கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு  
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 1,261 
 
 

ஒளிக்கு ஆற்றல் உண்டு, அறிவியல் கூறுகிறது. அந்த ஆற்றலில் ஒரு போதை உண்டு, அனுபவித்த சிலர் சொல்கிறார்கள். அபின், கஞ்சா, கோக்கேன் போல அண்டியவர்களை அடிமை படுத்தும் நோக்கம் உடையதென்றாலும் ஒளிபோதைக்கு எந்த தடைகளும் கிடையாது.

வீட்டிலிருக்கும் ஒளிவிளக்குகளால் இந்த போதையை கொடுக்கு இயலாது. தீ-விறகு, எண்ணெய்-திரி, கரி-காற்று, வாயு-தீபொறி ஜோடிகளால் உற்பத்தியாகும் ஒளி இந்த போதையை கொடுக்க முடியாது. போதை அளிக்கும் மாயவிளக்கு முக்காலியின் மேல், சுழலும் இணைப்புடன், மூவாயிரம் வாட் ஆற்றல் கொண்ட, வட்ட வடிவ, ஆரஞ்சு நிற ஒளியை கொடுக்கும் சினிமா மின்விளக்கு. ஆற்றலை உருவாக்கவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது, ஒரு ஊடலிலேருந்து இன்னொன்றாக மாற்ற மட்டும் முடியும் என்கிறது அறிவியல் கோட்பாடு. மூவாயிரம் வாட் மின் ஆற்றலை ஒளியாக மாற்றி அதனை ஒருவரின் மீது தாக்கும் போது அதன் விளைவு என்னவாகும்? ஆளுமைகள் உருவாகும். மாய விளக்கு தாக்குதலில் கோமாளி, பாத்திர நாயகனாகிறான், பாத்திரங்களின் இயல் ஆளுமையை திருப்பவும் செய்கிறது மாயவிளக்கு. இந்த அற்புதத்தை நிகழ்த்தும் சுழலும் மாயவிளக்கிற்கே ஒரு ஆணவம் முகுந்த ஆளுமை உண்டு. அதன் மேல் வசீகரம் கொண்ட மனித ஈசல்களை பொசுக்கும் துர்குணமும் உண்டு, பொசுங்கிய சாம்பலிலிருந்து ஆயிரம் புதிய ஈசல்கள் உயிர்ப்பிக்க செய்யும் நற்குணமும் உண்டு. உயிர்ப்பித்தலும், அழித்தலும் சுழலச்செய்யும் சக்கிரத்தின் அச்சனியும் அதுதான். இணைப்பின் மூலம் ஒளியை மைய படுத்துவது மனித கைகளென மனிதனையே நம்பவைக்கிறது மாயவிளக்கு. உண்மையில் அது ஒரு தாந்தோணி. அத்தருணத்தில் தான் நினைப்பதை சாதித்துக்கொள்கிறது, தன் ஒளியை உலா விட்டு, ஈசல்களின் கவனத்தை திருப்பி, சர்பத்தை வசீகரம் செய்யும் மகுடத்தை போல மனிதனை வசீகர படுத்துகிறது. பறக்கும் ஈசல்களில் சிலரை சிறு தெய்வங்களாகும் வல்லமையும் அதற்க்கு உண்டு, அப்படி உருவாக்கிய தெய்வங்களை அதற்கு பிடிக்காவிட்டால் மரு கணம் மேதியடிகளாக மாற்றும் சினமும் அதற்கு உண்டு. பெற்ற தெய்வங்களின் காலவறையை நிர்ணயிக்கும் கடவுளும் அதுவே. புது பாத்திர நாயகர்களை சிருஷ்டிக்கும் தாயும் அதுவே. ஒளி போதை திகட்டினாலே அன்றி அதிலிருந்து விடுபடுவது கடினம். அதுவும் கூட தற்காலிக விடியல் தான்.

கி பி 2789 ல் முக்காலி மேல் அமர்ந்து வட்ட ஆரஞ்சு நிற ஒளி தரும் மாயவிளக்கு சினிமா இதிகாச கண்காட்சிகளில் மட்டும் காணப்பட்டது. இதனால் அது அழிந்துவிட்டது என தப்பான முடிவிற்கு வர வேண்டாம். கூடு விட்டு கூடு பாய்ந்து வட்ட வடிவத்தை விட்டு வர்டுவல் ரியாலிடி கணினிக்குள் புகுந்து, தன் ஆட்சியை நடத்திக்கொண்டுதான் இருந்தது. மாயவிளக்கின் வடிவம் மட்டும்தான் மாறியிருந்ததே தவிர அதன் ஆளுமை குணங்கள் அப்படியேதான் இருந்தது.

சிறுவதிலேருந்தே சக்திவடிவேலிற்கு விளையாட்டு என்றால் உயிர். கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், பம்பரம், கிட்டிப்புள் என பல விளையாட்டுகள். நம்மை போல மைதானத்திலும் , ரோட்டிலும் விளையாடும் துர்பாக்கியம்மில்லை அவனுக்கு. வீட்டினுள் கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு குளிர் சாதன அறையில் வர்டுவல் உலகில் உலமெங்கும் அமைந்த தலைசிறந்த அரங்கங்களில் விளையாடும் பெரும் பாக்கியம் இருந்தது அவனுக்கு.

இந்தியாவில் இருப்பவன் வேடம் பூண்டு புளூட்டோ கிரஹத்து வாசிக்கு எதிராக கணினியில் டென்னிஸ் விளையாடலாம். ப்ளூட்டோவிற்கும் பூமிக்கும் இடையே இயர்ப்புசக்தி வித்யாசமாக இருப்பதால், கணினி அதனை சமன் படுத்தியது. வேற்று கிரஹ வாசி மனிதனை விட வலிமை அதிகமாகியிருந்தால் அதற்க்கும் தர்க்க ரீதியாக நிபங்கனைகள் விதித்து இருவரையும் சமன் செய்தது. தீவிரத்தில், நிஜ டென்னிசை விட குறைந்த உடல் தேர்ச்சி தேவைப்பட்டதால் இந்த வகை விளையாட்டு அன்றய கால வாலிபர்களிடம் மிக பிரபலமாக இருந்தது. எதிராளியே இல்லாமலும் கணினிக்கு எதிராக ஆடலாம், வேண்டுமென்றால் இன்றைய விளையாட்டை உறைய செய்து பந்தை அதேயிடத்தில் நிற்கவைத்துவிட்டு நாளை தொடரலாம். சாத்தியக்கூறுகள் ஏராளம். வியர்வை, சலிப்பு, புழுதி நிறைந்த நிஜ விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டாத இளைஞர்களில் ஒருவனாக மாறியதுதான் சக்தியின் இந்த அடிமை பயணத்தின் துவக்கம். படி படியாக முன்னேறி துப்பாக்கி ஏந்திய (மனித?) வேட்டை விளையாட்டு, இலக்கே இல்லாமல் ஓடிக்கொண்டே சுவர், மலை, நகரங்கள், போன்றவையே ஒரே தாவில் தாண்டும் விளையாட்டு, என வர்டுவல் ரியாலிடி விந்தை உலகிற்கு அடிமையான போது அவனுக்கு வயது பதினாலு.

தின்ன, குளிக்க, பேள, தூங்க இந்த வேலைகளுக்கு மட்டும் தான் கண்கட்டு அவிரும். வீட்டில் சதா சர்வகாலமும் கருப்பு கண்ணாடி மாட்டிக்கொண்டு திரிந்தால் எந்த அப்பன் தான் பொறுத்துக்கொள்வார்? சொல்லி பார்த்தார், அதட்டினார் எதற்கும் அடங்காதபோது இன்டர்நெட் சந்தாவை துண்டித்தார், வீடு ரெண்டானது. உரசல்களில் ஆரம்பித்து வாதம் முத்தி ஒரு நாள் கன்னத்தில் பளார் என விழுந்தது, அவன் அப்பனுக்கு. அவன் அம்மா சமரசம் பேசவில்லையெனில் அன்று ரணகளம் ஆகியிருந்திருக்கும்.

அடுத்த நாள் சக்தியே மனம் வருந்தி அவன் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டான். “நீ இன்னும் ரெண்டு வருஷத்துல மேஜராகிடுவே டா. அதுவரைக்கும் உன்னை சகிச்சுக்கனம்” என்றார் அப்பா.

மன உளைச்சலில் பள்ளிக்கு சென்றவன் வழியில் ஏதோ போராட்டம் நடப்பதை பார்த்தான். எதற்காக போராட்டம் என்றெல்லாம் கேட்க நேரமில்லை. போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல் வீசிக்கொண்டிருந்தார்கள், போலீஸ்காரர்கள் மின்துப்பாக்கியால் ஆறாயிரம் ஓல்ட் ஷாக் அடித்து போராட்டக்காரர்களை செயலிழக்க செய்து கொண்டிருந்தார்கள். ஆஹா என்ன விளையாட்டு! நான் இதை எவ்வளவு முறை விளையாடியிருக்கிறேன் என எண்ணி கல்லை எடுத்து வீசும் முன்னமே விழுந்தது ஷாக். மேல பறக்கும் ட்ரோனை பார்க்கவில்லை போலும்.

வர்டுவல் ரியாலிடிக்கும் நிஜ வாழ்க்கைக்கும் அப்போதுதான் வித்யாசம் தெரிந்தது சக்திக்கு. கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஆட்ட நாயகனுக்கு மூன்று (சில ஆட்டங்களில் ஐந்து) உயிர்கள் இருந்தன. ரத்தகளமாகி ரெண்டு பாகமாக வெட்டப்பட்டாலும் உயிர்பித்தது மீண்டும் ஆடும் வாய்ப்பை கொடுத்தது கணினி. நிஜ வாழ்க்கையில் அன்று அடித்த ஷாக், இருக்கும் ஒரே உயிரின் மூலம் வரை சென்று மரண பயத்தை முதல் முறையாக சக்திக்கு காட்டியது.

அடுத்த நாள் மருத்துவமனையில் நினைவு வந்த போது அவன் அம்மா மட்டும்தான் இருந்தாள். அக்காலத்திலும் பெற்றவள் ஒருத்திதான் தருதலைகளின் காக்கும் தேவதைகளாயிருந்தனர். ஒரே மகன், இயல்பில் நல்லவன், குழந்தை, திருந்திவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டவள். மைனர் என்பதால், போலீஸ் அவன் மேல் கேஸ் எதுவும் போடாமல் கடும் எச்சரிக்கையோடு விட்டனர்.

பிரத்யேகமாக தருதலைகளுக்கே கட்டிய வார்டு போலும் அது. பக்கத்துக்கு படுக்கையில் இருந்தவன் சக்தியை போலவே அங்கு வந்தவன். முதலில் அவர்கள் இருவருடைய அம்மக்கள் பேசிக்கொண்டார்கள். பிறகு இவர்கள் இருவரும் பேச தொடங்கினார்கள், விளையாட்டை பற்றி. பேசிய போது சக்திக்கு வெட்கமாய் இருந்தது. அவன் சகா இவனைவிட பெரிய விளையாட்டுக்காரனாக இருந்தான்.

“விளையாட்டு விடு இப்போ சினிமாவே எடுக்கறாங்க. அதுல ஹீரோ ஆயிட்டேன்னா, உன்னைய அடிச்சிக்க யாருமில்ல”

“அப்படியா?”

“இது கூடவா உனக்கு தெரியாது? நீ எப்படி உன்னை கேமர் என சொல்லி கொள்கிறாய்?” என சொல்லி சிரித்தான்.

“அந்த சினிமால, நீ ஹீரோ பக்கத்துல போய் நீக்கலாம், அவனோட ஃபைட் போடலாம், ஹீரோயின்கூட ஆடலாம்…அப்புறம்” கண் அடித்தான்.

“சினிமா பார்த்திருக்கேன் ஆனா..”

“இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, சிரியஸ் கிரஹத்தில் கேமர் கூட்டம் அடுத்த மாதம் நடக்குது. அங்கு வந்து பார் தெரியும்”. அடித்த ஷாக் ஒரு புறமிருக்க மற்றோரு புறம் ஆர்வமும் துவங்கியது.

“கல்லடிச்சாத்தானே ஷாக் அடிப்பாங்க, இதுல என்ன தப்பிருக்கு?”. முதலில் அம்மாவிடம் அனுமதி கேட்டான், அவள் கொடுக்க மறுத்தாள்.

“வேண்டாம்டா. உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா, போலீசுக்கு சொல்லி உன்னை ஜூவினைல் ஹோம்ல சேர்த்திருவாரு” என்றாள்.

நாட்கள் போக போக வேட்கை அதிகமானது. கூட்டம் ஆரம்பிக்கும் மூன்று நாட்களுக்கு முன், அப்பாவின் அக்வுண்டிலிருந்து பணத்தை மோசடி செய்து தனக்கு மாற்றிக்கொண்டு சிரியஸ் கிரஹத்திற்கு விண்கலம்மேறினான் சக்திவடிவேல்.

சிரியஸ் கிரஹம், ஞால வர்டுவல் ரியாலிடி உலகின் தலைநகரம். கிரஹம் முழுவது பெரும் குழுமங்கள் விளையாட்டுகள் மட்டுமின்றி திரைப்படங்கள், ஹோலோக்ராம்கள், அதற்க்கு தேவையான கருவிகள் என அனைத்து பொருட்களையும் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பேர்போனது.

கால் பதித்த நாள் முதல்லே அதன் வசீகரத்தில் மூழ்கி, ஆனந்த நீச்சலடித்து, கரையேற முடியாமல் பரவச தவிப்பில் மெய்சிலிர்த்தான். சொர்கத்தை அடைந்துவிட்டோம் என எண்ணினான் சக்தி. நாட்கள் போக போக இரு உண்மைகள் அவனுக்கு புரிந்தது. ஒன்று, திரும்பி போக முடியாது. இரண்டு, இங்கு ஒரு நல்ல வேலையில் சேர்வதும் முடியாது. விளையாட்டுகளை விளையாடித்தான் பழக்கமே அன்றி அதன் தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம்மில்லை அவனுக்கு.

முதல் வாரம், எடுத்து (திருடிய?) வந்த பணத்தில் காலம் கழிந்தது. அந்த கிரஹத்திலேயே சிறு வேலைகள் செய்து பிழைக்க தொடங்கினான். கணினி சர்வர் ரூமை கூட்டுதல், குழுமங்களுக்கிடையே கூரியர் வேலை என கைக்குவந்த வேலைகளை செய்து பிழைதான். மீதம் இருந்த நேரங்களில் இலவச கேம் பார்லரில் அண்மையில் வெளிவந்த விளையாட்டுகளில் மூழ்கினான். சிரியஸ் கிரஹத்து சுற்றுலா துறை வர்டுவல் ரியாலிடி தொழிற்சாலைக்கென்றே பிரம்மாண்ட பார்லர்களை அமைத்திருந்தது. இதை ஒரு வகை விளம்பரமாக கருதியது சிரியஸ் அரசு.

இப்படியாக காலம் சென்றுகொண்டிருந்த நாட்களில் ஒருநாள் தேநீர் விடுதியில் வேலைசெய்துகொண்டிருந்த பொது சந்துருவை சந்தித்தான். சந்துரு நிலா வாசி, பூமியிலிருந்து நிலாவிற்கு குடியேறியர்வர்களின் வாரிசு. அடிப்படையில் மனித இனம்.

“ஒரு காபி” என்றான் சந்துரு.

“இதோ வருது சார்”

“உன் பெரு என்னப்பா ?”

“சக்திவடிவேல்” பெருமையுடன் சொன்னான் சக்தி. இதை கேட்ட சந்துரு அவனை உற்று பார்த்தான்.

“ஓ …எந்த ஊரு?” சொல்ல தயங்கினான்

“சரி, இங்க எப்படி வந்தே? இங்க உனக்கு தெரிந்தவங்க யாரவது இருக்காங்களா?”

“இல்ல சார். நான் தனியாத்தான் இருக்கேன்”

“ஏன்? பூமியிலுருந்து இவ்வளவு துலைவுல…உன்னைய பார்த்தா பதினெட்டு கூட ஆகல போலிருக்கே?” மேலும் தயக்கம்.

“வீட்டை விட்டு ஓடிட்டையா?” கேட்டபோது மெல்ல நகரத்தொடங்கினான் சக்தி.

“நில்லு! நீ இங்க இருக்குறது உங்க அம்மா அப்பாவுக்கு தெரியுமா?”

“தெரியும்…”

“சும்மா கதை சொல்லாதே…நீயே சொல்லறையா இல்ல அவனை கேட்கவா?” தேநீர் விடுதியின் முதலாளி அறையை காண்பித்தான்.

“சார்.. அதெல்லாம் செய்யாதீங்க சார். ஆமாம் நான் இங்க ஓடித்தான் வந்தேன். கம்ப்யூட்டர் விளையாட்டுல எனக்கு அவ்வளவு ஆர்வம். என் பிரென்ட் ஒருத்தன் தான் சொன்னான் இந்த கிரஹத்தை பத்தி. வந்ததிலிருந்து வியந்து போய் இங்கேயே தங்கிட்டேன்”

“நினைச்சன்…உங்க அப்பா புகார் கொடுத்திருக்காரு…கிளம்பு” அப்போதுதான் சக்திக்கு புரிந்தது. சந்துரு சிரியஸ் கிரஹ போலிஸ் என்று. “நான் வர மாட்டேன் சார்”

“டேய் மடையா..” கத்திய சந்துருவையும், சக்தியையும் எல்லோரும் திரும்பி பார்த்தார்கள்.

“சரி என்னோட வா…உனக்கு சில விஷயம் சொல்லணும்… இல்ல காமிக்கணும்…பயப்படாதே.. உன்னை வற்புறுத்தி பூமிக்கு அனுப்ப மாட்டேன்”

சிரியஸ் கிரஹத்து தலைமை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார் சந்துரு.

“உன்னை மாதிரி பல இளைஞர்கள் இங்க வந்து சேர்றாங்க. எல்லாருக்கும் கேம்ஸ் பைத்தியம்.. இல்ல பைத்தியம் இல்ல… அது ஒரு போதை… இந்த போதை எப்படி வருது தெரியுமா? இங்க பார்”.

கணினி திரையை காட்டினார்.

“இவுங்களையெல்லாம் பார்” கணினி திரையில் சில மனித உருவங்கள் சில வேற்றுகிரஹ உருவங்கள் தெரிந்தன.

“போதை கொடுக்க கூடிய அல்காரிதமை ப்ரோக்ராம்ல போட்டு சின்ன பசங்களை வசீகரம் பண்ணி மீண்டும் மீண்டும் விளையாட வெச்சு பணம் பிடுங்கற கும்பலை சேர்ந்தவங்க. போன வாரம்தான் இந்த குழுமத்தை மூடினோம்”

சக்திக்கு மெதுவாக முகம் சிவக்க ஆரம்பித்தது.

“இவனை பார்.. பணம் கட்டினா விலங்குளுக்கு மேல வன்முறை செய்யற வர்டுவல் ரியாலிடி சாப்ட்வேர் தயாரிக்கறவன்… விலங்குகள், பெண்கள், வேற்றுகிரஹ வாசி, உனக்கு பிடிக்காதவன் எவன் வேண்ணாலும்… ஏன்? உன் மேலையும்கூட எந்தவித தயக்கமும் இல்லாம வன்முறை நிகழ்த்த தேவையான சாப்ட்வேரை தயாரிக்கறவன்”

“இன்னும் வேணுமா? பாரு…இந்த நாய்களை… குழந்தைகள் ஆபாச படங்களை தயாரிங்கறவங்க.”

“நீ வந்திருக்கயே இந்த உலகம்… இது ஒன்னும் சொர்க்கமல்ல.. ஞான உச்சநீதிமன்றத்துல இங்க இருக்குற பாதி கபேணிங்க மேல வழக்கு போய்க்கிட்டு இருக்கு. ஒருவேளை உனக்கு இங்க வேல கிடைச்சா.. இந்த மாதிரி வேலைகளெல்லாம் செய்வியா?”

ஸ்தம்பித்திருந்தான் சக்தி. வெகு நேரம் எதுவும் பேச முடியவில்லை.

“வீட்டுக்கு போன் பண்ணி எவ்வளவு நாளாச்சு சக்தி? உங்க அம்மா மனநிலை சரியில்லாம மருத்துவமனையில இருக்காங்க. இதெல்லாம் தெரியுமா உனக்கு? சரி உனக்கு ரெண்டு நாள் டையும் தர்றேன். நீயே வீட்டுக்கு போய்டு, இல்லன்னா நாங்க உன்னை நாடு கடத்திடுவோம்”

அறைக்கு வந்த சக்திவடிவேல் அறையின் கூரையை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்லமாக அழத்தொடங்கினான். முழுமையான அழுகையில்லை. ஒரு வித நிராசையின் விளைவு அழுகை. இராவெல்லாம் தூக்கமின்றி யோசித்தான், காலையில் ஒரு முடிவுக்கு வந்தான். கையில் இருந்த பணத்தை கைமாத்திகொண்டு சிரியஸ் கிரஹத்தின் பிரதான விண்வெளி சென்டருக்கு வந்தான். சிரியஸ் கிரஹத்திலிருந்து வெளி கிரஹங்களுக்கு புறப்படும் விண்கலங்களின் ஸ்பேஸ்-போர்ட். இலக்குகளை போர்டுடில் பார்த்தான்,

IR – 23 (கிரேட் பேர் நட்சத்திர கூட்டம்) – மூன்று மணிநேரத்தில் புறப்பாடு ,
சிஃநஸ் – 45 (மேல்கி வே கூட்டம் ) நிமிடங்கள் புறப்பட்டு,
சென்னை (புவி, மேல்கி வே) – ஒன்றரை மணிநேரத்தில் புறப்பாடு,
XJ-234 (அன்ரோமேடா) பத்து நிமிடங்களில் புறப்பாடு,


மெதுவாக டிக்கெட் கவுன்டருக்கு சென்றான்,

“XJ-234, ஒன்னு”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *