கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 35,068 
 
 

முன்னுரை
ஷேக்ஸ்பியர் உலகறிந்த புலவர் என்பது யாவரும் அறிவர். அவர்தம் நாடகங்கள் நவில்தொறும் நயம் பயப்பன. ஆங்கிலத்தில் சார்லஸ் லாம் (Charles Lamb) எழுதிய ஷேக்ஸ்பியர் கதைகளைத் தழுவியே தமிழில் கதைகளும் எழுதப்பெற்றுள்ளன. இப்போது மூன்றாம் புத்தகமாக நடுவேனிற் கனவு (A Midsummer Night’s Dream), சிம்பலின் (Cymbeline), கார்காலக் கதை (The Winter’s Tale), ஒதெல்லோ (Othello) ஆகிய நான்கு கதைகளும் வெளிவருகின்றன. இப்பதிப்பில், சிறுவர்கட்குக் கதைகள் நன்றாய் மனத்திற் பதியும் பொருட்டுக் கதை உறுப்பினர்களையும் கதைச் சுருக்கத்தையும் ஒவ்வொரு கதையின் முகப்பில் எழுதிச் சேர்த்திருக்கிறோம். இளைஞர்கள் படித்து இன்புறத்தக்க எளிய இனிய நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆதலின், இவற்றைக் கற்கும் மாணவர் அறிவு வளர்ச்சியுடன் மொழித் தேர்ச்சியும் பெறுவர் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

கதை உறுப்பினர்

ஆடவர்

1. தீஸியஸ்: அதேன்ஸ் நகரத்து அரசன்.

2. ஈஜியஸ்: அதேன்ஸ் நகரத்தான் – ஹெர்மியாவின் தந்தை.

3. லைஸாண்டர்: ஹெர்மியாவின் காதலன்.

4. தெமத்தியஸ்: ஹெலனாவின் பழங்காதலன் – ஈஜியஸால் ஹெர்மியாவுக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.

5. ஓபிரான்: வனதெய்வங்களின் அரசன்.

6. பக் அல்லது (நற்சோழன் ராபின்): ஓபிரானுக்கு அமைச்சனும் விகடனும்.

7. பாட்டம்: நாட்டுப்புற நாடகக் குழுவின் தலைவன் – பக்கால் கழுதைத்தலை தரப்பட்டு, திதானியா காதலைப் பெற்றவன்.

8. நூலாம்படை: வன அரசி திதானியாவின் பணியாட்கள்.

9. கடுகு வெடிப்பு: வன அரசி திதானியாவின் பணியாட்கள்.

பெண்டிர்

1. ஹிப்பாலிதா: தீஸியஸ் மணந்து கொள்ளவிருக்கும் பெண்ணரசி.

2. ஹெர்மியா: ஈஜியஸின் மகள் லைஸாண்டர் காதலி

3. ஹெலனா: ஹெர்மியாவின் உயிர்த் தோழி – தெமெத்ரியஸைக் காதலித்தவள்.

4. த்தானியா: வன அரசி – ஓபிரான் மனைவி – மாய மலரின் மயக்கத்தில் கழுதைத்தலைப் பாட்டமின் காதலி

5. பயற்று நெற்று – வன அரசி திதானியாவின் பணியாட்கள்.

6. விட்டில் பூச்சி – வன அரசி திதானியாவின் பணியாட்கள்.

கதைச் சுருக்கம்

அதேன்ஸ் நகரத்தில் அரசன் தீஸியஸிற்கும் ஹிப்பாலிதா வுக்கும் மணவினை ஏற்பாடாயிற்று. அதற்கிடையில் ஈஜியஸ் என்பவன் தான் தேர்ந்தெடுத்த மணமகனாகிய தெமெத்ரியஸை மறுத்து லைஸாண்டரை மணக்க விரும்பும் தன் மகள் ஹெர்மி யாவுக் கெதிராக வழக்குக் கொண்டுவந்தான். அரசன் நாலுநாள் தவணைதர , ஹெர்மியா லைஸாண்டருடன் வேறிடம் சென்று மண முடிக்கத் தீர்மானித்தாள். இதனை அறிந்த அவள் தோழி ஹெலனா தான் காதலித்த தெமெத்ரியஸிடம் சொல்ல, அனைவரும் காட்டில் இரவில் ஒன்று கூடினர்.

காட்டில் வன அரசன் ஓபிரானுக்கும் வன அரசி திதானியா வுக்கும் ஒரு சிறு இந்தியப் பையனைக் கைக்கொள்ளும் வகையில் ஏற்பட்ட பிணக்கால் வன அரசன் தன் துணைவன் பக்கின் உதவி கொண்டு உறங்கி எழுந்தவுடன் கண்டவரைக் காதலிக்கச் செய் யும் மாயமலரைக் கொணரச் செய்தான். அப்போது பக் தீஸிய ஸுக்காக நாடகம் நடிக்கவந்த நாட்டுப்புறத்து மக்கள் தலைவனாம் பாட்டம் தலைமீது கழுதைத் தலையை வைத்து அதனைத் திதானியா காதலிக்கும்படி செய்தான்.

இதே மாயமலரைப் பயன்படுத்தி தெமெத்ரியஸை ஹெலனா மீது காதல் கொள்ளச் செய்ய ஓபிரான் எண்ணினான். ஆனால் பக்கின் பிழையால் அது லைஸாண்டர் கண்மீது பட அவன் ஹெர் மியாவைவிட்டு ஹெலனாவைப் பின்பற்றினான். பிழைகண்டு திருத்துகையிலும், தெமெத்ரியஸ் கண்ணில் மலரிட்டு அவனையும் ஹெலனா பக்கமே திருப்பினான். தோழியர் இருவரும் இந்நிலை யைத் தாமே அறியாமல் பூசலிட்டனர். ஓபிரான் இறுதியில் தெளிவு பெற்று அனைவரையும் உறங்கவைத்து லைஸாண்டர் கண் ணில் மாற்று மலரிட்டான். இதே சமயம் கழுதைத் தலையனுடன் அளவளாவும் திதானியாவிடமிருந்து இந்தியப் பையனை அடைந்த பின் அவள் கண்களிலும் ஓபிரான் மாற்று மலரிட்டான்.

விழித்தெழுமுன் தீஸியஸும் ஈஜியஸும் பிறரும் வேட்டை யாடவந்து காதலர் மனமாற்றங் கண்டு, வியப்பும் மகிழ்ச்சியும் பெற்றனர். அரசன் மணத்துடன் காதலர் மணங்களும் சிறக்க நடந்தேறின. மண இரவில் வன தெய்வங்கள் மணப் படுக்கை களைச் சுற்றி வாழ்த்துப்பாடின.

க. காதலுக்காகக் கானக மேகுதல்

அதேன்ஸ் நகரத்தில் ஒரு புதுமையான சட்டம் உண்டு. அதன்படி ஒரு பெண் தன் தந்தை கருத்துக் கிசைந்த கணவனை ஏற்க மறுத்தால் அவள் கொலைத் தீர்ப்புக்கு உரியவள் ஆகவேண்டும். ஆயினும், பொது வாக எவரும் தாம் பெற்ற புதல்வியரை இழக்க விரும்பாததால் இயற்கைக்கு மாறான இச்சட்டம் நடைமுறையில் வழங்காமலே இருந்தது.

ஆயினும், ஒரு தடவை மட்டும் ஈஜியஸ் என்ப வன் இச்சட்டத்தின் பெயரால் தன் புதல்வியாகிய ஹெர்மியாமீது அதேன்ஸ் அரசராகிய தீஸியஸ் முன் பாக வழக்குத் தொடுத்தான். உயர் குடியிற் பிறந்த தெமத்ரியஸ் என்னும் இளைஞனுக்கு அவளை மணம் செய்விக்க வேண்டுமென்று ஈஜியஸ் விரும்பினான். ஆனால், அவள் தலைஸாண்டர் என்ற வேறோர் இளை ஞனையே மணஞ் செய்து கொள்ள விரும்பியதனால் தந்தையின் ஆணைப்படி நடக்க மறுத்தாள். இக் குற்றத்திற்காகச் சட்டப்படி அவளைத் தண்டிக்க வேண்டும் என்று ஈஜியஸ் வேண்டிக்கொண்டான்.

ஹெர்மியா இதற்கு எதிராக, தெமத்ரியஸ் என்பவன், முன் ஹெலனு என்ற பெண்ணைக் காதலித் திருந்தான். அந்த ஹெலனா இன்னும் அவனையே எண்ணி எண்ணி வாடுகின்றனள். தெமதரியஸ் அவளை மணந்து கொள்ளாவிட்டால் அவள் வீணே உயிரிழக்க நேரிடும்’ என்று வழக்காடினாள்.

தீஸியஸ் பெருந்தன்மையும் அருளும் உடைய அரசர். ஆயினும், அவர் அதேன்ஸின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவராயிருந்தார். எனவே அவர் இவ்வகை யில் நன்காராய்ந்து ஒரு முடிவுக்கு வர ஹெர்மியா வுக்கு நான்கு நாட்கள் தவணை கொடுத்தார். ‘ அத் தவணைக்குள் தந்தையின் விருப்பப்படி நடப்பதாக ஒப்புக்கொள்ளாவிட்டால் உன்னை நான் கொலைத் தீர்ப்புக்கு ஆளாக்கவேண்டி வரும்’ என்று அவர் அவளிடம் கூறினார்.

ஹெர்மியா, தீஸியஸின் வழக்கு மன்றத்தினின்று நேராகத் தன் காதலனாகிய லைஸாண்டரிடம் சென்று தமது இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறினாள்.

இது கேட்டு லைஸாண்டர் மிகவும் மனம் உடைந்தான். பின் அவன் ஒருவாறு தேறி, ‘அதேன்ஸினின்றும் சிறிது தொலைவில் எனக்குச் சிற்றன்னை ஒருத்தி இருக்கிறாள். அவள் உறைவிடம் நகர் எல்லைக்கு வெளியில் உள்ளது. இக்கொடிய அதேனியச் சட்டத்தின் ஆட்சி அவ்விடத்தில் செல்லாது. ஆதலால், இன்றிரவே அவ்விடத்துக்கு இருவரும் சென்று மணம் புரிந்துகொள்வோம்,’ என்றான். ஹெர்மியாவும் அதற்கிணங்கினாள். “வேனிற் காலத்தில் நாம் இரு வரும் களிப்புடன் நகர்ப்புறத்துக் காட்டில் உலவுவ துண்டன்றோ? அதே இடத்தில் இன்றிரவு நான் உன்னுடன் வந்து சேர்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சி தரும் இச்செய்தியை ஹெர்மியா தன் தோழி ஹெலனாவுக்கு மட்டிலுமாவது சொல்லா திருக்க முடியவில்லை. காதலர் கண்ணற்றவர் என்ற கருத்திற்கிணங்க, ஹெலனா அதனைத் தெமத்ரிய ஸுக்கு உரைத்தாள். தன் தோழிக்குத் தீங்கு இழைக்கவேண்டும் என்பது அவள் கருத்தன்று. ஆயினும், தானும் தன் காதலனைத் தொடர்ந்து காட் டிற்கேகலாம் என்ற ஆர்வம் இச்செயலைச் செய்யும் படி அவளைத் தூண்டிற்று.

உ. வன அரசன் காதற் பிணக்கு

லைஸாண்டரும் ஹெர்மியாவும் வந்து சேர எண்ணிய காடு, குற்றுரு உடையவன தெய்வங்களின் நடமாட்டத்துக்குரிய இடமாக இருந்தது.

அத்தெய்வங்களின் அரசன் ஒபிரான்; அரசி திதானியா. அவ்விருவரும் அவர்கள் குழாங்களும் அக் காட்டிடையே தங்கள் நள்ளிரவு விழாவைக் கொண்டாட வந்திருந்தனர்.

இவ்வன அரசனுக்கும் அரசிக்கும் இடையே ஒரு வருத்தந் தரும் பிணக்கு ஏற்பட்டது. அதன் பயனாக அவ்விருவரும் வழக்கம்போல் அவ்வடர்ந்த காட்டில் முழு நிலவெறிக்கும் இரவுகளில் ஒன்றாய் உலாவுவ தில்லை. அவர்களது குழாத்தைச் சேர்ந்த சிறு தெய்வ வடிவங்களும் அவர்கள் இருவரது சீற்றத்திற்கு அஞ்சி வாதுமைக்கொட்டைகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளத் தொடங்கின.

இப்பிணக்கிற்குக் காரணம் இந்தியாவிலிருந்து திதானியா கொண்டுவந்த ஓர் அழகிய சிறுவனே யாவன். அவன் முன்னம் திதானியாவுக்குத் தோழி யாயிருந்த ஒருத்தியின் புதல்வன். அவன் தாய் இறந்தபின் அப்பையனைத் திதானியா அவனுடைய வளர்ப்புத் தாயிடமிருந்து கைப்பற்றித் தானே வளர்த்து வந்தாள்.

காதலர் கானகத்தே வருவதாகச் சொன்ன இர வில், திதானியா தன் உரிமைத் தோழியருடன் உலா விக்கொண்டிருந்தாள். அப்போது ஓபிரானும் அவன் குழாத்தினரும் எதிரே வந்தனர்.

ஓபிரான்: ‘இறுமாப்பு மிக்க திதானியா ! உனது வருகை என் மனத்திற்கு வெறுப்பையே தருகின்றது.

திதானியா: ‘பொறுப்பற்ற அரசே ! வருவது நீ என்பதை நான் காணவில்லை. தோழியரே! இவருறவு தகாது. இவ்விடம் விட்டு விரைவில் அகலுங்கள்.”

ஓபிரான்: ‘துணிச்சல் மிக்கவளே, சற்று நிற்பாயாக! நான் உன் கணவன் என்பதை நீ மறந்து விட்டாய் போலும்! தன் ஓபிரான் விருப்பத்திற்குத் திதானியா ஏன் மாறாக நடக்கவேண்டும்? அச்சிறுவனை எனக்குப் பணியாளாகத் தருக.’

திதானியா: ‘அவ்வகையில் உமக்கு நெஞ்சு துடிக்கவேண்டாம். உமது வன அரசு முற்றிலும் கொடுத்தாலுங்கூட அச்சிறுவனை நீர் பெற முடியாது.’

இக்கடுஞ் சொற்களுடன் திதானியா மிகுந்த சினத்துடன் சென்றாள். ஓபிரானும், ‘இப்போது நீ செல்க; விடியுமுன் இதற்காக உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்’ என்று கறுவிக்கொண்டான்.

ஓபிரான் அதன்பின், தன் குறிப் பறிந்து நடக்கும் தோழனும் முதல் அமைச்சனுமாகிய பக் (அல்லது நற் றோழன் ராபின் ) என்பவனைத் தன்னிடம் அழைத்தான். பக் கூரிய அறிவும் குறும்புத்தனமும் உடையவன். அவனை நேரில் கண்டவர் மிகச் சிலரேயாயினும் அவன் கைத்திறனை அறிந்தவர் பலர். அவன் குறும்புகள் எண்ணில்லாதவை. நாட்டுப் புறப் பெண்கள் பக்கமாக மறைந்து நின்று கூவி அச்சம் விளைவிப் பான். தயிர்கடைவோர் கலங்களில் புகுந்து வெண் ணெய் திரளாமல் தடுப்பான். பால் பருகுவோர் கிண் ணங்களிலிருந்து நண்டு உருவில் துள்ளி அவர்கள் பாலைக் கொட்டும்படி பண்ணுவான். முக்காலி உரு வில் ஆராய்ச்சியாளர் முன் கிடப்பான். அவர்கள் உட் காரப் போகும்போது சற்றே சறுகி அவர்களை விழப் பண்ணி எல்லாரையும் சிரிக்க வைப்பான்.

ஓபிரான் பக் வந்ததும், ‘என் அரிய நண்ப! முன் ஒரு நாள் நாம் பேசிக்கொண்டிருக்கையில், கடற் பன்றியின் மீது சென்ற ஒரு கன்னித் தெய்வத்தின் மேல் காமன் கணை தொடுத்ததைப் பார்த்தோமல் லவா? அக்கணை அவள் மீது விழாமல் தவறி ஒரு வெண் மலர்மீது விழுந்து அதனைச் சிவப்பாக்கியதை நீ பார்த்திருக்கலாம். அம் மலருக்குக் காதலர் மாய மலர் என்று பெயர். அதன் சாற்றை உறங்குவோர் கண்களிற் பிழிந்தால், எழுந்தவுடன் முதலிற் கண்ட ஆள் அல்லது பொருளின் மேற் காதல் கொள்வர். அம் மலரை நீ எனக்குப் பறித்துக் கொண்டுவா அதன் சாற்றை நான் திதானியாவின் கண்களில் பிழிந்து, அவளை எள்ளி நகையாட வழிதேடப் போகிறேன். அப்போது அவள் என் வழிக்கு வரு வாள். அதன் பின் அதற்கு மாற்றான ஒரு மலரைப் பிழிந்து அம்மாயக் காதலை நீக்கிவிடுவேன்’ என்று சொன்னான்.

மாய மலரைப் பறிக்கப் பக் சென்றபின் தெமத் ரியஸும் ஹெலனாவும் காட்டு வழியே வருவதை ஓபிரான் கண்டான்.’ஹெலனா தெமத்ரியஸிடம் தன் காதலையும் அதன் உறுதிப்பாட்டையும் பற்றிப் பேச முயன்றாள். ஆனால் அவன் அவளிடம் கடு மொழிகள் பேசி அவள் தன்னைத் தொடரவேண்டா என்று தடுத்துத் தள்ளி விட்டுப் போனான்.

வன அரசன் காதலர்களிடம் என்றும் பரிவுடை யவன். அதிலும் ஹெலனா நெடுநாளாய் தெமத்ரிய ஸிடமே மாறாப் பற்றுக்கொண்டிருப்பது தெரிந்து, அவளிடம் அவனுக்கு நல்லெண்ணம் உண்டாயிற்று. எனவே தனது மாய மலர் மூலம் அவளுக்கும் நலம் செய்ய எண்ணங் கொண்டான். பக் அம்மலரைக் கொண்டுவந்ததும் அவன் பக்கினிடம், ‘இம்மலரின் ஒரு பகுதியை நான் எடுத்துக்கொள்கிறேன். இன்னொரு பகுதியை நீ கொண்டுபோ. அதேனிய இளைஞனொருவனும் மங்கை ஒருத்தியும் இக்காட்டில் செல்கின்ற னர். அவர்களைச் சரியாக அடையாளங் கண்டு, மங்கையைக் காதலிக்கும் படி இளைஞன் கண்களில் மாய மலர்ச் சாற்றைப் பிழிவாயாக,’ என்றான். பக் அங்ஙனமே செய்வதாகக் கூறி அகன்றான்.

அதன் பின் ஓபிரான், திதானியா அறியாது அவள் தங்கும் மலர்ப் படுக் கையை அணுகினான். அங்கு மல் லிகை, முல்லை, சண்பக முதலிய நறுமலர்கள் பூத்துக் கிடந்தன. திதானியா ஒரு மலரணைமீது பாம்பின் தோலை ஆடையாக உடுத்துக்கொண்டு வீற்றிருந்தாள். அவளுடைய தோழியராகிய வனதெய்வங்கள் அவள் பணி யைத் தலைமேற்கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். சிலர் மல்லிகை மொட்டுக்களைத் தின்னும் புழுக்களைக் கொல்லும் வேலையிலீடுபட்டிருந்தனர். சிலர் வௌவால்களுடன் போர் புரிந்தனர். இப்போர்களிற் கொன்ற வௌவால் களின் தோலினாலே தான் வனதெய்வங்கள் ஆறுகளைக் கடக்கும் படகுகளைச் செய்து வந்தனர். சிலர், அரு வருக்கத்தக்க குரலும் உருவும் உடைய ஆந்தைகள் வந்து வன அரசிக்கு ஊறு செய்யாமற் காவலிருந்த னர். இன்னும் சிலர் வன அரசி உறங்கும்வண்ணம் அவளுக்குத் தாலாட்டுப் பாட்டுப் பாடினர்.

(பாட்டு)

முதல் வன தெய்வம்

வகிர்ந்த நாவும் புள்ளியுங் கொண்ட
வன்கட் பாம்பீர்! வாராதீர்!
பகர்ந்த பல்லியீர்! பதுங்கு நாங்கூழ்ப் –
புழுவீர்! அரசியைப் பாராதீர்!

(பல்லவி )

கானக்கு:பிலீர் இசையுடனே
பாடீர் எம்முடன் நசையுடனே ;
தனனத் தனனத் தானானா
தானாத் தனனா தானானா
தீங்கு செய்யாதீர்! தீங்கான
மந்திர மெதுவுந் தந்தெமதரசி
நொந்திட எதுவும் நேராதீர்!

இரண்டாம் வன தெய்வம்

வலைபுரி எண் கால் சிலந்திப் பூச்சியிர்!
வார்ந்தநும் நூல்கொடு சாராதீர்!
அலைவரி விட்டிலிர்! நத்தையிர் ! புழுவிர்!
அரசியின் துயிலினைப் பேராதீர்!

(பல்லவி)

கானக்குயிலீர்

இப்பாட்டைக் கேட்டுக்கொண்டே திதானியா உறங்கிவிட்டாள். அவள் தோழியரும் தத்தம் வேலையைச் செய்யப் போயினர். அதன்பின் ஓபிரான் ஓசை செய்யாது திதானியா பக்கம் வந்து,

விழித்தெழு பொழுதினில் விழிப்படு பொருளே
விருப்பினுக் குரிதா விளங்குக பெரிதே;

என்று கூறிக்கொண்டு மாய மலரின் சாற்றை அவள் கண்களிற் பிழிந்தான்.

கூ. காதலர் குழப்பம்

அதேனியச் சட்டத்திற்கஞ்சிக் காட்டிற்கு வந்த ஹெர்மியாவும் லைஸாண்டரும் சிறிது தொலைவு நடந்து பின் களைப்புற்று உறங்கினர். அப்போது பக் அவர்களைக் கண்ணுற்றான். ஓபிரான் கூறிய அதேனி யக் காதலர் இவர்களே என்று நினைந்து அவன் லைஸாண்டரின் கண்களில் மாய மலரின் சாற்றைப் பிழிந்தான். அதன்பின் அவ்வழியே ஹெலனா வந்தாள். தற்செயலாக லைஸாண்டர் விழித்தபோது அவளைப பார்க்க நேர்ந்தது. மாய மலரின் ஆற்றலால் உடனே அவன் ஹெர்மியாவின் காதலை மறந்து ஹெலனாவைக் காதலித்தான்.

ஓபிரான் பக்கினிடம் மாய மலரை அனுப்பிய போது காதலில்லாத ஓரிடத்துக் காதலை உண்டுபண் ணவே விரும்பினான். ஆனால், நடந்தது இதற்கு நேர் மாறாய்விட்டது. காதலிருந்த இடத்தில் அதனை

அகற்றி, இருந்த குழப்பத்தை இன்னும் மிகுதியாக் கிற்று அது. ஹெலனா முதலிலேயே தெமத்ரியஸைப் பின்பற்றிச் செல்ல முயன்று, பின்பற்ற முடியாமல் பின்னிடைந்து தனியே வந்து கொண்டிருந்தாள். அதற்கிடையில் இப்பொழுது அவளுக்கு லைஸாண்டர் காதலிப்பது இயற்கை அன்றாகலின் அவன் அவளைக் கேலி செய்வதாகவே அவள் நினைத்தாள். ‘எல்லா ருடைய ஏளனத்திற்கும் ஆளாக நான் ஏன் பிறந் தேன்? தெமத்ரியஸின் வெறுப்பால் நான் புண்பட் டிருப்பது போதாதா? நீரும் சேர்ந்து வேறு என்னை அவமதிக்கவேண்டுமா? நான் உம்மை நல்ல உள்ளம் உடையவர் என்றன்றோ நினைத்திருந் தேன். நீர் என்னிடம் இப்படிக் கொடுமை காட்ட லாமா?’ என்று அவள் சினந்து கூறிக்கொண்டு சென்றாள். அவள் கடுமொழிகளைத் தாங்கிக் கொண்டு லைஸாண்டர் அவளையே விடாமற் பின் பற்றினான்.

ஹெர்மியா விழித்தெழுந்தபோது லைஸாண்டர் அங்கில்லை. தனியே இருப்பதில் அவளுக்கும் அச்சம் ஏற்பட்டது. லைஸாண்டருக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையும் உண்டாயிற்று. அவனைத் தேடித் தேடி அவள் காடெங்கும் அலைந்தாள். இதற்கிடை யில் ஹெலனாவை வெறுத்துத் தள்ளிவிட்டு முன் சென்ற தெமத்ரியஸ் காட்டில் இன்னொருபுறம் தூங்குவதை ஓபிரான் கண்டான். தெமத்ரியஸ் என்று நினைத்துக்கொண்டு பக் உண்மையில் லைஸாண்டர் கண்களிலேயே மாயச்சாற்றைப் பிழிந்துவிட்டான் என்பதை ஓபிரான் கண்டுகொண்டான். இப்போது தான் குறிப்பிட்ட இளைஞனையே நேரில் பார்த் தாயிற்று. எனவே, அவன் கண்களில் அப்பொழுதே மாயச்சாற்றைப் பிழிந்தான். சற்றுநேரம் சென்றபின் அவ்வழியே லைஸாண்டரும் ஹெலனாவும் வந்தனர். அவர்கள் ஓசை கேட்டு விழித்த தெமதரியஸ் முதன் முதலாக ஹெலனாவைக் கண்டான். காணவே அவன் இதுகாறும் அவளிடம் காட்டிய வெறுப்பை மறந்து காதல் மொழிகள் பகரத் தொடங்கினான்.

உண்மையில் தெமத்ரியஸின் காதலையன்றி வேறெதனையும் ஹெலனா விரும்பினாளல்லள். ஆயி னும் அவனும் லைஸாண்டரும் தன்னிடம் காதல் மொழிகள் கூறுவதைக் கண்ட அவள் அது தன்னைக் கேலி செய்வதற்காகவே என நினைத்தாள். ஹெர் மியாவே ஒருவேளை அவளைக் காதலித்த இருவரை யும் ஏவி இந்நாடகம் நடிக்கச் செய்திருக்கலாம் என்றும் அவளுக்குப் பட்டது.

ஹெலனாவுக் கெப்படியோ, அப்படியே ஹெர் மியாவுக்கும் இச் செய்தி விளங்கவில்லை. ஹெல னாவை வெறுத்திருந்த தெமத்ரியஸ் அவளைக் காதலித்ததே புதுமை. ஆனால், அது களிப்புத் தரும் புதுமையேயாகும். அதோடு தன் காதலனும் சேர்ந்து அவளைக் காதலிப்பது அவளுக்கு ஏன் என்று விளங்கவில்லை? முதலில் அது கேலி எனக்கொண்டு அவள் அவனை அணுகினாள். ஆனால், விரைவில் அவன் உண்மையாகவே சீறுகிறான் என்பது அவளுக்குத் தெரிந் தது. ஹெலனா ஏதோ மாயத்தால் தெமத்ரியஸை மயக்கியதோடு தன் காதலனை யும் மயக்கினாள் என்று அவள் நினைத்தாள்.

இது காறும் தோழியர் இரு வரும் ஒற்றுமையாய் இருந்த னர். இப்பொழுது இக் காதற் சுழலில் பட்டு ஒருவரை ஒருவர் ஏசியும் தாக்கியும் பூசலிட்டனர்.

‘ஹெர்மியா, நீ இப்படிக் கொடியவள் ஆவாய் என்று நான் நினைக்கவில்லை. உன்னுடையலைஸாண்டரைக்கொண்டு என்னைப் பொய்யாகப் புகழ்ந்து ஏளனம் பண்ணச் செய்கிறாய். அதோடு என்னைக் காலால் உதைத்தால் கூடக் கால் கெட்டு விடும் என்று முதுகைத் திருப்பிக்கொண்டோடும் என் தெமத்ரியஸையும் எனக்கெதிராகத் தூண்டிவிட் டாய். அவ்வளவு வெறுப்பையும் இப்போது அவன் வஞ்சப் புகழ்ச்சியாக்கி என்னைத் “தெய்வப் பெண்ணே ! வனமாதே! மாணிக்கமே!” என்றழைக்கிறான். உன் பழைய பள்ளித்தோழியை இப்படி ஆண்பாலாருடன் சேர்ந்துகொண்டு எள்ளி நகையாட உனக்கு எப்படி மனம் வந்ததோ? நாமிருவரும் ஒரே இருக்கையில் இருந்து, ஒரே பாட்டைப் படித்துக் களிப்புடன் உரையாடிக்கொண்டு ஒரே மாதிரியாய்ப் பூத் தைத்தோமே ! ஒரே காம்பிற் பழுத்த ஈரொட்டுப் பழங்கள் போலன்றோ நாம் வாழ்ந்தது?’ என்று ஹெலனா குறை கூறினாள்.

ஹெர்மியா இதற்கு மாறாக, ‘உன் சொல் மழை எனக்கு வியப்பைத் தருகிறது. நான் ஏளனம் செய்வதாகக் கூறிக்கொள்கிறாய். ஆனால் ஏளனம் செய்வது நானா? நீதானே. அதற்குமேல் என்னைக் குறை சொல்லவுந் துணிந்தாய்!’ என்றாள். ஹெலனா, அது தான் சரி. அப்படியே நீ தொடங்கியதை விடாமல் நடித்துக் காட்டு. இப்படியே என் கண்முன் நாட கம் நடத்திவிட்டு என் முதுகு திரும்பியதும் ஒருவருக் கொருவர் கண்ணடித்து என்னை ஏளனம் செய்யுங் கள். இறையளவாவது உங்களுக்கு நட்போ, ஒழுங்கு முறையோ, நாகரிகமோ இருக்குமானால் என்னை இப் படி நடத்துவீர்களா?’ என்று இடித்துக் கூறினாள்.

தோழியர் இருவரும் இப்படிச் சொற்போற் தொடுத்துக்கொண்டிருந்தனர். அதே சமயம் ஹெல னாவின் காதலுக்கு நீ நான் என்று போட்டியிட்டு மற் போர் தொடுக்கும் எண்ணத்துடன் லைஸாண்டரும் தெமதரியஸும் அவர்களை விடுத்து அப்பாற் சென்ற னர். அதைக் கண்டு அத்தோழியர் இருவரும் தம் முட் சண்டை செய்வதை விட்டுவிட்டுத் தத்தம் காதலரைத் தேடிச் சென்றனர்.

அவர்கள் குழப்பங்களனைத்தையும் கூர்ந்து கவ னித்தான் ஓபிரான். பக்கை நோக்கி, ‘இவையெல் லாம் உன் திருவிளையாடல்கள்; வேண்டுமென்றுதான் இப்படிச் செய்திருப்பாய் நீ’ என்றான். ‘அப்படி ஒன் றும் இல்லை, ஐயனே! அதேனியக் காதலர் என்று தானே நீங்கள் சொன்னீர்கள். அதனையே குறிப்பா கக்கொண்டு சென்றேன். இவர்களும் அதேனியர்களே; ஆதலால் ஏமாந்தேன்; ஆனால் இப்பொழுது இக் குழப்பம் பார்ப்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் என்னால் மறுக்கக்கூடவில்லை’ என் றான் குறும்பில் விருப்புடைய பக்.

ஓபிரான் ‘சரி; போனது போகட்டும்; மற்போர் புரியச் சென்றிருக்குங் காதலர்கள் ஒருவரிடமிருந்து ஒருவரை எதிரியின் குரலில் பேசிப் பிரித்துக்கொண்டு போய் உறங்கவை. அதன்பின் மாயமலருக்கு மாற் றாகிய இம் மலர்ச்சாற்றை லை ஸாண்டர் கண்களிற் பிழிந்துவிடு’ என்று சொல்லி வேறொரு மலரைக் கொடுத்தான். அதன்பின்பு அவன் திதானியா வகையில் தான் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றச் சென்றான்.

ச. கழுதைமீது காதல்

இதற்கிடையில் நகரில் தீஸியஸ் மன்னன் திரு மணத்திற்கு நாடகமாடத் தொழிலாளார் சிலர் எண்ணம் கொண்டனர். ‘நகரில் சிறுவர் தொந்தரவு செய்வர். இரவில் நிலவு வெளிச்சத்தில் காட்டிற்குப் போய் ஒத்திகை நடத்துவோம்’ என்று அவர்கள் முடிவு செய்தனர். தற்செயலாக அவர்கள் திதானியா உறங்கிக்கொண்டிருக்கும் மலர்ப்படுக்கை யருகிலேயே தங்கள் ஒத்திகையை நடத்த நேர்ந்தது. அதில் தலைமையான நடிகர் நிலையில் நடித்தவன் பாட்டம் என்பவன். அவன் ஒரு கோமாளியே எனினும் கல்வியறிவற்ற அத்தொழிலாளர் கூட்டத்தில் அவன் தலை வனாகக் கருதப்பட்டான். இதனால் அவனுக்கு ஓர் இறுமாப்பும் பெருமித நடையும் ஏற்பட்டன. அவ னுடைய கோமாளித்தனத்தை இவை மிகைப்படுத் தினவேயன்றி வேறல்ல.

திதானியாவை ஏளனம் செய்து பணியவைக்க இவனே சரியான பேர்வழி என்று ஓபிரான் நினைத் தான். அவனது கோமாளித்தனத்திற்கேற்ற உருவத் தையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று அவன் முடிவு செய்தான். எனவே நாடக ஒத்திகை யின் இரு காட்சிகளுக்கிடையில் உருமாற மறை விடத்துக்கு அவன் வந்த சமயம் பார்த்து அவன் தலை மீது கழுதைத்தலை ஒன்றை வெட்டி வைத்து விட்டான். அம் மாறுதலை யறியாத கோமாளி வெளியேவர, எல்லாரும் பார்த்துத் திகைத்தனர். சிலர் நகைத்த னர். அது கண்டு பாட்டம் சினங் கொண்டு அவர்கள் மீது சீறி விழுந்தான். அவர்கள் மூலைக் கொருவராகச் சிரிப்பை அடக்க முடியாமல் விலாவைப் பிடித் துக்கொண்டே அகன்றார்கள்.

பாட்டம் நடந்த ஓசையில் திதானியா விழித்துக்கொண்டாள். அப்போது அவள் பார்வை பாட்டத்தின்மேல் விழுந்தது. உடனே அவள் அவன்மீது காதல் கொண்டு, ஆ! என்ன அழகிய தெய்விக உரு! வெளியழகே இவ்வளவு ! அக அழகு எப்படி இருக்குமோ?’ என்றாள்.

பாட்டம்: ‘ஏன் அம்மணி, அக அழகிருந்தால் அகத்திற்குச் செல்லும் வழி எனக்குத் தென்படாதா?’

திதானியா: ‘வேண்டா, வேண்டா, நீ அகம் செல்லவேண்டா. இக் காட்டிலேயே உனக்கு நல்ல அகம் உண்டுபண்ணுகிறேன். நான் மனிதமாதல் லேன்; தெய்வ மாது. எனக்கு உன் மீதுதான் காதல். என்னிடமே நீ வா. உனக்கு என்னுடைய தெய்வ மங்கையர்கள் பணிபுரிவார்கள். அவர்கள் நல்ல ஆட்கள். பெயர்களும் நல்ல பெயர்கள். பயற்று நெற்று, நூலாப்படை, விட்டில் பூச்சி, கடுகு வெடிப்பு! என்று சொல்லிக்கொண்டு அவர்களைப் பார்த்து, ‘இவ் இனிய செல்வனுக்கு வேண்டிய நலன்கள் தருக. அவன் காண ஆடல் பாடல் புரிவீர்! நறுங்கனிகளும் தேனும் அவனுக்குக் கொண்டுவந்து தருவீர்!’ என்று உத்தரவிட்டாள். அதன்பின் அவள் பாட்டத்தைத் தன் அருகில் அழைத்து அவன் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு, ‘என் அருமைக் கழுதை மணியே! உன் அழகே அழகு! என்ன நிமிர்ந்தோடிய காதுகள்! என்ன பரந்த கண்கள்!’ என்று சொல்லி அவனுடைய அழகில் மயங்கி அவனுக்கு முத்தங்கள் தந்து மகிழலானாள்.

பாட்டமும் இக்காதலைத் தனக்குத் தக்கதாகவே ஏற்றுக்கொண்டான். திதானியாவோ, அவள் காதலோ அவனுக்கு ஒன்றும் புதுமையாகப்பட வில்லை. அரசியின் காதலை ஏற்ற அரசரது நிலையில் உடன் தானே பேசத் தொடங்கினான்.

வன அரசி தன் மயிரடர்ந்த கன்னங்களை வருடுவதையோ , கழுத்தைக் கட்டிக் கொஞ்சுவதையோ அவன் பொருட்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளவில்லை. அரசியின் காதலை ஒரு சிறு பொருளாகப் பெற்ற ஓர் அரசனது மனப்பான்மையுடன் நடக்கவுந் தொடங்கினான்.

பாட்டம்: ஏனடி, பயற்று நெற்று!

பயற்றுநெற்று : ஐயா, இதோ / உத்தரவு!

பாட்டம்: என் தலையைச் சற்றுச் சொறி. அடா நூலாம்படை!

நூலாம்படை: இதோ, ஐயா!

பாட்டம்: சரி, திருவாளர் நூலாம்படை, சற்று அதோ அந்த முள் முருங்கையின் முகட்டில் இருக்கும் தேனீயைக் கொன்று, அத் தேன் கூட்டைக் கொண்டு வா. வரும்போது தேன் கூட்டை மட்டும் கிழித்து விடாதே. தேன் வழிந்து உன் உடலெல்லாம் வீணாகக் கெட்டுவிடும். சரி , விரைவில் போ. அடே அந்தக் கடுகுவெடிப்புப் பயல் எங்கே?

கடுகுவெடிப்பு: இதோ இங்கேதான் இருக் கிறேன். நான் என்ன செய்யவேண்டும், ஐயா!

பாட்டம்: ஒன்றுமில்லை; இந்தப் பயற்று நெற்றுச் சொறிவது போதாது. கொஞ்சம் துணையாக நின்று சொறி. இங்கே நல்ல அம்பட்டன் விடுதி ஏதாவது உண்டா? என் முகமெல்லாம் மயிர் அடர்ந் திருக்கிறது. முகம் வழித்துக்கொள்ள வேண்டும்.

இதற்கிடையில் திதானியா அன்புடன், ‘என் – அருமைக் கழுதையே, உனக்கு உணவுக்கு என்ன விருப்பம்? எனக்கு வனதெய்வம் ஒருவன் இருக் கிறான். அவனைக் கொண்டு அணில் கூடுகளைத் தேடிக் கொட்டைகள் கொண்டுவரச் சொல்லட்டுமா? என்றாள்.

பாட்டத்துக்குக் கழுதைத் தலையோடுகூட நாவின் சுவையும் கழுதையின் சுவையாய் விட்டது. ‘எனக்கு அஃதொன்றும் வேண்டா. கொஞ்சம் வறுத்த கடலையே போதும்! என்றான்.

‘எனக்கு உறக்கம் கண்ணைக்கட்டிக்கொண்டு வருகிறது. உன் ஆட்கள் கொசுக்கள் போலக் குறு குறு என்று ஓசையிட்டால் நான் உறங்க முடியாது’ என்றான் சிறிது நேரங் கழித்து.

திதானியா: ‘அவர்கள் ஒன்றும் ஓசை செய்ய மாட்டார்கள். தடையில்லாமல் சற்று என் தோள் மீது சாய்ந்து படுத்துறங்கு. ஆ என் அருமைக் கழுதையே! உன்னை நான் பெற்றதே பேறு /’ என்று பாட்டத்தைக் கைகளால் அணைத்து உறங்க வைத்தாள்.

அச்சமயம் மறைவிடத்திலிருந்து ஓபிரான் வெளி வந்து, ‘அடடா, வனஅரசி இருந்திருந்து கழுதை யையா காதலிக்க வேண்டும். மிகவும் நன்றாயிருக் கிறது’ என்று நகைத்தான். திதானியா கண்களில் மாயச் சாற்றின் வன்மை இருந்து கொண்டு அவள் விருப்பத்தைக் கழுதைத் தலையன் பக்கமே இழுத்தது.

அதே சமயம் தன்னுடன் பிணங்கிய கணவனது ஏள னத்தையும் அவளால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவனை விரைவில் அனுப்பிவிட்டுத் தன் காதலனுடன் தடையின்றி இருக்க விருப்பங்கொண் டாள். ஆகவே, அவன கேட்டபடி தன் சிறிய இந்தியப்பையனை அவனுக்குக் கொடுத்து விட்டாள்.

ரு. முடிவு

தன் காரியம் கைகூடினபின் திதானியா கழுதை யுடன் கிடந்து உறங்குவ தைக் கண்டு ஓபிரானுக்கு இரக்கம் வந்தது. ஆகவே அவன் அவள் கண்களில் மாற்று மலரின் சாற்றைப் பிழிந்தான். அவள் விழித் தெழுந்ததும் தனது பொய்க் காதலை மறந்து ஓபிரானிடமே தன்னியற்கைப்படி காதல் கொள்ளலானாள்.

அதே சமயத்தில் காதலர் கள் குழப்பமும் ஒருவாறு தீர்ந்தது. பக் மற்போருக்கு முனைந்த காதலர்களை அவர் கள் எதிரிகளின் குரலில் தனித்தனி அழைத்துச் சென்று பிரித்தான். பின் அவர்கள் பல விடங்களிலும் சென்று களைப்படைந்தனர். தெமத்ரியம் காதலியரும் அதேபோன்று அலைந்து களைப்படைந்தனர். அனைவரும் பக்கின் சூழ்ச்சித் திறத்தின் பயனாகக் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் வந்து படுத்துறங்கினர். அப்போது பக் லைஸாண்டர் கண்களில் மாற்றுமலரின் சாற்றைப் பிழிந்தான்.

அவர்கள் எழுந்தபோது தெமத்ரியஸ் ஹெலனா வின் காதலை மறவாது அவளைப் புகழ்ந்தான். அவளும் மயக்கந் தெளிந்து தன் விருப்பங் கைகூடியதென மகிழ்ந்தாள். அதே நேரத்தில் லைஸாண்டர் விழித்த போது அவனை மயக்கிய மாயமலரின் ஆற்றல் மாற்று மலரால் அகன்றுவிட்டது. அவன் பழையபடி ஹெர் மியாவிடம் இன்மொழிகள் கூறினான். அவளும் தான் பட்ட துன்பமனைத்தையும் கனவென உணர்ந்து மகிழ்ந்தாள். தோழியர் இருவரும் இப்போது காதற் சுழலிலிருந்து விடுபட்டுவிட்டனர். இருவரும் தத்தங் காதலரைப் பெற்ற மகிழ்ச்சியில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர்.

நகரத்தில் மன்னன் தீஸியஸுக்கும், ஹிப்பாலிதா வுக்கும் மணவினை நிகழ்த்த எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறின. மறுநாள் மண நாள். அவ்விரவு, அரசனுக்கும் அவன் காதல் துணைவிக்கும் மிக நீண்ட தாகத் தோன்றியது. ஆதலால், அதனைக் களிப்புடன் போக்க அவர்கள் காட்டிற்கு வேட்டையாட வந்தனர். ஹெர்மியாவின் தந்தையாகிய ஈஜியஸும் உடன் வந் தான். காட்டில் அவர்கள் ஹெலனாவும் தெமத்ரிய ஸும் பகை நீத்துக் கைகோத்து வருவதைக் கண்ட னர். பக்கத்தில் அதேபோல ஹெர்மியாவும் லைஸாண் டரும் வந்துகொண்டிருந்தனர். தெமத்ரியஸ் இப்போது லைஸாண்டரிடம் பகைமையும் போட்டியும் கொள்ளாமல் நட்புடையவனா யிருந்தான்.

நிலைமை மாறிவிட்டபடியால், இனித் தன் பிடி முரண்டு செல்லாதென ஈஜியஸ் கண்டான். ஆகவே காதலர் மனப்படி மணம் புரிவிக்க இணங்கினான். மறுநாள் அரசனது மணவினை நடக்கும்போது அத னுடன் கூடவே இவர்கள் மணவினைகளும் நடந் தேறின. இம் மணவினைப் போதில், பாட்டம் உட்படத் தொழிலாளர் தம் நாடகத்தை நடித்தனர். அஃது உயர்வுடையதா யில்லாவிட்டாலும் காதலரது நகைத்திறனைத் தூண்டி அவர்கள் இன்பத்தைப் பெருக்க உதவிற்று.

மண நாள் இரவு, அனைவரும் படுக்கைக்குச் சென்று உறங்கியதன் பின் வனதெய்வங்கள் தம் அரசன் அரசியுடன் வந்து மணவாழ்த்துப் பாடின.

(பாட்டு)

1.மன்றற் படுக்கை
ஒன்றன்பின் ஒன்றாய்
நன்றென வாழ்த்திச்
சென்றிடு வோமே!

2. காத லிளைஞர்தம்
காதலி தழுவிப்
போதரு புதல்வர்
தீதற வாழ்க!

3. கருக்கொளு நேரம்
உருக்கொளும் ஓரை
திருப்பெறச் சேர
விருப்புறு வோமே!

4. மறுவறு சாயல்
மகிழ்தரு மென்மை
நெறியுடன் பெற்றவர்
நிலைபெற வாழ்க!

5. பொன்னுயர் பொலிவும்
இன்னுயிர்க் களிப்பும்
நன்னிலக் கிழமையும்
மன்னிட வாழ்க!

– K.அப்பாதுரைப் பிள்ளை, சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் (மூன்றாம் புத்தகம்), முதற் பதிப்பு: 1941, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *