காவிரியில் தந்தையை இழந்தான்…

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 6,093 
 
 

ஹரிதாஸ் கதை

காவிரியில் தந்தையை இழந்தான்…
கங்கையில் தாயை இழந்தான்…

ரங்கநாதரின் சந்நிதியில், அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர்.

காவிரியில் தந்தையை இழந்தான்1ஒரு முறை, இவரது இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த புரந்தரதாஸர், கிருஷ்ணபட்டரின் மகள் பிரேமாவுக்கு, ‘சரிகமபதநி’ எனும் சப்த ஸ்வரங்களை போதித்தார்.

இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய பிரேமா, கோயிலில் ஆழ்வார் பாசுரங் களை பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய்ம்மறப்பர்.

இந்த நிலையில், ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர், தன் மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தார். அவனோ குடிகாரன்; சூதாடி. இதை தாமதமாக அறிந்த கிருஷ்ணபட்டர் தவித்து மருகினார்.

ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. பகவான் கிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றை தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்த்தாள்.

இந்த நிலையில், மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவளின் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ண பட்டரும் இறந்து போனார்.

கணவனையும், தந்தையையும் இழந்த பிரேமா, ரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல், குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு, தர்மச்சத்திரம் ஒன்றில் தங்கி, தொண்டாற்றி வந்தாள். காசியில் அனைவரும் அவளை, பிரேமா பாய் என்றே அழைத்தனர். அப்போது, அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ், இந்தி ஆகிய மொழி களை சரளமாக பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன்.

மேலும் தன் தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ் ணன், உபன்யாசம், காலட்சேபம் போன்றவற்றை கூறக் கேட்டு கிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான்.

காவிரியில் தந்தையை இழந்தான்2ஒரு நாள், சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமாபாய்.

‘இவர்களுக்கு உணவளித்து, உபசரிக்கலாம் எனில், கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. விருந்தினர்களை உபசரிக்காமல் இருப்பதும் தவறு. என்ன செய்வது?’ என்று தவித்தாள். சிறிது நேரம் யோசித்தவள், அடியவர்களுக்கு தாம் உணவு அளிப்பது; பாகவதம் கேட்க ராமகிருஷ்ணனை அனுப்பி, பிறகு அவனிடம் விவரமாய் கேட்டு தெரிந்து கொள்வது!’ என்று முடிவு செய்தாள்.

அதன்படி ராமகிருஷ்ணனை பாகவதம் கேட்க அனுப்பினாள். காலட்சேபங்களையும் தாயார் கூறும் கதைகளையும் பலமுறை கேட் டிருந்த ராமகிருஷ்ணனுக்கு கதை சொல்லும் திறன் அதிகமாகவே இருந்தது.

உபன்யாசம் முடிந்து வீடு திரும்பினான் ராமகிருஷ்ணன். ”உபன்யாசத்தில் பௌராணிகர் (புராணங்களைச் சொல்பவர்) இன்று என்ன சொன்னார்?” என்று ஆவலுடன் கேட்டாள் பிரேமா பாய். ராமகிருஷ்ணன் சொல்லத் துவங்கினான்: ”அம்மா! கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு, வளர்ப்பு, லீலைகள் ஆகியவற்றைப் பற்றி கூறும் பத்தாவது பகுதியான தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது, வெண்ணெயை அள்ளி உண்டது, யசோதா துரத்தியும் பிடிபடாமல் ஓட்டம் காட்டியது ஆகியவற்றை விவரித்தார்.

கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தை கண்ணன் அழத் தொடங்குகிறான். ஆகவே, ஏதேனும் ஒருவகையில் கண்ணனை தண்டிக்க எண்ணி, அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால் குறும்புக்காரக் கண்ணனோ, கட்டிய உரலையும் சேர்த்து இழுத்த படி, வீட்டின் பின்புறம் சென்று, ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான். உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார்!”என்றான்.

இதைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்ட பிரேமா பாய் மெய்ம்மறந்தாள். தான், கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள்.

”கண்ணா! உன்னையா உரலில் கட்டிப் போட்டாள்? கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே! நீ மர இடுக்குகளில் புகுந்து செல்லும்போது, ஏதாவது பூச்சி-பொட்டு உன்னைக் கடித்தால், என்னாவது? என்னால், இதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இப்போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன்!” என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள். ‘அம்மா… அம்மா!’ என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும், அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின் தொடர்ந்தனர்.

காவிரியில் தந்தையை இழந்தான்3பிரேமாபாய், கங்கை நதியில் குதித் தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து, ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமாபாயை அனைவரும் வணங்கினர்.

தந்தையைக் காவிரியிலும், தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன், தான் பிறந்த பூமியான ரங்கத்துக்கு வந்தான். அங்கு, அரங்கன் சந்நிதியில் கிருஷ்ண சைதன்ய மகா பிரபு, பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகா பிரபுவுடன் இணைந்து அவரை பின்தொடர்ந்தான். மொகலாய படையெடுப்பின் போது பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டபோது, பெர்ஷியன் சங்கீதத்தை கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன், திரும்பி வந்ததும், குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து, கிருஷ்ண நாம சங்கீர்த்தனம், பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான்.

இந்த ராமகிருஷ்ணனே, பிற்காலத்தில் தீட்சை பெற்று, சுவாமி ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ் பெற்றார். இவர் உருவாக்கிய சங்கீதமே ‘ஹிந்து ஸ்தானி சங்கீதம்’. அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாக திகழ்ந்த தான்சேன், சங்கீதம் பயின்றது சுவாமி ஹரிதாஸிடம்தான்!

– கே.என். மகாலிங்கம், பாண்டிச்சேரி-4

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *