தொண்டைமான் ஓளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்:
“அரசே! நின் படைக் கலன்களைக் கண்டேன். இவை மாலை சூடிய மணமங்கை போல் காட்சியளிக்கின்றன. ஆனால், அதியமான் படைக்கலன்களைப் பார்த்தேன். அவை எப்படியிருக்கின்றன தெரியுமா?
விடாது பகைவர்களைக் குத்தித் துரத்தியதால், அவற்றின் முகைகள் முறிந்துள்ளன… அதனால், அவை கொல்லன் உலைக்களத்தில் கொலு விருக்கின்றன… என்றாள் ஒளவை.
தொண்டைமான் மனக்கண் முன் கொல்லன் உலைக்களத்திற் கொழுந்து விட்டெரியும் தீ நாக்குகள் நீண்டு நிமிர்ந்தன.
திறை இன்றேல் இரை!
அதியமான் நெடுமாறனுக்கு வரி செலுத்தாது போர்க்கு வரும் மன்னரே கேளீர் : பகைவர் அரணையழித்து, அவர் தம் உடலிற் பாய்ந்து கூர் இழந்தன. வாட்கள் பகைவர் தம் அரண்களையழித்து, நாடழித்த ஆற்றலால், ஆணி கழன்று, நிலை கெட்டன. வாட்கள் மதிற் கதவைக் கோட்டாற் குத்திப் பிளந்ததால், கிம்புறி கழன்றனவாயாயின. யானைகள் பகைவர்தம் குருதிக்கறை படிந்து, சிவந்த குளம்புகளைக் கொண்டன. குதிரைகள் கடல் எனப் பொங்கிக் குமறி வந்த படையுடன் போரிட்டு அம்பு பட்டுத் துளைத்த மார்பை உடையவன் அதியமான். அவன் சினந்து எழுந்தால் எதிர் நிற்பவர் யார்?
பகைவர்களே, திறை கொடுங்கள். இன்றேரல் உங்கள் உயிரைக் கூற்றுக்கு இரை கொடுங்கள்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்