குமணனே, உன்னை நாடி வந்த கதையைக் கேள்! என்றார் பெருஞ் சித்திரனார். அவன் கேட்க வில்லை , அவர் சொல்லத் தொடங்கினார்.
காடு வெயிலால் வறண்டு கிடக்கின்றது. அப்பொழுது மழை பொழிந்தால் என்னாகும்? “பசேல்” என்று தழைக்கும்!
அது போல, வாடிக்கிடக்கும் இரவலர், குடிலில், பால் வார்த்துப் பசுமையூட்டும் பண்புடையாளன் என்றனர். பொற் கிண்ணங்களில் அமுதிட்டுப் பாணர்க்கு ஊட்டும் பரிசிலாளன், முதிரமலைக் குமணன் என்று சொல்லக் கேட்டு விரைந்து ஓடி வந்தேன்.. இங்கு வந்தபின் யாவும் மெய்யென்று கண்டேன்.. வயிறு புடைக்க உண்டேன். ஆனால் எனக்கு அமைதியில்லை அரசே! என் இல்லத்திலே வறுமையால் வாடும் என் மனைவிக்குப் பால் வற்றி விட்டது….
பால் பெறாத புதல்வன், வெறும் பானையைத் திறந்து பார்த்து அழும் காட்சி என் மனக் கண் முன் தோன்றுகின்றது.
என் மனைவியோ, புலி புலி என்று பயமுறுத்துகின்றாள்; அம்புலி காட்டி ஆசையூட்டுகின்றாள்..
ஆனால் பிள்ளையின் பசித் தீயை அவளால் அணைக்க முடியுமோ? என்று தேம்பி அழுதார் சித்திரனார்.
அவர் திரும்பு முன், தேரும் பொருட்களும் பிறவும்’ அவர்முன் காட்சியளித்தன.
குமணன் புகழ், தேர்க் கொடியிற் பறந்தது….
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்