மாயா..மாயா..எல்லாம் மாயா..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 5,662 
 

2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி

தன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே செல்லும் பல‌வண்ண வயர்களையும் பார்த்து வியந்து நின்று கொண்டிருந்த நாதனின் தோளில் தட்டினான் கிருஷ்ணா.

“என்ன புரொபசர், திகைச்சி போய் நின்னுட்டீங்க போலிருக்கு”

“க‌ண்டிப்பா கிருஷ். நீ ஐ.ஐ.டி.ல‌ ப‌டிச்ச‌ப்ப‌ நான் உன்னோட‌ புரொப‌ச‌ர். ரொம்ப‌ ப்ரைட்டா இருந்த‌தால‌ எல்லாருக்கும் உன்னை ரொம்ப‌ பிடிக்கும். நீ உன்னோட‌ பி.எச்.டிக்கு என்னை கைடா செல‌க்ட் ப‌ண்ணின‌துக்கு உன்னை விட‌ நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டேன். இதோ 13 வ‌ருச‌ம் க‌ழிச்சி இப்ப‌ உன்னை ஏர்போர்ட்ல‌ பாத்தப்ப‌ என‌க்கே உன்னை அடையாள‌ம் தெரிய‌ல‌. என்னை பாத்த‌வுட‌னே சின்ன‌க்குழ‌ந்தை மாதிரி என்னை க‌ட்டிபிடிச்சி சீன் கிரியேட் ப‌ண்ணிட்டே. உன்கூட‌ வ‌ந்தே ஆக‌ணும்னு ஒரே அட‌ம்பிடிச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தே. இங்க வந்து பாத்தா இந்த லேப் என்னோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதா இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்க நீ கிருஷ்?”

“புரொபசர், உங்களுக்கே தெரியும்.. எனக்கு கம்ப்யூட்டர்னா உயிர்னு. அதனாலதான் சூப்பர் கம்ப்யூட்டர் பத்தி பி.எச்.டி. பண்ணினேன். அது முடிஞ்சதும் அமெரிக்காவில வேலை கிடைச்சி போனதும் உங்களுக்குத் தெரியும். அங்க போயி கொஞ்ச நாள்லயே எனக்கு அது போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனாலதான் இந்தியா திரும்பி வந்து இந்த லேப் ஆரம்பிச்சேன்”

“அதுவும் எனக்கு தெரியும் கிருஷ். உன்னைப் பத்திதான் எல்லா மீடியாவும் பேசிட்டிருக்கே”

“நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட புது கண்டுபிடிப்பைப் பத்தி உங்களுக்கு சொல்றதுக்காகதான். இதுபத்தி இன்னும் யாருக்கும் சொல்லவேயில்லை. நீங்கதான் முதல்ல தெரிஞ்சிக்கப் போறீங்க”

“சொல்லு கிருஷ்” என்றார் நாதன் சிறிதும் கலப்படமில்லாத நிஜமான ஆர்வத்துடன்.

“இப்ப இருக்கிறதுலயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எதுன்னு சொல்லுங்க”

“ஐ.பி.எம். மூணு மாசத்துக்கு முன்னால அறிவிச்ச ரோடுரன்னர் (IBM RoadRunner). சரியா? அதோட வேகம் கூட 1 பீட்டா ஃப்ளாப்க்கு (Peta Flops – Floting Point Operations Per Second) மேலன்னு ஞாபகம்”

“ரொம்ப சரி புரொபசர். சாதாரண கம்ப்யூட்டரோட வேகம் சில மெகா ஃப்ளாப்ல இருக்குறப்ப இந்த ரோடுரன்னர் அதை விட லட்சக்கணக்கான மடங்கு வேகத்துல செயல்படுது”

“ரொம்ப சரி கிருஷ். அவங்க அடுத்த ப்ராஜக்ட் கூட ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேன். அது இதை விட ரெண்டு அல்லது மூணு மடங்கு வேகம் கொண்டதா இருக்கும்னும் அது 2010ல வந்துடும்னும் பேசிக்கிறாங்க”

பதில் சொல்லாமல் லேசான புன்னைகையுடன் தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணா.

“என்ன கிருஷ்.. அப்படி பாக்குற?”

“நீங்க நம்பமாட்டீங்க புரொபசர். நான் அதை விட பல மடங்கு சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிட்டேன்”

“என்னப்பா சொல்றே?” ஆச்சரியம் + அதிர்ச்சியுடன் கேட்டார் நாதன்.

“ஆமா சார். நீங்க இப்ப அதுக்கு நடுவுலதான் நிக்கிறீங்க”

ஆச்சரியம் விலகாமல் சுற்றி இருந்த அனைத்தையும் பார்த்தார் நாதன்.

“எங்கப்பா எனக்காக விட்டுட்டு போன ஆயிரக்கணக்கான கோடிகள்ல பாதிக்கும் மேல விழுங்கிட்டு இதோ இங்க 8 ஏக்கர் பரப்பளவில நிக்குதே இதுதான் என்னோட கண்டுபிடிப்பு. இதோட ஸ்பெசிஃபிகேஷன் சொல்றேன் கேக்குறீங்களா புரொபசர்?

மொத்தம் இதுல 2048 சப்சிஸ்டம் (sub-system) இருக்கு. ஒவ்வொரு சப்சிஸ்டத்திலயும் 1024 யூனிட், ஒவ்வொரு யூனிட்லயும் 64 க்வாட் கோர் ப்ராசஸர் (quad core processor). மொத்தம் 2048 * 1024 * 64 = 134 மில்லியன் ப்ராசஸர்ஸ் இருக்கு. நம்ப முடியல இல்லை. அது மட்டுமில்ல. இந்த எல்லா சப்சிஸ்டமும் அதி நவீன ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குற மொத்த மெமரி பவர், கூகுள் கம்பெனி வெச்சிருக்கிற எல்லா சர்வர்கள்லயும் இருக்குறத விட அதிகம்.”

“வாவ்”

“இன்னிக்கு உலகத்தில பயன்பாட்டில இருக்கிற அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரைவிட இது ஏறத்தாழ‌ 3,000 மடங்கு சக்தி வாய்ந்தது. என்ன ஒண்ணு, சின்ன நகரத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவைப்படுற மின்சாரம் இதுக்கு ஒவ்வொரு நாளும் தேவை”

“நீ சொன்னது நிஜம்தான் கிருஷ்.. என்னால நம்பவே முடியல”

சிரித்தான் கிருஷ்ணா.

“ஆனா உன்னை நான் பாராட்டணும் கிருஷ். உனக்குள்ள இருந்த அந்த வேகம் வெறியா மாறிடுச்சின்னுதான் சொல்லுவேன். ஆனா அதை நீ சரியான திசையில செலுத்தியிருக்க. அதுதான் இன்னிக்கு இப்படி உருமாறி நிக்குது”

“நன்றி புரொபசர்”

“ஆமா இதை எதுக்காக உபயோகப்படுத்தப் போற?”

“சாதரணமா சூப்பர் கம்யூட்டர்கள் ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுது. உதாரணமா காலநிலை மாற்றங்கள், அணுகுண்டு ஆராய்ச்சி இப்படி. நான் செய்யப் போறது முற்றிலும் வேற மாதிரி”

“என்ன கிருஷ்?”

“இந்த உலகத்தில முதல் முதல்ல உயிரினம் எப்படி தோன்றிச்சி அப்படின்றதப் பத்திதான் என்னோட இந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணப் போகுது”

“எப்படி?”

“அணுகுண்டுகளை வெடிக்காம ஆனா அதே நேரத்தில அது வெடிச்சா எப்படி இருக்கும் அப்படின்றத பத்திதான் இன்னிக்கு பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. என்ன பண்ணுவாங்கன்னா அணுகுண்டு வெடிக்கிறதுக்கு முன்னால இருக்குற எல்லா விசயங்களையும் சூப்பர் கம்ப்யூட்டர்ல ஏத்திடுவாங்க. அதுக்கப்புறம் தன்னோட ப்ராசஸிங் பவரை வெச்சி குண்டு வெடிச்சா என்ன ஆகும், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், கதிர்வீச்சு எந்த அளவில இருக்கும் அப்படின்றத சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கிடும்.

நான் அதேமாதிரி, இந்த பூமி உருவானப்ப எப்படி இருந்தது, அதோட இயல்புகள் என்ன அப்படின்றத என்னோட கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் என்னோட கம்ப்யூட்டர் எப்படி உயிர்கள் தோன்றியது அப்படின்னு கணக்கிடப் போகுது. இதுக்குப் பேர் சிமுலேசன் (Simulation).

எல்லாம் சரியா நடந்தா மனுசன் எப்படி உருவானான் அப்படின்ற குழப்பமான கேள்விக்கும் கூட விடை தெரிய வாய்ப்பு இருக்கு புரொஃபசர்”

“அற்புதம் கிருஷ். நீ எது செஞ்சாலும் அதுல வெற்றியடையத்தான் போற. எனக்கு இன்னும் ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கணும்”


கி.பி.2908 ஆகஸ்ட் 15, மாலை 7.00 மணி

“மிஸ்டர் கே89. என்னை எதுக்காக அவசரமா கூப்பிட்டீங்க?”

“இதோ இதைப் பாருங்க” என்றவாறே எதிரில் இருந்த 30 அடி நீள சுவர் மீதிருந்த மானிட்டரைத் தொட்டான். அது உலக வரைபடத்தைக் காட்ட அதில் இந்தியாவை தொட அது இந்தியாவை மட்டும் பெரிதாக்கிக் காட்டியது. அப்படியே தொடர்ந்து நான்கைந்து தொடல்களுக்குப் பிறகு நாதனையும், கிருஷ்ணாவையும் காட்டியது.

“அவங்க பேசுறதை கேளுங்க ஜே40”

இருவரும் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

சரியாக 30 நிமிடங்களில் அவர்கள் ஒரு அறையில் குழுமியிருந்தார்கள். நாட்டின் அதிபர், முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அமர்ந்திருக்க ஜே40 பேச ஆரம்பித்தார்.

“அதிவேக கம்ப்யூட்டர்கள் மூலமா இந்த சிமுலேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்னியோட 140 வருசம் ஆச்சு. இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினம் தோன்றுனதுல இருந்து பரிணாமத்தோட ஒவ்வொரு கட்டத்தையும் இந்த சிமுலேசன் மூலமா நாம தெரிஞ்சிட்டு வந்திருக்குறோம். மனுசன் எப்படி தோன்றுனான் அப்படின்றது உட்பட பல விடை தெரியாத கேள்விகளுக்கு நமக்கு இந்த ப்ராஜக்ட் விடை தந்திருக்கு.

இப்ப இந்த சிமுலேசனோட முக்கியமான கட்டத்துல இருக்கோம். கோடிக்கணக்கான வருசத்தப் பத்தி தெரிஞ்சிட்ட நாம இப்ப கி.பி.2008ம் வருசத்துல இருக்கோம். இன்னும் அடுத்து வரப்போற 400 வருசங்களைப் பத்தியும் தெரிஞ்சிட்டாதான் இன்னிக்கு உலகத்துல நாம எதிர்கொண்டிருக்குற கடுமையான வியாதிகள், காலநிலை மாறுபாடுகள் மாதிரியான‌ பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனா இப்ப நாம பாக்கிற இந்த கிருஷ்ணான்ற‌ என்டிட்டி (Entity) சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சியிருக்குறதாகவும், அது மூலமா சிமுலேசனை ஆரம்பிக்கப் போறதாகவும் சொல்லுது. இது நமக்கு தலைவலிதான்.

ஏன்னா, ஏற்கனவே இவங்க இருக்கிறது சிமுலேசன்ல. அதுல இருந்து இன்னொரு சிமுலேசன் ரிகர்ஸிவா (recursive) ஆரம்பிக்கறதுன்றது தேவையில்லாதது மட்டுமில்ல, நிறைய எனர்ஜி மற்றும் ரிசோர்ஸ் தேவைப்படுற ஒண்ணு.

இதனால நம்ம இப்ப எதிர்பார்க்கறமாதிரி 2923ம் வருசத்துக்குள்ள கி.பி.2500ம் வருசத்த தொட முடியாமக் கூட போகலாம்.”

சிறிது நேரம் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.

“சரி..இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க ஜே40?” என்றார் அதிபர்.


2008 ஆகஸ்ட் 16, நேரம் காலை 7.00 மணி

டி.வி.யில் அழகான அந்த பெண் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.

“இந்தியாவின் பிரபல கணிப்பொறி விஞ்ஞானி கிருஷ்ணா நேற்று இரவு அவரது ஆராய்ச்சிக்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மரணமடைந்தார். மின்கசிவின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது கல்லூரி விரிவுரையாளார் நாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரும் பலியானர்கள் என்றும் மருத்துவமனையில் படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன”

– ஜூலை 2008, சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான மூன்றாவது இடுகை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *