கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 19,053 
 
 

“டேய்! முத்து! என்னடா? “உம்’முனு ஒக்காந்திருக்கே! ஒடம்பு சரியில்லையா?’ என்று கேட்டாள் அவன் தாய் பொன்னம்மா.

“ஆ… மா! பெரிசா அக்கறை இருக்குற மாதிரி நடிப்ப! ஒரு முன்னூறு ரூவா குடுக்க முடியுமா? உன்னால?’ என்றான் முத்து கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு.

“முன்னூறு ரூவாய்க்கி நா எங்க போவேன்? வேணும்னா ஒரு நூறு ரூவா அடுத்த மாசம் பெரியம்மாகிட்டக் கேட்டு வாங்கித் தாரேன்! அவ்வளவுதான் என்னால முடியும்! வா! வந்து சாப்பிடு!’

பிடிவாதம்“ஆ…மா! சாப்பாடு ஒண்ணுதான் இப்பக் கொறச்சலாக்கும்! எனக்கு சோறும் வேணாம்! ஒரு மண்ணும் வேணாம்!’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சோத்தை வெறுக்கக் கூடாது! கெடைக்கிற ஒவ்வொரு வேளை சோறும் கடவுளுடைய பிரசாதம்தான்! வாடி! தங்கம்! என் ராஜா இல்ல! சாப்பிடுடி!’ என்றாள் பொன்னம்மா கெஞ்சலாக.

முத்து ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறான். மிக மோசமான பிடிவாதக்காரனாக இருந்தான். ஆசைப்படும் பொருள் எல்லாம் உடனே அவனுக்குக் கிடைத்தாக வேண்டும். இல்லையெனில் ஒரு வாரம் ஆனாலும் முகத்தை “உர்’ரென்று வைத்துக் கொள்வான். தாயிடம் சரியாகப் பேச மாட்டான். சரியாக சாப்பிட மாட்டான். தந்தை இல்லாத அவனுக்குத் தாய்தான் ஒரே துணை. தன் தாய் படும் துன்பத்தை உணராமலும், பொறுப்பில்லாமலும் நடந்து கொண்டான்.

அவன் தாய் வீட்டு வேலை செய்து, அவனைப் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் வசிக்கும் ஓட்டு வீடு சொந்த வீடாக இருந்தபடியால் கிடைக்கும் வருமானத்திற்குள் அவன் தாயால் குடித்தனம் நடத்த முடிந்தது. இருந்தபோதும் முத்து திடீர் திடீரென ஏதாவது செலவு வைத்துக்கொண்டே இருந்தான்.

அந்த ஊரில் மிகப்பெரிய பண்ணை வீடு ஒன்று இருந்தது. அதில் ராமலிங்கம் என்ற பெரியவரும், ராஜாத்தி அம்மாள் என்ற மூதாட்டியும் வாழ்ந்து வந்தனர்.

ராஜாத்தி அம்மாளை “காரை வீட்டுப் பெரியம்மா’ என்று எல்லோரும் அழைத்தனர். பொன்னம்மா அந்த வீட்டில்தான் வேலை செய்து வந்தாள். வேலை என்றால் ஒரு வேலையா? எல்லா வேலையும்தான்! ஆனால் எதற்கும் முகம் சுளிக்க மாட்டாள். அலுப்பு காட்ட மாட்டாள். அவர்கள் எது சாப்பிடக் கொடுத்தாலும், அதை அப்படியே வீட்டிற்கு எடுத்து வந்து முதலில் தன் மகன் முத்துவிற்குக் கொடுத்த பிறகே, தான் சாப்பிடுவாள். சில சமயங்களில் முத்துவே எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவான். தன் தாயிடம், “நீ சாப்பிட்டியா அம்மா’ என்று ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டான்.

முத்துவுக்குக் கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம். சில நாட்களாக ஊரில் நன்கு கிரிக்கெட் ஆடத் தெரிந்த சிறுவர்கள் சிலர், ஒரு டீம் அமைத்துப் பக்கத்து ஊரில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளத் தயாராகி வந்தனர். முத்துவும் அதில் ஒருவன். தோனியின் படம் ஸ்கிரீன் பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு வெள்ளை நிற டீ ஷர்ட் அவர்கள் டீமின் யூனிஃபார்ம். முத்துவிடம் அது இல்லை. வெள்ளை நிறப் பேண்ட் மட்டும் இருந்தது. டீ ஷர்ட் இருந்தால்தான் டீமில் சேர்த்துக் கொள்ள முடியும் என டீம் கேப்டன் சுந்தர் கூறிவிட்டான்.

ஒரு முன்னூறு ரூபாய்க்காகத்தான் முத்து தன் தாயிடம் இவ்வளவு முரண்டு பிடித்துக்கொண்டு இருக்கிறான். முத்துவுக்கு அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அம்மாவிடம் இனி காசு கிடைக்காது. “நாளை எப்படியாவது அம்மாவுக்குத் தெரியாமல் “”காரை வீட்டுப் பெரியம்மா”வைப் பார்த்துப் பேசி காசு வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்!” என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

மறுநாள் பள்ளிக்குக் கிளம்பினான். பொன்னம்மா வேலைக்குச் சென்றவுடன் நேரே காரை வீட்டிற்கு வந்தான்.

அந்த வீட்டின் கொல்லைப்புறத்திற்கு வந்தான். அந்த வீட்டில் நாய் வளர்க்கிறார்கள். அதன் கண்ணில் படாமல் மறைந்து கொள்ள அருகில் இருந்த மாமரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். பெரியம்மா கொல்லைப்புறத்திற்கு வரும் வரை இங்கேயே காத்திருக்க வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டான்.

அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அந்த வீட்டின் உள்அறை வரை சகலமும் தெளிவாகத் தெரிந்தது. கொல்லைப்புறத் தாழ்வாரத்தில் நெடு நாட்களாக நோய்வாய்ப்பட்டு, மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைக் கட்டிலில் கிடத்தியிருந்தார்கள்.

வீட்டின் பெரிய கூடத்தைப் பொன்னம்மா துணியால் துடைத்துக் கொண்டிருந்தாள். “ஏ டீ! பொன்னம்மா! இன்னுமா தொடச்சி முடிக்கலை?’ என்று நாற்காலியில் அமர்ந்திருந்த பெரியம்மா அரட்டிக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கு என்னமோ போல் இருந்தது. “இந்தா ஆச்சும்மா!’ என்று கூறியபடியே பொன்னம்மா வேகவேகமாகத் துடைக்கத் தொடங்கினார்.

அதற்குள் அங்கு வந்த ஒரு இளைஞன், “ஏ! பொன்னம்மா! மாடிக்குப் போயி என் அயர்ன் பண்ணின டிரஸ்ûஸ எல்லாம் எடுத்துட்டு வா!’ என்று கட்டளையிட்டான். “சரிங்க சின்னையா!’ என்று கூறியபடியே செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாக மாடிக்குச் சென்று துணிகளை எடுத்து வந்து அவனிடம் தந்தாள். அதற்குள் வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்கினாள். “ஏடீ! மசமசனு நிக்காம சீக்கிரம் வேலையைப் பாருடி!’ என்றாள் பெரியம்மா.

முத்துவுக்கு முகமெல்லாம் வாடிவிட்டது. தன் தாயை அந்த வீட்டில் உள்ளோரெல்லாம் ஒருமையில் அழைப்பதைக் கண்டு மனம் வருந்தினான்!’ அவன் இதுவரை அந்த வீட்டிற்கு வந்ததே இல்லை. தன் தாய் என்ன வேலை செய்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியாது.

அடுத்ததாக பொன்னம்மா பாத்திரம் துலக்கத் தொடங்கினாள். அதற்குள் அந்த வீட்டுப் பெரியம்மா பலமுறை உள்ளே அழைத்து ஏதாவது ஒரு வேலையை ஏவிக் கொண்டே இருந்தாள்.

அந்தப் பெரிய வீட்டின் வாசலுக்கும், கொல்லைக்குமாக ஒரு இருபது முறையாவது பொன்னம்மா நடக்க வேண்டி இருந்தது. அதன்பிறகு நடந்ததுதான் கொடுமையிலும் கொடுமையாக இருந்தது.

கொல்லைப்புறக் கட்டிலில், படுக்கையிலேயே சிறுநீரும், மலமும் கழித்த பெரியவரது இடத்தைச் சுத்தம் செய்து, வெந்நீரால் அவர் உடலைத் துடைத்து, வேறு துணி மாற்றி, அவரது உடைகளைத் துவைத்து என சகலத்தையும் முகம் சுளிக்காமல் செய்தாள் பொன்னம்மா.

முத்து முதன்முதலாகத் தன் தாயின் நிலை கண்டு வருந்தினான். அன்றைய காலை வேலைகள் முடிவதற்கே மதியம் இரண்டு மணி ஆகி விட்டது. “இந்தாடி! இங்கேயே சாப்பிடு!’ என்று பெரியம்மா எதையோ ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுத்தாள்.

“”இல்லேம்மா! முத்துவுக்கு பிரியாணின்னா ரொம்ப இஷ்டம்! நான் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுக்கிறேன்!” என்று அம்மா கூறுவது தெளிவாகக் கேட்டது.

முத்துவின் கண்களில் நீர் திரண்டது. எத்தனை முறை அம்மாவைத் திட்டியிருப்பான்? “”இது என்ன? நீ அங்க நெறைய சாப்டுட்டு எனக்கு மட்டும் கொஞ்சமா எடுத்துட்டு வந்திருக்க!” என்று எத்தனை முறை கேட்டிருப்பான்?

“”அம்மா! இந்த வாட்டி மட்டும் ஒரு நூறு ரூவா கைமாத்தா கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும்!” என்றாள் பொன்னம்மா, ராஜாத்தி அம்மாளிடம்.

“ஏடீ! இனிமே கைமாத்து கேட்டா, ஒனக்கு சம்பளமே கெடையாதுடீ! போன தடவ வாங்குன பணத்தையே இன்னும் கொடுத்த பாடு இல்ல! இஷ்டமிருந்தா இரு! இல்லாட்டிப் போ! சும்மா காசு கேட்டு நச்சரிக்காதே!’ என்று பெரியம்மா கத்துவதும் முத்துவின் காதில் விழுந்தது.

அம்மா முகம் சுருங்கிப்போய் முந்தானையால் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தான். அம்மா வீட்டுக்கு வருவதற்குள் ஓட்டமும், நடையுமாக வீடுவந்து சேர்ந்து தலையணையில் முகம் புதைத்து அழுதான்.

வீடு திறந்திருப்பதையும், முத்து அழுதிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த பொன்னம்மா, “ஏ ஐயா! என் ராசா! ஏண்டா அழுவுற! அம்மா மூக்குத்திய அடமானம் வெச்சு ஒனக்குக் காசு தாரேன்டா! வருத்தப்படாதடா!’ என்றாள்.

முத்து அம்மாவின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அம்மா! நீ இனிமே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போக வேண்டாம்மா! நான் நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போயி, ஒன்னய ராணி மாதிரி வெச்சுக்கறேன்மா! எனக்குக் காசும் வேணாம்! கிரிக்கெட்டும் வேணாம்மா!’ என்று கதறினான்.
மகனின் மனமாற்றத்திற்கான காரணம் தெரியாமல் குழம்பினாள் பொன்னம்மா. அன்றிலிருந்து குடும்பக் கஷ்டத்தை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொண்டான் முத்து!

– ந.லெட்சுமி (நவம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *