கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 14, 2015
பார்வையிட்டோர்: 46,639 
 

கறுப்பு வெள்ளை கட்டைகளைத் தட்டி கின்னரப்பெட்டியிடம்; (பியானோ) பேசிக் கொண்டிருந்தேன்.

கதவு தட்டும் சத்தம்…

பியானோ வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து எட்டிப் பார்த்தால் முன்னறை ஜன்னல் வழியாக வெளியில் நிற்பது யாரென்று தெரியும்…

எழுந்து நின்று எட்டிப்பார்த்தேன்…

கதவுக்கு அருகில் கார்திகா..

ரோஜா நிற சேலை, அதற்கு மேல் ஒரு குளிரங்கி… கறுப்பு நிறக் கைப்பை.. செங்கல் அளவில் ஒரு திரன்பேசி.. ஆனால் மெல்லியதாக…

திறன்பேசியின் முனையை அவள் கடித்தபடி இருந்தாள்….

ஆறு வருடங்களுக்கு முன்னர் சந்தித்தது.

இத்தனை வருடங்களில் இன்றுதான் முதன்முதலில் பார்க்கிறேன்..

அம்மாவும் இல்லை…

4 மணிக்கு சந்திரிக்காவும் வந்திடுவிடுவாள்..

அதற்குள் இவள் எதற்கு…

தயக்கத்தோடு எழுந்தேன்..

கின்னரப்பெட்டியின் கண்ணாடியைப் பார்த்து தலை முகத்தை சீர்செய்தேன்..

நேரே சென்று கதவை திறந்தேன்..

யாரென்று தெரியாததைப் போல ஒரு நடிப்பையும் காட்டினேன்…

‘ஹேய்.. கார்திகா… நீயா… சொரி.. நீங்களா…?’

‘யெஸ்.. நானேதான்… உள்ள வரவிடுவியா.?’

அவள் அப்படி கேட்டிருக்கவே வேண்டாம்…. கேட்காமல் இருந்திருந்தால் அப்படியே அனுப்பி இருக்கலாம்…

‘அட… வா உள்ள… இத நீ கேட்கனுமா..’

பாதணியோடே உள்ளே வந்தாள்..

பரவாயில்லை… அவள்தானே…

முன்னறையில் பகல் பொழுதிலும் சற்று இருளாய் இருக்கும்..

மின்விளக்கை ஏற்றிவிட்டு, ஷோஃபாவில் அமரச் செய்தேன்…

நீண்ட ஷோஃபாவில் நான் அமர, நேரே இருந்த சிறிய ஷோஃபாவில் அவள் அமர்ந்துக் கொண்டாள்…

கைப்பையை கழற்றி மேசையில் வைத்து விட்டு, திறன்பேசியை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்…

சில நிமிடங்கள் அமைதி…

எப்படி ஆரம்பிப்பது என்று எனக்கும் தெரியவில்லை… அவளுக்கும் தெரியவில்லை என்பதால்தான் அத்தனை தடவுதல்கள்…

‘பிறகு… ஆறு வருசத்துக்கு பிறகு வந்துருக்க… எப்படி நினைவு வந்தது..?’ நானே தொடங்கினேன்…

‘மறந்திருந்தாதானே நினைக்கிறதுக்கு…’ (கார்திகா)

அவள் அப்படி சொன்ன போது என் மனம் சற்று உடைந்து போவதாகவே தோன்றியது…

மெதுவாக சிரித்தேன்…

மனம் அந்த நாட்களை எண்ணச் சொல்லி உந்திக் கொண்டிருந்தது…

அவளுக்கும் அப்படி உந்தி இருக்க வேண்டும்…

திறன்பேசியை மீண்டும் சீண்டிக்கொண்டிருந்தாள்…

ஆறு வருடங்களுக்கு முன்னர் அவள் இப்படி இல்லை… இன்னும் சிறியவள்… இந்த அளவு முகத்தில் தெளிவு இருக்கவில்லை… நேர் வகுடு எடுத்து தலை சீவி இருப்பாள்.. இப்போது மேலே சீவி கிளிப்களை போட்டிருக்கிறாள்…

சரஸ்வதி பூஜைக்கு மாத்திரம் சேலை அணிந்து பார்த்திருக்கேன்..

சிறுவயதில் இருந்தே எனக்கு தெரிந்தவள்…

பாடசாலை செல்ல ஆரம்பித்ததில் இருந்து என் தோழி…

அவள் சேலை அணியும் போது என் உயிர் தோழி…

ஒரு கட்டத்தில் தோழியா, காதலியா என்பதில் குழப்பம்…

நன்றாக பேசினால் நட்பு, ஒழிந்து மறைந்து பேசினால் காதல்..

அவளும் ஒழிந்து மறைந்து பேச வேண்டிய காலம் நாங்கள் உயர்தரம் படிக்கும் போது வந்தது…

அப்போதெல்லாம் அவள் ‘அப்படி’ இருப்பாள்.. பக்கத்தில் நிற்கும் போதே ஒரு பரவசம் தெரியும்…

அவள் என் அருகில் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று தோன்றும்..

எனக்கு முன்னே ஷோஃபாவில் அமர்ந்து அவள் மூக்கை உறுஞ்சிய போது, இந்த நொடிக்கு திரும்பினேன்.

அவள் திறன்பேசியில் சொட்டு சொட்டாய் கிடந்த கண்ணீர்த் துளிகள், எனக்கும் கண்ணீரை வரச் செய்தது..

நான் அடக்கிக் கொண்டேன்..

‘ஏன் அழற.. எதும் பிரச்சினையா?’

அவள் இன்னும் அழுதாள்…

நான் மோனித்து இருந்தேன்…

அவள் ஆறுதல் சொன்னால்தான் அதிகம் அழுவாள் என்பது எனக்குத் தெரியும்…

உயர்தரப் பரீட்சை முடிந்த சில நாட்களிலேயே அவள் ஒருபக்கம் நானொரு பக்கம் என்றானது…

இயற்கையாய் ஏற்பட்ட இந்த பிரிவை நான் மாற்ற முயற்சிக்கவில்லை..

ஆனால் காதல் இருந்தது..

பரீட்சை பெறுபேறு வரும் போதுதான் அவளை மீண்டும் பார்க்கக் கிடைத்தது.

வரும்போது சிங்கள பையன் ஒருவனையும் அழைத்துக் கொண்டு வந்தாள்..

துணைக்கு அழைத்து வந்தாள் என்று நினைத்தேன்…

அவனைத்தான் வாழ்க்கைத் துணையாய் ஏற்க விருப்பதாக சொன்னாள்…

தூக்கிப் போட்டது எனக்கு…

நான்கு மாதங்களுக்குள் நான் எங்கு போனேன்?

அங்கு வைத்து ஒன்றும் கேட்கவில்லை…

அன்று மாலையே அவளது வீட்டுக்கு போனேன்…

அவளது அம்மா அப்பா எல்லோரையும் எனக்கு தெரியும்… அவளது படுக்கை அறை வரையில் சென்று பக்கம் இருந்து கதைத்திருக்க அனுமதி இருந்தது…

நேரே உள்ளே சென்ற போது அவள் தொலைபேசியில் தொங்கிக் கொண்டிருந்தாள்…

இதுநாள் வரையில் செய்திராத ஒன்றை செய்தேன்..

கதவைத் தட்டினேன்..

‘ஹேய்…ஷரோன்… உள்ள வா.. என்ன புதுசா கதவ தட்டுற..’

உள்ளே சென்றேன்..

‘இப்பதான் சஞ்சயகிட்ட உன்ன பற்றி பேசிட்டு இருந்தேன்… நீயே வந்துட்ட… பேசுறியா..?’ (கார்திகா)

‘இல்ல.. மூட் இல்ல.. பிறகு பேசுறேன்..’

‘சஞ்சயகிட்ட உன்ன பற்றி எல்லாம் சொல்லி வச்சிருக்கன்..’

‘என்ன சொன்ன?’

‘என்ன சொன்னியா… யு ஆர் மை வெரி பெஸ்ட் பிரண்ட்டுடா..’

‘ஹ்ம்….’ மெதுவாக சிரித்தேன்..

‘ஏன் சிரிக்கிற..?’

‘அப்ப நா உன் லவ்வர் இல்லயா?’

‘என்ன சொல்ற…? நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்… எப்படி லவ்வராக முடியும்?’

எழுந்து வந்துவிட்டேன்..

மீண்டும் அழைத்தாள்… விளங்கியது.. திரும்பி செல்ல மனம் இல்லை…

நண்பனிடம் சொன்னேன்..

‘கடல்ல ஒருமீனா மச்சான் இருக்கு… அத விடுடா…’

அவனுக்கு தெரிந்த ஆறுதல் அவ்வளவுதான்….

என்னவோ… நான் ஆறுதல் பட்டுக் கொண்டேன்…

நான்தான் நட்பை காதலாக நினைத்துவிட்டதாகவே கற்பனை செய்துக் கொண்டேன்..

ஆனால், பரிமாற்றிக் கொண்ட கடிதங்கள், அவள் பயிற்சிக் கொப்பியில் எழுதி வைத்த கவிதைகள், அந்த கவிதைகளுக்கு அவள் எழுதிய பதில்கள்… எல்லாவற்றையும் விட, வகுப்புறைக்கு பின்னால் மறைவாக நின்று நெற்றியில் கொடுத்த முத்தங்கள்…. இதெல்லாம் நட்பில் கிடைக்குமோ? தெரியவில்லை…

அதன் பின்னர் ஆறு வருடங்கள்..

அவள் அழுகையை நிறுத்தி…

‘சொரி டா… என்ன மன்னிச்சிடு…’ (கார்த்திகா)

‘சே.. நீ ஏன் சொரி கேட்குற… நான்தான் சொரி சொல்லனும்…. பிரண்சிப்ப லவ்வுனு நினைச்சது என் தப்புதானே…’

அவள் அமைதியாக இருந்தாள்…

ஷோஃபாவில் வைக்கப்பட்டிருந்த அமுதனின் கவிதைப் புத்தகத்தை எடுத்து துணைக்கு வைத்துக் கொண்டேன்…

நானும் அவளும் ஒரே கவிதையை ரசித்த நாட்கள் நினைவுக்கு வந்தன…

புத்தகத்தை ஒரு ஓரமாய் வைத்து தலையணையில் மூடினேன்..

அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்…

‘நீ இன்னமும் என்ன லவ் பண்றியா…?’ (கார்திகா)

இல்லை என்று சொல்லி முகத்தில் அடிக்கவா?

ஆமாம் என்று சொல்லி சந்திரிகாவை இழக்கவா?

ஆறு வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு அபத்தம் கார்திகா…

காதல் என்ற ஒன்றை உணர ஆரம்பித்து 6 மாதங்களுக்குள்ளேயே இல்லை என்று ஏமாற்றப்பட்டது..

இன்னுமா நினைத்துக் கொண்டிருப்பேன்…?

அவள் ஷோஃபாவில் அங்கும் இங்கும் அசைந்து மேலே அணிந்திருந்த குளிரங்கியை கழற்றிக் கொண்டிருந்தாள்…

அடுத்தது எதுவோ என்று அபத்தாக ஒரு நினைவு…

அவள் நிர்வாணம் என்னை நிர்கதியாக்கிவிடுமோ என்று பயம்…

அவள் சேலைக்குள்ளேயே வலதுக் காலை கீழ் வைத்து இடதுக் காலை தூக்கி மேலே போட்டுக் கொண்டாள்.

பாதத்தின் மூட்டு வரையில் பட்டி பொருத்தப்பட்டிருந்த தங்க நிற பாதணி, அவளுக்கு எடுப்பாக இருந்தது..

எழுந்தேன்..

ஜன்னல் திரைகளை முழுவதுமாய் விலக்கி, பின் அமர்ந்தேன்…

‘ஷரோன்… இந்த ஆறு வருசத்துல கவிதைகளை எல்லாம் தனியா ரசிச்சிருப்ப இல்ல..’ (கார்திகா)

உண்மைதான்… அவள் இல்லாமல் நான் கவிதைகளை ரசித்ததே இல்லை… இந்த ஆறு வருடங்களில் தனிமையில் அதிகம் ரசித்து பழகிவிட்டேன்…

‘யெஸ்…’

‘ம்ம்ம்… இந்த ஆறு வருசத்துல அதிகமா ரசித்த கவிதை ஒண்ண காட்டேன்… எல்லாம் சேர்த்து வச்சிருக்கியா?’

யோசிக்கவே இல்லை…

என் திறன்பேசியை திறந்து சந்திரிகாவின் புகைப்படம் ஒன்றை காட்டினேன்…

‘என்ன.. கவிதைய கேட்டா, ஃபோட்டோவ காட்டுற..’

‘யெஸ்… இவள்தான் இந்த ஆறு வருசத்துல.. இல்ல… என் வாழ்க்கையிலேயே ரசித்த பெஸ்ட் பொயம்…’

ஏற்கனவே அவள் முகம் சற்று அப்படித்தான்.. இப்போது இன்னும் சற்று கோணலானது…

கண்களில் ஓரமாய் இட்டிருந்த மை கரைந்தது..

ஆனால் சுதாகரித்துக் கொண்டு கேட்டாள்..

‘யார் இது… புதுசா ரூட் விடுறியா…?’

எனக்கும் கொஞ்சம் வெட்கம் வந்தது..

தலையை கீழே போட்டுக் கொண்டு சந்திரிக்காவின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்… இன்னொரு புகைப்படத்தையும் அவளிடம் காட்டினேன்… அதில் நானும் சந்திரிக்காவின் அப்பாவும் இருந்தோம்…

‘யார் இது… உன்னோட மாமனாரா?’ (கார்திகா)

‘ம்ம்ம்…’

‘அப்ப எல்லாம் ஓகே ஆகிட்டா… எப்ப கல்யாணம்..’

அமைதியாக இருந்தேன்…

கடந்த நாட்களில் நான் சந்திக்கும் அமானுஷ்யங்களை விபரிக்க நேரம் இருந்தது….

‘இவள்ட பேர் சந்திரிக்கா… பேஸ்புக்ல மீற்பண்ணி, பிறகு பிரண்ஸா ஆகி, இப்ப லவ் பண்ற அளவுக்கு போய் இருக்கு.. இன்டைக்கு காலையிலதான் லவ்வ சொல்லிக்கிட்டோம்.. ஈவ்னிங் 4 மணிக்கு வீட்டுக்கு வாரதா சொல்லி இருக்காள்..’

‘ஏன் ஒரு மாதிரி தயக்கமா பேசுற.. அவசரப் பட்டுட்டோம்னு நினைக்கிறியா?’

‘சே.. அப்படி இல்லை..’

‘அப்ப அவள்ட அப்பா வேணானு சொல்வாங்கனு நினைக்கிறியா’

‘அவளுக்கு அப்பா இல்ல. அவர் செத்து பல மாசம் ஆகிட்டு’

‘அப்ப இந்த ஃபோட்டோ…’

‘நேற்று இரவு எடுத்தது…’

‘என்னடா சொல்ற..?’

‘நேற்று சந்திரிக்கா வீட்டுக்கு வந்தாள்.. நிறைய நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.. போககுள்ள ஃபோட்டோ எடுத்துக்கிட்டம். காலையில கோல் பண்ணி அப்பா கனவில வந்து நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லீட்டார்னு சொன்னாள்.. சந்தோசப்பட்டேன். நேற்று எடுத்துக்கிட்ட ஃபோட்டவ எடுத்து பார்த்தா, அதுல சந்திரிக்காவுக்கு பதிலா அவள்ட அப்பாதான் இருந்திருக்காரு…’

அவள் முற்றும் பயந்துவிட்டாள்…

நான் அமர்ந்திருந்த நீண்ட ஷோபாவிலேயே எழுந்து வந்து அமர்ந்தாள்..

‘ஏன்டா இப்படி பயமுறுத்துற….’

‘இல்ல… நா உண்மையதான் சொல்றேன்… ஆனா அவர் ஆபத்தானவரா எனக்கு தோனல்ல.. அவர் இதுவரைக்கு என்ன பயமுறுத்தக்கூட இல்ல.. ஆவியா வந்து என்ன சோதிச்சி பார்த்துட்டு அவளோட கனவுல போய் சொல்லி இருக்கார். அதுதான் அவள் ஓகே பண்ணீட்டாள்..’

‘அப்ப நீயும் ஓகே பண்ணீட்டியா?

‘ம்ம்ம்..’

அவள் அமர்ந்திருந்தப்படியே அருகில் நகர்ந்தாள்,

நான் சற்றே விலகி நகர்ந்தேன்…

என் கையை பிடித்து கண்களின் அருகே கொண்டு சென்றாள்..

இரண்டு துளி நீர் சூடாக விழுந்தன..

தலையை சாய்க்க முயன்றாள்…

கதவு தட்டும் சத்தம் கேட்டது…

எழுந்து நின்று யாரென்று பார்த்தேன்…

வெளியே சந்திரிக்கா…

நேரம் 3.50

‘சந்திரிகா வந்துட்டாள்..’

எனக்கு பதற்றமாக இருந்தது… இன்றுதான் காதலை சொல்லிக் கொண்டோம்.. அதற்குள் கார்திகாவை கண்டால் என்னாவது.. சந்திரிக்காவை என்னால் இலகுவாக இழந்துவிட முடியாது…

என் தடுமாற்றத்தை கார்திகா புரிந்து கொண்டாள்..

‘எங்க ஒழிஞ்சிக்கிறது?’

கார்த்திகாவின் அந்த புரிதலும், அதன் பின்னரான கேள்வியும் எனக்கு கனமாய் இருந்தது..

‘ஒருமாதிரி’ மனதில் உறுத்தல் ஏற்பட்டது…

அந்த அறையை அரைமனதோடு காட்டினேன்.. அங்குதான் நானும் பியானோவும் மாத்திரம் இருப்போம்..

கார்திகா மறைந்து கொண்ட சமயத்தோடு, கதவினைத் திறந்து சந்திரிக்காவை வரவேற்றேன்..

என் முகம் சரியாக இல்லை என்பதை அவள் உணர்ந்து கொண்டாள்..

‘ஏன் டல்லா இருக்க.. சுகமில்லயா? கொஞ்சம் கூட தூங்கல்ல போல..’ (சந்திரிகா)

கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள்..

ஆரம்பத்திலேயே அவளிடம் எதனையும் மறைக்க மனமில்லை…

‘சந்திரிகா…..’

‘ம்ம்ம்…’

‘உனக்கிட்ட ஒரு உண்மைய சொல்லீடனும்..’

‘சொல்லு..’

‘என்னோட முதல் காதலி……’

தயங்கினேன்…

‘எனக்கு தெரியுமே..’

அதிர்ந்தேன்…

என் இடக்கையை தன் வலக்கையால் பிடித்துக் கொண்டு கார்த்திகா மறைந்திருக்கும் அறைக்குள் சென்றாள்…

அங்கே கார்திகா நின்றிக் கொண்டிருந்தாள்…

ஆனால் அவள் சந்திரிகாவின் கண்களுக்கு தெரிந்திருக்கவில்லை…

நேராக சந்திரிகாவை ஊடறுத்து பியானோவுக்கு அருகில் சென்று அமர்ந்தாள்..

பீத்தோவனின் ‘மூன் லைற் சொனாட்டாவில்’ இரண்டு வரிகளை வாசித்துக் காட்டினாள்…

‘இதுதானே உன்னோட முதல் காதலி… உன்ன பற்றி எனக்கு தெரியாதா?’

நான் கார்த்திகாவையே பார்த்துக் கொண்டிந்தேன்..

பெரும் குழப்பமாக இருந்தது… ஏன் சந்திரிக்காவுக்கு கார்த்திகாவை தெரியவில்லை.

என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் விழுந்தது…

சந்திரிகா ஓடி வந்து என்னை அணைத்துக் கொண்டாள்…

பியானோவின் கண்ணாடியில் கார்திகா தெளிவாக தெரிந்தாள், நானும் தெரிந்தேன்…. என்னை அணைத்துக் கொண்டிருந்த சந்திரிக்காவின் அப்பாவும் தெரிந்தார்…

Print Friendly, PDF & Email

1 thought on “கின்னரப்பெட்டியின் கண்ணாடியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *