கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,201 
 

அக்பர் ஒருநாள் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். ஐந்து அரசவைப் பிரதானிகளும் அவரோடு நடந்து வந்து கொண்டிருந்தனர். அரசர் முன்னே நடக்கும் சமயத்தில் அவர்கள் ஐவரும் சற்றுப் பின்தங்கியவர்களாய்த் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். அரசர் சற்று நின்றுவிட்டுத் திரும்பிப் பார்க்கும்போது அவர்களது பேச்சும் நின்று போய்விடும்.

அரசர் அவர்களிடம்,”ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம் சொல்லலாமே” என்றார்.

புல்லின் விதைஇதை எதிர்பார்த்ததுபோல் அவர்கள் ஐவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுள் ஒருவர் சற்று முன்னால் நகர்ந்து வந்தார்.

அவர்,”அரசே! நீங்கள் எங்களைத் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. பீர்பால் பணியில் சேருவதற்கு முன்னாலேயே நாங்கள் உங்களிடம் நேர்மையாகவும் திறமையாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்களோ எங்களுக்குப் பின்னால் வந்தவரான பீர்பாலுக்கு மட்டும் அதிக சலுகை காட்டுகிறீர்கள். அதுதான் எங்களின் ஆதங்கம்” என்றார்.

“அப்படியா உங்கள் நாணயத்தின் மீதும் திறமையின் மீதும் என்றுமே எனக்குச் சந்தேகம் வந்ததில்லை. ஆனால் பீர்பால் உங்கள் அனைவரைவிடவும் திறமைசாலியாக இருக்கிறாரே!” என்றார் அரசர்.

“அரசே! எங்களுக்கும் உரிய வாய்ப்பளித்தால் அவரைவிடவும் திறமை வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிப்போம்” என்றார்கள்.

“சரிதான், நல்லவேளை இந்தச் சமயத்தில் பீர்பால் இங்கே இல்லை. உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன். உங்களின் யார் ஒருவர் அதற்குரிய பதிலைச் சொன்னாலும் அவருக்குப் பீர்பாலின் பதவியைத் தந்துவிடுவேன். சம்மதமா?”

“சம்மதம் அரசே! கேளுங்கள்..”

அரசர் கையைக் கீழே நீட்டிக்காட்டி, “இதோ இங்கே முளைத்துக் கிடக்கும் புல்லின் விதைகளை எங்கே பார்க்க முடியும்?” என்று கேட்டார்.

அரசரின் கேள்விக்கான விடை எவருக்கும் தெரியவில்லை. குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தங்களுக்குள் பேசிப் பார்த்தனர். விடை கிடைக்கவில்லை.

அந்தச் சமயத்தில் அரசரைத் தேடிக் கொண்டு பீர்பால் அங்கே வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த அரசர், “பீர்பால்! நீங்கள் சரியான சமயத்தில் வந்துவிட்டீர்கள். இந்தப் பிரதானிகளிடம் ஒரு கேள்வி கேட்டேன். அதற்குச் சரியான பதிலைச் சொல்பவருக்கு உங்களுடைய அமைச்சர் பதவியைத் தந்துவிடப் போகிறேன். அந்தப் பதிலைத்தான் அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

“அப்படியானால் நல்லது, அரசே. என்னிடமும் அந்தக் கேள்வியைக் கேளுங்கள். பதில் தெரிகிறதா என்று பார்க்கிறேன்” என்றார் பீர்பால்.

“ஒன்றுமில்லை. இதோ இங்கே முளைத்துக் கிடக்கும் புல்லின் விதைகளை எங்கே கண்டுபிடிக்கலாம் என்றுதான் கேட்டேன்” என்றார் அரசர்.

“அது ஒன்றும் கஷ்டமான கேள்வியில்லையே” என்று சொல்லிக்கொண்டே, பீர்பால் அருகிலிருந்த குளத்திலிருந்து நீரைக்கொண்டு வந்து அங்கிருந்த கட்டாந்தரையில் சற்றுத் தெளித்தார்.

“விதை எங்கிருக்கிறது என்பது தெரியச் சில நாட்கள் ஆகும் அரசே…” என்றார்.

அரசவைப் பிரதிநிதிகள் ஒன்றும் புரியாமல் மன்னரைப் பார்ப்பதைக் கண்ட பீர்பால், “மண்ணில் புதைந்த புல்லின் விதை கண்ணில் தென்படாது. ஆனால் துளி நீர் பட்டால் கூடப்போதும். வெடித்துக் கிளம்பித் துளிர்த்துத் தலைகாட்டி விடும். விதை இருக்கும் இடம் வெளித்தெரிந்துவிடும்” என்றார்.

அரசர் ஆமோதித்துத் தலையசைக்க, மற்றவர்கள் வாயடைத்துப் போயினர்.

– கமலா.கி (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *