கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 19,368 
 

விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு வருவான் என வசீகரன் எதிபார்த்திருந்தவன் மகிழுந்தை நிறுத்திடத்தில் வைத்துவிட்டு அரங்கினுள் நிதானமாக நுழைந்தான். வசீகரன் சற்றுத்தூரத்தில் நின்ற இன்னொருவனை ‘உவன்தானா வென்று உறுதிப்படுத்துமுகமாக சைகையால் கேட்டான். அவனும் ‘ஆம்’ என்பதாகத் தலை அசைக்கவும் புலியைப்போல் துல்லியமாய் விரைந்து அடியெடுத்துப்போய் அவனின் அருகில்நின்று பிளேசருக்குள் மறைத்து வைத்திருந்த கிறிஸ்கத்தியை எடுத்து பலாப்பழத்திற் செருகுவதைப்போல் அவனது பளுவில் நிதானமாகச் செருகினான். குத்தை வாங்கியவனுக்கு என்ன நடந்ததென்னவென்றே தெரியவில்லை, அவனுக்குத் பளுவில் ஒரு தேனீ கொட்டியதைப்போலவும் பின் அதே இடத்தில் யாரோ பலமாக அடித்ததைப்போலவும் இருந்தது, மேலும் இரண்டு அடிகளை எடுத்துவைத்தவன் மூன்றாவது அடியைவைக்க முடியாதபடி உடலின் சமநிலை குலையவும் தடுமாறிக் குப்புற சொருகுப்பட்ட கத்தியுடன் விழுந்தான். விழுந்தபின்னாலேயே குத்துவாயிலிருந்து குருதி வந்தது. இதுகண்ட விருந்தினரில் பாதிப்பேர் வாயடைத்து உறைந்துபோயிருந்தனர். சுதாகரித்துக்கொண்ட பெண்கள்போட்ட கூச்சலிலும், மீதிச்சனம் பட்ட அம்முலோதியியிலும் அரங்கத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் ஓடிவந்தனர். அடுத்த ஐந்தாவது மணித்துளியில் காவல்துறையினரும் உயிரணிகத்தினரும் (ஆம்புலன்ஸ்) ஒருசேர வந்தனர். குத்தப்பட்டவரைத் தூக்கி வைத்துக்கொண்டு உயிரணிகம் மருத்துவமனையை நோக்கி விரைய காவல்துறை வசீகரனுக்கு விலங்குபோட்டு அழைத்துப்போனது.

முரண்நகை எதுவெனில் விருந்தை நடத்தியவர்களுக்கோ விருந்தினர்களுக்கோ குத்தினவன் யாரென்றோ, குத்தப்பட்டவன் யாரென்றோ, எதுக்கான குத்துப்பாடு, எதுக்காக இங்கே என்றெதுவுந் தெரியவில்லை. தமிழர்களின் பிறந்தநாள், திருமணம், பூப்புனிதநீராட்டன்ன விழாக்களில் இவ்வாறான கத்திக் குத்துபோன்ற வம்பு வல்லடிகள் பெர்லினில் இதுவரை நிகழாத அதிசயமாதலால் இச்சம்பவம் அனைத்துக் காட்சியூடகங்களிலும், பத்திரிகைகளிலும் பரபரப்பாக இடத்தைப் பிடித்துக்கொண்டது. பல பத்திரிகைகள் கொலைமுயற்சிக்கான காரணங்களை அனுமானமாகவும், எதிர்வுகூறலாகவும் சலம்பலாயின. சில ஊடகங்கள் போதைவஸ்து வியாபாரத்தில் எழுந்த பிணக்கு என்றன, சில இருவருக்குமிடையே உள்ள 25 வயது வித்தியாசத்தைக்கூடக் கணக்கில் எடுக்காமல் ஒரு பெண்ணை அடைவதில் எழுந்தபோட்டி என்றன. இது வெளிநாட்டவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுதானே, விரைவிலேயே ஊடகங்கள் அதை மறந்தும்போயின.

*

80 களில் இலங்கைத்தமிழ் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுள் நுழைவதற்கு பல வழிகளைத் தந்திரமாகக் கையாண்டனர். அப்போது கிழக்கு ஜெர்மனிக்கான விஸாவை இலங்கையிலேய எடுத்துக்கொண்டுவிடலாம். அதோடு நேரடியாக கிழக்கு பெர்லினில் வந்திறங்கி அங்கிருந்து டென்மார்க் அல்லது நோர்வே, சுவீடென் திசையில் போகும் தொடரிகளில் ஏறிக்கொண்டு அவை மேற்கு. ஜெர்மனியின் நகரங்களில் நிறுத்தப்படும்போது அங்கங்கே பயணப்பொதியுடன் இறங்கிவிடுவது. இவ்விலகுவான இவ்வழியில் தினமும் தமிழர்கள், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள், நூற்றுக்கணக்கில் வந்திறங்கவும் இவர்களின் வரவுகள் கண்காணிக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். கைதின்போது அரசியல்தஞ்சம் கோருபவர்களுக்கு சிலவார வதிவு அனுமதிதந்து வெளியில் உலவவிடப்படுவர். 10. நொவெம்பர் 1989 இல் கிழக்கு/மேற்கு ஜெர்மனிகளுக்கிடையேயான பிரிசுவர் விழுந்ததும் கிழக்கு ஜெர்மனியென்று ஒன்று இல்லாமலாக கிழக்கு ஜெர்மனிக்கென வழங்கப்பட்ட தனியான விஸாவும் இல்லாமற்போனது.

பயணமுகவர்கள் சும்மா இருப்பார்களா, வேறு உபாயங்களையும் தந்திரங்களையும் நுட்பமாகப்பரிசீலித்தனர். கடவுச்சீட்டுகளில் தலைகளை மாற்றி ஒட்டுவதைவிடவும் இவ்வழிக்கு அதிகதொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தது. வார்ஷோ, கிறீமியா, ஷோபியா பலகலைக்கழகங்களில் கல்விபயில அனுமதி கிடைத்ததுபோலப் பத்திரங்கள் தயாரித்துக்கொண்டு அவ்வந்நாடுகளின் விஸாக்களை இலங்கையிலேயே பெற்றுக்கொண்டு மாணவர்கள் பாவனையில் பயணிகள் வந்திறங்கியதும் அவர்களை பல்கேரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்தினூடாக ஜெர்மனிக்குள் Dresden, Chemnitz நகரங்களுக்குச் செல்லும் வாகனங்களில் ஜெர்மனிக்குட் தள்ளுவது. பாதைகளில் எதுவும் விக்கினங்களென்றால் சிலருக்கு இரவு நேரங்களில் கால்நடையாக 40, 50 கி.மீட்டர்கள் நடந்துகூட ஜெர்மனிக்குள் நுழைய நேர்ந்திருக்கிறது. வேறும் சிலருக்கு ஒரு வாகனத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை பயணித்து பின் வாகனங்கள்மாறி வேறுவாகனங்களில் ஏறிக்கொண்டு காடுகளுக்குள் இறங்கி ஆற்றங்கரையோரமாகவும், மண்டிய புதர்களூடாகவும், சதுப்புச்சேறுகளூடாகவும் எல்லைகளைநோக்கி நடந்து கடந்தவர்களுமுண்டு. பனிக்காலத்தில் எல்லை கடக்க முயன்ற சிலர் பனிச்சேற்றில் புதையுண்டும், ஆற்றோடு அள்ளுப்பட்டும் காணாமற்போன சம்பவங்களும் நடந்துள்ளன. ஜெர்மனியில் குறிப்பாக பெர்லின் ஹொட்டல்களின் சலவைத்துணிகளைச் சலவைசெய்வது போலந்தின் சலவைக்குழுமங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டு போலந்துக்கு எடுத்துவரப்பட்டுச் சலவையானதும் தினமும் சுறுசுறுப்புடன் திருப்பியேற்றப்படுகின்றன. இவ்வாறு தினசரி சென்றுவரும் வாகனங்களில் எவருக்கும் சந்தேகமில்லாமல் ஆட்களைக் கடத்திவிடுவதும் ஒரு வழி.

கம்பன் என்கிற இவ்விளம் முகவரினால் ஜெர்மனிக்குள் நுழைவதற்காக மொஸ்கோ தொட்டுவந்தவொரு விமானத்தில் ஒரு மாணவியாக வார்ஷோவில் வந்திறங்கினேன். அன்றைக்கே தொடரிமூலம் 3 ஆண்களும் 2 பெண்களுமாக Wroclaw எனும் இடத்துக்கு வந்தோம். மேற்குபோலந்தின் Wroclaw இப்புராதன நகரத்தைக் காரணத்துடந்தான் முகவர்கள் தேர்வுசெய்தனர். இதிலிருந்து 270கிமீ, 300கிமீ தொலைவில்த்தான் Dresden, Chemnitz ஆகிய மே.ஜெர்மனியின் நகரங்கள் இருக்கின்றன. இன்னும் Wroclaw கட்டிடக்கலைகளுக்கு மிகவும் பெயர்போனது, அங்குள்ள St.Elezebeth’s church உலகப்பிரசித்தம். நகரத்தின் அழகைத்தரிசிக்கவும் அங்கிருந்து உற்பத்தியாகும் Oder என்னும் ஆற்றின் அழகைக்காணவும் உலகெங்கிலுமிருந்து உல்லாசப்பயணிகள் வந்தவண்ணமிருப்பர், ஆதலால் கறுத்தத்தலைகள் மற்றவர்களினதோ காவல்துறையின் கவனத்தையோ அத்தனை ஈர்க்காது.

இவ் Wroclaw விலிருந்தும் 10 கிமீவரையில் ஒதுக்குப்புறமாய் அமைந்திருந்தது நாமிருந்த அந்தக் Krzyki என்கிற கிராமம். அங்கே மொத்தமும் 15 / 20 வீடுகள்தான் இருக்கும். அந்தப்பழையவீடு பிரதான சாலையிலிருந்து Krzyki. நோக்கிக் கிளைக்கும் ஒரு சிறுவீதியில் அமைந்திருந்தது. அவ்விடத்தை ஊடறுக்கும் பெருஞ்சாலையிலேயே எப்போதாவது சில பாரவுந்துகள் கடந்துபோகும், மற்றும்படி பேருந்து சிற்றுந்து மகிழுந்துகளையே காணநேருவது அரிது. அந்தவீட்டில் பெரியதும் சிறியதுமாய் இரண்டு அறைகளும் அவை இரண்டுக்கும் பொதுவான ஒரு ஒடுங்கலான ஓடி/இடைகழியும் இருந்தது. நடையின் முடிவில் குளியலறை. பெரிய அறையில் இரண்டு இரும்புக்கட்டில் போடப்பட்டிருந்தன. சிறிய அறையில் ஒரு இரும்புக்கட்டிலும் ஆட்கள் மேலதிகமாகத் தங்க நேர்ந்தால் படுப்பதற்கு இரண்டு மெத்தைகளும் இருந்தன. தனியான சமையலறை கிடையாது ஆகையால் பெரிய அறையிலேயே காஸ் அடுப்பு வைத்துச்சமைத்தோம். அவ்வறையுள்ளே கழுவுந்தொட்டியோ, தண்ணீர்க்குழாயோ இல்லை. குளியலறையிலே பாத்திரங்களையெல்லாம் கழுவினோம். அவ்வீடு இரண்டாம் உலகமகாயுத்தத்தின்போது ரஷ்யசிப்பாய்களுக்காக கட்டப்பட்டவை என்றார்கள். சமூகவலைத்தளங்கள் எதுவுமில்லாத அக்காலத்தில் அங்கே யாரைப்பிடித்து எப்படித்தான் கம்பன் அவ்வீட்டைப் பிடித்தானோ தெரியவில்லை. ஆள் வலு சுழியன். அவனுக்கு அவ்வூரிலும் சிலரைப்பழக்கமிருந்தது, அப்பழக்கத்தால் அவர்களின் சிற்றுந்திலேயே வாரம் ஒரு முறை எங்கேயோ போய் கோதுமைமா, பால், தயிர், வெண்ணெய்க்கட்டிகள், பாண், ஜாம், உருளைக்கிழங்கு, மைசூர்ப்பருப்பு, வெங்காயம், போஞ்சி, அவரை, தக்காளி என்பனவற்றை வாங்கி வருவான். மிளகாய், நற்சீரகம், மல்லியன்ன வெஞ்சனங்கள்தான் அரியபொருட்களாயிருக்க Meerrettich (Horseradish) ஐயும் மிளகையுமே காரத்துக்குப் பாவித்து சாப்பாடென்று ஏதேதோவெல்லாம் பண்ணியுண்டு உயிர் தரித்தோம்.

நான் அங்கே இருந்த நேரத்தில் கம்பனுட்பட மொத்தமாக எட்டுப்பேர் அதில் தங்கினோம். அநாவசியமாக வீட்டைவிட்டு எவரும் வெளியே திரிய வேண்டாமென்றும், அப்படி ஏதாவது தேவைக்காகப் போக நேர்ந்தால் மாணவர்களைப்போல இரண்டு புத்தகத்தையோ கோப்புக்களையோ கையில் எடுத்துப்போகும்படி கம்பன் கண்டிப்பாகச் சொல்லியிருந்தான். வீணாக வெளியேபோய் ஏதாவது கோக்குமாக்குகளில் மாட்டிக்கொண்டால் அது அவர்களின் தொழிலுக்குப் பின்னடைவென்றும் நாறடித்துவிடும் என்றும் எச்சரிக்கையில் காவல்துறையினரோ வேறு அதிகாரிகளோ எம்மிடம் ஏதாவது விசாரிக்க நேர்ந்தால் எப்படிப் பதில்கள் சொல்லவெண்டுமென்று பயிற்சிகளும் தரப்பட்டிருந்தது.

ஒருமுறை நாங்கள் சேர்ந்து அங்கிருக்கும் ஒரு அருவிக்கரையோரம் நடக்கப்போனபோது கம்பன் தன்னைப்பற்றியும் குடும்பம் பற்றியும் கொஞ்சம்போலத் தெரியப்படுத்தினான், தனக்கு திருமணமாகாத மூத்த இளைய இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்க்கை வாங்கவேண்டுமென்றும் கச்சேரியில் அரசஅதிபரின் அலுவலகத்தில் நேர்மையான சிற்றூழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அப்பாவின் ஓய்வூதியத்தில்த்தான் குடும்பம் நெருக்கடியுடன் நகருவதாகவும் சொன்னான்.

அவனது அப்பா வீட்டின் வறுமைநிலை காரணமாக பத்தாவது படிக்கும்போதே கச்சேரியில் சிற்றூழியராகச் சேர்வதற்கு விண்ணப்பித்தாராம். போட்டியில்லாமல் அவ்வூழியம் கிடைத்துவிடவே அதில் சேர்ந்துவிட்டாராம். பத்தாவது கணிதத்தில் சித்தியெய்தாமப்போனதில் 27 ஆண்டுகால அரசு ஊழியத்தின் பின்னரும் சிற்றூழியராகவே ஓய்வுபெற்றாராம்,

கம்பன் என்கிற அவன் பெயர் வித்தியாசமாயிருப்பதைக்கண்டு ‘உங்கப்பா பெரிய இலக்கிய ரசிகரோ’ என்றதுக்கு “எங்கப்பா பள்ளிநூலகத்தில் அமயகால நூலகராகவும் பணிசெய்திருக்கிறார். அப்போதெல்லாம் அங்கிருந்து நிறையப் புத்தகங்களை எடுத்துவந்து வாசிக்கும் பழக்கமும் அவருக்கு இருந்தது, ஆனால் தனக்கு இலக்கியரசனை இருக்கிறது அல்லது இல்லாமலிருக்கிறது அதைப்பத்தியெல்லாம் எங்ககூடப்பேசமாட்டார்…… அத்தோட எங்களுடன் என்றைக்குமே இலக்கியச்சண்டிகளும் பண்ணியதில்லை” என்றான்.

தனக்கு இயக்கமொன்றினால் ஏதோ இரண்டொரு ஆண்டுகளில் தமிழீழம் கிடைத்துவிடும் என்பதுபோல மதியூட்டப்பட்டதால் அதிலே ஓடிப்போய் தான் இணைந்ததாகவும், இணைந்த ஆண்டிலேயே பணவசூலிப்புபோன்ற அதன் எல்லாக்கிரியைகளோடும் உடன்படமுடியாமல் விலகவிரும்பியபோது அவ் இயக்கம் தனக்குத் தண்டனையாக 9 மாதங்கள் யாழ்கோட்டையை இடிக்கவைத்தே விடுதலைசெய்ததாகவும் சொன்னான். மாணவர் விஸாவில் மொஸ்கோ வந்தவன் அங்கிருந்து இடர்கழி (றிஸ்க்) நிறைந்த ஆனால் அறத்துக்கு முரண் இல்லை என்று நம்பிய ஒரு வழியில் பணம் சம்பாதிக்க விழைந்துகொண்டிருந்தான்.

*

இரண்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் இராசவீதியில் வீடொன்றை வாங்கியதாகவும் செலுத்தவேண்டிய மீதிப்பணம் 25 இலட்சத்துக்கு விற்றவர்களிடமே அவ்வீட்டை ஈடுவைத்திருப்பதாகவும் விரைந்து அதைமீட்க வேண்டுமென்றும் சொன்னான். இயக்கத்தில் இருந்தபடியாலாக்கும் எந்தக் குளிர்நாளிலும் தூக்கத்திலிருந்து நேரத்துக்கு எழுவது, தேகப்பியாசம் செய்வதென்று அவன் செயற்பாடுகளில் அனைத்திலும் ஒரு ஒழுங்கும் ஆவர்த்தனமும், நேர்த்தியும் இருந்தன.

‘எந்தளவுக்கு வேகமாக பயணிகளை ரஷ்யாவில் போலந்தில் தேங்கவிடாமல் குழல்பிட்டுமாதிரி தள்ளி வெளியே அனுப்பிவைக்கிறேனோ அந்தளவுக்கு நல்லது……. ரொம்பநாள் பயணிகளை குறிப்பாகப்பெண்களை இடைத்தங்கல் நாடுகளில் தங்கவைத்தோமானால் எமது தொழிலும் பெயரும் கெட்டுப்போகும்’ என்றான்.

❝ஏன் பயணிகள் தங்கினால் உங்களுக்குச் சாப்பாட்டுச்செலவு எகிறிவிடுமோ❞ என்றேன் புரியாதவள்போல. (அப்போதெல்லாம் பேச்சு நீங்கள் நாங்கள்தான்).

❝இல்லை……….. உங்கள் கோடெக்ஸ் செலவு எகிறிடும்❞ என்றான்.

நான் அவன் பளுவில் கிள்ளிக்கூச்சம் காட்டவும், தெறிவினைபோல் அவனும் என் முலைக்காம்பில் அமுக்கிக் ‘ஹோர்ண்’ அடித்தான். என் உடலின் குருதிமண்டலம் முழுவதும் குருதி சீறிப்பாய்ந்தது. அந்தத் துடுக்கும் துணிச்சலும் அவன்மேல் ஆகர்ஷத்தை வளர்த்தன. நான் சுதாகரிக்கையில்

❝அப்போதாம்மா கூடுதலான பயணிகளைக் கையாளமுடியும். இலாபமும் கிடைக்கும்………❞ என்று உண்மை பேசினான்.

பிறிதொருமுறை படிகட்டொன்றில் அவனோடு நாம் சேர்ந்து ஏறும்போது அனிச்சியாகத் தொடுவதைப்போல் முதன்முதலாக என் கைகளைத் தொட்டான், பின்னொருக்கால் இயல்பாகத் தொடுவதைப்போலத்தொட்டான். அதை விலக்காமலும் தடுக்காமலும் இருக்குமளவுக்கு கண்ணியமான அந்த ஆணின் தொடுகையையும் வெம்மையையும் அது தந்த சிலிர்ப்பையும் நான் விரும்பினேன், ஒரு தொடுகைகள் தழுவல்களாகி அவை பிணித்துவரக்கூடிய கக்கிசங்களை நான் அறியாமலிருக்கவில்லை. நான் கன்னியாக இருந்தேனா அந்தத்தொடுகையும் உறவும் சிகரெட்டின் முதல் சுகந்தத்தைப்போல சுகமாகவும் வேண்டுவதாயும் இருந்தன. சுகம் சுகம் சுகம் சுகத்தின் திசையில் நாம் இருந்தோம். அவனது தொடுகைகள் என்னை வேறொரு உலகத்துள் இட்டுச்சென்றன.

அவனோ நானோ காதல் சொட்டும் பிரவசனங்கள் எதையும் உதிர்க்கவில்லை. தமிழ்ப்படங்களினிடையே வந்த ஆங்கில/ஃப்ரெஞ்சுப்பட டிரெயிலர்களில் கண்ட முத்தங்கள் மொஸ்கோவில் நனவாயின. எம் மனங்களும் உடலமும் அதிர்ந்தன. அவனது அணுக்கமும் படர்தலும் எனக்கொரு காபந்தைத் தருவதைப்போலொரு பிரமை.

சிலபயணி மடந்தையர் கெதியாய் இங்கிருந்து கிளம்பிவிடுவதற்காக வலிந்துபோய் முகவர்களிடம் கொஞ்சுவதும் சல்லாபிப்பதும் மேற்செல்வதும் நான் கண்டதுதான். கம்பனுக்கும் எனக்குமிடையே நிபந்தனைகள் எதையும் நாம் வைத்துக்கொள்ளவில்லை.

நான் இயல்பில் விலை உயர்ந்த வாசனைத்திரவியங்கள் எதையும் பாவிப்பவளில்லை.

❝ உன்னிலிருந்துவரும் வாசம் என்னைக்கிறங்கடிக்குது. எத்தனையோபேர் இந்த வாசற்படியைக்கடந்து போயிருக்கிறாளவை, ஆனால் எவளும் இப்படி உன்னை மாதிரிப்படுத்தியதில்லடி. ❞

❝ இது வேறொருவருக்கோ படைக்கப்பட்ட மலராச்சே ❞ என்றேன் சினிமாத்தனமாக.

❝ அப்போ சும்மா பார்த்து ஜொள்ளுவிட்டிட்டுக் கடந்துபோகவேண்டிய பொம்மைக்கடையா இது…….. ❞

❝ எனக்கென்றால் பத்துபதினைஞ்சு வரியம் குளிர்நாட்டில விறைச்சுக் கிடந்து உழைச்சுப்போட்டு 40 வயதிலை ஒரு 25/30 இலட்சத்தை இடுக்கிக்கொண்டு மூலவருத்தத்தோடும் வெள்ளெழுத்தோடும் நாட்டில வந்திறங்கிறதில இஷ்டமில்லை. இரண்டு வருஷத்தில எதுமுடியுமோ அதை உழைச்சுக்கொண்டு நம்மட நாட்டில சந்தோஷமாய்ப்போய் வாழவேண்டும். அதுக்காண்டித் தூள் விக்கவெல்லாம் போகமாட்டன், ❞

❝ அதென்ன தூள் விக்கிறது ❞

❝ அட தூள் தெரியாதா தூள் உனக்கு…….. விட்டா உலகத்தையே கவிழ்க்கிறமாதிரிக் கதைக்கிறீர் தூள் தெரியாதா தூள்….. ❞

கலாச்சாரக்காவலர்களோடு கம்பு சுற்றாமல் இந்த கம்பன் என்கிற துருத்தி நிற்கும் இப்பாத்திரத்தைக் என் கதைக்குள்ள புகுத்த முடியாது, ஆனாலும் என் கதையின் மையமும் திருப்புமுனையும் அவன்தான்.

❝ இப்பதான் 2 பெக்ஸ் வொட்கா அடித்தேன் ❞ என்பான், அவன் செயற்பாடுகள் அனைத்திலும் ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தன. நிறைய என்மேல் ஆசைப்பட்டான். பலரும் கீட்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கவும் அவனது பெரிய நேசத்துக்கும் வாஞ்சைக்கும் செம்மனதுக்கும் தெரிந்தே அவனுடன் நிரம்பச்சுற்றினேன், இருபதுக்குட்பட்ட என் இளமைக்காலம் ஒரு குகைக்குள்ளேயே கழிந்துவிட்ட பிரமை. கட்டுப்பாடுகள் நிறைந்த யாழ்சமூகத்திலிருந்து வருபவள், Wroclaw வின் இந்த விடுதலையில். சுதந்திரச்சுவாசத்தில் பூலோகம் என்றொரு பொருளுள்ளதை இவ்வர்ஷி மறந்தாளடி. அவன் அனந்தவர்ஷிணி என்கிற என்பெயரைச்சுருக்கி ‘வர்ஷி’ ‘வர்ஷி’ என்று கிசுகிசுப்பாக அழைக்கும் போதெல்லாம் என் பெயருக்கு இன்னும் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதைப்போல் என் பெயர் என்னையே கிளர்த்திற்று.

❝ உன்னை பெயரை வர்ஷின்னு சொல்கிற ஒவ்வொருதடவையும் எனக்குள்ள ஒரு பூந்தூவல் பனுக்குதம்மா ❞

❝ அப்புறம்……… ❞

❝ நாங்கூட உன்னையைப் பார்த்தவுடனே மனசுக்குள்ள உனக்கு வேறயொரு பெயர் வைச்சுட்டேன்…..தெரியுமோ ஆனா அதைச்சொன்னாக் கோவிச்சுப்பியோன்னுதான் பயந்திட்டிருந்தேன். ❞

❝ம்ம்ம்….. இன்ரெறெஸ்டிங்…. அதென்னா பெயர் சொல்லுங்க. ❞

❝ கோவிச்சுக்கமாட்டேன்னு சொல்லு….❞

❝ இல்லை கோவிச்சுக்கலை……. சொல்லுங்க, ப்ளீஸ் ❞

❝ எதுக்கும் தள்ளிநின்றே சொல்லிடறேன்மா….. ம்ம்ம்ம்ம்….. ‘தொதல்’ ❞

❝ அதென்ன மாமே……. புச்சா கீது, ஏதாச்சும் காரணப்பெயரோ. ❞

❝ ம்ம்ம்………..கொஞ்சம் காரணப்பெயர்தான். ❞

❝ அது இன்னா காரணம் நான் ப்றவுணா இருக்கிறதா….❞

❝ இல்லை. எல்லாப்பக்கத்தாலும் கடிக்கலாம்போல…. அதுக்குச் சொன்னேன்❞.

❝ ஏன் தொதல் மட்டுந்தான் அப்படியா….. ❞

❝ இல்லை லட்டு ஜாங்கிரி அல்போன்ஸா மல்கோவாகூட அப்படித்தான்……. ஆனால் எல்லாத்திலும் ஆசைப்பட்டு என்னாவப்போவுது………❞ என்றவனின் குத்திட்ட பார்வை என் மார்பில் நிலைத்து வருடிற்று.

❝ லட்டு ஜாங்கிரி மல்கோவா தேனடையை

மாயம் என்றொதுக்கும் பக்குவம் வாய்த்திராப்

பேதையன் ஏதிலி என்செய்கும் ❞

❝ ஏதேது சாரு குதம்பைச்சித்தர் றேஞ்சுக்குப் போயிட்டாப்போல……❞

❝அல்ல…. அல்ல…. அப்படியாகமுடியலை என்றிவன் ஆதங்கத்தைச் சொன்னேன். ❞

இப்படியெல்லாம் ‘தொதல்’ மதிரி இருக்கேன்னு சொல்லிட்டதால அவனை அப்போ நீ என்னைக் கட்டிக்கிறியான்னே நான் கேட்கலை, அவன் எனக்கோ நான் அவனுக்கோ ஆசைகாட்டினோமில்லை. என் கையிலடித்துச் சினிமாப்பாணியில் ❝ உன்னைக்கைவிடமாட்டேன் என் கண்மணி ❞ என்று சத்தியங்களும் செய்யவில்லை. எமக்குள் நெருக்கம் அதிகமான பிறகுங்கூட நாம எப்போ எந்த நாட்டில் போய் நிலையாகக் குடியமர்வதென்றெல்லாம் கூட்டுக்கனவுகள் கண்டோமில்லை.

எங்களை ஜெர்மனிக்கு ஏற்றிவிட்டு மறுநாள் காட்மண்டூடாக லாவோஸ் போகவிருந்த கம்பனும் நானும் இருந்த அறைக்குள் ஜன்னலூடாக செம்புநிறத்தில் ஒரு நிலவு மினுக்கிச் சேர்ந்திசைத்தது. குளிரும் உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் தீண்டலின் கதகதப்பும், லாகிரிக்களிப்பின் மாயக் கணங்களில் ❝வெல்வெட்தான் இப்போ எங்கும் கிடைக்காதே, இவ்வளவு அசல்ச்சீமை வெல்வெட் சிப்பத்தை எதுக்கடி இங்கே பதுக்கிவைத்திருக்கே…….❞ என்றவன் என் இடையை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் வருடியபின் இரண்டு கைகளாலும் மத்துக்கடைந்தான். காமத்தின் உன்மத்த அவத்தை இது. அக்கடைதலிலேறிய போதையில் அவன் கைவிரல்கள் கட்டற்று அலையத்தொடங்கின.

❝ இப்படி உன்மேல் ஆவியும் வருமென்று எனக்கு முன்னமே சொல்லலையே ❞

❝ உனக்குமேலதான் மோகினி வந்ததென்று நான் நினைத்தேன்…….. போடி❞ என்று என்னை அணைத்து நெருக்கினான்.

புதிதான அந்த லாகிரி சுகமாயிருக்க அதை ஏன் மறுக்கணும் எனச்சிந்தை வளர்ந்தேன். அது மானுஷ நியமத்தின் வெள்ளையா கருப்பா சாம்பரா என்கிற விசாரங்கள் தினைத்தனையும் என்னிடம் இல்லை. கால்களிடையே போதையிலமைந்த கண மைதுனம் இத்தனை கக்கிசங்களுக்கும் மூலமாகுமென்று யார் எதிர்பார்த்தா?

ஒருமுறை அவனே சொன்னான்:

❝ கெட்ட பெயர் வந்திட்டால் அது என் தொழிலுக்குப்பாதகம்.❞

❝கெட்ட பெயர் எப்படி வரும்❞

❝தொடக்கூடாததைத் தொட்டால் வந்திடும்❞

❝அப்போ இதெல்லாம் எந்தவகையான தொடுதல் சாமி❞

❝அய்யய்யைய்ய……. அதெல்லாம் சத்தியமா நானில்லை, உன்மேலவந்த மோகினிதான் என்னையைத் தொடவைத்தது❞

❝ம்ம்ம்ம்…. ஒரு காட்டேரியை ஒரு மோகினி மயக்கித்தொடவைத்துச்சாம் நம்பிட்டேன் சாமியோவ்……..❞

❝சாமிக்கு மோகினிகள் ரொம்பப்பழக்கமோ….❞

❝ காத்துக்கறுப்பு படியாத தங்கம் நானு…..எல்லாப் பொண்ணுங்களுள்ளும் ஒரு மோகினியும் இருக்கும்……. சிலது ஒண்ணும் பண்ணாது சாதுவாகக் கடந்து போயிடும், சிலது எந்தக்காட்டேரியையும் தூக்கி அடிச்சிடும்❞

❝ சாருக்கு அடி கொஞ்சம் பலமாய்ப்பட்டிடிச்சோ…….❞

❝ சுகமான அடிதான் தாங்கிட்டேன், ஏம்மா…….உன் பாதங்கள் வெடிப்பு சிராய்ப்பு கீறலில்லாம இழுத்துப்போட்ட வத்தாளங்கிழங்கைப்போல இருக்கே……… மண்ணிலேயே இறங்கி நடந்திருக்க மாட்டீரோ, வீட்ல ரொம்ப வசதிபோல……. ❞

❝ அத்தனை வசதியின்னா எதுக்கு இளவரசி இந்த அத்துவான சீமைக்கு வாறாளாம்…….❞

என் பாதத்தை ஏந்தித்தன் கன்னங்களில் வைத்தவன் ‘ ஐஸ்கட்டி மாதிரி இருக்கு’ என்றுவிட்டு அதை மிருதுவாகத் தடவிக்கொடுத்தான்.

ஆட்டுக்குட்டிக்கு இலையைத் தின்னக்கொடுக்கும்போது அதன் நாவு விரல்களின் நுனியில் பட்டுப்பட்டுச் செல்லமாய்க்கூச்சங்காட்டுமே அப்படி அடிக்கடி அவன் நினைவுகள் மனதில் சிலகாலம் வந்து வந்து செல்லமாய்க் கவ்வியும் நன்னியும் கூச்சங்காட்டிக்கொண்டிருந்தன. இனிய கனவுகளாலமைந்த அந்த அத்தியாயம் கடுகிக் காணாமற்போனது.

அர்த்தசாமங்கடந்த பின்னிரவில் உபமுகவன் ஒருத்தன் சிற்றுந்தொன்றில் என்னையும் இன்னொரு பெண்பயணியையும் நேராகக் கொண்டுவந்து ஜெர்மனியின் கார்ள் மார்க்ஸ் நகரிலேயே இறக்கிவிட்டான்.

*

கம்பன் தன் பயணமுகவர் ஊழியநிமித்தம் லோவோஸுக்குப் போவதாகப்போனான், திரும்பவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து நிலங்கீட்சிறையிலிருந்து விடுதலையாகிவந்த ஒருவன் அவனை அங்கே பார்த்ததாகச் சொன்னதைத்தவிர அவனைப்பற்றிய வேறு தகவல்கள் இதுவரை வரவில்லை. மாதவிலக்கு இரண்டு மாதங்கள் தள்ளிப்போவதெல்லாம் எனக்கு வழமையாக ஏற்படுவதுதான். அம்முறை நிஜமாகவே தள்ளிப்போயிற்று.

அதன் பிறகு எல்லாமும் மாறிப்போகுமென்பது என் அறிவில் உறைத்தது.

என்னை ஜெர்மனிக்கு வரவழைத்தவர் எனக்குச்சொந்தக்காரர்தான், சுற்றிக்கொண்டு பார்த்தால் என் சித்தப்பா மணம் செய்தவகையில் வரும் சிற்றன்னையின் சகோதரர்களில் ஒருவர், ஆக எனக்கு மாமா முறையாகவேண்டும். என்னைவிடவும் 13 அகவைகள் மூத்தவரான அம்மாமா என்னைத்தானே மணம்செய்யும் நினைப்பில்த்தான் அழைப்பித்ததாரோ இல்லை ஆண்கள் இல்லாத எம் குடும்பத்துக்கு உதவும் எண்ணத்தில்த்தான் அழைப்பித்தாரோ உறுதியாகத் தெரியவில்லை. அவரிடம் நான் கர்ப்பமாக இருப்பதைச் சொன்னதும் என்னிடம் புலன்விசாரணைகள் எதுவும் செய்யவில்லை. ஆனால் விரைந்து எனக்கு மாப்பிள்ளைகள் பார்க்க ஆரம்பித்தார். அவ் வேலைகள் கனகதியில் முடுக்கிவிடப்பட்டன.

என் வாழ்வுக்கு எதிரே நான்கு தேர்வுகள் இருந்தன.

எவரையாவது திருமணஞ்செய்துகொண்டுதான் வாழ்வைத்தொடர்வது,

கருச்சிதைவுபண்ணிக்கொண்டு மீள்வும் கன்னியாகிவிடுவது,

நான் கர்ப்பமாக இருப்பதே தெரியாத கம்பன் மீண்டுவந்து என்னை அடையும் வரையில் காத்திருப்பது.

இல்லை…………… இனித்தனித்த அம்மாவாக என் குழந்தையுடன் வாழ்ந்துவிடுவது?

என் குழந்தை எனக்கு வேணும். எது எப்படியானாலும் கருச்சிதைவு செய்வதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

*

அப்போது ஜெர்மனி பூராவும் பரவலாக முப்பதைக்கடந்த இளைஞர்கள் நிறையப்பேர் திருமணவாய்ப்பின்றி இருந்தனர். ஆதலால் எனக்கான சுயம்வரத்தின் இறுதிச்சுற்றுவரையில் ஐந்து ராஜகுமாரர்கள் பங்கெடுத்தனர். அவர்களில் ஐவரைத்தெரிவுசெய்து அவர்களுடன் பேசினேன்.

அவர்களில் மூவருக்கு ஜெர்மன் பிரஜாவுரிமையும் அது ஒரு தனித்தகுதி என்ற எண்ணமும், பெருமையும் நிறைய இருந்தன. மற்றவருக்கு தான் வகிக்கும் பதவிபற்றிய பெருமை இருந்தது, ஜெர்மனியின் பிரசித்தமான BMW மகிழுந்துகள் தயாரிப்புக் குழுமத்தில் தான் ஒரு பகுதிக்கு ஃபோர்மனாகவும் கண்கணிப்பாளராகவும் பணியாம். வெளிநாட்டவருக்கு அதுபோன்ற பணிகள் இலகுவில் கிடைத்துவிடாதாம், தனக்குங்கீழ் 30 பேர் பணி புரிவதாக இரண்டாவது தடவையாகவும் பேச்சிடையே குறிப்பிட்டான். பிரஜாவுரிமை இருப்பதை ஒரு தனியான தகுதியாக கருதிக்கொண்டிருந்தவர்களையும் தன்கீழ் ஜெர்மன்காரர்கள் பணிபுரிகிறார்கள் என்பதில் புளகாங்கிதம் அடைந்திருந்தவரையும் முதற்கட்டத்திலேயே நிராகரித்தேன்.

ஐந்தாமவன்தான் விஷாகன், அவன் இங்குவந்து 7 ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. Duldung எனப்படும் (நிரந்த வதிவிட அனுமதி தருவதா இல்லையா என்று தீர்மானிக்கப்படாத) வகையிலான வதிவுட அனுமதியைத்தான் வைத்திருந்தான். அவன் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அவனது முன்கதை வேறுமாதிரியாகவும் நம்பும்படியாகவும் இருந்தது. ஆரம்பத்தில் ஒரு போராட்ட இயக்கத்தில் போராளியாக இணைந்தவன் இந்தியாவுக்கு பயிற்சிக்காகப் போனவிடத்தில் அங்கேதன் பயிற்சி அணித்தலைவனுடனுண்டான கருத்துமோதாலால் இயக்கத்தைவிட்டு வெளியேறி மும்பாய்க்குப்போய் அங்கிருந்து தயாரிக்கப்பட்ட இந்தியக்கடவுச்சீட்டுடன் வணிகக்கப்பலொன்றில் 10 மாதங்கள் பணியாற்றிவிட்டு Bremen துறையில் கப்பல் தரித்தபோது அதிலிருந்து நிரந்தரமாக இறங்கிக்கொண்டவன். எமக்கிடையே ஒரு புரிதலும் நெருக்கமும் வந்தபின்னால் என் முன்கதையைச் சொன்னபோது அவன் நம்பவில்லை. நான் சும்மா நூல்விட்டு ஆழம் பார்ப்பதாக நினைத்தான், இல்லை எல்லாம் நிஜம் என்றபோதும் அதிர்ச்சியடையவில்லை. இயல்பாக எடுத்துக்கொண்டான்.

மனத்தளவில் ஒரு ஸ்டெப்னியைப் (மாற்றீடு) போலத்தான் எவனுடனாவது வாழஅமையுமோவென எண்ணியிருந்தவளின் வாழ்வின் புதிய அத்தியாயமாக விஷாகன் வந்தான். அவன் விரித்த வானத்தின் கீழே வாழ்வின் புதிய வெளிச்சங்களும்; உற்பாதங்களுக்கு விடுதலையும், வலிகளுக்கு சுகமும் அளிக்கவல்ல செம்மனசின் மாயக்கரங்கள் அவனிடம் இருந்தன.

நவாலி செயின்ட். பீற்றேர்ஸ் தேவாலய விமானத்தாக்குதலின்போது களத்தில் தன்னார்வ உதவியாளனாக இருந்தானாம், சிதறிய மனுஷருடைய தேகங்களை தேடித்தேடி ஒன்றாகச் சேர்த்துவைத்தவனுக்கு இது லேசான சாங்கியமாக இருந்தது.

மிகமிக எளிமையான திருமணம். நாம் பந்தத்தில் இணைந்த ஏழாம் மாதம் மூணாவது வாரத்தில் ஹன்னா பிறந்தபோது எவரும் புருவத்தை உயர்த்தாமலிருக்க அதொரு முன்கூட்டியபிரசவம் என்றும் சிசு அடைத்தொட்டிலில் (Incubator) வைக்கப்பட்டுள்ளதாகவும் பார்வையாளர்களை மருத்துவமனை தடைசெய்துள்ளதாகவும் சொல்லி வருகையாளர்களைத் தவிர்த்தோம்.

பசளைமேட்டின் கீரைச்செடியென கிசுகிசென்று ஹன்னா வளர்ந்தாள், தவழ்ந்தாள், புரண்டாள், குதித்தாள், படித்தாள், மிளிர்ந்தாள். யாரிடமும் விரைவில் கலந்துகொண்டுவிடும் சுபாவம் இயல்பாய் அவளுக்கு. அயலவர் வீட்டு நாய்களும் பூனைகளும் அவளையே சுற்றிநிற்கும். இன்னும் மரங்கள், செடிகள், பூக்கள், புற்றரைகளில் ஹன்னாவின் தீராத காதல். அவளது 13வது கல்வியாண்டுத்தேர்வுகள் முடியவும் அவளுக்கு மருத்துவம் சார்ந்ததுறைகளில் ஈடுபாடு இருப்பது தெரிந்தது.

விஷாகன் அவளது உயிரியல் தந்தையல்ல என்பதை அவளிடம் இன்னமும் மறைத்துவைத்திருக்க வேணுமா என்பதில் எம்மிடையே தீராத விசாரம் இருந்தது. சில உளவில் மருத்துவர்களிடம் நிபுணத்துவ ஆலோசனைகள் பெற்றிருந்ததில் அவளாக ஒருநாள் நிஜத்தை அறிய முன்பதாக உண்மையை அவளுக்குத் தெரிவித்துவிட விரும்பினோம். கோடைகாலவிடுமுறையைக் கழிப்பதற்காக ஹன்னாவுடன் மலாக்கா (ஸ்பெயின்) தீவுகளுக்குச் சென்றிருந்தபோது அங்கே அவளுக்குப்பிடித்த மீன் வெதுப்பும் Chianti Classico வைனுடனுமான ஒரு மாலைப்பொழுதில் முழுக்கதையையும் அவளுக்குச் சொன்னோம், கதை யாருடையதோ என்பதைப்போல சுவாரசியமாகக் கேட்டாள்.

ஹன்னாவுக்கு எம் தொன்மங்கள் எதுவும் தெரியாது. ஆனாலும் ‘நீ……… சூரியனின் குழந்தையடி’ என்றும் எனக்குச் சொல்லவேண்டியதில்லை. அறிவார்ந்த என் குழந்தை எனக்கும் கமபனுக்குமிடையே இருந்த பரிந்திசைவையும் மென்மையான உறவையும் புரிஞ்சுப்பாள்.

கதை நிறைவுற்றதும் நாலைந்து மணித்துளிகள் மூச்சைவிட மறந்தவள்போல் இருந்தாள். பின் மன்னையை இறக்கிவைத்து, பிரயத்தனப்பட்டு உதடுகளைப் பிதுக்கிக்கொண்டு அழுதாள். பெதும்பைப் பருவத்தின் பின் இபோதுதான் அழுகிறாள்…….. அழகாக இருந்தது.

❝ எதுக்குச்செல்லம் அழுவுறே…..❞

❝ எனக்கும் என்ன செய்றத்னு தெரியலம்மா……… அதுதான் கொஞ்சம் அழுது பார்த்தேன்………. சுகமாக இருந்திச்சு ❞ என்றவள் கண்கள் நிறைந்திருக்கச் சிரித்தாள்.

❝ அவன் உன்னையை ஒன்றும் ஏமாற்றவில்லையே….? எங்கூடப்படுத்தாத்தான் உன்னையை ஜெர்மனிக்கு அனுப்புவேன் அப்படியென்று கொள்மிரட்டல் (பிளாக்மெயில்) எதுவும் பண்ணலயே……❞

❝இல்லம்மா….. அவன் தொழிலில் என்னையை அனுப்பினாத்தான் அவனுக்கு அடுத்த பயணி கிடைக்குங்கிற நிலமையில் இருந்தான், பின் பயணிகளை அழைத்துவாற விஷயமாய் லாவோஸ் போனபோது அவனது தொழில் எதிரிகள் வைத்தபொறியோ என்னமோ சரியாய்த்தெரியலை, அங்கே பயணிகளுடன் சேர்த்து பிடிபட்டதில் இரண்டு ஆண்டுகள் சிறையிலிருக்க நேர்ந்திருக்கு. அவன்கூடச்சிறையிருந்த வேறொரு முகவன் வெளியில் வந்து அங்கே கம்பனைப் பார்த்ததாகச் சொல்லித்தான் எமக்கும் விடயம் தெரியவந்துச்சு.❞

பின் அன்றிரவே ஹன்னா எல்லாவற்றையும் புரிந்து ஏற்றுக்கொண்டு தன் இயல்பு நிலமைக்குத் திரும்பிவிட்டிருந்தது எமக்கும் மகிழ்ச்சியாயிருந்தது. எனக்கும் ஒரு மனச்சுமையை இறங்கிவிட்டதைப்போலிருந்தது.

என்றாவது ஒருநாள் ‘நான் கம்பனைப்பார்க்கணும்னு சொல்வாள்’ என நினைத்தேன், அப்படி எதுவும் நடக்க இல்லை. அப்படித் தான் கோருவது எங்களை ஒரு அந்தரத்துக்குள் இடுவதாயிருக்குமென அவள் நினைத்தும் மௌனமாக இருந்திருக்கலாம்.

ஹன்னாவுக்கு இப்போது மருத்துவக்கல்விபயில இடங்கிடைத்து அவள்துறையில் பயிலும் ஒருவனுடன் சிநேகிதமாகியிருந்தது. அவனுடன் பேச விடயமில்லாதபோது தன்பிறப்பின் மூலத்தைச் சலம்பியிருப்பாள்போல. பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி அதுதான். வசீகரன் அதை அறியாமலிருந்தால் கம்பனுக்கு இந்நிலமையேற்பட்டிருக்காது.

குத்துப்பட்டவனுக்காக ஒருதுளி கண்ணீர் உகுப்பதை எவரும் மறுத்தோ தடைபோட்டோ வைத்திருக்கவில்லை. சிசு வயிற்றில் துடித்த கணத்திலிருந்து ஹன்னா பிறந்தது வரையில் என் மனதில் உதித்து நின்றிருந்த பெயர் சகுந்தலாதான், ஆனால் ஒருவேளை எமக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் அப்பாவின் அரவணைப்பில் வாழக்கிடைக்காத ஹன்னாவுக்கோ விஷாகனுக்கோ அப்பெயர் உறுத்துமோவெனப் பயந்து அதை மறந்துவிட்டிருந்தேன்.

*

டேய் எனக்கு அவனிலும் இஷ்டம்டா என்று பாஞ்சாலியைபோல உக்கார்ந்து கூவவில்லை. இவனுக்கென்ன வந்தது……? புலம்பெயர்சமூகத்திலும் தமிழ்ச்சினிமாக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கற்பிதங்களாலும் என்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகத் தானாகவே ஒரு முடிவுக்குவந்து தானாகவே அவனுக்குத் தண்டனையுந்தர முடிவெடுத்து ஒரு வாழ்வுழியின் மீது கத்தியைச்சொருகுவது பைத்திய மனோபாவமன்றி வேறென்ன? அவனைத்தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டும் போலிருந்தது. இப்பிரகிருதிக்காக நான் கம்பனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். எதுக்கடா இப்போ பெர்லினுக்கு வந்தே……… அநியாயமாய் இப்படிக் குத்துப்படவா?

நானே Wroclaw வுக்குப்பிறகு இதுவரையில் பார்த்திராத கம்பன் இந்தப்பிறந்தநாள்விழாவுக்கு வருகிறான் என்பதை Investigative Committee of Russia தான் புலனறிந்து இவர்களுக்குச் சொல்லிச்சோ என்னவோ?

*

ஊரில சுபாங்கியின் புருஷன் மேகநாதன் துபாயில் பெற்றோலியச் சுத்திகரிப்பாலையொன்றில் இரசாயனியாகப் பணியேற்று ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சென்றிருந்தான். அந்நிறுவனத்துக்கு ஒரு இரசாயனி விடுப்பில் சென்றால் அப்பணியிடத்தில் பிறிதொரு இரசாயனியை நியமனம் பண்ணவேண்டியிருக்குமாம். அதனால் இவனை மேலிடம் விடுப்பு எதுவும் எடுக்காமல் பணிபுரிய வலியுறுத்தி அதுக்கு இரட்டிப்புச்சம்பளத்தைக் கொடுக்கவும் மேகநாதனுக்கும் கொஞ்சம் பணவாஞ்சை, அதனால ஐந்து ஆண்டுகள் ஊருக்குவராமலே துபாயில் தொடர்ந்து ஊழியம் செய்தான். வாரம் ஒரு தடவை சுபாங்கினிக்கு போன் செய்துபேசுவதோடு சரி. பரதேசிக்கு குழந்தைமேல பிரியமும் மனைவிமேல மோகமுமிருந்தால் இப்படியா ஆண்டுக்கணக்கில் துபாயில் கிடப்பான்?

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் மின்சார உபகரணங்கள் விற்பனைநிலையமொன்றில் பணிசெய்யும் சுபாங்கியின் உறவுக்காரப்பையன் ஒருவன் ஷியாமென்று ஏசியா மிதியுந்தொன்றில் வந்து அவளுக்கு மீன்காய்கறிகள் வாங்கித்தருவது, ரேஷன் அட்டைக்கு உணவுப்பங்கீட்டுப்பொருட்களை வாங்கித்தருவது, ஆகியவற்றில் உதவிகள் செய்துகொண்டிருந்தான். மேகநாதன் அனுப்பிவைக்கும் பணங்கள் வந்துகுவியத்தொடங்கவும் சுபாங்கி ஷியாமுக்கு ஒரு றோயல் என்ஃபீல்ட் விசையுந்தும் வாங்கிக்கொடுத்தாள். அது அவர்களுக்கு வங்கிகளுக்குப்போகவும், குழந்தைக்கோ அவளுக்கோ உடனலமில்லாதபோது டாக்டரிடம்போகவும் யாழ் முற்றவெளி, பூங்காவோடு இடைசுகம் அவள் விரும்பும்போது நல்லூர்/செல்வச்சந்நிதி கோவில்களுக்குப்போகவர மிகவும் வசதியாகவிருந்தது. சிலநாட்களில் சற்றுத்தொலைவிலுமாக வல்லிபுர ஆழ்வார்கோவில், நாகர்கோவில், கசுரைனா கடற்கரை, குடாநாட்டில் மேகநாதன் அவளுக்கு ஒருபோதும் காட்டியிராத பல இடங்களையெல்லாம் அவளுக்குச் சுற்றிக்கண்பித்து அவளுக்கு எல்லாவகையிலும் ஒத்தாசையாக இருந்தான். ஷியாம் – சுபாங்கி பெயர்களைப்போலவே அவர்களுக்குள்ளும் ஒரு இணக்கமும் புரிந்துணர்வும் இருந்தன. அதனால் எவருக்குவந்த கேடென்ன? ஆரம்பத்தில் அவர்கள் ஜோடியாக விசையுந்தில் கடப்பதைப் பார்த்ததும் தம்தோளையுயர்த்தித் தாடைகளில் இடித்துக்கொண்ட ஊர்ப்பெண்களுக்கு அப்படி இடிப்பதே நாளடைவில் அலுத்துப்போய் அதுவே இயல்பானது. சுபாங்கி ஷியாம்கூட சுற்றுவதால்த்தான் அவள் புருஷன் ஊருக்கு வராமலிருக்கிறான் என்றுமொரு பேச்சும் மறைவில் தூறச்செய்தது.

சுபாங்கியின் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் நடுவில் காவ்யா வீடிருக்கிறது. அவள் யாழில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் 9 வதில் வாசிக்கும் சின்னப்பொண்ணு. சுற்றிப்பார்த்தால் எனக்கும் உறவுதான். ஊர் விடுப்பு விண்ணாணங்களில் விருப்பு அதிகம். ஒரு நாள் தன் சட்டையொன்றைச் சின்னதாகப் பிடித்துத் தைப்பதற்காக எங்கள்வீட்டுக்கு வந்தபோது விசையுந்தில்வந்த ஷியாமில் எதிர்ப்பட்டிருக்கிறாள். ❝ வர்ஷியக்கா…….வர்ஷியக்கா ❞என்றபடி ஓடிவந்தவள் வந்ததும் வராததுமாக பெரிய அம்மாமிமாதிரி ஒரு நொடிப்புடன் முக்கிய செய்தியைப்போலச் சொன்னாள்:

❝ ம்ம்ம்………கண்டிட்டுத்தான் வாறங்கா…… தையற்காரர் சுபாங்கியக்கா வீட்டை உருவிக்கொண்டுபோறார். ❞

❝ யாரடி தையற்காரர்…… எங்கடிபோறார்……❞

❝ உங்களுக்குத்தெரியாதா சுபாங்கி அக்காவின் தையற்காரரை…..❞

❝ என்னடி சொல்றாய்… உன்னளவுக்கு எனக்கு பொதுஅறிவு இல்லைத் தாயே ❞

❝ யக்கோவ்……. அந்த ஷியாம்தான், அங்கே தைக்கிறது……. ❞

என்றவள் விரல்களிடையே விரலைக் கோர்த்து அபிநயத்து எனக்குத் தையற்சமிக்ஞை காட்டினாள். அந்த டவுண் ஸ்கூல் வஞ்சிகள் கொஞ்சம்காரமென்று தெரியும், ஆனால் என்னிடமே இப்படிப் பச்சையாகக் கக்குவாள் என்று எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நடந்தது வேறு, ஐந்தரை ஆண்டுகள் கழித்து மேகநாதன் பிளெண்டரிலிருந்து கணினிகள், குளிரூட்டிகளென்று ஏராளம் வீட்டுபகரணங்களுடன் வந்திறங்கினான். காத்திருந்த நூற்றுவர் எண்திசைகளிலிருந்தும் தத்தம் கொள்ளிகளுடன் அவனிடம் ஓடிவந்தனர். அனைவருக்கும் குளிர்ச்சியாக எலுமிச்சைச்சாதமும் மோர்ச்சாதமும் அல்வாவும் கொடுத்துத் திருப்பி அனுப்பிவைத்துவிட்டு சுபாங்கியுடன் தொடர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.

*

வ. ஐ. ச. ஜெயபாலன் தன் கவிதையில் சொன்னமாதிரி விதிக்குரங்கு கிழித்துப்போட்ட தலையணையின் பஞ்சுகளாய் காற்றோடு வாழ்வில் அடிபட்டு அலைந்து கரையொதுங்கி அமைதியாக வாழத்தொடங்கியிருக்கும் வேளையிலும் எதிர்பாராத புதுச்சுனாமிகள் திடீரென கிளம்பிச் சுழற்றியடித்தால் செய்வது என்ன?

அமைதியாகவும் நிதானமாகவும் என் பிரச்சனைகளை எடுத்துவைத்துச் சிந்திக்க ஆரம்பித்தேன்.

வசீகரனைக் கைதுசெய்த காவல்த்துறைக்கு அவனொரு விலைக் கொலையாளியாக(Paid-killer) இருப்பானோவென்ற சந்தேகம் இருந்தது. அவனது ஊடாட்டங்கள், கல்வி, நண்பர்கள் இவர்கள் வட்டத்தில் ஆய்ந்தபோது அவனுக்கு போதைவஸ்த்து கடத்தல்காரர்களுடனோ, வேறுவகையான மாஃபியாக்கும்பல்களுடனோ எவ்வித தொடர்புமில்லை என்பது உறுதியாயின. பின்னும் அவனைத் தொடர்ந்த உளவியல் ஆய்வுக்கும் பகுப்புக்குமுட்படுத்தினர். தன் காதலி ஹன்னாவின் உயிரியல் தந்தை கம்பன் என்றும் ஹன்னாவின் தாய் திருமணமாகாதவராயிருந்தபோது அவளது கர்ப்பத்துக்குக் காரணமாகவிருந்தவன் என்பதால் கம்பனைக் கண்டவுடன் எழுந்த மனக்கொதிப்பினால் விளைந்த கட்டுமீறிய செயல் என்றும் வாக்குமூலம் கொடுத்தான். ஒரு மாதம் வரையில் குடும்பப்பிரச்சனைகளுக்கு மட்டுமான தீர்ப்பாயத்தில் தீவிர விசாரணைகள் பல்வேறுகோணங்களில் நடந்தன. வல்லுறவின் விளைவாக ஒரு பெண் கர்ப்பமானாலேயன்றி பரஸ்பர உறவில் கர்ப்பம் ஏற்பட்டால் அதற்காக ஆண்களைத் தண்டிக்க எந்தநாட்டின் சட்டத்திலும் இடமில்லை.

*

காவல்நிலையத்துக்குப்போய் அத்தேதியில் கத்திக்குத்துக்காளானவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை விபரங்களை உசாவினோம். ‘இதுதான்முகவரி…………. ஆனால் அவர்கள் உங்களைப் பார்வையிட அனுமதிப்பார்கள் என்பதற்குத் நாங்கள் உத்தரவாதம் தரமுடியாது’ என்றனர்.

சீருந்தொன்றில் அங்கே விரைந்தோம். மருத்துவமனையின் வரவேற்பில் ‘எங்களை யார்’ என உசாவினார்கள். விஷாகன் ‘நாம் காயம்பட்டவரின் உறவினர்கள்’ என்றான். அவர்கள் ‘ எந்தவகையில்…..’ எனவும் நான் உடனே ‘Der Patient ist mein Ex-Freund’ என்றேன், புரிந்துகொண்டு மேலிடத்திலும் தொலைபேசி உறுதிபெற்றானபின் எம்மைப் பார்வையிட அனுமதித்தார்கள்.

வார்ட்டில் அங்கே கம்பன் சுற்றமும் நட்பும் புடைசூழப்படுத்திருப்பான் என எதிர்பார்த்திருந்தேன். தட்டந்தனியே நாலைந்து விநியோகக்குழாய்கள் பொருத்தியபடி தானுண்டு தன்கட்டிலுண்டென்று படுத்திருந்தான்,

ஹன்னாவை முதலில் அறைக்குள் அனுப்பிவிட்டு நாங்கள் வெளியிலிருந்தோம். இருவரும் ஒருவரை ஒருவர் அதிசயித்துப் பார்த்தபடியிருக்கையில் மேலும் எம்மைக் கட்டுப்படுத்தமுடியாமல் அறைக்குள் நுழைந்தோம். என்னைப்பார்த்ததும் ஒரு வேற்றுலகக்காரிகையைப் பார்ப்பதுப்போலப் பார்த்தவன் முகம் விகசித்தது, அழகாயிருந்தது. நெற்றி சற்றே மேலேறியும் வெளித்துமிருந்தது. தாடையில் அங்கங்கே மினுங்கிய வெள்ளைமுடியுடன் இளைஞன் கோலம் மாறி 40 அகவைகள்கொண்ட மனிதனாகிவிட்டிருந்தான்.

அந்நேரம்பார்த்து விடுதி வலம் வந்த மருத்துவர்கள் ‘பாய்ந்த கத்தி நல்வாய்ப்பாக அவனது உள்ளுறுப்புகள் எதையும் சிதைக்கவில்லை அதனால் உயிராபத்து எதுவுமில்லை’ என்று முறுவலித்தனர்.

❝உன் மருமகனின் கைங்கரியம் என்கிறார்களே❞ என்றான் கம்பன்.

நான் ❝ இல்லை…….. உன் மருமகனின் கைங்கரியம் என்றுஞ் சொல்லு ❞ எனத்திருத்தவும் கம்பன் கட்டிலைவிட்டுயரப் பறப்பதாக உணர்ந்தான். விஷாகன் விருட்டெனப்

❝ பேசிக்கொண்டிருங்கள் ஐஸ்கிறீம் வாங்கியாறேன் ❞ என்று விட்டு மாறினான்.

மகளை வாஞ்சையோடு அணைத்து உச்சிமோந்து முத்தமிட்டான்.

நாம் வகைதெரியாத உணர்ச்சிகளால் பின்னிச் சிக்குண்டோம்.

பத்திரிகைகள், பார்வையாளர்கள் இன்றி குடும்பவிவகார வழக்குகளை மட்டும் விசாரிக்கும் விசாரணைமன்றில் ‘வசீகரனுக்கேற்பட்ட தவறுதலான புரிதலினால் எழுந்த உணர்ச்சிக்கொந்தளிப்பில் சுயகட்டுப்பாட்டை இழந்துதாக்க முயற்சித்ததின் விளைவு’ என்பதை ஒத்துக்கொண்டு, கம்பனின் ஒப்புதலில் அவனை விடுதலை செய்தது.

சுபாங்கிக்கு யாழில் அழகானவீடும், 50 பரப்புக்கும் மேற்பட்டதுமான ஆதனங்கள், போதாததுக்கு மேகநாதன் சவூதியில் திரட்டிவந்த டொலர்கள் எல்லாமிருந்தும் இந்திய அமைதிகாக்கும்படை இலங்கையில் கால்பதித்ததும் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரம் பெறவுவும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு அவ்விணையும் ஜெர்மனிக்கே வந்துசேர்ந்துவிட்டது. அவர்கள் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழவேண்டும்.

காவ்யாவும் ஷியாமை ‘தையற்காரன்’ ‘தையற்காரன்’ என்று பழிப்பும், வலிச்சமும் காட்டிவிட்டு கடைசியாக அவனையே மணந்துகொண்டு ஏதோவொருநாட்டில் புலம்பெயர்ந்திருக்கிறாளாம். எங்கேயென்றாலும் அகதி முகாங்களில் அடைந்துகிடந்து வாடாமல் அவர்களும் நல்லபடி வாழவேண்டுமென்று மனது விரும்புகின்றது.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் போட்டுத்தரும் பாட்டைகள்தான் எத்தனை புதிரானவை………………

அம்ருதா இதழ் -156 ஜூலை, 2019.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *