பயம் X 4

 

“ராதிக்குட்டியை இன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்!” என்றாள் அன்னம், முணுமுணுப்பாக.

“இப்பத்தானே போனே?” அலுப்பும் எரிச்சலுமாக வந்தது கேள்வி.

பத்தாண்டு மண வாழ்க்கைக்குப் பிறகு தவமிருந்து பெற்ற பெண்! பிறவியிலேயே ஏதோ ரத்தக்கோளாறுடன் பிறந்துவிட்டதே என்ற ஆதங்கம் கருணாகரனுக்கு.

ஆனால், சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த மகளின் துறுதுறுப்பில் எல்லா வருத்தமும் மறைந்து விட்டிருந்தது பெற்றவளிடம்.

அந்த நிம்மதியைக்கூட நிலைக்கவிடாது, ராதிகாவிடம் பல உபாதைகள் தோன்றியிருந்தன, சமீபத்தில்.

“ஒடம்பு சுடுதே! இன்னிக்கு வீட்டிலேயே இரு!” என்ற அன்னத்திடம் ராதிகா கெஞ்சினாள்: “அம்மா! நான் இன்னிக்கு ஸ்கூலுக்குப் போகணும்மா! கதை சொல்ற போட்டி இருக்கு!”

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு ஒடம்பு சரியானதும் போவியாம். நல்ல பொண்ணில்ல!”

பேதி நிற்க நெற்றியில் பற்று போட்டாள். மாதுளம்பிஞ்சை அரைத்துக் கொடுத்தாள். வாய்ப்புண் என்று சிறுமி அழ, நல்லெண்ணையைக் கொப்புளிக்கச் செய்தாள். எதுவுமே பலனளிக்கவில்லை.

வேறு வழியின்றி, அவளை குடும்ப டாக்டரிடம் அழைத்துப் போனார்கள்.

முதலில் அதிர்ந்து, பிறகு `இது மூடி மறைக்கிற சமாசாரமா?’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவராக, “ஒங்க மகளுக்கு எய்ட்ஸ்!” என்று, டாக்டர் வெளிப்படையாகச் சொன்னார்.

பெற்றோர் இருவரும் வெறித்தனர்.

எப்படி இருக்க முடியும்?

இந்தப் பிஞ்சுக்கு..?

மூன்று பேரும் தத்தம் உணர்வுகளிலேயே ஆழ்ந்துபோயினர்.

`ஒரு உருப்படியான குழந்தையைக்கூடப் பெற துப்பில்லாதவன்!’ என்று உலகம் தன்னைப் பழிக்குமோ? கருணாகரன் அஞ்சினான்.

கணவனை வெறுப்புடன் ஏறிட்டாள் அன்னம்.

செக்ஸினால் பரவும் வியாதி!

`வேலை, வேலை’ என்று இரவில் நேரங்கழித்து வந்ததன் ரகசியம் இதுதானா? எவளோ கேடுகெட்டவளுடன் சேர்ந்து இருந்துவிட்டு, அவளுடைய நோயைப் பகிர்ந்துகொண்டதும் இல்லாமல், அதைத் தன் மூலம் தனது கருவுக்கும் கொடுத்து…! சே!

இவள் முடிவு இனி நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ! வருத்தத்தைவிட பயம் அதிகமாக இருந்தது. எதற்கும், தன்னையும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

டாக்டர்தான் முதலில் தன்னை சமாளித்துக் கொண்டார். “ராதிகாவுக்குப் பிறவியிலேயே `தலஸேமியா’ இருந்திருக்கு, இல்லே?” தன்னையே கேட்டுக்கொண்டது போலிருந்தது.

அக்கேள்விக்கு அவசியமே இருக்கவில்லை. காலம் தவறாமல், அவள் அங்கு வந்து ரத்த தானம் பெற்றுக்கொண்ட விவரங்கள்தாம் இருந்தனவே!

குழந்தைக்கோ வேறு நினைப்பு. “நான் நாளைக்கு ஸ்கூலுக்குப் போகலாமா, டாக்டர்? டீச்சர் திட்டுவாங்க!” அந்தக் குரலிலிருந்த பயமோ, கவலையோ டாக்டரை பாதிக்கவில்லை.

வழக்கம்போல், நோயாளிக்கு ஆறுதலாகத் தலையாட்டக்கூடத் தோன்றவில்லை அவருக்கு. இந்தக் கோளாறு எப்படி நடந்திருக்கும் என்று யோசித்தார்.

ரத்த தானம் செய்ய வந்தவர்களில் எவருக்கோ இந்த நோய் இருந்திருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ, பிறருக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு யாரோ செய்த காரியம் இப்படி முடிந்துவிட்டது!

சரியாகச் சோதனை செய்யாமல், பிறரது ரத்தத்தைப் பெற்றுக்கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், அவருக்கும் இந்த அப்பாவிச் சிறுமியின் அகால மரணத்தில் பங்கு உண்டு.

எல்லாவற்றையும் மீறி, விஷயம் வெளியில் தெரிந்துபோனால், தன் தனியார் ஆஸ்பத்திரியின் பெயர் கெட்டுவிடுமே என்ற பயம் பிடித்துக்கொண்டது அந்த டாக்டரை.

- மயில், அக்டோபர் 1994 

தொடர்புடைய சிறுகதைகள்
“இன்னிக்கு சத்யா திரும்ப ஆபீசுக்கு வந்திருந்தாரும்மா!” “அவர் பிழைச்சதே பெரிசு! இப்ப ஒடம்பு நல்லா ஆயிடுச்சா?” `உருவத்தில் பழைய சத்யாதான். ஆனால், அந்த இனிமையான குணத்தில்தான் ஏதோ மாசு படிந்துவிட்டதுபோல் இருக்கிறது,’ என்று தாயிடம் சொல்ல கலாவின் மனம் இடங்கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாக, மருத்துவமனைக்குப் ...
மேலும் கதையை படிக்க...
"அப்பாடி! ஒங்களோட இப்படி தனியா வந்து எத்தனை காலமாச்சு!" கண்களில் கிறக்கத்துடன் கணவரைப் பார்த்தாள் லலிதா. ஏழு ரிங்கிட் கொடுத்து வாங்கிய இளநீரை நாசுக்காக உறிஞ்சினாள். நீர்த்துப்போயிருந்த ஆரஞ்சுப்பழச் சாற்றை ஸ்ட்ராவால் கலக்கியபடி, "கொலைக் குத்தவாளிங்களையே நடுங்க வைக்கற நான் என்ன, அவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
டான்ஸ் டீச்சர் சுந்தராம்பாள் மேடையே இல்லாமல் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தாள். “யார்தான் விமரிசனம் எழுதறதுன்னு ஒரு இது..,” சரியான வார்த்தைக்காகச் சற்று யோசித்தாள். ஆத்திரத்தில் ஒன்றும் பிடிபடாததால், அதையே திருப்பிச் சொன்னாள். “..ஒரு இது வேண்டாம்? நம்ப மாணவிங்களைக் குறை சொல்ல இவன் ...
மேலும் கதையை படிக்க...
“நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்துட்டு நிக்கறே? ஏண்டி? உனக்கென்ன பைத்தியமா? இல்ல, கேக்கறேன். ஒங்கம்மாவை அடைச்சு வெச்சிருக்கிற இடத்துக்கே நீயும் போயிடணுமா?” கண்களில் பெருகிய நீரை அடக்கப் பாடுபட்டாள் சாந்தி. கண்ணீரைப் பார்த்தால், `இப்போ என்ன சொல்லிட்டேன், இப்படி மாய்மாலம் ...
மேலும் கதையை படிக்க...
விளையாட்டு வீரரானதால், கட்டுமஸ்தான உடல். எல்லாவற்றையுமே விளையாட்டாக எடுத்துக் கொள்வதுபோன்ற சிரித்த முகம், அன்பு கலந்த கண்டிப்பு, அசாதாரணமான கனிவு... இவை போதாதா ஒருவர்மீது காதல் கொள்ள! விளையாட்டுப் பயிற்சிகளால் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பிரபாவைத் தேடி வந்தது. அதனால் அத்தனை ...
மேலும் கதையை படிக்க...
வீணில்லை அன்பு
கடற்கரைக் கோயிலில் ஒரு கொலை
டான்ஸ் டீச்சர்
ஒரு கிளை, இரு மலர்கள்
பழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)