சாத்தான்களின் கூடாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 1,440 
 
 

அன்றைக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் பிரதேசமெங்கும் ‘நாவாந்துறை’ என்கின்ற இந்தக் கடலோரக் கிராமத்தை பற்றிய பேச்சே தான். பத்திரிகைகளை புரட்டினால் அந்தச் சம்பவம் தொடர்பாக பக்கம் பக்கமாக எழுதியிருந்தது. தொலைக்காட்சியை திறந்தால் தலைப்புச் செய்தியே அது தான். நான் ஏதோ அதை சம்பவம் என்று சொல்லிக் கொள்வது சரிதானா? கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் தானே இன்றைக்கு நமது வரலாறு. அப்படியானால் இதுவும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய சம்பவம் தான்.

நாவாந்துறை என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்தப் பரவைக் கடலும், மீன் சந்தையும், பந்தடியும் தான். கடலே இவர்களுக்கு தொழிற்சாலை. ஆர்ப்பாட்டமற்று கிடக்கும் இந்தப் ‘பொட்டைக்’ கடலை நம்பித்தான் இன்றும் இங்குள்ள குடும்பங்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. “நாவாந்துறை கடலில் பிடிபடும் பாலமீன், கயமீனுக்கும் பாட்டு இராலின் சுவைக்கும் ஈடாக உலகத்தில் எந்தக் கரைக்கு போனாலும் தின்ன ஏலாது” என்று யாழ்ப்பாணம் முழுக்க பேச்சு. இந்த கடலில் இரால் கூட்டுத் தொழில் தான் பிரதானம். மாசத்தில இரண்டு தடவையாவது வலைகளை பிடுங்கி பாய்வார்கள். மற்ற நாளையில விடியப்புறம் நாலஞ்சு மணிக்கே இரால் கூடு தட்ட கடலுக்குப் போகவேணும்.

தொழிலுக்கு போயிற்று வந்த அலுப்பில குளிச்சு சாப்பிட்டு, சத்து நேரம் வெறும் நிலத்தில சாய்ஞ்சு படுத்தால்.. ஆராச்சும் தட்டி அரட்டினால் கொலை தான் விழும். நித்திரை கொண்டு எழும்பினால் சத்துக்கு வலைகளைப் பொத்திற்று, வெயில் கொஞ்சம் தணிஞ்சு கொண்டு வர, கீதம் வீட்டில சுடச்சுட வாய்பனையோ குமார் கடை றோலையோ வாங்கி மாத் தேத்தண்ணியோட மண்டீற்று ‘பூட்ஸ்’ சும் கையுமா பரலோக மாதா கோயிலடிக்கு பந்தடிக்க போய்விடுவார்கள். இந்த ஊர்பிறந்த எல்லாருக்கும் ‘புட்போல்’ இரத்தத்தில் ஊறிப் போன ஒண்டு. மைதானத்தில் குஞ்சு குறுமான் தொடங்கி இழந்தாரிகள்-சம்சாரிகள் எல்லாம் ‘புட்போல்’ அடிக்கிறதை வயதானவர்கள் கோயில் போட்டிக்கோவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏதும் இசகு பிசகா விளையாடினா “அந்தக் காலத்தில நாங்க விளையாடேக்க..” எண்டு பழைய புட் போல் புராணம் தொடங்கும். விளையாட்டு முடிஞ்சாலும் அந்த புராணம் ஓயாது. கலகலப்பிற்கு குறைச்சல் இல்லாத ஊர்.

உதைபந்தாட்ட போட்டிகளில் ‘சென்மேரிஸ்’ அணி மைதானத்திற்குள் இறங்கினால் வடமாகாணத்தில் எல்லா அணிகளுக்கும் பேப்பயம் . “இந்தச் திமிலரை வெல்லவே ஏலாது” என்று எதிரணி ரசிகர்கள் பேசிக் கொள்வதை காது குளிர கேட்ட களிப்போடு அரையோ காலோ அதி விசேஷத்தை மண்டினால் தான் இவனுகளுக்கு போதையே ஏறும்.

நாவாந்துறை தெற்கு பக்கத்து முக்குவரோடும் அண்ணன்-தம்பி, சினேகிதம்- கும்பா எண்டு நல்லா தான் பழகுவாங்க. ஏன் ஒரு சிலர் தெற்குப் பக்கத்து பொம்பிளைகளை காதலித்து கல்யாணம் கட்டியும் இருக்கிறாங்க. ஏதும் நல்லது கெட்டது வந்தால் அந்தச் சனமும் வடக்கு பக்கத்தாருக்கு முதலிடம் கொடுக்கும். ஊருக்குள்ள ஏதும் செத்தவீடு நடந்தால் அன்று இரண்டு சாதிச் சனத்துக்குக்கும் துக்க நாள் தான். அனேகமாக எந்த வீட்டிலேயும் ரீவிச் சத்தம் கேட்காது. அவங்களும் கத்தோலிக்கர்கள் தான். அவங்களுக்கு சென்நீக்கிலார் கோயில். எந்த கோயிலில் பூசை நடந்தாலும் பரலோக மாதாவே.. சென்நீக்கிலாரே.. எண்டு கோயில் நிறைஞ்ச சனமா தான் இருக்கும். எல்லாம் சரி தான், ஆனால் சென்மேரிஸ்- சென்நீக்கிலஸ் பந்தடியெண்டு வந்தால் மட்டும் எப்ப பாரு சண்டை தான். அடிதடியில் தொடங்கி வெட்டுக் குத்து… ரத்தம் பொலீஸ் எண்டு வந்து முடியும். இது ‘இண்டு நேத்து’ இல்லை. காலங்காலமாக நடக்குது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் துரையப்பா விளையாட்டரங்கில் நடந்த ‘மைலோ’ கிண்ணத்திற்கான இறுதியாட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் அணி கலைமதி அணியோடு வெற்றி பெற்று தொடர்ச்சியா மூன்றாவது வருடமும் சம்பியன் ஆனது. பான்ட் வாத்தியக்காரரின் மேள தாளங்களோடு பட்டாசுகளும் வெடித்துக் கொண்டு, பளபளக்கும் மைலோ வெற்றிக் கோப்பையை உயர்த்திப் பிடித்து, குஞ்சு குறும்பான் தொடங்கி கிழடு கட்டைகள் வரைக்கும் எல்லாரும் நீலம்- வெள்ளை கொடிகளை அசைத்து ஆடிப் பாடிக் கொண்டு “மேரிஸ்… மேரிஸ்… சென்மேரிஸ்” என்று கோசங்கள் எழுப்பியபடி ஊருக்குள் வந்ததில் தவறேயில்லை. ஆனால் வேண்டுமென்றே தெற்குப்பகுதி வீடுகளின் முன் நிறுத்தி, இரகசியமாக ‘பாண்ட்’ குறூப்பில் அந்த ‘ட்ரம்ஸ்’ அடிப்பவனின் கையில் ‘கால்’ அதி விசேஷம் ஒன்றை கொடுக்க, அவன் அதை திறந்து அண்ணாந்து ஒரே மொடக்கில் ஊற்றிவிட்டு காதுச் சவ்வு கிழியுமளவு போட்டுத்தாக்க, மூக்கு முட்ட குடித்திருந்த ஒரு சிலர் “முக்குவரால் ஏலாது…. ஏலும் எண்டா வந்து பாரு….” என்று எழுப்பிய கோசம் தான் தெற்குப் பகுதியாரின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தது. அன்றைக்கு அதில் தொடங்கிய அடிபிடி ஊருக்குள் பெரிய சாதிச்சண்டையாக மாறிப் போச்சுது.

மூன்று வருடங்களுக்கு முன், கடைசியாக 2008ல் ‘கிளி பாதர்’ என்று எல்லோராலும் அறியப்பட்ட கருணாரட்ணம் பாதர் பங்குச் சுவாமியாக இருக்கும் போது இப்படித்தான் ஒரு பொழுதுபட்ட நேரம் பந்தடிச் சண்டை மூண்டது. ‘றாத்தலடி’ சந்தியில் (சந்தையடி) இரண்டு சாதிக்காரரும் போத்தல்களால் மாறி மாறி எறிபட்டுக் கொண்டிருக்க அந்ந இருட்டுக்குளே இரண்டு சாதிக்காரருக்கும் நடுவில் என்னடா வெள்ளையாக ஒரு உருவம் தெரியுது! என்று பார்த்தால்… நடுவே கிளி பாதர் சண்டையை நிறுத்தச் சொல்லி கையெடுத்து கும்பிட்டபடியே நின்றார். போத்தலெறி பட்டு நெற்றியிலும் இடது முளங்கையிலும் இரத்தம் வழிந்த படி நின்ற சுவாமியை கண்டதும் கையிலிருந்த போத்தல்களை கீழே போட்டுவிட்டு தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எல்லாருமே அந்த இடத்தை விட்டு போய்விட்டார்கள்.

அடுத்த நாள் விடிவிடியெங்க கிளி பாதர் இரண்டு கோயில்களையும் இழுத்துப் பூட்டித் திறப்பெடுத்து ஆயரிடம் ஒப்படைத்து விட்டார். கிழமைக் கணக்காக கோயில் பூட்டின பூட்டு. பூசை பிரார்த்தனை எதுவுமில்லை. ஒரு சனிக்கிழமை இரண்டு சாதிப் பெரியவர்களும் சேர்ந்து ஒரு மினிபஸ் பிடித்துக் கொண்டு ஆயர் இல்லத்துக்கு போய் ஆயருக்கு முன்னால் முழங்காலில் இருந்து கும்பிட்டு” ஆண்டவரே… தேவரீரே….”என்று மன்னிப்பு கேட்டதற்கு பிறகு தான் ஆயரின் அனுமதியோடு கிளிபாதர் கோயிலை திறந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். அதற்கு பிறகு சில வருடங்களாக நாவாந்துறையில் இல்லாது ஒழிந்து போன சாதிச் சண்டை அன்றைக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

மெல்ல மெல்ல இருட்டு ஊரையே விழுங்கிக் கொண்டு இருந்தது. புளியடிச் சந்தியில் இளந்தாரிகள் கூட்டமாக நின்று சண்டைக்கு வியூகம் வகுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்குள் சில நரைத்த தலைகள் ஊடுருவின.

“அவங்களும் உங்கள போல இந்தக் கடல் உப்பத் தின்னுறவங்க தானே? உங்களுக்கு இருக்கிற ரோசமும், திமிரும் அவங்களுக்கும் இருக்காதா என்ன?” எண்டு கேட்டார்.’துருவன் ‘அந்தோனிப்பிள்ளை.

“அவங்க உங்களோட பிரச்சினைக்கு வந்தவங்களா? ஏன் வலியப் போய் வம்பிழுத்தனீங்க? நீங்க பந்தடியில் வெண்டால் பொத்திக் கொண்டு பரலோக மாதா கோயிலடிக்கு வந்து கத்திக் கூப்போட்டு கொண்டாடலாமே? ஆரு மறிச்சது?ஏன் தெக்குப் பக்கம் நிண்டு கத்தோனும்? “எண்டு தளதளத்த குரலில் கேட்டார் வெள்ளை வேட்டி மரியதாஸ்.

“கொஞ்ச காலமா சண்ட சச்சரவு இல்லாம ஒண்டா இருந்த ஊரில மண்ண விழுத்திட்டாங்க கடலோட போவார்…” எண்டு, குனிந்து இரண்டு கையாலும் மண்ணை அள்ளிவீசி சாபித்தாள் பரிமளக் கிளவி.

விநியோகப் பிரிவு வீடு வீடாக போய் பழைய சோடாப் போத்தல்கள், சாராயப் போத்தல்கள் எல்லாம் சேகரித்து அதை சாக்கில் போட்டு காவிக் கொண்டு வந்து கொடுக்க, சமர் பிரிவு போத்தல்களால் சரமாரியாக எறிந்து கொண்டே முன்னேறினார்கள். தெற்கிலிருந்தும் தாக்குதல் பலமாகத்தானிருந்தது. இரண்டு பகுதியும் மாறி மாறி கற்களாலும் போத்தல்களாலும் எறிபட்டதில் பலருக்கு இரத்தக் காயம். நாலைந்து பேர் சேர்ந்து ‘பெற்றோல் பம்’ சரிக்கட்டத் தொடங்கினார்கள். சண்டை கைமீறிப் போனால் மட்டும் அந்தச் ‘சிவதனுசை’ கையில் எடுப்பது என்ற முடிவில் இருந்தார்கள். கடலில் மீன்களுக்கு அடிக்கும் ‘டைனமற்’ வெட்டியும் தயாராக கைவசம் இருந்தது.தெற்குப் பக்கம் சில வீடுகளும் கடைகளும் உடைக்கப் பட்டதாக செய்திப் பிரிவு தகவல் வளங்கியது. எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று பெண்களும் குழந்தைகளும் பயப்பீலியால் வீட்டு மூலைக்குள் ஒடுக்கி கிடந்தனர். சந்தியில் இரண்டு பொலீஸ் ஜுப்கள் வந்து இறங்கியது தான் தாமதம்… எல்லாரும் நிண்ட தடம் தெரியாமல் ஓட்டமெடுத்தனர் .

வந்தவங்க எல்லாருமே சிங்களப் பொலீஸ். அதில் அந்த வெத்தில வாயன் ஒருத்தன் “நாவாந்துறை கஜால் ஏரியா… கஜால் … கஜால்..” என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான். பொலீஸ் இரண்டு தரப்பிலும் விசாரித்து சண்டைக்கு காரணமானவர்களை பிடித்து கைது செய்து ஒரே ‘செல்’ லில் அடைத்து போட்டார்கள். அடுத்த நாளே செல்லுக்குள் இருசாதியாரும் பேசத் தொடங்கி விட்டாங்களாம். வீட்டிலிருந்து வருகின்ற உணவுப் பண்டங்களை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களாம். அந்த ‘கக்கூசு’ நாத்தமும் நுளம்புக் கடியும் தாங்க முடியாமல் மறு நாளே இரண்டு பகுதியும் சமாதானமாகப் போவதாக கூறி ‘கேசை’ வெட்டிக் கொண்டு ஊருக்கு வந்திட்டாங்க. ஆனால் அந்தச் சண்டக்கு பிறகு ஊரில் வடக்குப் பக்கத்தார் யாரும் தெற்குப் பகுதியாரோடு முகம் விட்டு பேச முடியாத அளவுக்கு ஆகிப்போச்சு. அந்தச் சனம் பரலோகமாதா கோயில் பக்கமே வாறதில்லை. மீன் சந்தையில் பகிடி சேட்டை பண்ணுற ‘முக்குவ’ யாவாரிமார் திமிலரை நிமிந்தும் கூட பாக்கிறதில்லை.. எல்லாம் அந்த நேரத்துக் கொதி. இவ்வளவு தூரம் வந்து முடியுமென்று எவரும் நினைக்கயில்லை.

ஓகோ… இந்த சண்டையை தான் ஆரம்பத்தில் ‘நாவாந்துறை சம்பவம்’ என்றீராப்பா? இது தலைப்புச் செய்திகளில் ஒளிபரப்பாகியிருந்தால் ஊர் மானமே போயிருக்குமே?

வழமைக்கு மாறாக அன்றைக்கு பந்தடி பார்த்துக் கொண்டிருந்த பெரிசுகள் பழைய பந்தடிப் புராணம் எதுவுமே பேசவில்லை. கையிலிருந்த பீடியை வாயில் வைத்து இழுத்து சுருள் சுருளாய் புகை விட்டுக்கொண்டு இருந்தார் ‘ பாலராசா. மனுசனுக்கு எழுபது வயது வரும். நல்ல தொழிலாளி “என்னம்மடா…ஏதோ பூதம் திரியுதாம்” எண்டு தொடக்கினார்.

“ஓமடாப்பா… கிறீஸ் பூதமாம்… உடம்பு முழுக்க கிறீஸ் பூசிக் கொண்டு ஊர் ஊரா போய் குமர் பொட்டைகளின்ர மார்பகங்கள் எல்லாம் அறுத்துக் கொண்டு திரியுதாமே… கோதாரி…” எண்டு இழுத்தார் பழைய ‘பிளேயர்’ மணியர் “ஏனாம்? அவற்ர பொஞ்சாதியட்ட இல்லையாமோ?” எண்டு கேட்டார் ராசு.எல்லோரும் கொக்கொக் என்று விழுந்து விழுந்து வெடித்துச் சிரித்தார்கள். “மகிந்தா ராஜபக்ச பு..மோனின் ஆயுள் நீடிக்கோனும் எண்டு பெரிய மந்திரவாதிகளை வச்சு பூசை ஏதோ செய்யுறாங்களாம். ஆயிரம் கன்னிப் பெண்களின்ர மார்பகங்களை அறுத்து ஒரு தெய்வத்துக்கு நர பலி குடுக்க வேனுமாமே….” என்றார் யோணர்.

” பச்ச பாலகர்கள், பெண்டுகள், எங்கட ஆண்குஞ்சுகள் எல்லாரையும் பலி குடுத்தும் இன்னுமா அவன்ர தெய்வத்துக்கு பசி அடங்கயில்லை” என்று கேட்டார் ராசு.

“2009ல் சண்டை முடிவுக்கு வந்து இப்ப இரண்டு வருசமாவும் போச்சு. இந்த ஆமிக்காரங்கட அட்டகாசங்கள் இன்னும் குறைஞ்சதா இல்லை. எங்கட காணிகளை வளைச்சு புடிச்சு ஊருக்கு ஊர் சென்றி பொயின்ருகளும், சந்திக்கு சந்தி ‘செக்கிங் ‘ பொயிற்ருகளும் போட்டுக் கொண்டு தனியா வேலைக்கு போற பொம்புள புள்ளைகளோட கைச்சேட்டை பண்ணுறது, றோட்டு றோட்டாறோந்து வந்து வீடுகளையெல்லாம் நோட்டம் போடுறது… இந்த கிறீஸ்பூதமும் கூட இவங்கட விளையாட்டு எண்டு தான் எனக்கு படுகுது” என்றார் ‘நஞ்சப்பன்’ வின்சன்.

“புலிகளையெல்லாம் அழிச்சாச்சு, பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தாச்சு எண்டெல்லாம் பீத்துற இந்த அரசாங்கம் இன்னும் ஏன் தமிழ்ச்சனம் வாழுற இடங்களில மட்டும் இவ்வளவு இராணுவத்தை குவிச்சு வைச்சிருக்குது? என்று கேட்டார்” ‘வரலாறு’ தோமாஸ்.

“நீ கேட்ட இந்த கேள்வியத் தானே பாரளுமன்றத்திலையும் தமிழ் எம்பீக்கள் கேட்டுக் குடையுறானுகள்… போர் முடிஞ்சுது அவசரகாலச் சட்டத்தை நீக்க வேனும் எண்டு அழுத்தம் குடுக்குறாங்கள்”

“சிங்களச் சனமும் நாட்டில சண்டை முடிஞ்சுது, புலிகளை அழிச்சாச்சு பிறகும் ஏன் இராணுவச் செலவு, பாதுகாப்புச் செலவு எண்டு மில்லியன் மில்லியனா கணக்கு காட்டுறீங்க? எண்டு அரசாங்கத்த கேள்வி கேட்டு தோலுரிக்குதுகள். இப்ப அரசாங்கம் அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டிய நெருக்குவாரத்தில் இருக்கு. அவசர கால சட்டத்தை நீக்கினால், வடக்கு-கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தையெல்லாம் வாபஸ் பெறவேணும். இராணுவத்திற்கான செலவினத்தை குறைக்க வேணும். அது தான் இப்பிடியொரு பூதத்தை விட்டு சனத்தை அச்சுறுத்தினால் காடுகளில் மறைஞ்சு இருந்த புலிகள் நாட்டுக்குள்ள ஊடுருவிற்றாங்க. மக்களின் பாதுகாப்புக்கு அச்சுத்தல் எண்டு புதுசா ஒரு கதை விட்டு சிங்களச் சனத்தட வாயையும் அடைக்கலாம், வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களில் தொடர்ந்து இராணுவத்தை வச்சிருந்து தங்கட காரியத்தையும் சாதிகலாம். இதுக்கு தான் அரசாங்கம் கிறீஸ் பூதங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கு எண்டு எல்லாருக்கும் வடிவா விளக்கம் குடுத்தார் கூறியான் செபஸ்ரியான். வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்த மணியர் “என்ர பரலோக மாதாவே… இப்பதான்டா இவங்கட நரிதிட்டமே எனக்கு விளங்குது “என்று மண்டையை சொறிந்தார்.

இலங்கையின் தெற்கு, கிழக்கு சிங்களப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கிறீஸ் பூதங்கள் உலாவுவதாகவும், மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள் தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் அவர்கள் மீது பாய்ந்து, விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன என்றும் செய்திகள் பரவியது. இரத்தினபுரிக்கு அருகில் இருக்கின்ற ஒரு ஊரில் ஏழு பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் “கிறீஸ் பூதம்” பயப்பீதியை உண்டாக்கியிருந்தது.

ஆவிகள், பூதங்களை நம்பும் கிராம மக்கள் கிறீஸ் பூதங்கள் உலவுவதையும் நம்புகின்றனர். திருடச் செல்லும் போது யாராவது பிடித்தால் வழுக்கிக் கொண்டு தப்பித்து ஓடுவதற்காக உடம்பில் கிறீஸ் பூசிக் கொண்ட திருடர்கள் தான் கிறீஸ் பூதங்கள் என்றும் அனேகமானோர் நம்பினார்கள். சிங்கள இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களே இந்தக் கொலைகளை செய்வதாகவும், வீடு புகுந்து கொள்ளையடிப்பதாகவும், தனித்திருக்கும் பெண்களிடம் பாலியல் சேட்டைகள் செய்வதாகவும் கூட சிங்கள மக்கள் சந்தேகப்படுவதாக செய்திகள் பரவின.

சில இடங்களில் கிறீஸ் பூதங்களை மக்கள் மடக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்த பின்னர், அவன் பொலிசாரிடம் ஏதோ ஒன்றை காட்டிய போது பொலிஸ் சல்யூட் அடித்து அவனை விடுவித்ததாகவும் சிங்கள மக்கள் கூறுகின்றனர். முதலில் அரசாங்கம் “கிறீஸ் பூதங்கள் பற்றிய செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி. மக்கள் அதை நம்பி பீதியடைய வேண்டாம்” என்று கூறியது. பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில் வெள்ளை நிறகிறீஸ் பூசிக் கொண்டு வாயில் இரத்தம் வழியும் ஒருவனை காட்டி “இவன் தான் கிறீஸ் பூதம்” என்று கூறினார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கிறீஸ் பூதங்கள் என்ற மர்ம மனிதர்களை அரசாங்கமே ஏவி விடுவதாக மக்கள் சந்தேகித்தனர். ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் அதுவரை அந்த மர்ம மனிதர்கள் ஊடுருவவில்லை என்ற ஒன்றுதான் இத்தனை நாளாக எல்லாரையும் நிம்மதியாக உறங்க விட்டது. அன்றைக்கு அதிலும் மண் விழுந்தது.

22.08.2011 மாலை ஜந்து மணியிருக்கும் தெற்கு பக்கம் சென்நீக்கிலார் கோயிலுக்கு பின் புறமாக ஒரு வீட்டில் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணொருத்தி திடீர் என்று கத்திக் கூச்சலிட, அயலட்டத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து என்ன ஏதென்று விசாரித்ததில் எல்லையில் உள்ள பூவரச மரத்தில், முகத்தில் கறுப்பாக ஏதோ பூசிக்கொண்டு முன்பின் அறியாத ஒருவன் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்ததை அவள் கண்டு,பயந்து கூச்சலிட்டதும் மரத்திலிருந்து பக்கத்து வளவுக்குள் பாய்ந்து ஓடிவிட்டானென்றும் அந்த பெண் சொல்லியிருக்கிறாள். இந்தக் கதை ஊருக்குள் தீயாய் பரவியது. மர்ம மனிதன் தான் ஊருக்குள் இறங்கி விட்டானோ? என்று சிலர் சந்தேகப் பட்டாலும், சிலர் அது திருடனாக இருக்கலாம் என்றும், இல்லையென்றால் இது அந்தப் பெண்ணின் மனப்பிரம்மை என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் தெருக்களில் நின்று “ஊருக்குள்ள கிறீஸ் பூதம் இறங்கிட்டு ” என்று பயமுறுத்தி பகிடியடித்துக் கொண்டு இருந்தார்கள்.

சற்று நேரத்தில் அந்தப் பகிடியே உண்மையாகியது. யாருமற்ற வளவு ஒன்றில் பதுங்கியிருந்த அந்த மர்ம மனிதன் தெருக்களில் திடீரென ஆள் நடமாட்டம் தென்பட்டதும் சுற்றுவட்டாரத்தில் இருந்த வீடுகளின் மதில்களின் மேல் மின்னல் வேகத்தில் ஏறிப் பாய்ந்து தாவிச் செல்வதை சிலர் கண்டிருக்கிறார்கள். கிறீஸ் பூதம் தான் ஊருக்குள் புகுந்து விட்டது என்பது உறுதியாகியதும் ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் தெற்குப் பக்கம் சம்பவம் நடந்த இடத்தில் கூடிவிட்டார்கள். றோட்டுப் பக்கமாக ஏதோ சனக்கூச்சல் எழும்பியது. கேட்டால் கடற்கரை தார் வீதியை கடந்து கறுப்பு பூதமொன்று ஓடியதை கண்டதாக பலரும் சொன்னார்கள். அவன் முகத்தில் கரி அப்பி கொண்டு, தேகம் முழுவதும் கறுப்பு கிறீஸ் பூசியிந்தானென்றும், கைகளில் வளைந்த கூரிய நகங்கள் இருந்ததாகவும், மின்னல் வேகத்தில் பாய்ந்து தாவி ஓடுவதாகவும், ஒரு தாவலில் வீதியை கடந்து மறு கரைக்கு சென்று விட்டானென்றும் பூதத்தை பார்த்தவர்கள் கூறினார்கள்.

அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் அந்த மர்ம மனிதன் சென்நீக்கிலார் விளையாட்டு மைதானத்துக்குள்ளோ அல்லது கடற்கரை இறங்குதுறை வீதிக்குள்ளோதான் சென்றிருக்க வேண்டும் என்ற உத்தேசத்தில் இளந்தாரிகள் எல்லாம் கைகளில் அம்பிட்ட கட்டைகள், கற்கள், போத்தல்களையும் எடுத்துக் கொண்டு குவிந்தார்கள். ஆனால் அங்கே மர்ம மனிதன் வந்தமைக்கான தடையம் கூட இல்லை. கடற்கரைக்கு போகின்ற பாதையில் ‘விற்றாலிஸ்’ ஐயா கட்டின அந்தோனியார் சிற்றாலயமும், சிறிய இராணுவ முகாமும் எதிரெதிரே இருந்தது. இரண்டு ‘ஆமிக்காரங்கள்’ வாசலில் காவலுக்கு நின்றார்கள். சிங்களம் பேசத் தெரிந்த றூபன் ஆமிக்காரனிடம் சென்று “மே பத்தட்ட அவுக்குட மினிசெக் ஆவா” (இந்தப் பக்கமாக மர்ம மனிதன் ஒருவன் வந்ததான்) என்று கூறவும் “எகமத் கௌறுக் ஆவாகியலா அடி தக்கின.” (அப்படி யாரும் வந்ததாக தாங்கள் காணவில்லை) என்று மறுத்து விட்டான்.

“அந்தா………அவன் ஆமி பொயின்ற்றுக்கு உள்ள தான் நிக்குறான்” என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது தான் தாமதம். அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இளசுகள் பெரிசுகள்| எல்லாரும் சேர்ந்து இராணுவ முகாமை சுற்றி வளைத்து விட்டார்கள்.

அது வரை காலமும் நாவாந்துறையில் பிரச்சினையென்றால் அது திமிரர்- முக்குவர் சாதிச் சண்டையாகத் தான் இருக்கும். அன்றைக்கு பேரினவாத இராணுவத்துக்கு எதிராக, இந்த பூதங்களை வைத்து சிங்களவரை வேண்டுமானால் அச்சுறுத்தலாம் . தமிழரை அச்சுறுத்த முடியாது என்று அரசாங்கத்திற்கே பாடம் புகட்டுவதற்காக சாதி உணர்வை தூக்கியெறிந்து விட்டு, இன உணர்வோடு ஊரே வெகுண்டெழுந்தது.

அந்த மர்ம மனிதன் கட்டிலுக்கு கீழே ஒழிந்து கொள்வதை கடற்கரை பக்கமாக நின்றவர்கள் ஆமிப் பொயின்ரின் பின் வாசல் வழியாக கண்டு ஆவேசமாக கத்தினார்கள். இப்போது உள்ளேயிருந்த ஆமிக்காரரெல்லாம் துவக்குகளோடு வந்து வெளியே நிற்க, அந்த கொமாண்டர். “தன்ன அவுக்குட மினிசெக் கௌறுத் கன்னவுறே எகதி ன. மிடபஸ்ஸே மே தேனெத் கிட்டியோத் அப்டி வடிதியமு” கத்தினான். அந்த ‘கன்றாவி’ சிங்களம் யாருக்கும் விளங்கவில்லை. ஏதோ கோவமாக கத்துகிறான் என்று மட்டும் புரிந்தது. அப்படி மர்ம மனிதர் யாரும் முகாமுக்குள் இல்லையாம், இனியும் இந்த இடத்தில் நின்றால் சுடுத் தள்ளுவோம் என்று மிரட்டுகிறான் என்றான் றூபன். அப்படியிருந்தும் யாரும் இடத்தை விட்டு நகர்ததாக இல்லை. அந்த மர்ம மனிதன் உள்ளே இல்லையென்றால், ஊர் மக்கள் எல்லோர் சார்பிலும் ஒருவரை ஆமிப் பொயின்ருக்குள் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும். என்று கேட்கவும் ஆமிக் கொமாண்டர் மறுத்து விட்டான். கோபமடைந்த இளசுகள் ஆமி பொயின்ரை நோக்கி போத்தல்களாலும் கற்களாலும் எறியத் தொடங்கினார்கள். கூட்டத்தை அச்சுறுத்தி விரட்டுவதற்காக இராணுவம் மேல்வெடி வைத்தார்கள். ஆனால் கூடியிருந்த கூட்டம் கலைவதாக இல்லை.

முப்பது – நாற்பது ஆமிக்காரங்களோடு ஒருபெரிய ரக் வாகனம் மைதானாத்துக்குள் வந்து நின்றது, சற்று நேரத்தில் ஆமிக்காரங்களை அள்ளி ஏற்றிக்கொண்டு இரண்டு ஆமி ‘ஜீப்’ வண்டிகளும் வந்து இறங்கியது. அவர்கள் தலைகவசங்களை மாட்டிக் கொண்டு துப்பாக்கிகளை தூக்கியபடியே வாகனத்தில் இருந்து பாய்ந்து முகாமை நோக்கி ஓடினார்கள். அநீதிக்கு எதிராக போராடுபவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டும் அரச பயங்கரவாதத்தின் நாகரீகமான பெயர் தானே ஜனநாயகம்! அடக்குமுறைக்கு எதிராக போராடுபவன் பயங்கரவாதி என சிறைப்படுத்தப்பட்டதும், கடத்தப்பட்டதும், சுட்டுக் கொல்லப் பட்டதும், நாட்டை விட்டே துரத்தியடிக்கப் பட்டதும் தானே கடந்த கால வரலாறு. அந்த வராலாற்றின் தொடர்ச்சியாகவே இந்தக் கொடுமையும் நிகழ்தேறியது.

பூதங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பது தமது கடமையென்று வாய்கிழிய கூறிய இராணுவம், மக்களிடமிருந்து பூதத்தை காப்பாற்ற சரமாரியாக கீழ் வெடி வைத்துக் கொண்டு முன்னேறியது. துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து நின்ற எல்லோரும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். உடம்பு முழுவதும் கிறீஸ் பூசிக் கொண்ட அந்த மர்ம மனிதனை இராணுவத்தினர் பின் வழியால் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். அவன் ஆமிப்பொயிண்டுக்கு வெளியே வந்து ஒற்றையடிப் பாதையால் பிறேமின் இரால் வாடியை தாண்டி ஓடிச் சென்று கடற்கரை வீதிக்கு வந்தபோது வேகமாக சென்ற ஆமிக்காரனின் ‘பீல்பைக்’ குகளில் ஒன்றில் தாவி ஏறிக்கொண்டு மர்ம மனிதன் தப்பித்து சென்றான். பலரும் பார்த்துக் கொண்டிருக்கவே கிறீஸ் பூதத்தை இராணுவத்தினர் திட்டமிட்டு காப்பாற்றி அனுப்பி வைத்தார்கள். அதிகாரம் மிக வலிமையானது. ஆடுகளை காவல் காப்பாதாய் அறிக்கையிடும் ஓணாய்கள் எமக்கான இரணுவம். இங்கே துப்பாக்கிகள் எழுதுவதே இறுதித் தீர்ப்பு.

இரவும் ஒரு பூதம் போல பூமியை பையப்பைய விழுங்கிக் கொண்டிருந்தது. மர்ம மனிதனை மடக்கிப் பிடிக்க முடியாது போய்விட்தே என்ற ஒரு கவலை எல்லோருடைய முகங்களிலும் அப்பிக் கிடந்தது. ஆனாலும் இந்த பூதங்களை பின்னால் நின்று இயக்குவது இராணுவம் தான் என்ற உண்மை விடிந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம் உலகிற்கு அம்பலமாக்கப்பட்டு விடும். என்ற திருப்தி சந்திக்குச் சந்தி கூடி நின்றவர்களின் பேச்சில் வெளிப்பட்டது.

மணி எட்டு ஆகியிருக்கும். இல்லையில்லை அதையும் தாண்டியிருக்கும். அப்படியெல்லாம் நடக்குமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தீடிர் என்று இராணுவ வாகனங்களின் இரைச்சல் அந்த இரவின் அமைதியை குலைத்துப் போட்டது. மீன் சந்தைக்கு முன்னால் ஆமி ரக்குகளும், ஜீப் வண்டிகளும், பீல் பைக்குகளும் வந்து குவிந்தன. நூற்றுக் கணக்கான இராணுவ சிப்பாய்கள் சீருடையோடும், சீருடையில்லாமலும் கடற்கரை வீதியாலும் நாவலர் வீதியாலும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு முன்னேறினார்கள்.

வீடுகளில் பெண்கள் பயத்தில் ஓலமிட்டு அழுது ஒப்பாரி வைத்தார்கள். குழந்தைகள் வெருண்டு ஒடுங்கிப் போனார்கள். வீதிகளிலும் சந்திகளிலும் நின்ற இளந்தாரிகள் சிதறி ஓடத் தொடங்கினார்கள். எங்கே ஓடுவது எங்கே ஒழிவது எதையும் சிந்திக்க கூட நேரம் இல்லை. வீடுகளில் நின்றால் சுட்டுத் தள்ளி விடுவார்கள் என்பதால் கண் போகிற பாதைகளால் கால்களை இறக்கைகளாக்கி பறந்து சிலர் ஊர் எல்லையில் இருந்த ‘சவுக்காலை’ யிலும் சிலர் பொம்மை வெளி தாண்டியுள்ள வயல் காணிகளில் புதர்களுக்குள்ளும் பதுங்கிக் கிடந்தார்கள்.

குறுக்கு ஒழுங்கைகளுக்குள் இராணுவம் நுழைந்த போது வீடுகளின் உள்ளே மாட்டிக் கொண்டவர்கள் வீட்டுக் கூரைகளுக்கு மேலும், கட்டில்களுக்கு அடியிலும், குசினி புகைக் கூடுகளுக்குள்ளும், வளவுகளில் நின்ற உயரமான மரங்களிலும் ஏறி பதுங்கிக் கொண்டார்கள். வெறியேற்றிக் கொண்டு சிப்பாய்கள் சரமாரியாக சுட்டுக்கொண்டே வீடுகளின் கதவுகளை பூட்ஸ் கால்களால் உதைத்து பெயர்த்து பெண்களையும் சிறுவர்களையும் மிரட்டிப் பயமுறுத்தினார்கள். புரியாத சிங்களத்தால் கேள்விக்கள் கேட்டு பதில் சொல்லாது திணறியடித்த பெண்கள் அழுது வடித்து கால்களில் விழுந்து கதறியழும்போது அந்த இரும்பு பூட்ஸ் கால்களாலேயே அவர்களை பந்தை உதைவது போல உதைத்து விட்டு, வீட்டுக்குள்ளே தேடுதல் நடத்தி பதுங்கியிருந்த ஆண்களை பிடித்து ஆடைகளை உரிந்து அம்மணக் கட்டையாக துவக்குப் பிடிகளாலும் கட்டைகளாலும் கும்பிடக் கும்பிட அடித்து, பூட்ஸ் கால்களாலால் மாறி மாறி உளக்கி சித்திரவதை செய்தார்கள். வயது வித்தியாசம் இன்றி சின்னப் பொடியள் தொடக்கம் வயசான கிளடுகள் என்று யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

மண்பிட்டியில் வள்ளம் செய்யிற பிறேமனுக்கு அடித்த அடியில் சத்தியும் பீமூத்திரமும் இரத்தமாகவே போனது. அவ்வளவு அடிஉதை அகோரமாயிருந்தது. அதற்குப் பிறகும் விட்டார்களா? இம்மியும் இரக்கமில்லாமல் மனுசி பிள்ளைகள் கதறக் கதற பிறேமனை உடம்பில் ஒற்றைத் துணி கூட இலாலாமல் ‘கொறகொறவெண்டு’ வீதியால் இழுத்துக் கொண்டு போனார்கள். வாடைக் காற்றுக்கு கூரைகளில் ஏறி நின்றவர்களுக்கு ஊரிலே எல்லாத் திசையிலும் சனம் அழுது ஓலமிடும் சத்தம் ஒவென்று காதுகளில் நுழைந்து கண்ணீரை வரவைத்தது. முன்னரெல்லாம் சாதிச் சண்டைகளில் தெற்கு பக்கத்து வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தவர்களுக்கு கூட இப்போது அந்த சனங்கள் அழுது ஓலமிடும் சத்தத்தை கேட்கும் போது மனதில் கசிவு உண்டாகி கண்கள் வேர்க்கின்றன .அவர்கள் எம்மை தமிழனென்று அடிக்கிறார்கள். ஆனால் ஆ நாங்கள் சாதிக்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே என்று கூரைகளில் பதுங்கி இருந்தவர்களின் புத்தியில் உறைத்திருகலாம்.

மேலிருந்து பார்க்கும்போது வீடுகளில் அம்பிட்ட ஆம்பிளைகளை அடித்து நிர்வாணமாக தரதரவென வீதிகளால் இழுத்துக் கொண்டு போவது மின்கம்பங்களின் வெளிச்சத்தில் தெளிவாகத் தெரிந்தது. அப்படி நூற்றுக் கணக்கானவர்களை நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் அடித்து மீன் சந்தை வரை இழுத்துக் கொண்டு போய், முள்ளிவாய்க்காலின் பிணக்குவியல் போல ஆளுக்கு மேல் ஆளாக போட்டு பச்சை மட்டைகளாலும், பொல்லுத் தடிகளாலும் வெறும் தேகத்தில் அடிக்க அவர்கள் புளுக்களை போல துடித்தார்கள். யாருக்கு என்ன கதியோ என்ற ஏக்கமும் தவிப்பும் பதைபதைப்பும் நெஞ்சைத் துளாவியது.

ஊரே விழித்திருக்க அந்த இரவு விடிந்தது. சந்தி சந்தியாக ஆமியும் பொலீசும் காவலுக்கு நின்றார்கள். ஆங்காங்கே பதுங்கியிருந்தவர்கள் எப்படியோ தப்பித்து ஊரைவிட்டு வெளியேறித் தலைமறைவாகினார்கள். இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த 124 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்கள். ஊடகங்கள் இராணுவத்தையும் அரசாங்கத்தையும் அம்பலப்படுத்தின. அன்றோடு பூதங்களின் அச்சுறுத்தல் ஒழிந்து விட்டது என நாட்டு மக்கள் நம்பினார்கள். எங்கே பூதங்கள் உருவாக்கப் படுகின்றனவோ? எங்கு அவை பாதுகாக்க படுகின்றனவோ அங்கேயே மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றன மக்களை பீதியடைய வைக்க வேண்டிய இன்னுமொரு சந்தர்பம் வரும் வரை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *