மனம் செய்யும் வேலை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 77,882 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வாழ்க்கை விசித்திரமானது.

அது மனிதரை எப்படி எல்லாமோ பாதிக்கிறது. ஒவ்வொரு வரையும் வெவ்வேறு விதமாக பாதித்து விடுகிறது. சிலர் சில சமயம் அடியோடு மாறிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் மனம் எனும் மாய சக்தி தான் அடிப்படைக் காரணம் என்று சொல்ல வேண்டும்.

காத்தமுத்து இதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆவான்.

முரடன் என்று பெயர் வாங்குவதில் அவனுக்குத்த மகிழ்ச்சி இருந்தது. சின்ன வயசிலிருந்தே.

வீண் வம்புகளை நாள்தோறும் அவன் வளர்த்து வந்தான். இரவில் வெகுநேரம தெருவில் சுற்றித் திரிவான். அதனால் “இராக் காடு வெட்டி” என்று பலர் அவனைக் குறிப்பிடுவது வழக்கம்.

இருட்டில் எந்த இடத்துக்கும் தனியாகப் போய்வர அஞ்சாதவன் அவன். “பூச்சி பொட்டு கிடக்கும். ஒரு வேளையைப் போல இன்னொரு வேளை இருக்காது” என்று பெரியவர்கள் எச்சரிக்கும் போது, “ப்சா சாப்பிட்டுது போ!” என்றோ, “கிழிச்சுது!” எனவோ, எடுத்தெறிந்து பேசுவான்.

காத்தமுத்து துணிந்த கட்டை பேய் பிசாசு என்றெல்லாம் சொல்லி அவனை மிரட்டி விட முடியாது. “பேயாவது கீயாவது ! நம்மைக் கண்டாலே அதுகள்ளாம் பயந்து பம்மிவிடும்! என்று கூறி, அட்டகாசமாய் சிரிப்பான் அவன்.

ஒரு சமயம் ஒரு பந்தயத்துக்காக இரவு நேரம் முழுவதையும் சுடுகாட்டிலேயே கழித்தான் அவன். இந்தச் சாதனையை அவன் பெருமையாகச் சொல்வது வழக்கம்.

அப்பேர்ப்பட்ட காத்தமுத்து திடீரென்று ஒரு காலகட்டத்தில் அடியோடு மாறிப் போனான். ராத்திரி நேரத்தில் வீட்டுக்குள் தனியாகப் படுத்து உறங்க அஞ்சினான். தடால் என்று ஏதாவது ஓசை கேட்டால் அவன் திடுக்கிட்டு விழிப்பான். ஒருவிதமான பதறலுடன், கலவரமாய் அங்கு மிங்கும் பார்ப்பான். ஒரு மிரட்சி அவன் கண்களில் குடிபுகும்.

அறைக்குள் தூங்குகிற போது ஏதோ கெட்ட கனவு கண்டு பதறியவன் போல் திடீரென அவன் அலறுவான். உடல் எங்கும் வேர்வை பொங்க, பயந்தடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து, திருதிருவென்று விழிப்பான். வெகுநேரம் அவன் தேகம் நடுங்கிக் கொண்டிருக்கும். உள் பயம் அவனை அப்படி ஆட்டி வைத்தது.

பாழடைந்த வீட்டினுள்ளும், காட்டு வழிச் சந்துகளிலும், பேய் வசிப்பதாகச் சொல்லப்பட்ட இருள் மண்டிய கட்டிடங்களிலும் படுத்து நிம்மதியாகத் தூங்கியவன்தான் அவன். அப்படிப்பட்ட காத்தமுத்துவிடம் இப்படி ஒரு மாறுதல் விளைந்தது எதனால்? இது பலரைக் குழப்பிய ஒரு விஷயம்.

காத்தமுத்துவுக்கு ஒருநாள் ராத்திரி ஏற்பட்ட அதிர்ச்சி தான் இதற்குக் காரணம் ஆகும்.

அவன் வீட்டினுள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். வீட்டின் மேல் தளத்திலிருந்து ஒரு பெரிய கட்டி பெயர்ந்து கீழே விழுந்தது. தடால் எனப் பெரும் ஓசை எழுந்தது. அது அக்கம் பக்கத்திலும் பல வீடுகளுக்கும் கேட்டது.

காத்தமுத்துவின் தலைமாட்டிலே தான் அந்தக் காரைக்கட்டி விழுந்தது. ஒரு சாண் தள்ளி, செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்ட அந்தப் பெரிய கட்டி விழுந்திருக்கு-மானால், அது நேரே அவன் தலைமீது விழுந்திருக்கும். முகத்தில் தாக்கி, மூக்கு நசுங்கி, மண்டை சிதைந்து போயிருக்கக் கூடும்.

அதிர்ச்சியோடு பதறி எழுந்த காத்தமுத்துவுக்கு இந்த உண்மை புரிந்தது.

சத்தம் கேட்டு விழிப்படைந்து, என்னவோ ஏதோ என்று விரைந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையே திரும்பச் சொன்னார்கள்.

“நீ ஒரு ஆசை பிழைச்சே! நீ செத்திருக்க வேண்டியவன். பிழைத்தது மறு பிழைப்புதான்!”, “உன் அதிர்ஷ்டம், நீ இன்னும் உயிரோடு இருக்கிற!” என்று பலரும் பன்னிப் பன்னிப் பேசினார்கள்.

“எவ்வளவு பெரிய கட்டி!” “என்னமா சத்தம் கேட்டுது!” “அது தலைமேலே விழுந்தால் மனுசன் பிழைப்பானா!” இப்படி ஆளுக்கு ஒன்று சொன்னார்கள்.

காத்தமுத்துவின் உடல் ரொம்பநேரம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் உள்ளப் பதைப்பு தணிய வெகுநேரம் ஆயிற்று. ஆனாலும், அந்தரங்கத்தில், அவனது உள்ளத்தின் ஆழத்தில், ஒரு பீதி வேரோடி விட்டது.

அதன் பிறகு அவனுக்கு இருட்டில், அறைக்குள் தனியாகத் தங்குவதற்கும், படுத்து உறங்குவதற்கும் பயம். பகல் பொழுதுகளில் கூட வீட்டுக்குள் நெடுநேரம் இருந்தால், அவன் உள்ளத்தில் காரணமற்ற, அர்த்தமற்ற, பயம் வந்து கவியும். அவன் உடல் நளுக்கிக் கொடுக்கும். திடீர் விபத்து ஏற்பட்டு தனக்கு ஆபத்து நிகழும் என்று மனம் பதைபதைக்கும். உடனே அறையை விட்டு அவசரமாக வெளியேறுவான் அவன்.

காத்தமுத்துவும் சில உறவினரும் ஒரு கிராமத்தில் நிகழ விருந்த கல்யாண விசேஷத்துக்குப் போனார்கள்.

பஸ் வசதி இல்லாத ஊர். அதிகாலை முகூர்த்தம். அதனால் முந்திய தினம் மாலை நேரத்திலேயே அந்த ஊருக்கு அவர்கள் போய்விட்டார்கள்.

இரவில் அவர்கள் தங்கியிருப்பதற்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய கட்டிடம். ஒரு சுவரில் பெரிதாகக் கீறல் காணப்பட்டது. மேல் தளத்தில் காரை உதிர்ந்து, அங்கும் இங்கும் வட்டங்களும் சதுரங்களும் தென்பட்டன. சில இடங்களில் சுண்ணாம்புத் தூள் உதிர்ந்து கொண்டிருந்தது.

கட்டிடத்தின் பழமை பற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். “வயசாயிட்டுது. இருந்தாலும், நல்ல உறுதியான கட்டிடம். இப்போதைக்கு விழாது “

“எந்தக் கட்டிடமும் திடீர்னு விழுந்து, உள்ளே இருக்கிற வங்களை சாகடிச்சிடாது. முதல்லே பல நாட்களுக்கு தர்மக்கட்டி சிறுசுசிறுசா, பொடிப் பொடியா, உதிர்ந்து கொண்டேயிருக்கும். அபபடி உதிர்ந்து எச்சரிக்கும். அப்புறம் ஒருநாள் தொம்முனு விழுந்திரும்” என்று ஒருவர் சுவாரஸ்யமாக வர்ணித்தார்.

காத்தமுத்து சுவர்களையும் மேல்தளத்தையும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர் பேச்சுக்களும் அவனுள் வேலை செய்தன.

எனினும், அவன் எல்லோர் கூடவும் சேர்ந்து தான் படுத்தான். தூங்கியும் போனான்.
இரவு கனத்தது. கிராமத்துச் சூழலில் அமைதி கனமாய் கவிந்து தொங்குவது போல் அழுத்தமாக இருந்தது.

வெளியே ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று திடீரென்று பயங்கரமாய் அலறியது. அதைத் தொடர்ந்து இரண்டு பூனைகள், ஏற்ற இறக்கங்களோடு, நீளமாய் விகாரமாய், விசித்திரத் தொனியில் கத்தின.

அந்தக் கூச்சல் ஒன்றிருவரை விழிப்புற வைத்தது.

அப்போது தான் கோரமான அலறல் வீட்டினுள் எழுந்தது. உயிருக்கு மல்லாடுவது போல; அச்சத்தால் துடித்துக் கதறுவது மாதிரி.

எல்லோரும் திடுக்கிட்டு விழித்தார்கள். விளக்குகளை எரிய விட்டார்கள்.

காத்தமுத்து தான் அப்படிக் கத்தினான். அருகில் இருந்தவர் அவனை உலுக்கினார். அதற்குள் அவனே பதறி, உடல் நடுங்க, விழித் தெழுந்து உட்கார்ந்தான்.

அவன் தேகம் அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தது. மிரள மிரள விழித்தான்.

பலரும் என்ன என்ன என்று தூண்டித் துருவ, அவன் ஞஞ்ஞ மிஞ்ஞத்தனம் பண்ணினான். “ஏதோ சொப்பனம்” என்றான். “வீடு இடிந்து விழுந்து, பெரிய கல்லு என் மேலே பட்டு, என்னை நசுக்கின மாதிரி. நிசமா நடப்பது போலவே இருந்தது. அது தான்” என்றான்.

“பையன் எங்கேயோ பயந்திருக்கான்” என்றார் ஒருவர்.

காத்தமுத்து மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. குறுகுறு என்று உட்கார்ந்திருந்தான். பிரமை பிடித்தவன் போல் ஒரு திக்கையே பார்த்தபடி,

எல்லோரும் விளக்குகளை அணைத்து விட்டுப் படுத்தார்கள். சிலர் தூங்கினார்கள். மற்றவர்களும் கண்களை மூடிக்கொண்டு கிறிக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

காத்தமுத்துவுக்கு உறக்கம் வரவில்லை. அவன் மனமே அவனை அரித்தது. விடிந்தபின் மற்றவர்கள் கேட்கக்கூடிய கேள்விகள், பேசக்கூடிய கேலிகள் சொல்லக்கூடிய உபதேசங்கள் விதம்விதமாய் அவனது மனவெளியில் ஒலிக்க, அவனை வெட்க உணர்வு பிடித்தது. அவர்கள் முகத்தில் விழிக்க அவன் நாணினான்.

அதிகாலை முகூர்த்தத்துக்காக அவன் அங்கே காத்திருக்கத் துணியவில்லை. காலையில் கண் விழித்ததும், அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்ற துடிப்புடன் தேடியவர்கள் காத்தமுத்துவைக் காணாது திகைத்தார்கள். அவன் எவரிடமும் கூறிக்கொள்ளாது, எந்நேரத்தில் விழித்தெழுந்து, அவ்வூரை விட்டு வெளியேறினான் என்பது அவர்களில் யாருக்கும் தெரியவில்லை.

– இளந்தமிழன் 1988

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *