கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 8,501 
 

அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை போன் உறுத்தாமல் கூக்காட்டுகிறது. அதற்குள் விடிந்துவிட்டதா என்ற ஆச்சர்யத்தில் மணிக்கூட்டைப் பார்க்கிறேன்……… இல்லை விடிந்திருக்கவில்லை மணி ஒன்றரைதான் ஆகியிருந்தது. போனில் யாருடைய அழைப்பென்று பார்த்தேன். என் அலுவலகத்திற்கு வந்த அழைப்பொன்றே தன்னியக்கமாக என் போனுக்குத் தரப்பட்டிருக்கிறது . முன்பொருமுறை இப்படித்தான் ஒருவருக்கு அகாலவேளையொன்றில் போன் பண்ண நேர்ந்தபோது அவருடைய தானியங்கி பேசியது: “தோழரே உலகந்தான் பாதியாகக் கிழிந்துபோனாலும் இவ்வேளையில் என்னால் ஒன்றும் ஆகப்போறதில்லை. ஆகையால் தயவுசெய்து நாளை காலை தொடர்புகொள்ளவும். நன்றி.”
இனி என்ன எழும்பியதுதான் எழுப்பியாயிற்று……… பேசிவிடவேண்டியதுதான்.

“ஹலோ……….வணக்கம். இணைப்பில் இங்கே கணியன்.”

” வணக்கம்! திரு.கணியன்……… நான் ஜொகான் பம்பேர்க்……… ஹில்சென்பா·க்கிலிருந்து பேசுகிறேன். தங்களுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடிய வேளையில் போன்செய்ய நேர்ந்தமைக்கு முதலில் பொறுத்தாற்றவும். ”

” பரவாயில்லை……….. அதுவும் என் தொழிலில் ஒரு பகுதிதான்…….. நீங்கள் விஷயத்தைச் சொல்லுங்கள்.”

” ஸ்ரீ£லங்கன் தமிழ் பிரஜை சம்பந்தப்பட்ட வழக்கொன்றுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர் இங்கே உடனடியாகத் தேவைப்படுகின்றார்.”” என்ன பொலீஸ் வழக்கா? “”இல்லை…….. இது கொஞ்சச் சொத்துக்கள் சம்பந்தமான குடிசார் வழக்கு…… இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒப்பந்தமொன்று. “” சரி……….. எங்கே எப்போது ? “” வின்டர்பேர்க் குடிசார்மன்றில் காலை பத்துமுப்பதுக்கு.”” அது முன்னூற்றைம்பது கிலோமீட்டருக்கு மேலிருக்குமே ஏன் நீங்கள் முன் கூட்டித்தெரிவிக்கவில்லை? “” முதலில் நீதிமன்றமே சீகன் சர்வதேச மொழிபெயர்ப்பு பணியகம் மூலம் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாடு சென்றிருந்த அவர்களின் மொழிபெயர்ப்பாளர் உரிய நேரத்துக்குத் திரும்ப முடியவில்லையென்று ·பாக்ஸ் கொடுத்திருப்பதாக இப்போது அறிவிக்கிறார்கள்……… அதனால்தான் பிரச்சனை……… மன்னிக்கவும். ”

” தவணை எடுக்கவே முடியாதா? ”

” காலதாமதம் மேலும் சிக்கல்களைத்தான் அதிகரிக்கும். சீக்கிரம் முடித்துவிடவே விரும்புகிறோம்.” ” சரி. பொறுங்கள்………….. இன்றைய என்வேலைத்திட்டத்தைப் பார்க்கிறேன்.” நல்லகாலம் . அன்றைக்கு அதிமுக்கியம் என்று கருதமுடியாதவையும் பின் போடத்தக்கவையுமான சில பணிகளே இருந்தன.

” ஓகே……… என்னால் சமூகமளிக்க முடியும்.”

” மிக்க நன்றி………. வணக்கம்.”

மீண்டும் படுக்கைக்குத் திரும்பினேன்.டெலிபோன் சம்பாஷணையால் விழித்துக்கொண்ட பாவனி என் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டு விபரம் கேட்டாள்.

” என்ன கேஸாமோ? ”

” ஓம்………… கேஸ்தான். ”

” எங்கே……. எப்போ? ”

“வின்டர்பேர்க்கில……….. காலமை.”

” அது போலந்து பக்கமல்லே…………. அதால போடர் பாய்ஞ்சு வந்த நம்ம சனம் யாரும் மாட்டிட்டுதோ? ”

” இல்லை இந்த இடம் இன்னும் கொஞ்சம் தென் மேற்கே……….. இதேதோ சொத்து சம்பந்தமான ஒப்பந்தமாம்……….. இப்பதான் நம்ம ஆட்களும் நிறைய வீடு……… கடை……… ……… நிலமென்று வாங்குகிறார்களே……… ஏதுமப்பேர்ப்பட்ட பிரச்சனையாகவிருக்கும். நான் போன்ல விபரம் கேட்கேல்லை ……… தட்’ஸ் அன்·பெயர்.”

” அவசரமாமோ? ”

” தவணைக்கு முடிக்க விரும்புது பார்ட்டி. ”

” நாலைந்து மணி நேர டிறைவிங் வருமே……… ஏலுமேப்பா உங்களுக்கு? ”

“திடீரென்று ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு முடியாமல் போறதால ஏற்படக்கூடிய சிக்கலைத் தவிர்க்க உதவுறதில ஒரு சந்தோஷம். அதோட புதிசா ஊரிலேயிருந்து உதவியென்று வந்திருக்கிற கடிதங்களுக்கு இதில வர்ற சம்பளமும் டிராவலிங்பட்டாவும் உதவும். ”

“சரிதான்…….. உங்களைத் தனியாய் விடுறதும் றிஸ்க்……… அப்போ நானும் வாறன் . ”

” வாட்…….. எ பிறிட்டி ஐடியா……… ஐ அப்பிசியேற் யுவர் பிளெஷர் கொம்பனி டார்லிங். காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே……..அவன் காரியம் யாவினும் கைகொடுத்து…….”

” போதும்……. கவிஞரே போதும்! ”
நிச்சயம் என்னைப்போலவே அந்தக் கவிஞனும் அனுபவிச்சிருக்கவேணும்.

” சரிசரிசரி…….குளிர்றதேபோதும் எக்ஸ்றா வேணாம்………… எத்தனை மணிக்கு இறங்கிறோம் ? ”

“ஒருநாள்போல ஒருநாள் இருக்காது. ஸ்கூல்ஸ் வக்கேஷன்ஸ் முடியிற டைம் ‘ ஹைவே 2 ‘ வில போக்குவரத்து இறுகச் சந்தர்ப்பமிருக்கு. ஒரு நாலரை ஐந்துக்கே இறங்கிவிடுகிறது சே·ப் அன்ட் பெட்டர். ”
பாவனி வள்ளுவன் காலத்திலும் வாசுகியின் ஒன்றிவிட்ட சித்திமகளாகவேனும் கொஞ்சக்காலம் வாழ்ந்திருக்க வேண்டும். அக்காலத்தில் இருந்ததாக நம்பப்படும் வழக்கங்களின் எச்சங்கள் மிகமிக அதிகம் . தானே அலாரம் வைத்து நாலுமணிக்கு எழும்பிக்கொண்டு கொஞ்சம் பியர்ஸ் ஆப்பிளன்ன பழவகைகளோடு வழிக்கொறியலுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸ¤ம் பிளாஸ்க்கில் கோப்பியும் எடுத்துத் தானும் உடுத்தித்தயாராகிக்கொண்டு எனக்கு முகம் கழுவியவுடன் குடிப்பதற்கான நெஸ்கபேயையும் எடுத்துக்கொண்டுவந்து தன் குளிர்ந்த கைகளை என் கண்களில் இதமாக ஒற்றி என்னை எழுப்பினாள்.

ஆனால் ஒன்று காருக்குள் ஏறினதுமே சீமாட்டிக்குக் கண்கள் வலியம் டபிள் டோஸ் அடிச்சதுபோல ஒருமாதிரிச் சொருகிக்கொண்டுபோகும். பாவனி எப்போதாவது நித்திரைவராமல் அவஸ்த்தைப்பட நேர்ந்தால் ஆளை காருக்குள் சும்மா உட்காரவைத்துவிட்டு அதை ஸ்டார்ட் பண்ணிவிட்டால் போதும்…….. அடுத்த நிமிஷமே “ஹொர்….ஹொர்’ கேட்கும்.

பாவனியின் கண்கள் தூக்கக்குறைவால் சிவந்து சொக்கிக் குறாவிக்கொண்டிருக்கின்றன. அவளைப் பேசவைக்கிற மாதிரி ஏதாவது பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது கிச்சக்கிச்ச மூட்டிக்கொண்டிருக்கவேணும் அல்லது கார் ஹைவேயில் ஏற முதலே அவள் ‘ஸோலோ’ வாசிக்கத்தொடங்கிவிடுவாள். காரை ஓட்டிக்கொண்டு இரண்டாவதைப் பண்ணமுடியாதாகையால் நான் முதலாவதைப் பரீட்சித்தேன்.

“முன்னாலை போகிற புதுமொடல் நிசான் மிக்கிறா தௌசனின் பின்பக்கத்தைப்பார்த்தீரா? ” அசுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு

“ஏன் உங்களுக்குத் தெரிஞ்ச ஆட்களாருமதில போகினமோ?” என்றாள்.

“இல்லையப்பா காரின்ரை பின் ஷேப்பைப்பாரும்……… பார்க்க உமக்கு என்ன தோன்றுதென்று சொல்லும்?

“கொட்டாவி விட்டபடி மீண்டும் எனது வில்லங்கத்துக்காகப் பார்த்தாள். பார்த்துவிட்டு

“ஏன் எப்பிடியிருக்கு? ”

“அதின்ரை ஹ¥ட்டும் பொடியும் சேர்ற இடம் ஒரு பெண்ணின்ரை இடுப்பு மாதிரி அழகாய் ஒடுங்கேல்லை?

“”அடடடடடடா…………… மிக்கிறா மினி மைனருக்கு இடுப்பு……… சிற்றோனுக்கு மூக்கு……… பீட்டிலுக்கு முழி……… மொண்டியாவுக்கு சொக்கு……… சியாறாவுக்குச் சிரிப்பு தெருவிலபோகிற காருகளிலுமே உங்களுக்குப் பெண்டுகள் அம்சமாகவே தெரியுது. நல்ல ஒரு சைக்கியார்டிஸ்டைப் பார்த்து முதல்ல இதைச் சுகப்படுத்தலாமோவென்று கேட்கவேணும்.”

” இருக்கட்டுமே……….. அது என்னுடைய சார்ப் சென்ஸ் ஒப் டேஸ்ட் ……… ஒரு ஒப்பீடு ……… ஒரு அழகியல் தரிசனம்……… அதை நானொரு பலவீனமாய் ஒரு போதும் நினைக்கேல்ல. ”

“அப்பிடியே இருக்கட்டும் ராஜா……..இருந்தால் அதுகளை வெளியே பினாத்தாமல் உனக்குள்ளேயே வச்சிரன் கண்ணா. ”

” இந்தப் பூமியில காதல் மயக்கங்கள் கல்யாணம் இதுகளெல்லாம் இன்னும் இருக்குதில்ல? ”

” ஸோ…………வாட்? ”

” சோபனமும் இளமையும் மிக்க குமரியே……….உன்னோடு கொஞ்சவும் ஸ்பரிசிக்கவும் முயங்கவும் எனக்கு இச்சையாகவுள்ளது என்பதுதான் உண்மையும் நோக்கமுமாகவுமிருக்க அதை ஒப்பனை பண்ணி ‘மயிலே உன்னிடம் மயங்குகிறேனென்றோ’……… ‘அழகே உன்னை ஆராதிக்கறேனென்றோதானே’ பயலுகள் பசப்புறாங்கள்? சில பெண்ணியவாதிகள் மறுக்கிறார்கள் என்கிறதுக்காக பெண்ணினத்தின் மேல் ஆண்களுக்கு அனாதியிலிருந்தே வரும் ஆகர்ஷிப்பு மாறிவிடுமா? இப்போ நீர் என்னுடைய பெஸ்ட் ·ப்றென்ட் என்கிறதால என்னுடைய உணர்வுகளை பூச்சில்லாமல் உம்முடன் பகிர்ந்துகொள்றன்……… படுக்கை அறையில மாதிரி. ”

” கிழித்தீர்……… பூப்போல ‘பொண்ணு’ ஒன்று என்று எதிர்ல பக்கத்தில வாற கார்கள் எதிலாவது சொருகிவிடாமல் நிதானமாய் ஓட்டப்பாரும். ”

உதடுகளைச் சுழித்தொரு வலிச்சம் காட்டினாள்.

” காரிகைகளின் அம்சங்களைப் பார்த்துத்தான் காரையே மனுஷன் இணக்கினானென்கிறதைச் சொல்ற பரிபாடல் கவிதை ஒன்றிருக்கு தெரியுமோ? ”

” பரிபாடலென்றால்…? ”

“அழிஞ்சுபோகவிருந்த சங்கத்தமிழ் இலக்கியம் ஒன்று தற்செயலாகத் தமிழ்த்தாத்தா உ.வே.சாவாலே காப்பாற்றப்பட்டது.”

” வேண்டாமென்றால் விடவா போறியள்………….கொஞ்சம் எளிமையாய் விளங்கிற வகையாயிருந்தால் சொல்லுங்கோ.”

“நின் சொகுசும் தண்மையும் ‘பென்ஸ¤’ள
நின் நளினமும் பாந்தமும் ‘சிவிக்’குள
நின் கந்தமும் ஜொலிப்பும் ‘கியா’வுள
நின் சந்தமும் இசையும் ‘மொறிசு’ள
நின் எளிமையும் மிருதும் ‘கோல்·’புள
நின் சாந்தமும் காந்தியும் ‘·பியட்’டுள
நின் வேகமும் துடிப்பும் ‘றெனோ’வுள
நின் உழைப்பும் உறுதியும் ‘சாப்’புள
நின் ஒளிப்பும் ஒண்மையும் ‘·போட்’டுள. ”

” இப்படிச் சந்தமும் வேகமும் மிருதும் காருகளில மட்டுமிருக்க நீங்கள் மட்டும் சௌவ்ளே……… டொச்சு வைக்கல் லொறியள் மாதிரி விட்ட விட்ட இடத்திலேயே நகராமல் முக்கிக்கொண்டிருந்து மற்றவையின்ரை உயிரை எடுப்பியளாக்கும்? ”

” அதுதானே கிளி உங்களோடையே நாங்கள் சாகிறது? ”

” முந்தி ஒருநாள் வாசுவின்ர வை·ப் மாலதியை சின்ன மேக் எண்டாலும்……. மொறிஸ்மைனர் மாதிரிச் செக்ஸியாய் இருக்கிறாள் எண்டனீங்கள்………… இப்பிடித் தறிகெட்ட கற்பனைகளோட தெருவிலபோற காருகளிலேயே கிண்ணென்றிருக்கிற மாரைப்பார் மடியைப்பாரென்கிற மனுஷனென்று தெரிந்திருந்தால் பப்பா உங்களுக்கு என்னைத் தந்தேயிருக்கமாட்டார்…………………….. ம்ம்ம்ம்ம்ம்ம் . ”

” இந்தக் கவிதைகள் எழுதிறவங்கள் இருக்கிறாங்களே அவங்களுக்குக் தோன்றுகிற கிறுக்கல்களை எதுக்கு நாலு பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கிறாங்கள் தெரியுமே………. சிலவேளை தங்களைப்போலை கற்பனை வேறும் நாலுபேருக்கிருந்து ரசனையை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தலாமென்றொரு ஆதங்கந்திலதானே? ”

” இப்படி வந்து நடுவழியில உங்களோட ராவுப்படறதுக்கு ‘ராமா’வென்று நான் வீட்டிலேயே இருந்திருப்பன்.”தலையில் அடித்துக்கொண்டாள். ” யார் அந்த வில்லன்? ” ” சாவக்கொல்லுவன். ”

” அப்ப நான் யாரோடை ராவிறதாம்? ”

விரையும் சாலையிலிருந்து என் பார்வையை விலக்காமலே என் ஞானவலயத்தின் பக்கப்புலன்களால் பாவனி கண்களைச் சுழற்றி என்னைத் துளைப்பதை உணர்கிறேன்.

” வீட்டில விட்டிட்டு வந்திருந்தால் உடனே ‘விசுக்’கென்று ஒரு சேலையைச் சுத்திக்கொண்டு கோயிலுக்குப் போய் “அப்பனே மயூரபதியப்பா…………… என் கர்ப்பத்தை அநியாயமாய் இப்படித் தள்ளிக்கொண்டே போறியே….. அந்தக் காலவெளியை ஈடுசெய்யிற மாதிரி இரட்டைக்குழவிகள்ல மூன்றாய்க் கொடுத்திடப்பா’வென்று முட்டியிருப்பீர்.”

நான் வண்டியை விரட்டுவதற்கு இடையூறில்லாமல் லேசாய் என் வலது தோளில் சாய்கிறாள். பின் இருவரிடையே வேண்டாதொரு மௌனம் கனக்கிறது. குழந்தை பற்றிப் பேச்சு வந்தால் பாவனி இப்படித்தான் அடிக்கடி மௌனமாகிவிடுவாள்.

காரை நூற்றிநாற்பதுக்கும் நூற்றிஐம்பதுக்குமிடையில் விரட்டியதாலும் ……… நவீன அறிவியலின் கைங்கரியமான ஆட்டோ நவிகேட்டரின் துல்லியமான வழிகாட்டலாலும் பத்து மணிக்கெல்லாம் நீதிமன்றின் வளாகத்துள் நுழைந்துவிட்டோம்.

எங்கள் தலைக்கறுப்பைக் கண்டதுமே காத்திருந்த இரண்டு ஜெர்மன்காரர்கள்; நேராக எம்மிடம் “குட்டன் மோர்கன்” என்றபடி வந்து கைலாகுதந்து “நான் ஜொகான் பம்பேர்க்……… இவர் என் சகோதரர் திரு. கெவின் பம்பேர்க்……… இன்னும் ஒரு சகோதரர் திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்தும் சகோதரி திருமதி. சப்றினா ஹொ·ப்மானும் கூட வந்திருக்கிறார்கள். நீங்கள் திரு.கணியன்………… கூட வந்திருக்கும் இளம்மாது உங்கள் உதவியாளராக இருக்கலாமென்பதும் எம்கணிப்பு. ” என்றனர் விநயமாய். “அவர் என் மனைவியுங்கூட………” என்றேன். ” முற்றிலும் பொருத்தமானவர்தான் ” என்று முகமனுக்குக் கூறிவிட்டு எங்களை மேலே கூட்டிச்சென்றனர்.

“இன்னும் அரை மணிநேரம் இருக்கிறதே……… நாங்கள் எதிரிலிருக்கிற கா·பேரீறியாவில் ஒரு கோப்பி குடித்துவிட்டு வாறமாதிரி உத்தேசம்” என்றேன்.” கவலையைவிடுங்கள் காலை ஆகாரமே உங்களுக்காக மேலே தயாராகவுள்ளது.” என்று முதலாம் மாடியில் எங்களை ஒரு விசாலமான ஓய்வு அறைக்குள் அழைத்துச்சென்றார்கள். அறையின் மையமாக இருந்த பெரிய மேசையில் எமக்கான காலை ஆகாரம் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தது.நாங்கள் காலை உணவை முடிக்கும்வரை நல்ல தாதியரைப்போலக் கூடவிருந்து உபசரித்தவர்கள் எம்மிடம் தேர்தெடுத்த வார்தைகளில் தந்திக்குரிய சிக்கனத்துடனும் விழிப்புடனும் அளவாகவே உரையாடினார்கள். சாப்பாடானதும் எடுப்புத்தொலைபேசிகளை அணைத்துவிட்டு நேரே விசாரணை மண்டபத்துள் நுழையவே நேரம் சரியாயிருந்தது.

விசாரணை நடைபெறும் மண்டபவாசலில் இருந்த அறிவிப்புப்பலகையில் அன்று விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளில் அது இரண்டாவது எனவும் இதர சுருக்க விபரங்களும் அச்சிடப்பட்டிருந்தன.

தேதி: 13.03.2002

வழக்கு இலக்கம் : 08 05 54

நேரம் 10:30 மணி

வாதிகள்: (1) திரு. ஜென்ஸ் பம்பேர்க். (2) திரு.கெவின் பம்பேர்க். (3) திருமதி. சப்றினா ஹொ·ப்மான்……… (4) திரு. மத்தியாஸ் ஸ்மிட்த்.

வாதியின் சட்டநெறியாளர்: திரு.பீட்டர்ஸ் ·பிறிடெறிக்.

பிரதிவாதி: திருமதி. கதறினா எலிசாராணி பம்பேர்க்சட்டநெறியாளர்: ————

நீதிபதி : திருமிகு. கார்லோஸ் லுக்ஸம்பேர்க்

சரியாகப் பத்து முப்பதுக்கு உள் நுழைகிறோம். பிரதிவாதியான தமிழ்ப்பெண் எப்படி இருப்பாரோ என்று அறிய ஆவலாக இருந்தது. முன் நாற்பதுகளில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அழைத்து வந்து மண்டபத்தில் அமரச் செய்தார்கள்.

சாம்பல் நிறத்தில் பெரியகொலர் வைத்த புல்லோவரும் கணுக்காலுக்கு மேல் ஒரு சாண்வரை வரும் கறுத்த முக்கால் பாவாடையும் அணிந்திருந்தார். வழக்கு ஆரம்பிக்கும்வரையில் இரண்டு கைவிரல்களையும் கோர்த்துப் பின்னி நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு கண்களைமூடி தேவனுடன் எதையோ விசாரஞ்செய்பவரைப்போல முகத்தில் பரவும் விகாசத்துடன் இருந்த அவர் தோற்றம் அங்கி அணியாதவொரு கன்னியாஸ்த்திரி ஜெபித்துக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. ஒடிசலான தேகம் கறுத்தமுரசும் லேசான மிதப்புப் பல்வரிசையோடு ஒரு சந்நியாசினியைப்போலிருந்த அம்மாதை பம்போர்க் எனப்படும் ஜெர்மன்காரர் நிச்சயமாகப் பாலியல் நோக்கங்களுக்காகத் திருமணம் செய்திருக்கமாட்டார்.

ஜெர்மன் நீதி மன்றங்கள் ஒன்றும் உயரமான ஒரு அரைவட்ட டெஸ்க் சாட்சிக்கூண்டுகளென்று இந்திய சினிமாக்களில் வருவதைப் போலிருக்காது. ஒரு சிறிய கல்லூரி விரிவுரைமண்டபத்தைப் போலிருக்கும். நீதிபதிக்குச் சமதையாக அவர் எதிரிலேயே வாதி, பிரதிவாதி, சாட்சிகள், சட்டத்தரணி, மொழிபெயர்ப்பாளர்கள், பதிவாளர், எழுத்தர், உதவியாளர்கள், பொலீஸ் வழக்காயின் பொலீஸ்காரர்கள் அனைவரும் அமர்ந்து பேசலாம். விசாரணைகளின்போது யாரும் கைகட்டி நிற்பதோ; போலி பவ்யம் காட்டுவதோ இல்லை.

எதிரிலிருப்பவர்களை ஊடுருவித்துளைப்பது போன்றதொரு பார்வைகொண்ட நீதிபதி அவரது நீண்ட கறுத்த அங்கியைப் பெண்பிள்ளைகளைப்போல மடித்துக்கொண்டு தனது ஆசனத்தில் அமர்ந்தவுடனேயே வழக்கு ஆரம்பிப்பதாக அறிவித்தார்.

பிரதிவாதியின் பக்கத்தில் எனக்கு ஆசனம் போட்டிருந்தார்கள். எனக்குப் பக்கத்தில் பாவனி . பார்வையாளர்களென்று எவருமில்லை. வழமைபோல் முதலில் வாதிகளின் அறிமுகம். பின்னர் பிரதிவாதியின் அறிமுகம். அதைத்தொடர்ந்து வழக்கின் விபரத்தை நிறுத்தி நிறுத்தி ஒவ்வொரு வரிகளாக ஒரு உத்தியோகத்தர் வாசிக்கவும் நான் அதை பிரதிவாதிக்குத் தமிழ்ப்படுத்தப் பணிக்கப்பட்டேன். திருத்தங்கள் இருக்குமாயின் பிரதிவாதி சுட்டிக்காட்டின் அவை கவனத்துக்கு எடுக்கப்படுமெனவும் நீதிபதி சொன்னார்.

” கதறினா எலிசாராணி செபஸ்டியான்புள்ளே என்னும் கன்னிப்பெயருடையவரும்……… 1961ம் ஆண்டு வைகாசி மாதம் 17ந்தேதி ஏத்துக்கால் நீர்கொழும்பு ஸ்ரீ£லங்காவில் பிறந்த இலங்கைப் பிரஜையுமாகிய நான்.”

” சரி. ”

” 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 10ம்தேதி கொழும்பிலுள்ள ஜெர்மன் தூதுவராலயத்தில் கொழும்பு மத்தியபகுதி விவாகப்பதிவாளர் முன்னிலையில் ஜெர்மனி லூணபேர்க்கில் 1936ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் தேதியன்று பிறந்தவரும் பெர்லினர் வீதி. 25……… ஹில்சென்பா·கை வதிவிடமாகக்கொண்டவருமான திரு. வேர்ணர் பம்பேர்க் என்னும் ஜெர்மன் பிரஜையை விவாகப்பதிவு செய்துகொண்டதன் மூலம் திருமணம் செய்துகெண்டேன் ……….”

” சரி.”

” 17.08.2001 இயற்கை எய்திவிட்ட திரு. வேர்ணர் பம்பேர்க்கின் பிள்ளைகளாகிய திரு. ஜென்ஸ் பம்பேர்க். திரு.கெவின் பம்பேர்க். திருமதி. சப்றினா ஹெல்முட். திரு. மத்தியாஸ் ஸ்மிட்த் ஆகியவர்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உபகாரமாத் தரும் இருபதினாயிரம் ஜெர்மன் மார்க்குகளைப் பெற்றுக்கொண்டு அதன் பிரதியுபகாரமாக திரு. வேர்ணர் பம்பேர்க்குக்குச் சொந்தமான அசையும் அசையாச் சொத்துக்களிலும் ……… அவரது பிறமுதலீடுகளெதிலும் இனிமேல் பாத்தியதை அதாவது உரிமை கொண்டாடமாட்டேனென்று இம்மன்றில் உறுதி மொழிகின்றேன்.”

மூன்றாவது நீண்ட வசனம் வாசிக்கப்பட்டதும் எனக்குள் தட்டிய பொறியில் வழக்கின் தன்மையும் அத்தோடு இருக்கக்கூடிய அனைத்துச் சதிகளும் ஓடி வெளித்தன.

கதறீனாவை வேர்ணர் பம்பேர்க் என்கிற ஜெர்மன்காரர் இரண்டு வருஷங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

வாதி : 4 மத்தியாஸ் ஸ்மித் என்பவர் வாதிகளின் தந்தையான வேர்ணர் பம்பேர்க்கின் சட்டரீதியல்லாத இன்னொரு மனைவியின் புத்திரன்.

இறந்ததாகச் சொல்லப்படும் இந்த ஜெர்மன்காரின் இந்த அப்பாவி விதவையின் பேதமையைப் பயன்படுத்தி அவரின் முதல் இரண்டாவது தாரத்துப் பிள்ளைகளாகச் சொல்லப்படும் இக்கிங்கிரர்கள் ஆளுக்கு இருபதினாயிரம் மார்க்குகள் என்றொரு சிறிய எலும்பை முன்னால் எறிந்துவிட்டு கிழவரின் அனைத்துச் சொத்துக்களையும் சுருட்டுவதற்கு கூட்டுச்சேர்ந்து சூழ்ச்சி பண்ணுகிறார்கள். வாக்குமூலஒப்புதல் சட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி என் கண்முன்னாலே கோழியைக் கேட்டுக் குழம்புவைக்கின்ற சதியொன்று அரங்கேறப்போகிறது. இந்தப்பிரச்சனையில் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இவ்வளவு கால வாழ்வனுபவமிருந்தும் இத்தனை பேதையாக இருக்குமவர்மீதெனக்குக் கோபம் கோபமாக வருகிறது. கூலிக்கு நாற்று நடவந்தவன் எல்லைக்கு வழக்குப் பேசுவதெங்கனம்?

” அதென்ன தம்பி அசையும் அசையாச் சொத்துக்கள்? ”

நிதானமாக விளக்கினேன்.

” பிற முதலீடுகளென்றென்னவோ சொன்னாங்களே………..? ”

” அவர் ஏதாவது கொம்பனிகளிலே தொழில்துறைகளிலே இன்வெஸ்ட்மென்ட் செய்திருப்பார் ……… பங்குகள் வைத்திருப்பார். அந்தச் சொத்துக்களிலும் பங்கு கேட்கமாட்டேனென்று.”

சொல்லப்பட்ட விஷயம் எத்தனை வீதந்தான் புரிந்ததோ தெரிவில்லை. மனுஷி மலங்க மலங்க என்னைப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

என் முகத்தை வெகுஇயல்பாக வைத்துக்கொண்டு

” அம்மா…..இஞ்சைபாருங்கோ இவங்கள் உங்களை நல்லாய்ச் சுத்தப்பார்க்கிறாங்கள்……… அவருக்கு எவ்வளவு சொத்து இருக்கென்று உங்களுக்குத் தெரியாதுதானே. அவர் சொத்துக்களின் முழுவிபரத்தை எனக்குத் தெரிவித்த பிறகுதான் அதுபற்றி நான் முடிவுசொல்லாமென்று சொல்லுங்கோ. இப்பவே முடிவுசொல்ல வேண்டிய அவசியமில்லை……… தாராளமாய்க் கால அவகாசம் கேட்கலாம்……… கேளுங்கோ.” உதவ முயன்றேன்.

நான் சொன்னவை அவரைப் பாதித்ததாகவோ; நான் காட்டிய கோணத்தில் அவற்றை அவர் புரிய முயன்றதாகவோ தெரியவில்லை. தொடர்ந்தும் வெகுளியாகவே முழித்துக்கொண்டிருந்தார்.

” கண்ணின் மணிபோல என்னை வைச்சுக்காத்த என்ரை பம்பேர்க் மகராசனே இல்லையாம்……….எனக்கேன் தம்பி அவங்கட சொத்து……… அது அவங்கடதானே? ”

போச்சுடா……….. அதைச்சொல்லிமுடித்ததும் அவருக்குப் பொலுக்கென்று கண்ணீர் கொட்டிற்று. டிஸ¤வை எடுத்து ஒத்திக்கொண்டார்.

நீதிபதி ” பிரதிவாதி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் போலிருக்கிறதே என்ன விஷயம்? ” என்றார் ஆர்வத்துடன்.

” அவருக்கு தன் கணவரின் நினைப்பு வந்துவிட்டதாம்……… அவர் எப்படித் தன்னைக் கவனித்துக்கொண்டாரென்பதைச் சொல்கிறார்.”

“பிரதிவாதி இவ்வழக்கு சம்பந்தமான விஷயங்களை மட்டுமே இங்கு பேசலாம்.”

” உணர்ச்சிவசப்படவேண்டாம்……….. எங்கிறார் தலையாரி. ” என்றேன்.

” ஐ குட் நொட் கீப் எவே ஹிஸ் தோட்ஸ் மை சண்…….. இட்ஸ் இம்பொஸிபிள.”

” அம்மா உந்தப் பாஷை அவங்களுக்கும் கொஞ்சம் விளங்கும் ……… பிறகு கதை கந்தலாய்ப்போயிடும். எங்கட பாஷையில மட்டும் கதையுங்கோ.”

“எந்த மசிராண்டிக்கெண்டாலுந்தான் எனக்கென்ன பயம்? ”

திருமதி . கதறீனா பம்பேர்க் யாருக்கும் பயப்படவேண்டியதில்லைத்தான்……… அவர்தான் ஒப்பந்தமெதுவும் செய்துகொள்ளமாட்டேன் முடியாது என்று மறுத்துவிடுவாரோவென்று அவரை ஒரு நரிக்குரிய தந்திரப்பார்வையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் வாதிகள்தான் உள்ளுக்குப் பயந்துகொண்டிருக்கிறார்கள்.”இம்பொசிபிள்” என்ற வார்த்தை காதில் விழுந்ததும் மனுஷி ஏதோகுறுக்கே இழுப்பதாகப் புரிந்துகொண்ட (வாதி:1) ஜென்ஸ் பம்பேர்க் கலவரமானான். அமைதி இழந்து கைகளைப் பிசைந்துகொண்டிருந்தான்.

நான் சூசகமாகச் சொல்வதைப் பற்றிக்கொள்ளும் வல்லபம் அவரிடம் அறவே இல்லை. நான் மனுஷியை மீண்டும் நாசூக்காக உசார்ப்படுத்த முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருந்தேன்.மன்றில் அனைவரும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்குமேல் அவரோடு வலிந்து மல்லுக்கட்டி எதையும் புரியவைக்க முடியாது. மேலும் இதிலுள்ள றிஸ்க் என்னவென்றால்………… அங்கு சொல்லப்படுவதைவிடவும் அதிகமான வார்த்தைகள் உபயோகித்து பிரதிவாதியுடன் உரையாடினேனாயின் அது நான் பிரதிவாதிக்குப் புத்திமதி சொல்வதான சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்கள் என் மொழிபெயர்ப்பை முழுவதும் மறுதலிக்கலாம்.

நான் பணியை சரியாகத்தான் செய்தேனா என்பதை உறுதிப்படுத்தவும் இரண்டாவது ஒப்பீட்டுக்காகவும் அவர்கள் என் மொழிபெயர்ப்பை எனக்குத் தெரியாமலேயே ஒலிப்பதிவுகூடச் செய்யலாம். பிரதிவாதி சொல்வதை உடனடியாக அப்படியே பெஞ்சுக்குச் சொன்னேனாயின் விஷயம் உடனேயே முடிவுக்கு வந்துவிடும்.
நான் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு முரணானதுதான்……… எனினும் என் ஆற்றாமையில் பிரதிவாதி சொல்வதை நீதிபதியிடம் சொல்வதுபோன்ற பாவனையுடன் சொன்னேன்.

” குழப்பமாகவுள்ளது……….. நிதானமாகத்தான் முடிவுசெய்யவேண்டும் என்கிறார்.”

முதலாவது மகனுக்கு வந்த சினத்தில் முகம் சிவந்தது. எழும்பி நாலரைக்கட்டைச் சுதியில் கத்தினான்:

” எங்கள் நிபந்தனைகளை ஏற்கெனவே அவருக்குச்சொல்லியிருந்தோம். அவர் தனக்குச் சம்மதம் என்றும் அதை இன்று சட்டமூலம் உறுதிசெய்வதாகவுந்தான் இங்கு வந்தார். இப்போ முரண்படுவது எங்களை ஏமாற்றுவதாகும்.”

” உவன் ஏனாமணை முக்கிறான்……..? ” என்றார் கதறீனா.

நீதிபதியிடம் கேட்டேன்.

“வாதி நம்பர்:1 என்ன சொல்கிறாரென்று பிரதிவாதி கேட்கிறார்………? ”
நட்பான தோரணையில் ‘சொல்லும்படி’ சைகை காட்டினார்.

” நீங்கள் தங்களுடைய நிபந்தனைகளுக்குச் சம்மதப்பட்டுத்தான் வந்தீங்களாம் என்கிறான். ஒன்றுக்கும் அவசரப்படாதையுங்கோ நிதானமாய் யோசியுங்கோ நிதானம். நிதானம்! ”

” நான் மறுப்பேதும் சொல்லேல்லையே? ”

அவரை நோக்கி முகத்தை மலர்ச்சியாக வைத்துக்கொண்டு

“அம்மா………….. இதை நல்லாய் நுட்பமாய் கவனியுங்கோ……… இங்கே ஒருக்கால் ஒத்துக்கொண்டால் ஒத்துக்கொண்டதுதான் பிறகு மாத்திச்சொல்லவோ, வாபஸ் வாங்கவோ முடியாது. அவங்கள் செய்யவிருக்கிற ஒப்பந்தத்தில பாவிக்கிற வாசகங்களைப் பார்த்தால் உங்கள் கணவருக்கு நீங்கள் நினைக்கிறதைவிட அதிகம் சொத்துக்கள் இருக்குப்போலயிருக்கு. அவருக்கிருக்கக்கூடிய முழுச்சொத்துக்களில் சட்டத்தின்படியும் தர்மத்தின்படியும் ஐந்தில் ஒரு பங்காவது உங்களைச் சேர்ந்தாகவேண்டும். சொத்தின்ரை மொத்தப்பெறுமதி தெரியாமையிருக்கையில இந்த எண்பதினாயிரம் ஒரு மூக்குப்பொடியாய்க்கூட இருக்கலாம். முழுச்சொத்து விபரத்தையும் கேட்கிற அதிகாரமும் உரிமையும் உங்களுக்கு இருக்கு………… உங்களுக்கு இன்னும் நிறையச் சந்தர்ப்பமிருக்கு. இன்னும் நல்லா யோசிச்சு முடிவைச் சொல்றனெண்டு சொல்லுங்கோ? ”

” பிறகேன் அப்பன் இன்னொருவாட்டி உலைவான்? ”

இது சரிப்பட்டுவாற கேஸல்ல……….. இப்போது எனக்குச் சங்கடமாகவிருந்தது.

அவர் ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தால் அவன் விபரத்தைப் பிட்டுப்பிடுங்கியிருப்பான்.’எவ்வளவு சொத்து காலஞ்சென்ற கனவான் வேர்ணர் பம்பேர்க்குக்கு இருக்கிறதென்று பிரதிவாதிக்குத்தெரியுமா’ என்ற கேள்வி பெஞ்சிலிருந்து வராதவரை இக் கூட்டுச்சதிக்கு பெஞ்சும் ஒத்துழைப்பதாகவே எனக்குப் பட்டது. இச்சந்தர்ப்பத்தில் நானொரு சட்டத்தரணியாக இல்லாதிருக்கிறேனே என்று ஆதங்கமாகவிருந்தது.

எதிர்க்கட்சிக்காரரிடம் தனியாய்பேசி அதிக பணத்தை வாங்கிக்கொண்டு தான் ஒப்புக்கொண்ட வழக்கில் தாமே தோற்றுத் தன் கட்சிக்காரரை “அம்போ’வெனக் கைவிடும் பல சட்டத்தரணிகளை நான் இங்கும் பார்த்திருக்கிறேன்.

ஒரு அப்பாவித் தமிழ்ச்சகோதரி கண்முன்னே வஞ்சிக்கப்படுகிறாள். என்னால் எதுவுமே செய்யமுடியாதிருக்கிறது.

கண்ணை மூடி அரை நிமிஷம் சிந்தித்த பின்னால் கதறீனா சொன்னார்:”அவங்கள் நாலு பேருமாய் வலியவந்து எனக்கு எண்பதினாயிரம் மார்க்குகள் தருகிறோமென்று சொல்லுறாங்கள். கர்த்தர் எனக்குத்தர விரும்புகிறது அதுதானென்றால் நான் எதுக்கு மல்லுக்கட்ட வேணும் ? அது சரியுமல்ல.ஒரு மீனுக்கே வகையற்ற அபலை நான் . ஆண்டவனோ இந்த மனிதர்கள் ரூபத்தில் ஒரு ஓடம் நிறைஞ்ச மீனுகளைத் தருகிறான். அதற்குமேலும் கடலிலுள்ள மீன் பூராவும் எனக்குத்தான் என்று ஆசைப்படுவது மகாதப்பு மகன்……… அதர்மம். எதைக்கொண்டு வந்தோம் கொண்டு போவதற்கு? எதைத்தான் இங்கு தேடினோம் இழப்பதற்கு? எவன் தந்தானோ அவனே கொள்வான். எதுவும் தங்காது……… நாம் எல்லாரும் ஓட்டைப்பாத்திரங்கள்தான் வைத்திருக்கிறோம் மகன்.நான் என்னுடையதென்றதுவும் அவர்கள் தங்களதென்றதுவும் எல்லாமே தேவனின் இராட்சியத்துக்கே உரியவை. அவனுக்குச் சம்மதமில்லாத எதுவும் எனக்கு வேண்டாம். அவன் சித்தம் எதுவோ எல்லாம் அதன்படி நடக்கட்டும்.எனக்கென்ன பிள்ளையா குட்டியா சொத்தை வைச்சுக்காக்க………? விழுகிற இடத்தில புதைக்கப்படப்போகிற ஒரு அகதி. அந்தமனுஷன் பெற்றமக்களுக்கே பாத்தியதையுள்ள பிதுரார்ஜிதங்களை நான் அனுபவிக்கிறது பரலோகத்துக்கே அடுக்காது . அந்த மனுஷனோட வாழ்ந்த சின்ன உறவுக்கு அவங்களாய் மனமொப்பித்தாறது எதுவெண்டாலும் எனக்கு சம்மதமெண்டு சொல்லு மகன். ”

பிரதிவாதி புரிதலோடு என்னுடன் ஒத்துழைப்பராயின் எதையாவதுசொல்லி ஒப்பந்தத்தை நிறுத்திவிடலாம். இது பலியாடே ‘ சீக்கிரம் வெட்டு வெட்டு ‘ என்கிறது. கீதையின்சாரத்தை ஒரு கிறிஸ்தவப்பெண் மொழிவது வியப்பாயிருந்தாலும் மறுபடியும் மறுபடியும் தரையிலே நின்றுகொண்டு ஒரு லௌகீகியாகவே சிந்திக்கும் எனக்கு அவர் முடிவைப்பாராட்ட முடியவில்லை. வீணாக அவசரப்பட்டு சூழ்ச்சியும் தந்திரமும்கொண்ட இந்த ஒப்பந்தத்தை மன்றில் ஒப்புக்கொள்வதால் அவருக்கு வரவிருக்கும் இழப்புக்களைத் தெரிந்துகொள்ளாமலும் அதையடுத்து நடக்கவிருப்பவற்றை ஊகிக்கக்கூட முடியாமலுமிருக்கும் அவரின் அசட்டுத்தனத்தின்மேல் எனக்குத் தாளமுடியாத எரிச்சலே வந்தது. இனி எதுவும் என்னால் செய்வதற்கில்லை. “இந்தக் குத்தியன்தான் குறுக்கே நிக்கிறான்”என்றொரு வார்த்தை இங்கிலீஷில் வந்துதேயென்றால் என்கதையும் தலைகீழாய்விடும். விஷயம் கைநழுவிப்போகிறதுதான். ஆனாலும் வேறுமார்க்கமில்லை. நான் நாற்றை மட்டும் நாட்டிவிட்டுப்போகும் முடிவுக்கு வந்தேன்.

அவரது பூரண சம்மதத்தை அப்படியே பெஞ்சுக்கு எடுத்துச் சொன்னேன். வாதிகள் அனைவருக்கும் தம் வியூகத்தில் வென்றுவிட்ட ஆனந்தம். அதைக்கொண்டாட அவர்கள் வீட்டில் பெருவிருந்தே ஏற்பாடாகலாம். அனைவரும் அழுத்தம் குறைந்து றிலாக்ஸ் ஆனார்கள். அனைவர் முகத்திலும் அதுவரை இல்லாத ஒரு விகசிப்பு!

இறுதியாக அவ்வொப்பந்தத்தை திருமதி. கதறீனா பம்பேர்க் சுயஅறிவுடனும்……… எவருடைய நிர்ப்பந்தமின்றியும்……… பிரக்ஞைபூர்வமாகவும் செய்கின்றாரென அசகுபிசகுகளுக்கு இடந்தராத சட்டநுணுக்கங்களுடனான வாசகங்களால் புனையப்பட்டு அக்குடிசார்மன்றில் பதிவுசெய்யப்பட்டது.
எம்மைத் தனியறையில் தங்கவைத்தது……… அவர்களாகவே எமக்குக் காலைச்சாப்பாட்டு ஏற்பாடுபண்ணி வைத்திருந்தது……… எல்லாமே வழக்கு ஆரம்பிக்க முதல் நாம் கதறீனாவைச் சந்தித்து அவர்களது ஒப்பந்தம் பற்றித் தெரிந்துவிடாமலிருக்கவும், அவரை உசார்ப் படுத்திவிடாமலிருக்கவும் வாதிகள் பண்ணிய மாயவியூகத்தின் பகுதிகளென்பது இப்பொழுதுதான் புரிகிறது.

மன்றில் சாந்தசொரூபிபோல் தெரிந்த நீதிபதி, மழுங்க மழுங்கச் ஷேவ் செய்து உயர்ரக உடைகளில் கனவான்கள்போலத் தோன்றிய வாதிகள், அவர்கள் சட்டத்தரணி, எவர்மீதும் எமக்கு மரியாதை ஏற்படவில்லை. வழிப்பறிக்காரர்கள்போலவும் ……… சவப்பெட்டி தூக்கிச்செல்ல வந்தவர்கள் போலவும் தெரிந்தார்கள். அம்மன்றின் நிழலில் நிற்கவே பிடிக்கவில்லை. சீக்கிரம் விட்டு வெளியேறினோம்.

தெளிவான வானம். அற்லஸில் பார்த்தாற்போல் சுருக்கங்கள் மடிப்புக்களுடன் மரகதப்பச்சை வெல்வெட்டைப் போர்த்திக்கொண்டு முடிவில்லாமல் நீளும் வின்டர்பேர்க்கின் மலைத்தொடர்கள்மேல் சூரியக்கதிர்கள் தடையில்லாது இறங்கி ஒளிர நாளும் நாடும் அழகாகவே இருந்தன. உயரமான குன்றுகளிலிருந்து கீழே பார்த்தால் பேர்லினைப்போலவே ஊர் முழுவதும் நீக்கமற தேவாலயங்கள் செறிந்திருப்பது தெரியவே கன்னத்தில்போட்டுக்கொண்ட பாவனிக்கு அவ்வனைத்துத் தெய்வங்கள் தேவதைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டவள் போல் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறந்தன.

வின்டர்பேர்க்கை ஒரு றவுண்ட் வந்து அவ்வூரில் சிறப்பாக என்னனென்வெல்லாம் இருக்கென்று விசாரித்தோம். தங்களுர் திராட்சையில் கைத்தயாரிப்பிலான உலர் வைன் பிரசித்தம் என்றார்கள்……… வாங்கினோம் (செமை கிக்). மற்றும் பலபுராதன கோட்டைகளும் அரும்பொருளகங்களும் உள்ளன என்றார்கள்……… போய்ப்பார்த்தோம். மாலை மயங்கத் தொடங்க வயிற்றையும் கிள்ளத்தொடங்கியது. இத்தாலியன் உணவகமொன்றில் புகுந்து சலாத்தும் ஸ்பாகெட்டியும் ……… லசானியாவும் சாப்பிட்டுவிட்டு பெர்லின் நோக்கிப் புறப்பட்டோம்.

கோவில்களின் செறிவைப்பொறுத்தவரையில் தமிழகத்துக்கு திருச்சியென்றால் ஜெர்மனிக்கு பெர்லின். இத்தனை போரழிவுகள் சிதைவுகளின் பின்னும் பூஜைகள் ……… ஆராதனைகளுண்டோ இல்லையோ பெர்லின் நகர எல்லைக்குள் மாத்திரம் 160 தேவாலயங்கள் இருப்பதால் நகருள் எங்கு நின்று எத்திசையில் நோக்கினும் பார்வைப்புலத்துள் குறைந்தது இரண்டு தேவாலயக் கோபுரங்களாவது தென்படும். ஐந்தாவது மாடியிலிருக்கும் எம் பிளாட்டில் பாவனி அதிகாலையில் எழுந்து குளித்துப் பூசி காயத்திரி மந்திரத்தை செபித்துக்கொண்டு; குசினி ஜன்னலினூடு தெரியும் 2 கோபுரங்களையும்……… வதியும் அறை ஜன்னலினூடு தெரியும் 3 கோபுரங்களையுந்தான் சேவிப்பாள்.

” மனுஷி கணவனோடு வாழ்ந்த காலத்தில் மனுஷனுக்கென்னென்ன ஆஸ்திகள்………என்னென்ன சேமிப்புகள் இருக்குதென்று விசாரிக்காமலேயே அறியயாமலேயே வாழ்ந்திருக்குதென்றால் ஆள் கொஞ்சம் வித்தியாசமான டைப்தான்.” என்றாள் பாவனி.

” நானும் உதைத்தானப்பா இப்ப யோசிச்சனான்.”

“அந்தப் பெருங்குணத்துக்காகத்தான் கிழவன் மனுஷியைக் கட்டிச்சோ யார்கண்டது? நாலு பிள்ளைகளோடு ஒரு யாழ்ப்பணத்துத் தமிழ்ப்பெண்ணைத் திருமணஞ்செய்து கொண்டு அப்பிள்ளைகள் அத்தனை பேரையுமே இங்கே அழைத்துப் படிக்கவைத்து அவர்களையும் நல்ல நிலையில் வைத்திருக்கும் ஒரு ஜெர்மன்காரரை எனக்குத் தெரியும். இன்னொருவர் ‘ ஒரு குடும்பத்தைத் திருமணஞ்செய்தேன் ‘ என்று நாவல்கூட எழுதியிருக்கிறார். அவருக்கும் அப்படி அனுபவங்களாக்கும். ஒரு விஷயத்தைக் கவனித்தீரா………… திருமணங்களுக்கு காரணங்கள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை. நம் பெரியாரைப் பார்க்கேல்லையா? வயதான பின் மனிதர்கள் திருமணம் செய்யிறது மேற்கிலதான் அதிகம். ஆர்ஜென்டினா எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே தன்னோடு பலகாலங்கள் நண்பராகவும் 12 வருடங்கள் உதவியாளராகவும் இருந்த மரியா கோடமாவை தன் 84வது வயதில்தான் திருமணம் செய்தார்.”

ஹைவேயில் வாகனங்கள் குறைவாகவிருக்கவே சவாரி சந்தோஷமானதாக இருந்தது.

” எனக்கென்றால் இனி மனுஷியை இருக்கிற வீட்டாலும் மெல்லக் கலைச்சுப்போடுவாங்கள். தெருவில தனிச்சு நின்று அந்தரிக்கப்போகுது என்றதுதான் கவலையாயிருக்கு. ”

” நான் நினைக்க நீர் சொல்லுறீரப்பா………. இட்ஸ் றியலி அமேஸிங்! நாமென்னதான் வேறை செய்ய முடியும்? ”

இப்படிப் பலதடவைகள் நமக்கு நடந்திருக்கின்றது. ” டாய்லெட்ல தனியக் கண்டபோது பின்னால சிலவேளை உதவுமேயென்று எங்கட பிஸினெஸ் காட்டை மனுஷிக்குக் குடுத்தனான்.”

“·பன்டாஸ்டிக்……….. யூ ஆர் அன்கொம்பெயறபிளி க்யூட் அன்ட் கிளெவர் டியர். ”

எனக்கு இப்போது அவள்மேல் முன்னெப்பொழுதையும்விட அதிகமாகக் காதல் வந்தது.ஒரு முன்னிலவுக்காலம் அது. நேரத்துடனேயே வந்துவிட்ட உழவாரஅலகு வடிவில் முற்றாதவொரு நிலவு மென்னூதா முகில்களினிடையே நீந்திக்கொண்டு அந்தக் குளிரோடும் வனிலா ஐஸ்கிறீமாய் உருகிக் கொஞ்சிக் கொஞ்சிப் பொழிகிறது.

பவானி கைகளை உயர்த்தி அழகாகச் சோம்பல் முறித்துக்கொண்டு ஒரு சுகமான தூக்கத்துக்குப் பூனைக்குட்டி மாதிரி தன் இருக்கையில் பலதினுசிலும் கோணங்களிலும் சாய்ந்தும் முடங்கியும் உட்கார்ந்து இசைவு பார்க்கிறாள்.

கோலம்போடும் பெண் அழகு
தலைசீவும் பெண் அருவி
சமர்த்தான பெண் புதையல்
சோம்பல் களையுமிவள் கவிதை

என்னுள் பொறிக்கும் கவிதையோடு ஒரு முத்தத்துக்கான உத்தேசத்துடன்கடைக்கண்ணால் மெல்லப் பார்க்கிறேன்.

அவள் தூங்கிவிட்டிருந்தாள் தன் குழந்தைக்கான கனவுகளுடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *