கிழவி நாச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 21,635 
 
 

கதை ஆசிரியர்: சந்திரா.

எங்கள் வீட்டின் காலியான பெரும் பரப்பு எப்போதும் சினேகிதர்கள் மத்தியில் எனக்குப் பெரும் மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது. குட்டிக் குட்டியாகக் கூரை வேய்ந்த இரண்டு மண் வீடுகள், ஒரு கோழித் திண்ணை, படல் அடைத்த குளியலறை தவிர மீதி இடமெல்லாம் வெட்ட வெளியாகத் திறந்து கிடக்கும். கில்லி, கிட்டி குச்சி, பச்சைக் குதிரை, கோலிக் குண்டு, இப்படி எந்த விளையாட்டானாலும் எங்கள் வீடுதான் மைதானம். இதனாலேயே எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட மிக அதிகமாக என் வீட்டை நேசித்தேன். அதெல்லாம் இருட்டத் தொடங்குவதற்கு முன்னால். மேற்கு மலையில் வெளிச்சம் பின்னோக்கிச் சென்று இருட்ட ஆரம்பித்தவுடன் எங்கள் வீட்டின் தனிமையும் ஆரம்பித்துவிடும். ஏற்கனவே எங்கள் வீடு மற்ற வீடுகளிலிருந்து ஒதுங்கிச் சந்துக்குள்தான் இருந்தது. பேய்க் கதைகள் சொல்வதில் பெயர் போனவன் வீரசேகர். எங்கள் வீடு பற்றியும் எங்கள் வீட்டருகில் ஆளரவமற்று வேப்பம்பூ உதிர்ந்து கிடக்கும் பாழுங்கிணறு பற்றியும் அவன் சொல்லிப்போன பேய்க் கதைகள் எல்லா இரவுகளையும் என்னைப் பயத்துடனே கழிக்கச் செய்யும்.

கிணறு இருக்கும் பகுதியிலிருந்து பிரித்து எங்களுக்குச் சொந்தமான இடம்வரை படல் அடைத்திருந்தோம். அந்தப் படலைத் தினம் தினம் அப்பா சரிசெய்தாலும் ஆளில்லாத நேரத்தில் கழுதையோ பன்றியோ வந்து படலைப் பிரித்துவிட்டுச் சென்றுவிடும். ஒரு கட்டத்திற்குமேல் அப்பா அதன்மேல் அக்கறை காட்டாமல் விட்டுவிட்டார். பேருக்கு இரண்டு குச்சிகளைத் தவிர வேலி எதுவும் இல்லாமல் திறந்து கிடந்தது எங்கள் வீடு. என்னைப் பயமுறுத்த, அது வீரசேகருக்கு வசதியாகப் போய்விட்டது. அடைப்பு எதுவும் இல்லாததால் கிழவி நாச்சி எளிதாக வீட்டுக்குள் வந்துவிடுவாள் என்று சொன்னான். இதைப் பற்றிப் பேச வேண்டாம் என்று அவனிடம் எத்தனைமுறை சொன்னாலும் திரும்பத் திரும்ப அதையே செய்துகொண்டிருந்தான். எல்லோர் முன்னாலும் என்னைப் பயமுறுத்தி அவமதிப்பதே அவன் நோக்கமாக இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து இருபதடி தூரத்தில் இருக்கும் பாழுங்கிணறு கிராமத்துக்குப் பொதுவான இடம். அங்கே ஆலமரம், வேப்பமரம், பன்னீர்மரம் என்று வகைக்கு ஒன்றாக அமைந்து அந்த இடத்தை அழகுபடுத்திக்கொண்டிருந்தன. அதில் பெண்பிள்ளைகள் பன்னீர் மரத்தையும் ஆண்பிள்ளைகள் ஆலமரத்தையும் மிகவும் விரும்பினார்கள். ஆனால், வேப்பமரம் இருபாலாருக்கும் பிடித்தமானதாக இருந்தது. அதற்குக் காரணம் கிணறுதான். வேப்பமரத்தின் வளைவான நீண்ட கிளை கிணற்றுக்குள் படிந்ததைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். அதுவும் வேப்பமரத்தின் அடியிலிருந்து கிளை விரிந்து மேல்நோக்கிச் செல்வதால் அந்த மரத்தில் ஏறுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று. கிணற்றுக்குள் விழுந்துவிடுவோம் என்னும் பயமின்றி ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பிள்ளைகளும் பூச்சியைப் போன்று மரத்தின் கிளைகளில் உடல் பரப்பிக் கிடப்பார்கள். சில வீரமான பையன்கள் கிளைகளின் மேல் கைகளை வீசி நடந்து செல்வார்கள். அதுவும் கிளையின் உச்சி முடியும் இடம் கிட்டத்தட்ட கிணற்றுக்குள் இருக்கும். அந்த இடத்தில் உட்காருவதற்குப் போட்டி நடக்கும். அந்தப் போட்டியில் இடம் பிடிப்பதற்காகத்தான் வீரசேகர் பேய்க் கதைகள் சொல்லத் தொடங்கினான். அந்த இடத்தில் உட்காருவதற்கு அவனோடு நானும் போட்டிபோட்டதால் பயமுறுத்தலை என்னிடம் ஆரம்பித்தான்.

திடீரென்று காய்ச்சலில் விழுந்த தெற்குத் தெரு டெயிலர் முனியாண்டி என்ன வைத்தியம் செய்தும் தீராமல் மூன்றே நாள்களில் இறந்துபோனான். கம்பத்திற்கு இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வந்தபோது முண்டம் செத்த ஆலமரத்துப் பேய் அடித்துச் செத்துப்போனதாக ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள். இந்தச் செய்தியை எங்களுக்கு முதலில் சொன்னவன் வீரசேகர். இதனாலேயே அவன் சொல்லும் பேய்க் கதைகளை எங்களால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

கிழவி நாச்சிக்கு எப்போதும் குழந்தைகள் மேல்தான் விருப்பமாம்; சிறுவயதில் அவளுக்கு நாச்சியம்மாள் என்ற பெயர் இருந்திருக்கிறது. எப்போதும் மஞ்சள் பூசியதைப் போன்ற நிறமாம் அவளுக்கு. ஊர்ப் பெண்கள் அவள் அழகைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும் எப்போதும் எதையோ பறிகொடுத்ததைப் போல் சோகமாக இருப்பாளாம். அவள் வேண்டாத தெய்வம் இல்லையாம். கல்லுக்குக்கூடப் பொட்டுவைத்துச் சாமி கும்பிடுவாளாம். அப்படியும் அவளுக்குக் குழந்தை பாக்கியம் மட்டும் கிடைக்கவில்லையாம். கிழவியான பின்பும் அந்த ஏக்கத்தில் ஊர் முழுவதும் பைத்தியமாகச் சுற்றி அலைந்தவள் கடைசியில் கிணற்றுக்குள் விழுந்திருக்கிறாள். அப்போதெல்லாம் கிணறு நிறையத் தண்ணீர் இருந்திருக்கிறது. இறந்த ஒரு வாரத்திலேயே தன் விசுவரூபத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறாள் நாச்சியம்மாள். வயதுக்கு வந்த பெண்களை ஆட்டத் தொடங்கியவள், அம்மாக்களுடன் வரும் குழந்தைகளையும் ஆசையுடன் பிடித்திருக்கிறாள். கிழவி நாச்சி பேயான பின் அந்த ஊர்க் கோடாங்கியின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லையாம். தினம் தினம் ஒருவருக்குப் பேயோட்டிக் காசு பார்த்துவிடுவானாம். நட்ட நடு மத்தியானம் தனியாகத் தண்ணீர் இறைக்கும் பெண்களிடம் “புள்ள வேணும், புள்ள வேணும்” என்னும் கிழவி நாச்சியின் குரல் கிணறு முழுவதும் நிறைந்து எதிரொலிக்குமாம். அப்புறம் பெண்கள் அந்தக் கிணற்றை விட்டுவிட்டு, கொஞ்சம் தூரமானாலும் பரவாயில்லை என்று மடத்துத் தெருவில் உள்ள கிணற்றுக்குப் போய்த் தண்ணீர் எடுத்துவந்திருக்கிறார்கள். அதன் பின் எந்த மனித வாசனையுமின்றிக் கிணறு தனித்துக் கிடந்தது. கவனிப்பில்லாமல்போன மரங்கள் சூழ்ந்த கிணறு பின்பு பாழுங்கிணறாகிப் பாலற்றுக் கிடந்தது.

இந்தக் கதைகளையெல்லாம் பாட்டி சொல்வதற்கு முன்பே வீரசேகர் எங்களுக்குச் சொல்லியிருந்தான். பாட்டி திரும்பச் சொல்லும்போது, கேட்ட கதைதான் என்னும் சலிப்பு மிஞ்சும். இருந்தாலும் ஒவ்வொரு ராத்திரியையும் பிரமிப்போடு கழிக்கப் பாட்டி சொன்ன கதைகள் தேவையாக இருந்தன. அதேபோல் வீரசேகர் சொன்ன கதைகளும்தான்.

ஒருவேளை பேய் நேரில் வந்தாலும் இவ்வளவு பயம் இருக்காதுபோல. ஆனால் உடல் குறுக்கி, நாக்குத் துருத்தி, கண்களை உருட்டி, கைகளை அசைத்து அசைத்து அவன் சொல்லும் விதத்திலேயே குலைநடுங்கப் பயம் வந்துவிடும். கிழவி நாச்சி வெள்ளிக்கிழமை ராத்திரியில்தான் ஆங்காரமாக அலைவாளாம். குழந்தை ஆசையில் திரியும் அவள் ‘ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரியில் திறந்திருக்கும் படல் வழியாக நுழைந்து உன்னைத் தூக்கிச் சென்றுவிடுவாள். பின்பு ஒருபோதும் நீ வீடு திரும்ப முடியாது. உன்னைக் கிழவி விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவாள்’ என்று வீரசேகர் சொன்னான்.

அன்றும் அப்படித்தான் கிழவி நாச்சி பற்றி ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்லக் கேட்கப் பிடிக்காதவள்போலக் காதுகளை இறுக மூடிக்கொண்டேயிருந்தும் அவன் பயமுறுத்தல் ஓய்ந்தபாடில்லை. “கிழவி நாச்சி நேர்ல வந்தாலும் நான் பயப்படமாட்டேன்” என்றேன் வீராப்பாக! ஒரு நிமிடம் அவன் கதைகள் எல்லாம் பொய்த்துப்போனதில் அதிர்ச்சியடைந்தான். பிறகு சுதாரித்து, “ம்கும்!” என்று இளக்காரமாக நெற்றியில் கைவைத்து, “இப்படித்தான் கணேசன் கிழவி நாச்சிகிட்ட பயம் இல்லன்னு சொல்லி, பந்தயம் கட்டி நடுச்சாமத்துல கெணத்துக்கிட்ட போயி ஒரு மாசம் காய்ச்சல்ல படுத்துக் கெடந்தான். அப்புறம் அவன் கெணத்து மேட்டுப் பக்கம்கூட வரல. பொட்டப் புள்ள நீ மாத்திரம் கெணத்துக்கிட்ட போயிருவியாக்கும்” என்றான் சிரித்துக்கொண்டே. அதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்ற பிள்ளைகளும் கெக்கே பிக்கே என்று சிரித்துப் பழிப்புக் காட்டினார்கள். எனக்கு ஒரே அவமானமாகிவிட்டது. “நானெங்க ராத்திரி கெணத்துக்கிட்ட போறேன்னு சொன்னேன். பொழுது சாய ஆறு மணியானாலே கெணறு இருக்கிற பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டேன். இதுல ராத்திரி பன்னெண்டு மணிக்குப் போறதாவது, கெனாவுலகூட நடக்காது. இவனா சொல்லிகிட்டு என்னை இப்படி மாட்டிவிட்டுட்டானே” என்று மனத்திற்குள்ளேயே பயந்துகொண்டேன். ஆனால், அதையெல்லாம் வெளிக் காட்டிக்கொள்ளாமல் “வர்ற வெள்ளிக்கிழமை ராத்திரி கெணத்துப் பக்கம் போறேன்… என்னடா பந்தயம் கட்டுற?” என்றேன் ஆவேசமாக. மற்ற பிள்ளைகள் அதிர்ச்சியோடு வாயில் கைவைத்து, கண்களை அகல விரித்து லேசாகச் சிரித்தார்கள். பந்தயப் பரிசு நிர்ணயிக்கப்பட்டது. எல்லோரும் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தார்கள். அது நான் பந்தயப் பரிசை வெல்லப் போவதற்காக அல்ல. தோற்றுப் போய் எல்லோரையும் உப்புமூட்டை தூக்குவேன் என்பதற்காக.

அந்த வெள்ளிக்கிழமை ராத்திரியில் பருத்திப்பூ போட்ட என் பாவாடையை உயர்த்திப் பிடித்துக்கொண்டே எப்போதும் எனக்குப் பிடித்த கிணற்றின் வடக்கு மூலையில் காலைத் தொடங்கப்போட்டு உட்கார்ந்துகொண்டேன். வீரசேகரிடம் போட்ட பந்தயத்தில் நான் ஜெயிக்கப்போகிறேன் என்று நினைத்தபோது, எனக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது. பந்தயத்தில் நான் ஜெயித்துவிட்டால், அவன் தன்னிடம் உள்ள சைக்கிளில் எனக்கு ஓட்டிப் பழகிக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். அப்படி மட்டும் நடந்துவிட்டால், அந்த ஊரிலேயே சைக்கிள் ஓட்டத் தெரிந்த ஒரே பெண் என்ற கிரீடம் எனக்குக் கிடைத்துவிடும். கிரீடம் என்றால் உண்மையாகவே கிரீடம்தான். நண்பர்களுக்குள் வைக்கும் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஆல் இலையை விளக்குமாற்றுக் குச்சியில் செருகிக் கிரீடம் செய்து சூட்டிவிடுவார்கள். எனக்கு போனஸாக சைக்கிள் ஓட்டக் கிடைக்கும்போது அதைக் கேட்கவா வேண்டும். நெஞ்சுக்குள் வைராக்கியம் பிறந்தது. பயத்தை மூட்டைகட்டிவைத்துவிட்டேன்.

இலைகள்கூடத் துளும்பாத கடும் இருட்டு அது. கிணற்றின் உள்சுவர்களில் முளைத்திருந்த துளசியின் மணம் என் மனத்தில் எந்தவிதப் பயமும் இல்லாமல் செய்தது. புகையைப் போன்று மிக மெதுவாக எழும்பி அது எங்கே போய் முடியப்போகிறது என்று தெரியாமல் ஓர் உருவம் கிணற்றின் அடியாழத்திலிருந்து நான் இருக்கும் திசையை நோக்கி வந்தது. அப்போதும் நான் அமைதியாக இருட்டின் நிறத்தைக் குறைக்கும் அதன் சாம்பல் நிறக் கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்குக் கோபம் வந்ததைப் போலக் கண்களை உருட்டியது. இருட்டில் தெரியாத அதன் சேலையின் நிறத்தைக் கவனித்துக்கொண்டிருந்தேன். எப்போதும் கிழவி நாச்சி சிகப்புச் சேலையைத்தான் உடுத்தியிருப்பாள் என்று வீரசேகர் சொல்லியிருந்தான். சேலையின் நிறம் தெரியவில்லை என்றாலும் திரள் திரளாகச் சுருண்டு பாதம் நோக்கி நீண்டிருந்த முடி அது கிழவி நாச்சிதான் என்பதை உறுதிப்படுத்தியது. அடுத்து அது தன் கோரைப் பற்களைக் காட்டி, ஆங்காரமான சிரிப்பொலியை எழுப்பியது. இப்போது என் தொடைகள் லேசாக நடுங்கத் தொடங்கின. நான் பயப்பட்டாலும் பந்தய விதிப்படி தோற்றுப் போனதாகத்தான் அர்த்தமாம். நான் பயத்தை முகத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒளியேறிய அதன் கண்கள் மட்டும் அது சாந்தமானது என்பதை எனக்கு உணர்த்தியது. எவ்வளவு முயன்றும் தன் சாந்தமான பார்வையை இழக்க முடியவில்லை என்பதால் கண்களை என்னிடம் காட்டாமல் இருக்க முயன்றது.

அதன்மீது மட்டும் நிலைகுத்திப்போன என் இயல்பான பார்வையை அதனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மிகப் பெரும் காற்றை எழுப்பிக் கிணறு முழுமையும் தன் கூந்தலைப் பரப்பி நின்றது. அதன் கூந்தல் என்னையும் மூடியிருந்தது. அது எனக்கு வசதியாக இருந்தது. இப்போது அதன் கோரைப் பற்கள் என் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதுதான் காரணம். அதனுடைய இந்தச் செயலைப் பார்த்து நான் சப்தமிட்டு அழுவேன் என்று எதிர்பார்த்தது. விரல் நீண்ட கைகளை என்னை நோக்கி வீசியது. இப்போது அதன் கைகளுக்குள் நான் இருந்தேன். நான் பயமற்று அதன் கைகளில் கிடந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அது தன் உடலைக் குறுக்கிக் கிணற்றின் தரைக்குள் போனது. நானும் அதனோடு சேர்ந்துபோனேன். கீழே போகப் போகக் கிணற்றுச் சுவரின் பொந்துகளிலிருந்து வெளிச்சம் கசிந்துகொண்டிருந்தது. நாங்கள் வெளிச்சத்தில் மிதந்துகொண்டிருந்தோம். கிணற்றின் நடுவே அமர்ந்து அதன் மடியில் ஒரு பச்சைக் குழந்தையைப் போல என்னைப் படுக்கவைத்துக்கொண்டது.

எங்கள் தெருவில் யார் வீட்டில் கண்ணாடி பாட்டில், பீங்கான் உடைந்தாலும் இந்தப் பாழுங்கிணற்றில்தான் கொண்டுவந்துபோடுவார்கள். பீங்கான்மீது அது எப்படி உட்கார்ந்திருக்கிறது என்று பார்த்தால், கிணற்றின் தரை முழுவதும் வைக்கோல் பரப்பப்பட்டு இருந்தது. ஆங்காங்கே பறவையின் றெக்கைகள் பறந்துகொண்டிருந்தன. இப்போது அதன் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன். சுருங்கிய முகம் நீங்கி வளுவளுவான மஞ்சள் நிறமான முகம் வந்திருந்தது. இளம் வயது நாச்சியம்மாளாக அவள் இருந்தாள். கீழே குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு “உன் பேரென்ன?” என்றாள் அமைதியான குரலில். அது என் அம்மாவின் குரலைப் போன்று மென்மையாக இருந்தது. “குட்டிப்பிள்ளை” என்றேன் மிக மெதுவாக. பிறகு நாக்கைக் கடித்துக்கொண்டு “மைவிழிதான் என் பேரு. ஆனா, எங்க வீட்ல எல்லாரும் குட்டிப் பிள்ளைன்னுதான் கூப்பிடுவாங்க” என்றதும் “நானும் குட்டிப்பிள்ளன்னே கூப்பிடுறேன்” என்றாள் கிழவி நாச்சி.

இப்போது எந்தப் பயமுமின்றி அவளோடு பேச ஆரம்பித்தேன். “நீ இதுவரைக்கும் எத்தன பொம்பளைகளப் பிடிச்சிருக்கே” என்றேன். சிறிது நேரம் வார்த்தையின்றி என்னைக் குறுகுறுவென்று பார்த்தவள், என் கண்களில் தெரிந்த லேசான கலக்கத்தைப் பார்த்ததும் உதடு பிரிக்காமல் மெலிதாகச் சிரித்து “நான் யாரையுமே பிடிச்சதில்ல” என்றாள் அமைதியாக. “சின்னப் பிள்ளைகள நீ முழுங்கிடுவேன்னு சொல்றாங்களே” என்றேன். இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. அவள் கண்களிலிருந்து வழிந்த நீர் என் முகத்தில் பட்டது. “யாரையுமே பிடிக்கமாட்டன்னா அப்புறம் எதுக்கு இவ்வளவு பெரிய” ஜடா முடி, கோரைப்பல்? நீ அழகாகவே இருந்திடலாம்ல! என்றதும் “எனக்குப் பெரியவங்களப் பிடிக்கல. சின்ன பிள்ளைகளோட சத்தத்தை மட்டும் கேட்டுக்கிட்டு இங்கத் தனியா இருக்கணும். அதுக்குத்தான் இந்த ஜடா முடியும் கோரைப்பல்லும்.”

“ஐயோ, ஒன்னோட பயங்கரமான முகத்தைப் பார்த்து நாங்க பயந்துகிட்டு இங்க வராமப் போயிட்டா என்ன செய்வே?” என்றேன். “எனக்குத் தெரியும், நீங்க பெரியவங்க மாதிரி இல்ல. எவ்வளவுதான் பயமுறுத்தினாலும் நீங்க பயப்படமாட்டீங்க. விளையாட்டைத் தேடி நீங்க திரும்பத் திரும்ப இங்க வருவீங்கன்னு தெரியும்” என்று சொன்னவள், எனக்கு “ஆலாம்பழமும் இச்சிப் பழமும் புடுங்கித் தர்றியா” என்றாள் சிறு குழந்தையாக. கிழவி நாச்சியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “எனக்கு ஆம்பளப் பயங்க மாதிரி அந்த மரத்தில எல்லாம் ஏறத் தெரியாது. உதிர்ந்த பழத்தை வேணா எடுத்துத் தரவா” என்று சொல்லிவிட்டு, “ஆமா அந்தப் பழத்தை நான் உனக்கு எப்படிக் குடுப்பேன்?” என்றேன். அதற்குக் கிழவி நாச்சி, “நீ மேல இருந்து போடு, நான் புடுச்சிக்கிறேன்” என்றாள்.

பழங்களைப் போல் கிழவி நாச்சிக்கு ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதும் மிகப் பிடித்தமான ஒன்றாம். ஆனால், அவளால் ஒருபோதும் கிணற்றைவிட்டு வெளியே வர முடியாதபடி கிணறு அவள் பாதங்களைப் பிணைத்துவைத்திருக்கிறதாம். கழிவுகளும் தூசிகளும் மரச் சருகுகளும் கிணற்றை முழுமையாக நிறைக்கும்போது, அதனோடு சேர்ந்து கிழவி நாச்சியும் உள்ளே அமுங்கிப்போய்விடுவாளாம். அதன்பின் அவளால் எந்தச் சத்தத்தையும் கேட்க முடியாது என்று சொன்னாள். ஒருபோதும் கிணறு நிறையக் கூடாது என்று நினைத்துக்கொண்டேன். பொந்துகளிலிருந்த வெளிச்சம் உள்நோக்கிப் போனதும் கிணற்றின் மேலிருந்து வெளிச்சம் கீழ்நோக்கி வந்தது. நான் வெளியே செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை அவளாகவே உணர்ந்துகொண்டாள். முன்பைவிட அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தாள். மறுபடியும் அவள் உடல் கிணற்றின் விளிம்புவரை நீண்டது. நான் கிணற்றுக்கு வெளியே இருந்தேன். கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். அவள் இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. இந்நேரம் கிழவி நாச்சி வெளிச்சம்போலத் தன்னைக் குறுக்கிக் கிணற்றின் பொந்துக்குள் போயிருப்பாள். இனி வீரசேகர் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பான்; கிரீடம் கிடைக்கும்.

 

பாயில் படுத்து முனகிக்கொண்டிருந்த என்னிடம் அம்மா வந்தாள். என் உடம்பில் கைவைத்துப் பார்த்துச் சுட்டுக்கொண்டவள்போல் கையைப் பின்னுக்கிழுத்து “அய்யையோ, பிள்ளைக்குக் காய்ச்ச கொதிக்குதே. பாங்கெணத்துப் பக்கம் போகாத . . . கிழவி நாச்சி புடுச்சிக்குவான்னு இவகிட்ட எத்தனை தடவை சொல்றது? மொதல்ல பிள்ளய எழுப்பிப் பின்னியக்காகிட்ட போயி மந்திரிச்சுட்டு வரணும்” என்றாள் என்னைப் பந்தயத்தில் தோற்கடிக்கும் விதமாக.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *