அந்த அபார்ட்மென்டில் மொத்தம் 32 வீடுகள். அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கீழே உள்ள இடத்தில் விளையாடுவார்கள். அதிகம் சண்டை போடாமல் சமர்த்தாக விளையாடுவார்கள்.
அந்தக் குடும்பங்களிலுள்ள பெற்றோர்களில் சிலர், அம்மா அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். சில அம்மாக்கள் வீடுகளில் இருந்தனர்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலை மணி ஆறாகி விட்டதால் அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகள் தங்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.
சுரேஷ், அந்த அபார்ட்மென்டில் இரண்டாவது மாடியில் மூன்றாம் நம்பர் வீட்டில் இருந்தான். அவன் பக்கத்து வீட்டில் அவனுடன் பள்ளியில் படிக்கும் நரேன் இருந்தான். இருவரும் இணை பிரியாத தோழர்கள்.
அந்த ஞாயிற்றுக் கிழமை சுரேஷ், ‘‘டேய் நரேன், எங்க வீட்டு கம்ப்யூட்டரில் ஏதாவது கேம் விளையாடலாமா?’’ என்று கேட்டான்.
சிறிது நேரம் யோசித்த நரேன், ‘‘உங்க வீட்டிலே உங்க அம்மா, அப்பா, தாத்தா பாட்டி, தங்கை எல்லோரும் இருப்பாங்களே, ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?’’ என்றான்.
‘‘அம்மாவும் அப்பாவும் மார்க்கெட்டுக்கு காய் வாங்கப் போயிருக்காங்க. தாத்தா பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க. அதனால் யாரும் உன்னை ஒண்ணும் சொல்லமாட்டாங்க வாடா ப்ளீஸ்’’ என்று கூப்பிட்டான் சுரேஷ்.
‘‘உன்தங்கைசொல்லிக் குடுத்துட்டா..?’’
‘‘அவ எப்பப் பார்த்தாலும் ஏதாவது படிச்சிக்கிட்டே இருப்பா. பயப்படாம வா’’ என்று சுரேஷ் தைரியம் கொடுக்க, நரேன் அடி மேல் அடி வைத்து மெதுவாக வந்தான்.
அங்கே தருணின் தங்கை சினேகா, ‘‘ஹாய் நரேன் அண்ணா! வாங்க’’ என்று பெரிய மனுஷி போலக் கூப்பிட்டாள்.
நரேனும் சுரேஷ§ம் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். சுதா ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவள் படிப்பில் படு சுட்டி. ஸ்கூலிலிருந்து வந்தவுடன் ஹோம் ஒர்க் எழுதி முடித்துவிட்டுத்தான் வேறு வேலையே செய்வாள். ஆனால், சுரேஷ் அவளுக்கு நேரெதிர். ‘மாலை முழுவதும் விளையாட்டு’னு பாரதியார் சொல்லியிருக்கிறார். அதனால் நான் விளையாடிட்டுதான் படிப்பேன் என்பான். அதே பாரதியார் ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ன்னு சொல்லியிருப்பதை மறந்துவிடுவான். தனக்கு எது சாதகமாக இருக்கிறதோ அதை மட்டும் தவறாமல் எடுத்துக்கொள்வான்.
அவனுடைய அப்பா அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். சில சமயம் கேட்பான். பிறகு தன் விருப்பப்படியே நடப்பான். அவன் புத்தகத்தை எடுத்துப் படிக்காமலே 80 மார்க் வாங்கி விடுவான். அதனால் அவனுடைய பெற்றோரும் எப்படியோ மார்க் வாங்கி விடுகிறான் என விட்டு விட்டார்கள்.
சுதா டி.வி.யில் வேறு எந்த நிகழ்ச்சியும் பிடிக்காததால் கார்ட்டூன் பார்த்துக்கொண்டு இருந்தாள். மற்றோர் அறையில் சுரேஷ§ம் நரேனும் கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
‘‘டேய் நரேன், நம் ஸ்கூலுக்கு பக்கத்திலே ஒரு பொம்மை கடை இருக்கே, அதிலே ஒரு பைனாகுலர் பார்த்தேன். அதை வாங்கணும்டா’’ சுரேஷ்தான் சொன்னான்.
‘‘ஆமாம்டா எனக்கும் ஆசையா இருக்கு. ஆனா அதன் விலை பத்து ரூபாய் இருக்குமே, பணத்துக்கு என்ன செய்றது?’’ அப்பாவியாகக் கேட்டான் நரேன்.
‘‘அம்மாகிடே ஏதாவது பொய் சொல்லிக் காசு கேட்கலாம்.’’
‘‘என்ன… பொய் சொல்றதா? நான் மாட்டேன்’’ பயந்தான் நரேன்.
‘‘பின்னே என்ன செய்வது?’’ என்று கேட்டவன் சிறிது நேரத்திற்கு பிறகு, ‘‘ஆ… அதுதான் நல்ல ஐடியா’’ என்றான்.
‘‘என்ன ஐடியா? சொல்லேன்.’’
‘‘எங்க அப்பா மார்க்கெட்டிலிருந்து வந்தவுடன் சட்டையைக் கழற்றி மாட்டுவார். அப்போ அவர் சட்டைப் பையிலிருந்து யாருக்கும் தெரியாமல் பத்து ரூபாய் எடுக்கப் போறேன்’’ என்று தன் திட்டத்தை சொன்னான்.
‘‘டேய் திருடப் போறியா? யாராவது பார்த்துட்டா…’’
‘‘யாரும் பார்க்க மாட்டாங்க. அதோட எங்க அப்பாவுக்குக் கணக்கும் தெரியாது’’ என்று, தான் திருடப் போவதை தீர்மானமாகச் சொன்னான்.
மறுநாள் பள்ளி முடிந்ததும் சுரேஷ் அந்த பொம்மைக் கடையில் இருந்தான். அங்கு ஒரே கூட்டம். கடைக்காரரும் மற்றவர்களும் சுரேஷை ஏதோ திட்டிக்கொண்டு இருந்தார்கள். ‘‘என்னப்பா தம்பி, யாரை ஏமாத்தப் பார்க்கிறே.? மரியாதையா காசை எடு’’ என்று சுரேஷை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு இருந்தான்.
அப்போது அங்கு சுதா, தன் தாத்தாவுடன் வந்தாள். தாத்தாவையும் தங்கை சுதாவையும் பார்த்தவுடன் சுரேஷ் ‘ஓ’ என்று அழத் தொடங்கினான்.
‘‘தாத்தா, நான் இந்த பைனாக்குலரை வாங்க கையில் எடுத்தேன். என் கையிலிருந்த பைனாக்குல கீழே விழுந்து உடைந்துவிட்டது. நான் கொடுத்த பணமும் விளையாட்டுக்கான பணமாம். அதனால் இந்த உடைந்த பைனாக்குலருக்கு காசு கொடு என கடைக்காரர் அடிக்க வர்றார்’’ என்று அழுகைக்கு இடையே சொன்னான்.
‘‘சுரேஷ், எனக்கு எல்லா விஷயமும் தெரியும்’’ என்று தாத்தா சொன்னார்.
‘‘ஆமாம் சுரேஷ், நேத்து நீயும் உன் ஃபிரெண்டு நரேனும் பேசியதைக் கேட்ட உன் தங்கை சுதா, எல்லா விஷயத்தையும் சொன்னாள். நான்தான் அந்த விளையாட்டுப் பணத்தை உங்க அப்பாவின் சட்டையில் சினேகாவை விட்டு வைக்கச் சொன்னேன். நீ யாராவது பார்த்து விடுவார்களோ என்று பதற்றத்தில் அது விளையாட்டு பணம் என்று தெரியாமல் கொண்டுவந்துவிட்டாய். அப்புறம் இந்த கடைக்காரரிடம் முன்பே சொல்லியிருந்ததால் அவர் இந்த பைனாக்குலர் உடைந்துவிட்டதாகச் சொன்னார். இது எல்லாமே உன்னை திருத்துவதற்கான நாடகம்தான். நீ கவலைப் படாதே’’ என்று தாத்தா விளக்கினார்.
அந்தக் கடைக்காரரும், ‘‘ஆமாம் தம்பி எல்லாமே நாடகம்தான், உன்னை திருத்தத்தான்’’ என்று ஒப்புக்கொண்டார்.
தன் தவறை உணர்ந்த சுரேஷ் எல்லோரிடமும் ‘சாரி’ கேட்டான்.
‘சே நாம் ஏன் இப்படி நடந்துகொண்டோம். நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்று அப்பா அம்மாவுக்கு தெரியாதா. நம் தங்கைக்கு நாம் வழி காட்டியாக, நல்லவனாக நடக்க வேண்டிய நான் இப்படி திருடி விட்டேனே… இனி இந்த மாதிரி நடந்து கொள்ளாமல் தங்கைக்கு முன்னோடியாக நடந்து காட்ட வேண்டும்’’ மனம் திருந்திய தருண் தன் உள்ளத்தினுள் உறுதி செய்துகொண்டான்.
– வெளியான தேதி: 16 ஏப்ரல் 2006