(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
சிநேகமாக்கிக்கொள்ளத் தக்கவர்களை ஆராயும் திறம்
ஒரு மூடன் ஒரு செட்டியுடனே கூடிக்கொண்டு சினேகமாக இருவரும் பயணம் பண்ணினார்கள். பண்ணும்போது இரவு வந்துவிட்டதால் அந்த மூடன் வழியில் படுத்துக்கொண்டான். அப்பொழுது செட்டி பக்கத்தில் உள்ள ஒரு மரத்தின் மறைவில் படுத்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அந்த வழியிலே போகிற கள்வர் காலிலே இந்த மூடன் கால் பட்டது. ஒரு கள்வன், “இது என்ன? கட்டை போல் இருக்கிறது” என்றான். அம்மூடன் கோபங் கொண்டு “டேய் மடையா!, உன் வீட்டுக் கட்டை பணம் முடித்துக்கொண்டு இருக்குமா?” என்றான். கள்வர் அவனை உதைத்து அவனிடம் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றார்கள். போம் போது இந்தப்பணம் நல்லதோ? கெட்டதோ என்றார்கள். அவன் அதைக்கேட்டு நல்லது, கெட் டது என்று அறியும் பொருட்டு நாவல்மரத்தின் கீழ் செட்டியார் இருக்கிறார் அவரிடம் காட்டுங்கள் என்று ஓடிச்செட்டியாரை எழுப்பினான். அக் கள் வர்கள் செட்டியார்களிடம் இருந்த பணத்தையும் பிடுங்கிக்கொண்டு உதைத்துச் சென்றார்கள். அப் போது செட்டி மூடனைப்பார்த்து ‘அப்பா! எனக் குத் துணைவேண்டாம். நீ விரும்பிய இடத்திற்குப் போ!’ என்று அவன் நட்பை வெறுத்துத் தான் தனியே சென்றான். வள்ளுவரும் “மூடன் நட்பை விடுதல் இலாபம்” என்று கூறியுள்ளார்.
ஊதியம் என்பது ஒருவர்க்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல் (61)
ஒருவற்கு = ஒருவனுக்கு
ஊதியம் என்பது = இலாபம் என்பது
பேதையார் கேண்மை = அறிவில்லாதவர் நட்பை
ஒரீஇ விடல் = வெறுத்து விட்டு நீங்குதல் ஆம்.
கருத்து: மூடன் நட்பைக் கொள்ளாது விடுதலே லாபமாகும்.
கேள்வி: எவரது நட்பைக் கொள்ளாது வெறுத்தல் லாபமாகும்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.