச் சென்று குளித்துவிட்டு, அவசர அவசரமாக கோவிலுக்குச் சென்றார். கண்ணன் விக்ரகத்தை வியப்போடு பார்த்தார்.

எந்த இடத்தில் சாணித் துணுக்குகள் இருந்ததோ, அந்த இடத்தில் தற்போது இரு காதுகளிலும் இரண்டு அழகிய குண்டலங்கள் தென்பட்டன.

சுயநலமற்ற எழைப்பாட்டியின் பக்தியை அங்கீகரித்த பகவான் கிருஷ்ணரின் விந்தைகளை வியந்து வணங்கிய அர்ச்சகரின் கண்களில் கண்ணீர் பெருகியது.

Print Friendly, PDF & Email

3 thoughts on “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *