பச்சை பங்களா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 15,282 
 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சந்துரு பந்தை உருட்டிக்கொண்டு முன்னேறினான், அவன் கோல்போஸ்ட் பக்கம் போகாமல் இலாவகமாகப் பந்தை அவனிடமிருந்து பறித்துக்கொண்டு எதிர்த்திசையை நோக்கிப் பந்தை உதைத்தான் இஸ்மாயில் பறந்து வந்த பந்தை எதிரணி ஆட்டக்காரர் நெருங்கும்முன் ஓடிச் சென்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சந்துரு இருக்கும் திசையை நோக்கி உதைத்தான் சுமன். பந்து விர்ரெனப் பறந்து மீண்டும் சந்துருவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சந்துரு அந்த பந்தை தன் காலால் நிறுத்தி கோல்போஸ்டை நோக்கி ஓங்கி உதைத்தான்.

பந்து மேல்நோக்கிப் பறந்தது. கோல் கீப்பர் மாறன் பந்து வலைக்குள் வராமல் தடுக்க தன் கால்களை அகலமாக வைத்து, கைகளை விரித்துத் தயார் நிலையில் இருந்தான். அனைவரின் பார்வையும் பந்தின்மேல் பதிந்தது. அவர்கள் பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதற்காக வந்த சில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு “கோல்” என்று கத்த, பந்து கோல்போஸ்டையும் தாண்டி, திடலின் எல்லையையும் தாண்டி, விர்ரெனப் பறந்து தூரத்தில் இருந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட பங்களா வீட்டின் மதில் சுவரையும் தாண்டி விழுந்தது.

அந்த நேரம் யாரும் எதிர்பார்க்காமல் திடீரென்று வானம் கருத்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மழை பெய்ய ஆரம்பித்தது. அனைவரும் இயற்கையின் திடீர் தாக்குதலால் சிந்திக்க நேரமின்றி தங்கள் புத்தகப் பைகளைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பேருந்து நிலையத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.

“அப்பாலா, இனி உஜான் மாஞ்சா சுசா”(1) என்று இஸ்மாயில் மழையைத் திட்டிக்கொண்டே மற்றவர்களோடு சேர்ந்து ஓட ஆரம்பித்தான்.

“டேய், என்னடா, மழை வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது”என்றபடியே சுமனும் ஓடினான்.

இன்று அருமையான ஒரு வாய்ப்பு, பறந்து வந்த பந்தைத் தடுத்து செயின்ட் கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியின் சிறந்த கோல் கீப்பர் ஆகும் கனவு தள்ளிப்போன ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டே பேருந்து நிலையத்தில் சக மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்த பேருந்தில் ஓடிச் சென்று ஏறினான் மாறன்.

ஒவ்வொருவருடைய மனநிலையும் இன்றைய பயிற்சி பாதியிலேயே நின்றுபோன வருத்தத்தில் இருந்தாலும், சந்துருவோ அந்தப் பச்சை நிற வீட்டையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். தனது பந்தை யாரேனும் வெளியே எடுத்துக்கொண்டு வருவார்களா என்ற எதிர்பார்ப்போடு தன் புத்தகப் பையை நோக்கி நகர்ந்தான். மழை வந்த வேகத்தில் நின்றும் போனது. சந்துரு முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தான். நல்லவேளை, அப்பா கான்வாஸ் பை வாங்கிக் கொடுத்திருந்ததால் ஈரம் உள்ளே நுழையாமல் புத்தகங்கள் பாதுகாப்பாக இருந்தன. பந்து இல்லாமல் வீட்டுக்குப் போக அவனுக்கு மனமில்லை. அப்பாவுக்கு தெரிந்தால் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார்.

“அந்தக் காலத்துல எங்கப்பா பாக்கெட் மணிக்குப் பத்துக் காசுதான் கொடுப்பார். அவரு வாங்கிக் கொடுக்கிறதைத்தான் நாங்க உடுத்திக்கணும், இந்தக்காலத்துப் பசங்களுக்குக் காசோட அருமை எங்கே தெரியப்போறது?” என்று அவருடைய அந்தக் காலத்துப் பல்லவியைப் பாட ஆரம்பித்து விடுவார்.

‘எப்படியாயினும் பந்தோடுதான் வீடு செல்ல முடியும், வேறு வழியில்லை, அந்தப் பச்சை பங்களா வீட்டில் யாராவது இருப்பார்கள், தேடிப் பார்க்கச் சொல்லலாம்’ என்றெண்ணிய சந்துரு தனது புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு நடக்கலானான்.

மழை மீண்டும் வருவதற்கான அறிகுறி தென்பட்டது. வானம் மீண்டும் கருக்கத் தொடங்கியது. சந்துரு பைக்குள் இருந்த குடையை அப்போது எடுத்துக்கொண்டான். அவனுக்குத் தோன்றியது இரண்டு விஷயங்கள். ஒன்று மழை பெய்தால் குடை தேவைப்படும், மற்றொன்று அந்த வீட்டில் யாரேனும் தன்னைத் தாக்க முற்பட்டால் பாதுகாப்பாக இருக்கட்டும் என்பதுதான்.

தூரத்தில் அந்தப் பங்களா பார்க்க அமைதியாய் இருந்தது. அருகே நெருங்க நெருங்க, சந்துருவின் மனத்தில் இனமறியாத கிலி நுழைய ஆரம்பித்தது. யாரோ தன்னைக் கூர்ந்து பார்க்கிறார்கள் என்ற உந்துதல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவன் தைரியமாய் என்னதான் நடக்கும், பார்க்கலாம் என்று இரண்டடி முன்னே எடுத்து வைத்தான். நல்லவேளையாகப் பங்களாவின் கேட் திறந்திருந்தது, சந்துருவின் இதயத்துடிப்பு இரண்டு மடங்கு கூட, இன்னும் இரண்டடி முன்னே வந்தான்.

கேட்டைக் கடந்து சந்துருவின் கண்கள் பறந்து வந்த காற்பந்து எங்காவது தெரிகிறதா என்று துழாவின. உள்ளே இடதுபக்கத்தில் இரண்டு பப்பாளி மரங்கள் இருந்தன. ஆனால் பழங்கள் இல்லை. பப்பாளி மரத்தைத் தள்ளி ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. வெள்ளை நிற ஈரமான ரோஜாக்கள். அப்பொழுதுதான் குளித்ததுபோலக் காட்சியளித்தன. சந்துருவை வரவேற்பதுபோல் அவை அசைந்தாடின. அம்மாவுக்கு ரோஜா என்றால் பிரியம். அவர்கள் வீட்டு வாசலில் அம்மா பஸார் மாலாமிலிருந்து வாங்கிவந்த சிறிய ரோஜா ஜாடி இருந்தது. வந்த இரண்டே வாரங்களில் பூ. இலை, காம்பு என அனைத்தும் காய்ந்து கருகிவிட்டன. அப்பாவின் வசையால் அம்மாவின்ஆசை சுருங்கிப்போனது. அங்கே எங்காவது மல்லிகைப் பூத்திருக்க வேண்டும். ரோஜாவின் மணத்தையும் மீறி மல்லிகையின் மணம் தூக்கலாக இருந்தது.

வலதுபுறத்தில் கார் நிறுத்துவதற்கான போர்ட்டிகோ. அதில் கருப்பு நிற டொயோட்டா காடி பார்க் செய்யப்பட்டிருந்தது. பங்களாவின் ஜன்னல், கதவுகள் தேக்கு மரத்தின் நுண்வாசனையை இழந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறிவிட்டிருந்தன. அழகிய வேலைப்பாடுகள், வேலைப்பாடுகள், கோயில் கதவுகளைப்போல அந்தப் பங்களாவின் மரச்சட்டங்கள் இருந்தன. முகப்புக் கதவு நுணக்கமாய்ப் பூ வேலைப்பாடுகளுடன் தூசிபிடித்து இருந்தது. பக்கத்தில் அழைப்பு மணி இருந்தது.

சந்துரு அழைப்பு மணியை அழுத்தினான். அவனது வருகைக்காகக் காத்திருந்ததுபோலக் கதவும் திறந்தது. ஆனால் ஆள் அரவம் தென்படவில்லை. சந்துருவின் இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டான்.

“யா…யாராவது உள்ளே உள்ளே இருக்கிறீங்களா?” என்று வினவினான். ஒருவேளை தமிழ் தெரியாதவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் ஆங்கிலத்திலும் கூவினான்.

“ம்ம்…உள்ளே வரலாம்” தடித்தக் குரல் அவனை வரவேற்றது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிறிதாகத் திறந்திருந்த கதவைப் பாதி தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

வெளியில் கருமேகங்கள் கூடி இருந்ததால் வீட்டில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. பாதி திறந்த சுதவின் வழியாகச் சிறிது வெளிச்சமே வீட்டிற்குள் ஊடுருவியது. அந்த மங்கலான வெளிச்சத்தில் வீட்டுக்குள் என்ன இருக்கிறது என்பதைச் சந்துருவினால் சரியாக அவதானிக்க முடியவில்லை. ஆனால் கூடத்தின் ஓரத்தில் ஒரு சாப்பாடு மேசையும், அதைச் சுற்றி நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்ததை அந்த மங்கலான ஒளியில் அவனால் பார்க்க முடிந்தது. அதில் ஒரு நாற்காலியில் வயதான பெரியவர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு சந்துருவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சந்துருவும் ஆச்சரியமாகக் கண்களை அகல விரித்துப் பார்த்தான். ஆம், அவன் தேடி வந்த அவனது பந்து அந்த மேசையின் மீது இருந்தது. பந்தைப் பார்த்ததும்தான் சந்துருவுக்கு மூச்சு வந்தது.

“தாத்தா எம்பேரு சந்துரு, இந்தப் பந்து…..” தன்னைத் தயக்கத்தோடு அறிமுகப்படுத்திக்கொண்டான். ‘ஒருவேளை இந்தத் தாத்தாவுக்குப் பந்து இவனுடையது தானா என்று சந்தேகம் வந்தால்?’ என்ற எண்ணம் அவனை மேலே பேச விடாமல் தடுத்தது.

“எல்லாம் தெரியும் பேராண்டி, இது உன்னோட பந்து, வேகமா உதைச்சப் பந்து எங்க வீட்டுப் பின்புறத்துல விழுந்துடுச்சி” பெரியவர் குரலில் கனிவு இருந்தது. மேலும் அவரே தொடர்ந்தார்.

“என்னப்பா, முழுசா நனைஞ்சிட்டியா? இந்தா, தலையைத் துவட்டு, சளி பிடிச்சிக்கப் போவது” தன் தோளின் மேல் கிடந்த பச்சை நிறத் துண்டை எடுத்து நீட்டினார். அவர் குரலில் இருந்த அக்கறை சந்துருவை ஈர்த்தது.

“தாத்தா, அது என்னோட பந்துன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டான். ஆனால் அந்தத் துண்டில் மல்லிகை மணம் ஒட்டியிருந்ததைச் சந்துரு நுகரத் தவறவில்லை.

“நான்தான் தினம் தினம் நீங்க பந்து விளையாடுறதைப் பார்க்கிறேனே” பொக்கைவாய்த் திறந்து மழலையாய்ச் சிரித்தார்.

“அப்படியா? நான் உங்களைப் பார்த்ததே இல்லையே?” சந்துருவும் ஆச்சரியமாகத் துண்டைத் திருப்பிக் கொடுத்துக் கொண்டே கேட்டான். தாத்தா புன்னகையைப் பதிலாகக் கொடுத்தார், வேறெதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் சந்துரு தாத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு பந்தோடு கிளம்பினான்.

வீடு வந்து சேர்ந்தும் அவன் உடல் மல்லிகையின் மணம் வியாபித்திருந்தது. குளித்தும் அந்த முழுதும் மணம் அவனை விட்டகலாமல் இருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நேரம் ஆக, ஆக உடல் சூடேறுவதை உணர்ந்தான்.

“என்னடா, மழையில நனைஞ்சியா? குடை கொண்டு போகலியா?” அன்று இரவு அம்மா கேட்டபிறகுதான் அவனுக்கு அந்த வீட்டு மேஜைமீது வைத்த குடையை எடுக்க மறந்துபோனது ஞாபகம் வந்தது.

அம்மா கொடுத்த கொடுத்த ‘ஃப்ளு’ மருந்து அவனையும் அறியாமல் அயர்ந்து தூங்கச் செய்தது. மறுநாள் காலை எழுந்திருக்கும்போதே தலை கனத்தது. அம்மாவிடம் சொன்னான். அம்மா குழந்தை நலன் விடுப்பு எடுத்து அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்புக் கொடுத்து நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார் மருத்துவர்.

அதன்பிறகு வார இறுதி வந்ததால் சந்துரு மறுவாரம் திங்கட்கிழமைதான் பள்ளிக்குச் சென்றான். பள்ளித் தோழர்கள் அனைவரும் அவனைப்பற்றி விசாரித்ததைவிட, பந்தைப் பற்றிதான் அக்கறையாகக் கேட்டனர். பந்து கிடைத்துவிட்டதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அன்று பள்ளி முடிந்ததும் சந்துரு நேராக அந்தப் பச்சை நிறப் பங்களாவிற்குத்தான் சென்றான். அம்மாவிற்குக் குடையை மறந்து வைத்துவிட்டு வந்தது தெரியாது. அப்பா கொரியாவுக்குச் சென்று வந்தபோது அம்மாவுக்காக வாங்கி வந்தார். மூன்றாக மடக்கி கைப்பையில் வைப்பதற்கு இலகுவாக இருக்கும். அம்மா யாருக்கும் அந்தக் குடையை இரவல் கொடுக்கமாட்டார். அன்று காலை பள்ளிக்குக் கிளம்பும்போது வானம் இருட்டிக்கொண்டு வந்ததால் அவசரத்துக்கு எடுத்துக்கொண்டு ஓடினான். அந்தக் குடை காணவில்லை என்றால் வெடித்துவிடுவார். வம்பே வேண்டாம், அவர் அதைப்பற்றிக் கேட்கும் முன்பே குடையை அந்தப் பெரியவர் வீட்டிலிருந்து எடுத்து வரவேண்டும் என்ற எண்ணமே அவனை மீண்டும் அங்கே இழுத்துச் சென்றது.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தான். அன்று பார்த்த கருப்பு நிற டொயோட்டா கார் அங்கே இல்லாததைக் கவனித்தான். ஒருவேளை வீட்டில் யாரும் இல்லையோ, திரும்பி விடுவோமா என்று நினைத்துக்கொண்டிருக்கையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கதவைத் திறந்தார்.

பெரியவரை எதிர்பார்த்த சந்துருவுக்குச் சற்று வியப்பாக இருந்தது. ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு, சென்ற வாரம் தனது பந்து எப்படி அவர்கள் வீட்டுக்கு வந்தது என்று சுருக்கமாகக் கூறி, தனது குடையை மீண்டும் எடுத்துக்கொண்டு போக வந்ததாய்த் தெரிவித்தான்.

“அப்படியா?” அந்தப் பெண்மணி கண்களை அகல விரித்து ஆச்சரியமாகக் கேட்டார்.

“நாங்க வெளியூர் போயிட்டு நேத்துதான் வந்தோம். நாங்கள் இல்லாத வேளைகளில் எங்கள் தோட்டக்காரரை அவ்வப்போது வரச் சொல்லியிருந்தோம். ஒருவேளை அவரைப் பார்த்திருப்பாய். இன்று அவருக்கு லீவு, நாளைக்கு வந்ததும் விசாரிக்கிறேன்” இனிமையாகக் கூறினார்.

“அங்கே இருந்த மேசை மீதுதான் வைத்தேன், எதற்கும் அந்த மேசையை ஒருமுறை ஒருமுறை பாருங்களேன்!” சந்துருவும் விடாப்பிடியாகக் கெஞ்சினான்

அந்தப் பெண்மணிக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்திருக்கும். சந்துருவை உள்ளே அழைத்துச் சென்றார். எல்லா சன்னல்களும் திறந்து வீடு வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருந்தது. சந்துரு உடனே அந்த மேசையை ஆராய்ந்தான். ஆனால் அங்கே குடை இல்லாதது அவனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவன் முகரேகையைப் புரிந்துகொண்டு அவனுக்குச் சமாதானம் கூறிய பெண்மணியை நிமிர்ந்து பார்த்தான். குரலின் குரலின் கனிவு கண்களிலும் தெரிந்தது.

“சாரி ஆன்ட்டி, உங்கள் நேரத்தை வீணடித்துவிட்டேன், நான் நாளை வருகிறேன்” மன்னிப்புக் கேட்டுத் திரும்பியவன் கண்களில் அந்த மேசைக்கு அருகிலுள்ள சுவற்றில் மாட்டியிருந்த ஒரு படம் தென்பட்டது. படத்தில் இருந்த உருவம் அவனுக்குப் பரிச்சயமானதாய்த் தோன்றிற்று.

“ஆன்ட்டி, அவரு யாரு?” அவன் கை காட்டிய திசையைப் பெண்மணியும் நோக்கினாள்.

“அவர்தான் என் மாமனார்” கூறியவரின் கண்களில் சோகம் இழையோடியது. படத்துக்கு மொத்தமான மல்லிகைப் பூ மாலை அணிவித்து ஊதுவத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. சந்துருவுக்கு இப்போது அவரை அடையாளம் தெரிந்தது.

‘அடடா, பாவம், அந்தத் தாத்தா இறந்துவிட்டாரா? போனவாரம் உயிரோடு இருந்தார், அதற்குள் இறந்துவிட்டாரே!’ சந்துரு மனதுக்குள் வருத்தப்பட்டான். பரிதாபத்தோடு மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தான். அந்தப் பெரியவர் சிரித்துக்கொண்டே காட்சியளித்தார். வெள்ளைச் சட்டை, தோளில் பச்சை நிறத்துண்டுடன் தமிழ்ப்படங்களில் வரும் அரசியல்வாதியைப் போல் தோற்றமளித்தார்.

“ஆமாம், அவர் இறந்து ஆறு மாசமாச்சு!” அந்தப் பெண்மணி கூறிய பதிலால் சந்துரு ஐஸ் பெட்டிக்குள் வைத்த கோழியைப்போல உறைந்துபோனான்.

தமிழ் மொழி பெயர்ப்பு
(1) “அலமாக்! இனி உஜான் மாஞ்சா சுசா! (அடடா! இந்த மழை மோசமானது)
(2) பஸார் மாலாமிலிருந்து (இரவுச் சந்தையிலிருந்து)

– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *