கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 48,100 
 

பல்கலைக்கழகத்தில் இருந்து இரவிரவாக அடுத்த நாள் பரீட்சைக்கு படித்து முடித்து விட்டு ஒன்பதரை மணியளவில் வீடு செல்லத்தயாரானான் மதன். அந்த நேரத்திற்கு பேரூந்து எதுவும் இருக்காது என்பதை அறிந்தும் அடுத்த நாள் பரீட்சையில் எப்படியாவது நல்ல பெறுபேறு வாங்க வேண்டும் என்று நேரம் காலம் தெரியாது இருந்து படித்தான். அவனது வீடு பல்கலைக்கழகத்தில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் தான் உள்ளது. தனக்கு தெரிந்த குறுக்கு வழிகளை எல்லாம் பாவித்து நடக்க ஆரம்பித்தான் மதன்.

அதில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தேவாலய வீதியின் ஊடாக நடந்து செல்கையில் பாதையின் இருபுறமும் வளர்ந்திருந்த புற்பதரில் ஒரு பொருள் வீதி விளக்கின் ஒளி பட்டு மின்னிகொண்டிருப்பதை கண்டான். அது என்னவென ஆராய அதன் அருகே சென்று பார்த்தான். ஒரு சிகப்பு நிற PENDRIVE அங்கே அநாதரவாக கிடந்தது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து உடனேயே வீடு விரைந்தான்.

வீடு சென்றது தான் தாமதம் தனது மடிக்கணணியை திறந்து அந்த PENDRIVE வேலை செய்கிறதா என பார்க்க வெளிக்கிட்டான். செய்யும் காரியம் பிழை எனத்தெரிந்தும் கடவுளை ஒருமுறை வேண்டிவிட்டு அதனை உட்செலுத்தினான். அவன் முகத்தில் பூரிப்பு, அந்த PENDRIVE கொண்டிருந்த வேலை செய்தது. அதில் உள்ளவற்றை அழித்து விட்டு பாவிக்க அது கொண்டிருக்கும் விடயங்களை ஒரு முறை பார்த்து விடலாமெனும் முடிவுக்கு வந்தான். உள்ளவற்றை ஒவ்வொன்றாக பார்வையிட்டான். அனைத்தும் அவன் அன்று வரை கேட்டிராத பெயர்களில் இருந்தது. கடைசியாக இரண்டு Folder மட்டும் மீதம் இருந்தது. ஒன்று Pictures என்றும் மற்றயது Videos என்றும் இருந்தது. அவனும் ஏதும் அழகான பெண்களின் PENDRIVE ஆக இருந்தால் அவர்கள் படங்கள் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையுடன் pictures folder ஐ திறந்தான். அனால் அதில் முழுதும் அழகான இயற்கை காட்சி படங்களே இருந்தன. ஏமாற்றத்துடன் அடுத்த videos folder ஐ திறந்து பார்த்தான். அங்கே இரண்டு காணொளிகள் இருப்பதைக்கண்டான். அக் கானொளிகளினது Thumbnail கருப்பாக இருந்ததைக்கண்டு முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் உடனே எழுந்து சென்று தனது அறைக்கதவை மூடிவிட்டு வந்தான்.
வழமையாக அவ்வாறான அவன் எதிர்பார்க்கும் காணொளிகள் இப்படி கருவண்ணத்திரையில் ஆரம்பிப்பது வழமை. அக்குருட்டு நம்பிக்கையில் முதலாவது கானொளியினை ஆரம்பித்தான். அது ஒரு After Effects இல் செய்த ஒரு 10 sec Text Animation. மறுபடியும் ஏமாற்றத்துடன் அடுத்த காணொளியினை வேண்டா வெறுப்பாக திறந்தான், ஒரு இருட்டான அடர்ந்த புதர்களிடையே கமரா செல்வது போன்று ஆரம்பித்தது. தான் எதிர்பார்க்கும் காணொளியாக இருக்கும் என எண்ணி ஆர்வத்துடன் மறுபடியும் உற்று நோக்கலானான். அது நேரே ஒரு வீட்டின் பின்புற சுவரை நோக்கி மறைந்து இருந்து எடுக்கபடுவதாக இருந்தது.

இரு நபர்கள் ஆவேசமாக தமிழில் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தனர்.

நபர் 1 : எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்பிடி மனசு வந்தது?

நபர் 2 : அவள் காதலிச்சது உன்ன இல்ல என்ன …

நபர் 1 : அப்பா எதுக்கு என்னோட சுத்திட்டு திரிஞ்சவள் ?

நபர் 2 : உன்ன அவள் நண்பனா தான் பாத்தவள், நீ தான் வேற எண்ணத்தோட பார்த்தாய்.

நபர் 1 : நான் அவளை பார்த்த விஷயம் உனக்கு தெரிஞ்சும் நீ அவளை காதலிச்சு இருக்கிறாய், நீ எனக்கு பண்ணினது பச்ச துரோகம், என்னால இத ஏற்றுக்கொள்ளவே முடியேல்ல ( அழுது அழுது கதைத்தான் )
நபர் 2 : சரி நான் பண்ணினது பிழை தான் என்னை மன்னிச்,,………

அவன் சொல்லி முடிக்க முன்னம் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியினால் நேரே அவனது வயிற்றில் குத்தினான் மற்றையவன். பார்த்துக்கொண்டிருந்த மதனுக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் தொடங்கிற்று. காணொளியில் அவன் என்னும் சாகாததைக்கண்ட குத்தியவன் மீண்டும் மீண்டும் அவன் வயிற்றில் நான்கு ஐந்து தடவைகள் குத்தினான். இரத்தம் கக்க கக்க அவன் இறந்ததும் காணொளி அங்கும் இங்கும் என ஆடத் தொடங்கிற்று. பதிவு செய்து கொண்டிருந்த கமரா ஆடியிருக்கலாம். பதிவு செய்து கொண்டிருந்தவன் பயத்தில் அசைந்து இருக்கலாம். உடனேயே கத்தியால் குத்தியவன் நேரே கமரா வை பார்த்தான். உடனே காணொளி அத்துடன் முடிந்துவிட்டது.

மதனுக்கு பயத்தில் கை எல்லாம் வியர்த்து விட்டது. உடனேயே மடிக்கணணியை அணைத்துவிட்டு PENDRIVE ஐயும் கழற்றி தனியே வைத்துவிட்டு உடனே படுத்துவிட்டான். தூங்கமுடியாமல் அதையே யோசித்த வண்ணம் இருந்தான். அடுத்த நாள் பரீட்சையையும் ஒழுங்காக எழுதாமல் வீடு வந்து அந்த வியர்த்து இனை எடுத்துக்கொண்டு அவனது நண்பனின் தந்தையை பார்க்க சென்றான். அவர் ஒரு போலிஸ் அதிகாரி, அவரிடம் சென்று அவன் இரவு வியர்த்து ஐ கண்டெடுத்ததில் இருந்து அந்த காணொளி வரை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிமுடித்தான். அந்த போலிஸ் அதிகாரி “சரி இது என்ன என்று நான் பாத்துக்கிறன், ஏதும் தேவை எண்டால் கூப்பிடுறன், இனிமேல் கீழ இருந்ததெண்டு எதையும் தூக்கிக்கொண்டு போயிடாதிங்க” எண்டார். அவன் வெட்கி தலை குனிந்து “சார் போலிஸ் ஸ்டேஷன் கு எல்லாம் வர சொல்லி கூப்பிடாதிங்க சார்,” என்று மட்டும் சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டான்.

மனதில் திருப்தியுடன் எதுவோ சாதித்த நினைப்புடன் கம்பீரமாக நடந்து சென்றான். மாலை ஆறரை மணியளவு இருக்கும். வானம் சற்று இருட்டியே இருந்தது, மீண்டும் அதே தேவாலய வீதியினூடாக வீடு சென்று கொண்டிருக்கையில் எதிரே ஒரு உருவம் வருவதை கண்டான். சற்றே உற்று பார்த்தான் மதன். காணொளியில் கொலை செய்த அதே நபர்…. மதனுக்கு தூக்கி வாரிப்போட்டது, மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலை பாய்ந்தது. இப்படியே ஓடி போய் விடலாமா…….? இல்லை உடனேயே அந்த போலிஸ் அதிகாரிக்கு அழைத்து சொல்லிவிடலாமா…..? இல்லை நானே அவனை பிடித்து கொடுத்து விடுவோமா என்றெல்லாம் யோசித்தான்.
அந்த நபர் “டேய் எங்கடா உன்ன ஆளையே கானம் ரொம்ப நாளா…….??” என்று சொல்லிக் கொண்டு வந்ததான். ஏற்கனவே பயந்து போய் இருந்த மதனுக்கு ஆச்சர்யம், என்னை தான் இவனுக்கு தெரியாதே யாரை பார்த்து பேசுகிறான். பின்னரே அவன் கதைத்தது தனக்கு பின்னால் வரும் ஒருவனுடன் என்று தெரிந்ததும் சற்றே மன அமைதி அடைந்து, பயத்தை வெளிக்காட்டாது அவ்விடத்தை விட்டு விலகி விட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் நடந்து சென்றான்.

பின் நடந்து வந்தவன் “உன்ன தான் பிடிக்கவே முடியேல்ல” என்று கூறுவது மதன் காதில் விழுந்தது. சாதாரணமாக திரும்பி பார்ப்பது போன்று பார்த்த வண்ணம் சென்றான் மதன்.

அங்கே…..!!!

காணொளியில் கொலை செய்யப்பட்ட அதே உருவம் நடந்து வந்தது……..!!!!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *