கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 26, 2021
பார்வையிட்டோர்: 24,605 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னுரை

ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர் தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. இந் நான்காம் புத்தகத்தில் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night), சிறுபிழையால் நேர்ந்த பெருந்தொல்லை (Much Ado About Nothing), சரிக்குச் சரி (Measure for Measure), ரோமியோவும் ஜுலியட்டும் (Romeo and Juliet) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இவை இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலின், இவற்றைக் கற்கும் மாணவர் அறிவு வளர்ச்சியுடன் மொழித் தேர்ச்சியும் பெறுவர் என்பது திண்ணம் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

கதை உறுப்பினர்

ஆடவர்

1. ஸெபாஸ்தியன் ; மெஸ்ஸலின் நகர் இளைஞன் – வயோலா வின் உடன் பிறந்தான்.
2. ஆர்ஸினே : இல்லிரியா நாட்டுத் தலைவன்.
3. அந்தோனியோ : ஸெபாஸ் தியனை மீட்ட மீகாமன் – அவன் ஆருயிர் நண்பன்.
4. வேறு மீகாமன் : வயோ லாவை மீட்டு உதவியவன்,
5. ஸர் ஆன்ட்கு ஏக்சீக் : ஒலி வியாவின் பழங்காதலன் – மேரியாவின் குறும்புக் காளாய் இறுதியில் அவளை மனைவியாகப் பெற்றவன்.
6. ஸெணாரியோ : வயோலாவின்ஆணுரு – ஒலிவியாவிடம் ஆர்சினோவின் காதல் தூதன்.

பெண்டிர்

1. வயோலா : ஸெபாஸ்தியனின் தங்கை – ஆணுருவுடன் மறைவில் ஆர்ளினோவைக் காதலித்து இறுதியில் அவனை மணந்தவள் – ஆணுருவில் ஸெஸாரி யோ :
2. ஒலிவியா : உயர்குடி மங்கை – ஆர்ஸினோகாதலை மறுத் தவள் – வயோலா ஆணுரு வில் மயங்கிப் பின் லெபாஸ்தியனை மணந்தவள்.
3. மேரியா : பணிப்பெண்-ஸர் ஆன்ட்ரூவைக் குறும்புடன் தூண்டிப் பின் அவனையே மணந்தவள்.
4. வேறு பணிப்பெண்

கதைச் சுருக்கம்

உருவில் ஒருவரை ஒருவர் ஒத்த ஸெபாஸ்தியன் வயோலா என்ற இரட்டையரான அண்ணன் தங்கையர் கடற்பயணத்தின் போது இல்லிரியா அருகில் கப்பலுடைந்ததனால் ஒருவர் நிலையை ஒருவர் அறியாதவகையில் வேறு வேறு மீகாமன்களால் காப்பாற்றப்பட்டனர்.

வயோலா தன்னைக் காப்பாற்றிய மீகாமன் நல்லுரையால் ஆணுருவில் ஸெஸாரியோ என்ற பெயருடன் இல்லிரியாத் தலைவன் ஆர்ஸினோவிடம் வேலைக்கமர்ந்தாள். ஆர்ஸினோ உயர் குடி மங்கையாகிய ஒலிவியாவைக் காதலித்தும் அவள் அவனைப் பொருட்படுத்தாத நிலையில் வயோலாவைக் காதல் தூதனாக அனுப் பினான். வயோலா மனத்துள் ஆர்ஸினோவைக் காதலித்தாள் – ஆனால் அவள் ஆணுருவில் மயங்கி ஒலிவியாவும் காதல் வயப்பட் டாள். போதாக்குறைக்கு இக் காதலைக் கண்டு பழங்காதலனான ஸர் ஆன்ட்ரூ , மேரியா என்ற குறும்புப் பணிப்பெண்ணால் தூண் டப் பெற்று அவளை எதிர்த்தான்.

ஸெபாஸ்தியனைக் காப்பாற்றிய மீகாமனாகிய அந்தோனியோ ஆர்ஸினோவின் உறவினனை எதிர்த்த குற்றத்தால் இல்லிரியாவுக் குள் வரமுடியாதவன் : ஆகவே இல்லிரியாவைக் காண வந்த ஸெபாஸ்தியனிடம் பணப் பையைக் கொடுத்துவிட்டு நெடுநேர மானதால் தேடவந்தான். வயோலாவை ஸெபாஸ்தியனென் றெண்ணி ஸர் ஆன்ட்ரூவுக்கெதிராக உதவிப் பின் காவலர் கையில் பட்டு பணப்பையைக் கேட்டான். வயோலா விழிக்க அவனைக் காவலர் கொண்டேகினர்.

இன்னொரு புறம் ஸெபாஸ்தியனை வயோலா என்றெண்ணி உரையாடிய ஒலிவியாமீது ஸெபாஸ்தியன் காதல் கொள்ள, அவர்கள் மணம் செய்து கொண்டனர். பின் அவனைத் தேடி ஒலிவியா ஆர்ஸினோவிடம் வந்து வயோலாவைக் கணவனென் றழைத்தாள். அதே சமயம் காவலருடன் அந்தோனியோவும் வந்து வயோலாவை ஸெபாஸ்தியனென்றெண்ணித் தன்னை ஏமாற்றியதாகக் கூறினான். சற்று நேரத்தில் ஸெபாஸ்தியன் வரக் குழப்பம் அகன்றது. ஆர்ஸினோ பயனற்ற ஒலிவியா’ காதலை விடுத்து வயோலாவைக் கடிமணம் செய்து கொண்டான் .

1. உடன் பிறந்தார் பிரிவு

மெஸ்ஸலின் ‘ என்ற இடத்தில் ஸெபாஸ்தியன் 2 என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வயோலா’ என்பவள் தங்கை. இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள். ஒரே உருவமும் தோற்றமும் உடை யவர்கள். ஆண் பெண் என்ற முறையில் அவர்கள் நடை உடை முதலியவற்றாலல்லது அவர்களைப் பிரித்துணரல் அரிது.

அவர்களிருவரும் கடலிற் பயணம் செய்து கொண்டிருக்கையில் இல்லிரியா என்ற நாட்டினரு கில் வந்து அவர்கள் கப்பல் உடைந்து போயிற்று. பலர் கடலில் மூழ்கி இறந்து போயினர். கப்பல் மீகாமன் சிலரை மட்டுமே படகு மூலம் காப்பாற்ற முடிந்தது. அங்ஙனம் காப்பாற்றப்பட்டவர்களுள் வயோலாவும் ஒருத்தி. ஆனால் ஸெபாஸ்தியன் என்ன நிலையை அடைந்தான் என்பது விளங்க வில்லை. வயோலாவுக்குத் தான் பிழைத்ததால் ஒரு சிறிதும் களிப்பேற்படவில்லை. தன் அண்ணனைப் பற்றிய கவலையே முகத்திற் குடிகொண்டிருந்தது.

அக் கப்பலின் மீகாமன் அருள் நிறைந்த உள்ளமுடையவன். வயோலாவுக்கு அவன் தேறு தல் கூறி, “ஸெபாஸ்தியன் இறந்திருக்க முடியாது. ஒரு பாய் மரத்தைப் பற்றிக்கொண்டு அவன் மிதந் ததை நான் கண்டேன். ஆனால் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிலரைப் படகில் கொண்டுவந்து விட்டு அவனைப் போய்ப் பார்க்கு முன், இருட்டில் அவன் எங்கேயோ மறைந்துவிட்டான். அவன் நீரில் மூழ்கியிருக்க மாட்டான் என்பதை மட்டும் நான் உறுதியாய்ச் சொல்ல முடியும். ஏனெனில் அவன் பற்றியிருந்த பாய்மரம் அங்குக் காணப்பட வில்லை” என்றான். அது கேட்டு வயோலா ஒரு வாறு தேறுதல் அடைந்தனளாயினும், உடன் பிறந்தான் பிரிவால் நேர்ந்த துயரம் மட்டும் மனத் தில் மாறாதிருந்தது.

இதற்கிடையில், இனித் தான் என்ன செய்வது என்ற கவலையும் இன்னொரு புறம் அவளுக் குண் டாயிற்று. மீகாமனிடம் அதுபற்றி அவள் உரை யாடலாயினள்.

வயோலா : ஐயா , இந் நாட்டின் பெயர் முதலிய விவரங்கள் உங்களுக்குத் தெரியுமா?

மீகாமன் : நான் இந் நாட்டிலேயே பிறந்தவன். ஆகலால் இதனை நன்கு அறிவேன். இதன் பெயர் இல்லிரியா என்பது. இந்நாட்டை ஆர்ஸினே என்பவர் ஆள்கின்றார்.

வயோலா : ஆர்ஸினோ நெடுநாள் மணமாகா திருந்தவர் என்று என் தந்தை கூற நான் கேட் டிருக்கிறேன். அவர் அரண்மனையில் ஏதேனும் பணி பெற முடியுமா என்று நான் அறிய விரும்பு கிறேன். அவர் இப்போது என்ன நிலையிலிருக் கிறார்?

மீகாமன் : இப்போதும் அதே நிலையிலேதான் இருக்கிறார். அதற்குக் காரணம் ஒலிவியா) என்ற ஓர் உயர்குல மாதினிடம் அவர் வைத்துள்ள பற்று தல் ஆகும். ஒலிவியா வின் தந்தை ஓராண்டிற்கு முன்னதாக இறந்து போனார். அதன் பின் தந்தை யினிடம் வைத்த பற்றுதலையுஞ் சேர்த்து அவள் தமையனிடம் மிக்க அன்பு காட்டினாள். அண்மை யில் அவனும் இறந்துபோகவே, அவள் ஆற்றொணாத் துயரில் மூழ்கி அதுமுதல் ஆடவர் முகத்தி லேயே விழிக்காது வீட்டினுள் அடைப்பட்டுக் கிடக் கிறாள். ஆர்ஸி னோ அவளையன்றி வேறெவளையும் மணப்பதில்லை என உறுதிகொண்டுள்ளான். ஆனால் அவளோ அதற்கு நேர்மாறாக யாரையும் மணப்ப தில்லை என்று கூறிக்கொண்டு, அவனுடைய தூதர் களைக் கண்கொண்டு கூடப் பாராமல் தடைப்படுத்தி வருகிறாள்.

வயோலா : ஓ, அப்படியானால் நான் இந்த ஒலிவியாவிடம் சென்று அவளிடம் பணி ஏற்க முடியுமன்றோ ?

மீகாமன் : அங்ஙனம் முடியுமென்று எனக் குத் தோன்றவில்லை. ஏனெனில், இன்றிருக்கும் நிலையில் ஒலிவியா யாரையும் புதிதாக வரவேற்கவும் மாட்டாள். நட்புக் கொள்ளவும் மாட்டாள்.

வயோலா : அப்படியானால் நான் முதலில் எண்ணியவாறாகவே ஆர்ஸினோ அரசர் அரண் மனையிலேயே பணிதேட வேண்டியது தான்.

மீகாமன் : ஆம். ஆனால் நீயோ சிறுமி. உலகின் சூது அறியாதவள். ஆகவே இப் பெண் உடையில் செல்வதைவிட ஆண் உடையில் செல்வதே பாது காப்பாயிருக்குமென்று எண்ணுகிறேன்.

வயோலா இவ்வுரையை நல்லுரையாகக் கொண்டு அதன்படியே நடப்பதாக ஒப்புக்கொண் டாள். அதன்பின் அவள் விருப்பப்படி மீகாமன் அவள் அண்ணனது உடையை ஒத்த ஆணுடை களை வாங்கி அவளுக்குக் கொடுத்தான். அதோடு அரண்மனையில் தனக்குத் தெரிந்தவர்கள் வாயிலாக அவளுக்கு அரசனுடைய தோழமைப் பணியையும் தேடிக் கொடுத்தான்.

இப் புதிய ஆணுருவில் வயோலா தனது பெயர் ‘ஸெஸாரியோ’ என்று வைத்துக்கொண்டாள்.

2. காதலின் தன்மறுப்பு

வடிவழகனும் உயர்நடை உடையவனுமாகத் தோற்றிய ஸெஸாரியோ என்ற இவ் வயோலா விடம் ஆர்ஸினோ அரசன் மிகுந்த மதிப்பும் நட்பும் உடையவனானான். வயோலாவும் ‘இதற்கேற்பத் தன் கடமைகளைச் சரிவரச் சுறுசுறுப்புடன் செய்து வந்தாள். ஆர்ஸினோ அவளிடம் தோழமை பூண்டு அவளிடம் மனந்திறந்து தன் காதல் காதல் கதையையும் உரைக்கலானான். அதைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆர்ஸினோவிடம் மதிப்பு மிகுந்தது. இத்தகைய காதலை உதறித் தள்ளும் ஒலிவியாமீது அவளுக்கு ஒருவகையான வெறுப்பும் ஏற்பட்டது. அவள், அவன் காதல் துயரத்தைத் தணிக்கப் பலவகையாக ஆறுதல் மொழிகள் கூறி னாள். அப்போது அவள், ” இத்தகைய தங்கள் காதலை ஒலிவியா ஏற்கவில்லை என்று சொல் வதை நான் நம்பக்கூடவில்லை” என்றாள் : இது கேட்டதும் ஆர்ஸினோ மனத்தில் ஓர் எண்ணம் உண்டாயிற்று. ‘தன்மீது இவ்வளவு நம்பிக்கை யுடைய இவ் இளைஞனையே அனுப்பி ஏன் தன் காதலை அவளுக்குத் தெளிவாக்கக்கூடாது” என்று அவன் நினைத்தான். வயோலாவின் நேரிய தோற் றம், இன்சொல் முதலியவை தன்னை வென்றது போலவே ஒலிவியாவின் உறுதியையும் வெல்லக் கூடும் என்று அவனுக்குப்பட்டது.

இப்போது வயோலாவின் மனம் இருதலைப் பட்டு வருந்தியது. ஆர்ஸினோவின் நேர்மை, உயர் குணம், அவன் காதலின் ஆழம் இவற்றைக் கண்ட பின், அவள் தன் உள்ளத்தையே அவ னுக்குப் பறிகொடுத்துவிட்டாள். ஆனால் அவள் பெண் என்று கூடத் தெரியாமல், ஆண் என்று நினைத்த ஆர்ஸினோ , அவள் காதலை அறியாத துடன் மட்டு மல்லாமல் தன் காதலை மறுக்கும் இன்னொருத்தியிடம் அதனை வளர்க்கும்படி அவளை அனுப்ப எண்ணினான். தன்னையும் அறியாமல் அவள், “அரசே, நீங்கள் ஒலிவியாவைக் காத லிப்பது போலவே தங்களை ஒரு பெண் காத லிப்பதாகவும், நீங்கள் மாறாக அவளைக் காதலிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது, அவள் நீங்கள் மறுப் பதை ஏற்றுக்கொண்டு உங்களை மறந்துவிடவேண் டும் என்றுதானே சொல்வீர்கள். ஒலிவியா இப் போது அப்படித்தானே சொல்கிறாள். அதனை ஏற்று அவளை மறப்பதன்றோ நல்லது” என்றாள். ஆனால் இவ் வழக்கு ஆர்ஸினோவுக்கு ஏற்புடைய தாகத் தோன்றவில்லை. “நான் ஒலிவியாவைக் காத லிப்பது போல் ஒரு பெண் என்னைக் காதலிப்பது முடியாத காரியம். எனவே, ‘ அப்படி வைத்துக் கொள்வோம்’ என்று பேச இடமேயில்லை. இது மறக்கமுடியாத காதல் ; எனவே, மறுக்கமுடியாத காதல்” என்றான் அவன்.

வயோலா : அரசே , நீங்கள் அப்படிச் சொல் வதற்கில்லை. என் நடைமுறை அறிவிலேயே…

ஆர்ஸினே : சரி, சரி, அப்படி வழிக்குவா. உன் நடைமுறை அறிவிலேயே நீ காதலை நன்றாய் அறிந்தவன் என்று புலப்பட்டுவிட்டது.

வயோலா : ஆம், ஒரு பெண் ஆடவனைக் காத லிக்கும் காதல் எத்தகையது என்பதை நான் நன் றாய் அறிவேன். என் தந்தைக்கு. ஒரு புதல்வி உள்ளாள். அவள் ஒருவரை உண்மையாகக் காத லிப்பவள். நான் ஒரு பெண்ணாயிருந்து உங்கள் காதலுக்குச் சரியாக உங்களைக் காதலிப்பதானால் கூட அவளை விட மிகுதியாகக் காதலிக்க முடியாது.

ஆர்ஸினே : ஆ! நீ வேறு காதற் கதைகள் வைத்திருக்கிறாயா! சரி, அவள் காதல் என்னா யிற்று ?

வயோலா : என்னாயிற்று, ஒன்றும் ஆகவில்லை. அவள் தன் காதலை யாரிடமும் வெளியிட்டுக் கூறினா ளில்லை. ‘ அரும்பினுள்ளிருந்து அதனை அழிக்கும் புழுப்போல அவள் நெஞ்சகத்தே அது கிடந்து அவள் இளமை நலனை அரித்துத் தின்றது. அவள் பெருமூச்சு விடுவாள் ; ஆனால் வாய்விட்டு ஒரு மொழியும் பேசாள். அவள் பொறுமையே உரு வாக நின்று துயரமாகிய தெய்வத்திற்குத் தன்னை இரையாக்கினாள்’ என்றாள்.

ஆர்ஸினோ இப் பேச்சைத் தொடர்ந்த வேறு கேள்வி கேட்கு முன் ஒலிவியாவிடம் தூதாக அனுப் பப்பட்ட ஒருவன் வந்தான். ‘ஐய, அவளை நேரில் பார்க்கக் கூடவில்லை. தோழிவாயிலாக அவள் தந்த விடை இது. !’ என் தமையன் இறந்து ஏழு ஆண்டு செல்லும் வரை காற்று, வெயில் முதலியவற்றின் முகத்தில் கூட விழிப்பதில்லை என்று நான் நோன்பு கொண்டுள்ளேன். அத் தமையனது நினைவைத் தூண்டி வரும் இவ்வீட்டை அதுவரை எனது கண்ணீரால் கழுவிவர எண்ண முடையேன்!” இது அவளது மாறா உறுதியாம்? என்று அவன் கூறினான்.

இம் மொழிகளைக் கேட்டதும் ஆர்ஸினோ, “ஆ, என்ன பெண்மை! அண்ணனுக்கு இத்தனை அன்பு செலுத்துகின்றவள், மாரன் கணை மட்டும் அவள் நெஞ்சிற் பாய்ந்து நோய் செய்வதாயின் அந் நோய்க்கு மருந்தாய் வருந் தலைவனிடம் எவ்வளவு அன்பு கொள்ள மாட்டாள்!” என ஒலிவியாவைப் புகழ்ந்தான்.

அதன் பின் அவன் வயோலாவைப் பார்த்து, ” என் அருமை ஸெஸாரியோ, என் உள்ளத்தின் உட்கிடக்கை முற்றும் ஒளியாது உனக்கு உரைத்து விட்டேன். ஆகவே, நீ என் நட்பினை ஒரு பொருட் டாகக் கொண்டு ஒலிவியாவினிடம் செல்வாய்; சென்று, அவள் உனக்கு உட்செல்ல இணக்க மளிக்கவில்லையாயினும் விடாப்பிடியாய், இங்கேயே வேரிட்டு நிலைத்துவிடுவேன் என்று முரண்டி என் காதற்பிணிக்கு மருந்து பெற்று வருவாய்,” என்றான்.

வயோலா : அரசே! தங்களுக்காக நான் செய் யித் தகாத தொன்றுமில்லை. ஆயினும், இவ் வகை யில் நான் செய்யக்கூடியதென்ன? தாங்கள் சொல்வது போலப் பிடிமுரண்டாயிருந்து உட் செல்ல இணக்கமே வந்துவிட்டது என்று வைத் துக் கொள்வோம் ; அப்பொழுதுதான் என்ன ஆய்விட்டது!

ஆர்ஸினே : உன் திறனைப்பற்றி நீ அவ்வள வாக அறியமாட்டாய். இதுவரை என் காதலைத் திறம்பட உன் போன்றார் எடுத்துக் கூறாக் குறை தான் அவள் என் பக்கம் இன்னும் நாடாதது. நீ பொற்பும் இனிமையும் மிக்க தோற்றமுடையாய்! அதோடு, காதலின் உயிர் நாடியை அறிந்து, நயத்துடன் மருந்துதவும் மருத்துவன் போன்றவனாயுந் திகழ்கின்றாய். ஆடவனாகிய என்னை வென்ற நீ பெண்ணாகிய ஒலிவியாவை வெல்வது அருமை யன்று என்று நான் அறிவேன்.

வயோலா மனத்திற்குள், ‘ஆ’ ஆடவரைத் தான் நான் வெல்ல விரும்புகின்றேனேயன்றிப் பெண்டிரை வெல்ல விரும்பவில்லையே’ என்று நினைத்துக்கொண்டாளாயினும், வெளிப்பட “என்னாலானவரை அவ் ஒலிவியாவின் கல் மனத்தைக் கரைக்க முயல்வேன்”, என்று கூறிவிட்டுச் சென்றாள். ஆயினும் அவள் கால்கள் ஒவ்வோரடியும் முன் செல்லுந்தோறும் இரண்டடி பின் செல்ல வேண்டும் என்று நினைத்தனவென்றே கூறவேண்டும்.

3. மாற்றுருவால் நேர்ந்த மாயக் காதல்

ஆர்ஸினோவிடமிருந்து மீண்டும் இளைஞன் ஒருவன் வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டதும் ஒலிவியா பணிப்பெண்ணைச் சினந்து, ” அதை என்னிடம் வந்து சொல்வானேன். அவளுக்கு உடம்புக்குக் குணமில்லை ; துயில்விட்டு எழவில்லை; குளிக்கிறாள் என்று ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிடுகிறது தானே,” என்றாள்.

பணிப்பெண் : நான் சாக்குப் போக்குகள் என் னென்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவற்றை யெல்லாம் சொல்லிப் பார்த்தாயிற்று, அம்மணி! அவன் ஒவ்வொன்றுக்கும் நம்மைவிடத் திறம்பட வாயடைத்துப் பேசிக்கொண்டு இங்கேயே இருப் பேனென்று காத்திருக்கிறான். அவளுக்கு உடம்பு நலமில்லை என்றால், அதையறிந்து நலஞ் செய்யவே வந்திருக்கிறேன் என்கிறான். துயிலுகின்றாள் என்றால், அவளைத் துயிலினின்றும் உணர்த்துவேன் அல்லது துயிலுணரும் வரையிற் கார்த்திருந்து பார்ப் பேன் என்று இருப்பதாகக் கூறுகிறான். அவள் இன்னும் குளித்து உணவருந்தவில்லை என்றால், அதற்கென்ன, நான் குளித்து உணவருந்தியாயிற்று ; ஆதலால் பொறுமையுடன் மெல்ல குளித்து உண்டபின் பார்த்துக்கொள்வேன் என்கிறான். இனி என்ன சாக்குப் போக்குச் சொல்வதென்று விளங்கவில்லை. அதனாலேதான் உங்களிடம் வந்தேன்.

ஒலிவியா : அப்படியா, பெண்களிடமும் இப் படித் திறங்காட்டும் அந்த மனிதனைச் சற்றுப் பார்க்க வேண்டுந்தான். அவனை வரச்சொன்ன தாகச் சொல்.

துறக்கவாசல் திறந்துவிட்டது ; இனி இறைவி யின் அருள் ஒன்றே வேண்டும்.

பெண்மையில் ஓர் ஆண் அழகும், ஆண்மை பில் ஒரு பெண்ணழகுந் தோன்ற வயோலா வணங்கிய வடிவுடன் மெல்லென உட்புகுந்தாள்.

வயோலா : ஒளியும் பொலிவும் ஒப்பற்ற அழ கும் உடைய நங்கையே! உனக்கு வணக்கம். நான் பேசப் புகுமுன் நீதான் இவ்விடம் கோயில் கொண்ட இறைவி என்பதை உறுதியுடன் அறிய விரும்புகிறேன். ஏனெனில், நான் பேச வந்த மொழிகள் வேறெவர் காதிலும் விழத்தகாத பொன்மொழிகள். இதற்குமுன் எவரும் இத்த கைய மொழிகள் கேட்டி ரார். இதனை வழுவாது சொல்லவேண்டுமென்றே திருத்தமுற எழுதிப் பல கால் உருவிட்டுப் படித்து வந்துள்ளேன். ஆதலால் அருள் கூர்ந்து, நான் நாடிவந்த இறைவி நீயே என் பதை வலியுறுத்தக் கோருகிறேன்.

ஒலிவியா : அங்ஙனம் எழுதிப் படித்துப் பேச வருவதற்கு ஈதென்ன நாடக மேடையா? நீர் என்ன நாடகக்காரரா?

வயோலா : நாடகக்காரனல்லேன். ஆயினும், இன்று நடிக்கும் நடிப்பு என்னது அன்று தான். நான் என் முன் காண்பது இவ்வீட்டின் இறைவியைத்தானா என்பதைத் தெரிவிக்கும்படி மீண்டுங் கோருகிறேன்.

ஒலிவியா : ஆம்; இறைவிதான்.

வயோள : ஆர்ஸினோவின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இறைவிக்கு வணக்கம்.

இறைவி! நான் வந்த செய்தியைக் கூறுமுன் இன்னொரு நலனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

என் போன்றார் நட்பைத் திறை கொண்ட இறைவனையே திறையாகக் கொண்டது தங்களது திங்கள் முகம்! அஃது எவ்வாறிருக்குமோ என்பதை நான் சற்றுப் பார்க்கலாமா?

வயோலா உட்புகுந்த பொழுதே மாரன் தன் கருப்புவில்லைக் கையிலெடுத்தான். அவள் பேசத் தொடங்கிய போதே அவன் வில்லை வளைத்துவிட் டான். இம் மொழிகள் அவள் செவியில் விழா முன்

அவனது மலர்க்கணை ஒலிவியாவின் நெஞ்சை ஊடுருவிற்று. அவள் உடனே திங்களின் பரி வட்டம் போன்ற தனது மெல்லிய முகமூடியை ஒதுக்கினாள். திங்களின் பின் புறம் கதிரவன் ஒளிந்து கொண்டால் எப்படியோ அப்படி அவள் முகம் ஒளி வீசிற்று.

ஒலிவியா : சொல் நய மிக்க செல்வரே! நீர் என் முகத்தைப் பார்க்க விரும்புவதேன்? உம்முடைய தலைவர் உம்மை இம் முகத்தினிடமா தூதாக அனுப்பினார் ? சரி, என் முகத்தைப் பற்றிய உமது எண்ணமென்ன?

வயோலா : அதன் அமைப்பு நான் முகன் கைக்கு ஒரு நற்சான்றே. பொன்மையும் செம்மை யும் நீலமும் இடையிடை இட்டுக் கலந்த இவ் வொப் பற்ற ஓவியம் மனிதர் கையால் என்றுந் தீட்டுந் தரத்ததன்று. ஆம், என்ன அருமையான அழகு! இத்தகைய அழகை உலகிற்குக் காட்ட வந்த நீ அதன் மாதிரியை உலகத்திற் படியவிடா தது எவ்வளவு கொடுமை!

ஒலிவியா : நீர் என்ன தூதரா, கவிஞரா? என் அழகைப் பார்த்துக் குறிப்பெடுத்து வரவா உம் தலைவர் உம்மை அனுப்பினார் ? அப்படியானால் உமக்குத் துணை செய்கின்றேன். இதை எழுதிக் கொள்ளும். கொவ்வைப்பழம் போன்ற இதழ்கள் இரண்டு ; கதிரொளியோடிய வானொத்த நீலக்கண் களும் அவற்றைக் கவிந்து பொதிந்த இமைகளும் இரண்டிரண்டு ; எட்பூவொத்த மூக்கு ஒன்று; இவ்வளவு போதுமா?

வயோலா : உனது தற்பெருமை ஏட்டிலடங்கா தது; ஆனால் உன் அழகும் அப்படியே. அதில் விழுந்து என் தலைவர் அழுந்துகிறார். ஓ! அவர் காதல் துயரை நான் அறிவேன்! நீ மட்டும் அவர் காதலுக்கு இணையாகக் காதல் தர முடியுமாயின், எவ்வளவு நன்றாயிருக்கும் ! ஆனால் அக் காதலுக்கு இணை ஏற்படல் அரிதினும் அரிது. அழகினுக்கு அரசியாய் விட்ட நீ கூட அக் காதலைத் தாங்குதல், அதற்குத் தகுதியுடையவளாதல், கூடியதன்று. வானின்று பொழியும் மழை அவர் காதற் கண்ணீர்ப் பெருக்கிற்கு இணையன்று ; கடலின் இரைச்சல் அவரது நெஞ்சகத்து ஏற்படும் பேராரவா ரத்தினுக்கு ஈடன்று ; அவரது பேருயிர்ப்பு வடவைத் தீயினும் வெம்மையானது.

ஒலிவியா : இத்தகைய கவிதைகளாற் பய னென்ன? உம்முடைய தலைவருக்கு எனது முடி வைத்தான் நான் தெரிவித்துவிட்டேன். அவ ரிடம் எனக்குக் காதலில்லை. அவர் நற்குணம் உடையவர் ; பெருந்தன்மையுடையவர் ; தூய இள மை நலம் உடையவர். ஆயினும் அவரிடம் என் மனம் செல்லவில்லை. அவர் வீரர் என்றும், அறிஞர் என்றும் அன்புடையவர் என்றும் நாற் புறத்தாரும் புகழும் புகழை நான் கேளாமலில்லை. ஆனால் என் மனம் அவரை நாடவில்லை! இந்த ஒரே முடிவை நான் இன்னும் எத்தனை தடவை சொல்ல வேண்டும்?

வயோலா : நீ எத்தனை தடவைதான் சொல் லேன்! அதனை அவர் ஏற்கமாட்டார். அவர் உன் னிடங் கொண்ட காதலை என் போன்ற எளியோர் கொண்டால் உன் வாயிலில் வேங்கையாய் நிற் பரேயன்றிப் போகமாட்டார். காற்றில் இலைகள் ஆடுந்தோறும் வேங்கைமரம் அகவுவது போல உன் பெயரையே கூறிக்கொண்டிருப்பார். காதற் பாட்டுக்கள் வரைந்து பாடுவர் ; காற்றும், மர மும், குன்றும், மேடும் ஒலிவியா, ஒலிவியா என்று ஒன்றுபோலக் கத்தும்படி செய்வர். ஐம்பெரும் பூதங்களுங் கூடி உன்னைத் தம்மீது இரங்கவைக்கும் படி செய்வர்.

ஒலிவியா : நும் போன்றவர் பலவும் செய்யக் கூடியவரே. உமது குடியாதோ?

வயோலா : என் குடி நற்குடியே. நீ காணும் கிலையினும் உயரியதே. நான் ஒரு நன்மகன்.

ஒலிவியா : அப்படியா, நல்லது ; உமது தலை வரிடம் போய் என் முடிவை வழுவறக் கூறி, அவள் உம்மைக் காதலிக்க மாட்டாள் ‘ என்று தெரிவித்து விடும். ‘இனி இப் பக்கம் ஆள் அனுப்ப வேண் டாம்’ என்றும் உறுதியாய்க் கூறிவிடும்.. ஆயி னும் நீர் –நீர் இன்னொரு தடவை வந்து, வேண்டு மானால் அவர் நிலைமையை அறிவிக்கலாம்.

வயோலா இனி நிற்பது பயனற்றதெனக் கரு. தித் திரும்பலானாள். ஆனால், ஒலிவியாவுக்கு அவள் போவது தன் உயிர் போவது போன் றிருந்தது. உள்ளே ததும்பிநின்ற காதலால் தூண்டப்பெற்ற குறிப்புடன், அவள் ஆர்ஸி னோவுக்கு மறுப்புக் கூறும் மொழிகளோடு அவளுக்கு அழைப்பும் மறைவாகத் தந்தாள்.

4. மாரன் விளையாட்டுகள்

அவள் போனபின் ஒலிவியா மீண்டும் மீண் டும் ” என் குடி நற்குடியே ; நீ காணும் நிலையினும் உயரியதே; நான் ஒரு நன் மகன் ” என்ற மொழிகளைத் தனக்குள் சொல்லிச்சொல்லி நினை வில் ஆழ்ந்துவிடலானாள். திடீரெனச் சில சமயம் ‘ஆம், அவர் உயர் குடியினர் என்பதற்கு ஐய மிருகக முடியாது. அவர் பேச்சு, அவர் தோற்றம் அவர் சாயல், அவர் நடை, அவர் செயல் ஆகிய யாவும் அவர் ஒரு நன் மகனே என்பதை எடுத்துக் காட்டுகின் றன ‘ என்பாள். ‘ இந்த அரசர் என் னைக் காதலிப்பதில் எத்தனை பிலொரு பங்கேனும் இவர் என்னைக் காதலிக்கக் கூடாதா’ என்பாள். சில சமயம் ‘ஆ,’ அவர் நிலைமையை ஆய்ந்தோய்ந்து பாராது இப்படிக் காதல் வெள்ளத்துள் குதித்து விட்டேனே ‘ என்று நினைப்பாள். ஆனால் அப்படி புத்தகம்) பன்னிரண்டாம் இரவு யும் இப்படியும் அலையும் அவள் உள்ள நினைவுகள் அனைத்தும் ‘ஸெஸாரியோ ‘ என்ற வயோலாவின் ஆண் உருவைச் சுற்றியே வட்டமிட்டன.

வழியில்லா இடத்தும் காதல் வழி செய்யும் இயல்பின தன்றோ? எனவே, அவள் பொறுமை யிழந்தாள். பெண்களுக் கியற்கையான நாணம் துறந்து, தனக்கும் தான் கருதிய இளைஞனுக்கும் உள்ள உயர்வு தாழ்வையும் பொருட்படுத்தாது, நேரடியாக ஸெஸாரியோவுக்குத் தன் காதலை அறி விக்கத் துணிந்தாள். அதன்படி ஒரு பணிப் பெண்ணினிடம் ஒரு வைரக் கணையாழியைக் கொடுத்து, ‘ இஃது ஆர்ஸினோவுடையது; இப்போது வந்த இளைஞர் இதனை மறைவாக இங்கே போட்டு விட்டுப் போயிருக்கிறார். ‘ இத்தகைய கைத்திறன் இங்கே வேண்டா; இதனை உம் தலைவருக்கே கொடுத்துவிடும் ‘ என்று சொல்லி இதனை அவரி டமே கொடுத்து விடு” என்று கூறி அனுப்பினாள்.

இக் கணையாழி உண்மையில் ஆர்ஸினோ அனுப் பியதன்று. ஒலிவியாவினுடையதே. பணிப்பெண் ணுக்குத் தெரியாதபடி அவள் இதன் மூலம் தன் காதலை வயோலாவுக்குக் குறிப்பாக அறிவித்ததே யன்றி வேறன்று.

தான் விடை கொள்ளும்போதே ஒலிவியாவின் உள்ள நிலையை உன்னிப்பாய் அறிந்த வயோலா வுக்கு இப்போது அவ்வெண்ணம் உறுதியாயிற்று. ‘ அந்தோ ! என் மாற்றுருவால் விளைந்த தீவினைகள் தாம் என்னே ! ஒரு புறம் அணுருவில் என் காதலை ஆர்ஸினோ அறியவில்லை. இன்னொருபுறம் அவ் வுருவை உண்மை என்று மயங்கி ஏழை ஒலிவியா இம் மாய உருமீது காதல் கொண்டு விட்டாள்! எனக்காவது ஒரு போக்கு உண்டு. பெண்ணைக் காதலித்த பெண்ணே, உன் நிலையாதோ? என அவள் எண்ண மிடலானாள்.

ஆர்ஸினோ ஒலிவியாவின் மொழிகேட்டு மனம் உளைந்தான் ; ஆனால் காதலால் கனிவுற்ற உள்ளம் முறிவு பெறாது, பன்னிப் பன்னி மீண்டும் வயோ லாவை அவளிடம் அனுப்பவே எண்ணங் கொண் டது. அரசர்க்குரிய போரும் வேட்டையும் நீத்து அவன் ஒலிவியாவின் பெயரிலும், காதற்பாட்டுக் களிலுமே பொழுதைப் போக்கி வந்தான். பாணர் அவன் பக்கமிருந்து ஓயாது யாழ்மீட்டி அத்தகைய பாட்டுக்களை மீண்டும் மீண்டும் பாடி அரசனைச் சுற்றிலும் காதல் புகையும் துயரப் புகையும் பரப்பி வந்தனர்.

(பாட்டு)
1. வருதி, வருதி, மறலி! நீ
வந்து பைம்பணை ஏற்றியே
அரிதின் எனைக்கொ டேகுவாய்!
அணங்கினாலுளம் நைந்துளேன் ;
விரிது கில்கவித் தோலையும்
வேய்ந்தி டாய்! எரி காய்ந்திடாய்!
நரிகள் சூழ்சுடு காடென் போல்
நயந்து ளார் எவர் ? தோய்ந்திடாய்!

2. மலர்கள் நறிய மலர்களை
வந்தென் பாடையில் தூவலீர்!
பலரும் நண்பர் என்னவே
பண்பின் எலும்பு பொறுக்கலீர்
கலந்து நூறு பேர் அழல்
கருதிலேன், ஆ, கருதிலேன்!
மெலிந்த காத லார்கணீர்
விழைந்திலேன்! ஆ, விழைந்திலேன்

காதலா லுடைந்த உள்ளத்தின் நிலைமையை எடுத்துரைக்கும் துயர்மிக்க இவ் வுருக்கமான பாடல் வயோலாவின் உள நிலைக்கும் ஒத்ததாகவே இருந்தது. அதன் துயர் அவள் உள்ளத்திற் புகுந்து முகம் வழியே வெளிப்படக் கண்ட ஆர்ஸினோ ‘ என் அரிய ஸெஸாரியோ, நீ பிறர் காதலை யன்றி நேரடியாகவே காதலை உணர்ந் தவ னல்லையோ?’ என்றான்.

வயோலா : மன்னிக்கவும், அரசே! அமிழ்தினும் இனிதாய் நஞ்சுபோல் கெடுக்கும் அக்கனியின் சுவையை நானும் சற்று அறிந்துள்ளேன்,

ஆர்ஸிறே : நீ காதலித்த பெண் எப்படிப் பட்டவள் ? அவள் ஆண்டு எவ்வளவு இருக்கும்?

வயோலா: அவள் தங்கள் உயரம், தங்கள் சாயலாகவே இருப்பாள். அவள் ஆண்டும் தங்கள் அளவே இருக்கும்.

வயோலாவின் உருவிற் கரந்திருந்த உள் ளுறை உண்மையை அறியாத ஆர்ஸினோ இது கேட்டு, ‘இச்சிறிய இளைஞ னெங்கே, என்னளவு வளர்ந்த மாதெங்கே- என்னளவு ஆண்டில் ஒரு மாது பேரிளம் பெண்ணாக அன்றே இருப்பள் ‘ என எண்ணங்கொண்டு வியப்பு ஒருபுறமும் நகைப்பு ஒருபுறமுங் கொண்டான்.

தான் ஆர்ஸினோ போன்ற பெண்ணைக் காத லித்ததாக வயோலா கூறியபோது அவள் உண்மை யில் மனத்துக் கொண்டது தான் பெண், தான் காதலித்த ஆடவன் ஆர்ஸினோ என்பதேயாம்.

ஒலிவியா வயோலா வரவை எதிர்ப்பார்ப்பதை அவள் பணிப்பெண்களும் பணியாட்களும் எளி தில் அறிந்து கொண்டனர். ஆகவே, அவள் மறுமுறை வந்தபோது அவர்கள் அவளைத் தடை யின்றி : வரவேற்று உள் அனுப்பினர். ஆனால் வயோலா ஆர்ஸினோவின் பேச்செடுத்ததும் ஒலி வியா அவள் பேச்சை இடைமறித்து, ‘அவர் காதலுக்காகப் பரிந்து பேசுவதில் பயனில்லை என்று தான் முன்னமே கூறிவிட்டேனே. அதை விடுத்து, நான் கனவு கண்டு கொண்டிருக்கும் காதலின் பேச்சை யெடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று நயந்து கூறினாள். வயோலா அக்குறிப்பை யறிந்தும் அறியாதவள் போலிருக்கவே அவள் நாண் துறந்து நேரடியாகவே வயோலாவின் காதலை வேண்டி அவள் நாடியைத் தாங்கலா னாள். இதற்கு இன்னும் இடம் கொடுத்தால் தன் நிலை கெட்டுவடும் என்று கண்டு வயோலா அங்கே நின்றும் விரைந்து வெளியேறத் தொடங்கினாள்.

ஒலிவியாவின் பழங் காதலருள் ஸர் ஆன்ட்ரூ ஏக்ச்சீக் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் உயர் குடியுட் பிறந்தவனாயினும் அறிவற்றவன் ; கோழை; வாயாடி ; இவ்வளவு போதாமல் தற் பெருமை வேறு. அவன் உண்மையில் அருவருக் கத்தக்க தோற்றம் உடையவனாயினும் பெண்கள் பலர் தன்னை நினைத் தேங்குவதாக நினைத்துக் களித் துக் கொள்பவன். ஒலிவியாவின் பணிப்பெண்க ளுள் நகைத்திறனும், அறிவு நுட்பமும் உடைய மேரியா என்பவள் அவனைப் பல வகையிலும் எள்ளி நகையாடுவாள். ஸெஸாரியோ ஒலிவியாவின் காதலைப் பெற வந்துள்ளான் என்று அவனிடம் அவள் கூறி அவனை ஸெஸாரியோவுடன் போர் செய்யும்படி தூண்டினாள். அவன் கோழையான தால் போர் செய்ய அஞ்சினான். மேரியாவே விடா மல் அவனைக் கிண்டித் தள்ளிவிட அவன் வேண்டா வெறுப்பாய் வயோலாவிடம் போருக்கு வந்தான். வாளையே காணாத பெண்ணாகிய வயோலாவும் அவனது இயல்பை யறியாமல் வலைப்பட்ட மான் போல் மருள மருள விழித்தாள்.

5. கலங்கிய நீர்

அச்சமயம் எங்கிருந்தோ ஒரு வீரன் வந்து அவளுக்குத் துணையாக நின்று ஸர் ஆன்ட் ரூவைத் துரத்தினான். வயோலா, எதிர்பாரா வகை யில் இறைவன் அருளே வந்ததுபோல் வந்த அவனுக்கு நன்றி கூறினாள். ஆனால் அங்ஙனங் கூறி முடிப்பதற்குள் அரசன் ஆட்கள் அவனைப் பிடித்துக்கொண்டு, ” என்ன ஓடப் பார்க்கிறாய்; இத்தனை நாள் தப்பித் திரிந்தவன் இன்று அகப் பட்டாயா?” என்று கட்டிக்கொண்டு போகத் தொடங்கினர். அப்போது அவன் வயோலாவை நன்கறிந்தவன் போல அவளை நோக்கி, ” இவ்வளவு தொல்லையும் உன் பொருட்டாக ஏற்பட்டதே. சரி, இனிச் செய்ய வேண்டியதைப் பார்ப்போம். நான் திரும்பி வாங்கும் எண்ணமில்லா மலேயே உனக் கெனக் கொடுத்த பணப்பையை இப்போது என் நிலைமையில் கேட்க வேண்டியவனாய் இருக்கி றேன். அருள் கூர்ந்து அதனைத் தந்துதவுவாய்! என்றான்.

வயோலா அவனை முன் பின் தெரியாதவ ளானபடியால் ஒன்றுந் தோன்றாது விழித்தாள். அவன் செய்த உதவிக்கு நன்றியுடையவளாயி னும், அவனையோ அவன் பணப்பையையோ தான் அறிந்தவள் அல்ல ளென அவள் மறுத்தாள். அவன் அதுகேட்டு வெகுளிநகை நகைத்துக் காவ லரைப் பார்த்து, அவளைச் சுட்டிக்காட்டி, “ஆ, உலகம் இருந்தவாறு காணுங்கள், இதோ இச்சிறுவனை இறப்பிலிருந்து மீட்டவன் நான். போதாக் குறைக் குப் பிள்ளை போல் நடத்தி என் பணப்பையை உரி மையுடன் அவனுக்குக் கொடுத்தேன். அவனுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பாழுங் கவலையினாலேயே உயிரையும் பொருட்படுத்தாது இந் நகர் வந்து உங்கள் கையில் சிக்கினேன். இத்தகைய நன்றி யின்மையைப் பார்த்தபிறகு எனக்குச் சிறையைப் பற்றியோ தூக்கைப்பற்றியோ கூடக் கவலையில்லை. இத்தகைய பொய்மை வாழும் உலகிலிருந்து விடுபட வேண்டியதே’ என்று வெறுத்துப் பேசினான். கடைசியாக அவன் காவலருடன் செல்கையில் அவள் பக்கமாகப் பார்த்து, ‘நன்றி கெட்ட ஸெபாஸ்தியன்! என்னை விற்று நீயாவது நன்மை அடைக’ என்று கூறிவிட்டுச் சென்றான்.

ஸெபாஸ்தியன் என்றது வயோலாவின் அண் ணன் பெயர் என்று மேலே கூறியுள்ளோம். வீரன் தன்னை அப் பெயர் கொண்டு அழைத்தவுடன் தன் னைத் தன் அண்ணனாகவே நினைத்திருக்கலாம் என்று வயோலா கண்டாள். எனவே, அண்ணன் உயிருடன் இருக்கிறான் என்றறிந்து கரைகாணா மகிழ்ச்சியுடன் அவள் அரண்மனையடைந்தாள்.

வயோலா நினைத்தது உண்மையே. அவ் வீரன் உண்மையில் அந்தோனியா என்னும் ஒரு மீகாமனே யாவன். இக் கதைத் தொடக்கத்திற் கூறப் பட்டபடி கப்பலுடைந்தபின் பாய்மரத்தைப் பற்றி யிருந்த ஸெபாஸ்தியன் இம்மீகாமனால் காப் பாற்றப்பட்டுப் பிள்ளை போல நடத்தப்பட்டான். ஸெபாஸ்தியன் இல்லிரியாப் பக்கம் அன்று வந்த போது அந்நாட்டைப் பார்க்க விரும்பினான். ஆனால் மீகாமன் அந்நாட்டில் முன் குற்றவாளியாக நாடு கடத்தப்பட்டவன். ஆதலால் தான் உள்ளே வராது ஸெபாஸ்தியனிடம் வேண்டிய பொருள்கள் வாங்கும் படி தன் பணப்பையைக் கொடுத்தனுப்பினான். பின் அவன் வரத் தாமதிக்கவே கவலை கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வருகையில், ஸர் ஆன்ட்ரூவுடன் சண்டைக்கு அஞ்சிநின்ற ஆணுடை யுடுத்த வயோலாவை ஸெபாஸ்தியன் என்று கருதி, அவளைக்காப்பாற்றினான். அப்போதுதான் அரசன் காவலர் அவனை அடையாளங் கண்டு சிறைப்படுத்தியது.

அதே சமயம் வயோலாவின் அண்ணனாகிய ஸெபாஸ்தியன் நகரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு ஒலியாவின் வீட்டுப் பக்கம் வந்தான். அப்போது ஸர் ஆன்ட்ரூ அவனைக் கண்டு முன் அந்தோனியா ‘வால் பாதுகாக்கப்பட்டுப் பிழைத்த வயோலாவும் அவனும் ஒருவரே என்று நினைத்து ஓங்கி அடிக்கப் போனான். உண்மையிலேயே ஆடவனும் வீரனுமான ஸெபாஸ்தியன் அப் பேடியை நொடியில் அடக்கித் தண்டித்தான்.

இச் சமயம் சண்டையின் அரவங் கேட்டு ஒலிவியா வெளியே வந்தாள். அவள் ஸர் ஆண்ட்ரூ வைச் சினந்து எச்சரித்தபின், வெற்றிகொண்டு விளங்கிய ஸெபாஸ்தியனை மெச்சி உள் அழைத் தாள். ஸர் ஆண்ட்ரூவின் பூசல் எப்படியோ அப் படியே ஒலிவியாவின் பாராட்டும் அவனுக்கு வியப் பாயிருந்தது. ஆயினும் ஒலிவியாவின் அழகிலீடுபட் டுக் காதலித்துவிட்ட ஸெபாஸ்தியன் அவளுடன் சென்று அவள் காதலை ஏற்று மகிழ்ந்தான். ஒலிவியாவும் சற்றுமுன் தன்னை வெறுத்துச் சென்ற தன் தலைவன் விருப்புடன் தன்னை ஏற்ற வகை தெரியாவிடினும், அதனை இறையருளாக நினைத்து அவனுடன் அளவளாவினள். அவள் ஏவலால் நொடிக்குள் ஓர் அந்தணன் வந்து அவர்கள் மண வினையையும் முடித்து விட்டான். ஸெபாஸ்தியனுக்கு மட்டும் அவள் முன் பின் அறியாமல் தன்னைக் காத லித்தது கோக்க அவள் மூளைக்கோளாறுடையவளா விருப்பாளோ என்ற ஓர் ஐயம் இருந்தது.

அந்தோனியோ அரசன் முன் கொண்டு நிறுத் தய்பட்டான். அப்போது வயோலா அரசனுடன் நின்றிருந்தாள். அந்தோனியோ அவளைப் பின்னும் ஸெபாஸ்தியனாகவே கருதி அரசனிடம் அவளைச் சுட் டிக் காட்டி, ” என் பிழையை நான் ஏற்றுத் தண் டனை பெறுவதில் ஒன்றுந் தடையில்லை; ஆனால் தங்கள் பக்கம் நிற்கின்றானே, அந்த இளைஞன் நன்றி கொன்றவன் ; மூன்று திங்களாக என்னுடன் இருந்துவிட்டு இன்று என்னை அறியேன் என்று மறுக்கிறான் ; இதன் புதுமையைப் பாருங்கள்” என் றான். அரசன் சிரித்து, “அப்பனே, நீ சொல்வது எப்படிப் பொருந்தும்? இவன் மூன்று திங்களாக என்னுடனேயே இருக்கிறானே ” என்றான்.

இதே சமயத்தில் ‘வெயிலும் காற்றும் என் முகத் தில் விழிக்கமாட்டா ‘என்றிருந்த ஒலிவியா அரச சனை நோக்கி வந்தாள். கடவுளே நேரில் வந்ததைக் கண்ட அடியவர் போல் அரசன் விதிர்விதிர்ப்புடன் “இதென்ன புதுமை ! உன் வரவு என் நல்வினை” என்று வரவேற்றான். ஆனால் அவள் அம்மொழி களைச் செவியில் வாங்காமல் அந்தோனியைாவைப் போலவே வயோலாவை முறைக்க முறைக்கப் பார்த்துக்கொண்டு அரசனிடம், “இதோ நிற்குங் கள்வர் என் உள்ளத்தையும் உயிரையுங் கைக் கொண்டு என்னைத் தனியே புறக்கணித்துவிட்டு, இங்கே உங்களுடன் வந்திருக்கிறார்,” என்றாள். தன் தோழனும் பணியாள னுமான ஸெஸாரியோ ஒலிவி யாவிடம் காதல் தூதாகப் போய்த் தானே அக் காதலை அடைந்து வந்திருக்கிறான் என்று நினைத்து அரசன் அழலெழ வெகுண்டு,” இழிதகைமையை யுடைய சிறுவனே! உன்னை எப்பாடு படுத்து கிறேன் பார்,” என்று பிடித்திழுத்தான்.

வயோலா அந்நேரம் “ஐய, தங்கள் மன அமை திக்கு என் உயிர் உதவுமாயின் தட்டின்றி எடுத்துக் கொள்க ; தங்களதே என் உயிர்,” என்று காதலின் பெருமிதத் தன்மை தோன்றக் கூறினாள். ஆனால் ஒலிவியா , “என் காதலனை – என் உயிரை -ஊறுபட விடேன், என்னையே முதலில் கொல்க, அரசே!” என்று இடையே வந்து நின்று அரசனைத் தடுத் தாள். அதோடு அவள், ‘இவர் என் கணவர். அந் தணர் சான்றாக இவர் என்னை மணந்தவரேயாயினும் எக் காரணத்தினாலோ அடிக்கடி வெறுத்துச் செல்கிறார்,” என்றாள்.

6. முடிவு

இச்சமயம் எல்லாரும் வியக்கும் செய்தி ஒன்று நிகழ்ந்தது. ஒலிவியாவை விட்டுச் சற்று வெளியே போயிருந்த ஸெபாஸ்தியன் திரும்பிவந்து, அவளைக் காணாமல் பின் தொடர்ந்து அரசன் முன் வந்தான். வந்து அவளை அங்கே காணவும், அவளை வெளிப் படையாக மனைவி என்ற உரிமையுடன் அழைத் தான். அவன் எல்லா வகைகளிலும் ஆணுடை யுடுத்த வயோலாவைப்போலவே இருந்ததனால், அவ் விருவருள் ‘யார் தன் கணவர்?’ என அறியாது ஒலிவியா திகைத்தாள். அரசனும் , ‘யார் தன் தோழன்?’ என அறியாதவன் ஆனான். ஸெபாஸ் தியனும் ஆணுடையில் வயோலாவை உணரவில்லை. ஆனால் வயோலாவுக்கு மட்டும், ‘இவன் தன் அண்ணனே!’ என்பது தெளிவாயிற்று. உடனே பேராவ லுடன் அவனருகில் ஓடி அவனைக் கட்டிக் கொண்டு “அண்ணா! நான் வயோலா ; தங்கை வயோலா, இவ்வளவு நாள், நீ வருவையோ, இறந்தனையோ, என்று இருந்தேன்” என்று வாய்விட்டுக் கூறி நின்றாள். அவனும் , “ஆ, வயோலா! நானும் உன்னை இழந்து விட்டதாகவே நினைத்தேன் ; ஆ, ஆ ! திரும்பவும் பெற்றேன்” என்று மகிழ்ந்து ஆர வாரித்துரைத்தான்.

ஒலிவியாவுக்கும் அரசனுக்கும் இப்போது உண்மை விளங்கத் தொடங்கிற்று. தன்னிடம் தூதனாக வந்தவன் ஆணல்லன்; பெண்ணே யென் றறிந்து ஒலிவியா முதலில் வெட்க முற்றனள். ஆபி னும், உண்மையில் அவளே போன்ற ஸெபாஸ்தி யனை அடைந்ததனால் நிறைவெய்தினாள். அரசனுக்கு இப்போது, முன் ஆணுருவில் வயோலா கூறிய அவள் காதலின் உணமைத் தன்மை தெரியவே, கானல் நீர்போல் ஒலிவியாவின் காதல் மறைந்து வயோலாவின் உயரிய காதலையே பெறவேண்டு மென்னும் விருப்பு ஏற்பட்டது. வயோலாவுக்கு அது பாலில் பழம் நழுவியதெனப் பெரு மகிழ்வு அளித்தது.

ஸெபாஸ்தியனுக்கும் ஒலிவியாவுக்கும் மணம் புரிவித்த அதே அந்தணன் அரசனுக்கும் வயோ லாவுக்கும் மணவினை நிகழ்த்தினான்.

மேரியாகூட அவளது ஏளனத்திற்கு ஆளா யிருந்த ஸர் ஆன்ட்ரூவை மணந்து கொண்டாள்.

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (நான்காம் புத்தகம்), முதற் பதிப்பு: 1945, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *