முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. அங்கே சில மரங்கள் இருந்தன. அந்த ஏரிக்கரையில் ஆண் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே உணவு தேடி வந்த பெண் நாரையிடம் அது காதல் கொண்டது.
பெண் நாரையைப் பார்த்து, “”எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு… நாம கல்யாணம் கட்டிக்கலாமா?” என்று கேட்டது.
“”உங்களுக்கு நண்பர்கள் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டது பெண் நாரை.
“”நண்பர்கள் யாரும் இல்லை. எதற்காகக் கேட்கிறாய்?” என்றது அது.
“”பறவைகளாகிய நமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். நண்பர்கள் அப்போது நம்மைக் காப்பாற்றுவர். உயிர் காப்பான் தோழன் என்பது பொன்மொழி. முதலில் நண்பர்களைத் தேடுங்கள். பிறகு நாம் திருமணம் செய்து கொள்ளலாம்!” என்றது பெண் நாரை.
“”நான் யாரோடு நட்பு கொள்ளலாம்?” என்று கேட்டது அது.
“”அருகில் உள்ள காட்டில் சிங்கம் உள்ளது. அங்கே ஒரு மரத்தில் கருடன் வாழ்கிறது. அவை இரண்டும் வலிமை வாய்ந்தவை. அவற்றுடன் நட்பு கொள்ளுங்கள்!” என்றது பெண் நாரை.
அதன்படியே சிங்கத்திடமும், கருடனிடமும் நட்பு கொண்டது அது. பிறகு பெண் நாரையைத் திருமணம் செய்து கொண்டது. ஏரித் திட்டில் இருந்த கடம்ப மரத்தில் அவை இரண்டு கூடு கட்டின. அங்கேயே மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தன. அவற்றிக்கு இரண்டு குஞ்சுகள் பிறந்தன.
அந்தக் காட்டிற்கு வேடர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு எந்த விலங்கும் கிடைக்கவில்லை. களைப்பு அடைந்த அவர்கள் ஏரித் திட்டிற்கு வந்தனர். கடம்ப மரத்தின் நிழலில் அமர்ந்தனர். அங்கே இருந்த கொசுக்கள் அவர்களைக் கடித்தன.
இதனால் தொல்லைப்பட்ட வேடர் தலைவன், “”இந்த மரத்தின் அடியில் தீ மூட்டுங்கள். புகை எழுந்தால் கொசுக்கள் ஓடி விடும்!” என்றான். உடனே அவர்கள் அங்கே தீ மூட்டினர். அதில் இருந்து எழுந்த புகை மேலே சென்றது. அந்தப் புகையின் நெடி தாங்காமல் கூட்டில் இருந்த குஞ்சுகள் அலறின.
அவற்றின் அலறலைக் கேட்ட வேடர் தலைவன், “”நன்றாகத் தீ மூட்டுங்கள். புகையின் நெடி தாங்காமல் கூட்டில் அந்தப் பறவைகள் இறந்து விடும். பிறகு அவற்றின் இறைச்சியை நாம் தின்னலாம்!” என்றான்.
இதைக் கேட்ட பெண் நாரை நடுங்கியது. “”நமக்கு ஆபத்து வந்து விட்டது. உடனே சென்று உங்கள் நண்பர்களிடம் உதவி கேளுங்கள்!” என்றது ஆண் நாரையிடம் .
அங்கிருந்து வேகமாக பறந்த ஆண் நாரை கருடனைச் சந்தித்தது. தங்களுக்கு வந்த ஆபத்தைச் சொன்னது.
“”நண்பா! கவலை வேண்டாம். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ கூட்டிற்குச் சென்று உன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதல் சொல்!” என்றது கருடன்.
ஆண் நாரை கூட்டிற்குத் திரும்பியது. பிறகு அந்தக் கருடன் ஏரித் தண்ணீரில் நன்றாக மூழ்கியது. அதன் உடல் முழுவதும் தண்ணீர் சொட்டியது. அப்படியே பறந்த அது வேடர்கள் தீ மூட்டிய இடத்திற்கு வந்தது. தன் உடலில் இருந்த தண்ணீரை அந்தத் தீயில் உதறியது. தீ முழுவதும் அணைந்தது.
இதைப் பார்த்த வேடர்கள் மீண்டும் அருகில் தீ மூட்டினர். அதையும் கருடன் அணைத்தது. இப்படியே அவர்கள் தொடர்ந்து பலமுறை தீ மூட்டினர். கருடனும் தீயை அணைத்துக் கொண்டே இருந்தது. தண்ணீரில் மூழ்குவதும், தீயை அணைப்பதுமாக இருந்ததால் கருடன் களைத்து விட்டது. அதனால் பறக்கவும் முடியவில்லை.
இதைப் பார்த்த பெண் நாரை, “”உங்கள் நண்பர் களைத்து விட்டார். அவர் ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் சிங்கத்திடம் சென்று உதவி கேளுங்கள்!” என்றது. அங்கிருந்து பறந்த ஆண் நாரை சிங்கத்திடம் வந்தது. நடந்ததை எல்லாம் சொன்னது.
“”ஏன் என்னிடம் முன்னரே வரவில்லை?” என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். பயங்கரமாகக் கர்ஜனை செய்தபடி அந்தத் திட்டை நோக்கி வந்தது. அதைப் பார்த்து நடுங்கிய வேடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தங்களுக்கு வந்த ஆபத்து நீங்கியதை அறிந்த பெண் நாரை மகிழ்ச்சி அடைந்தது. அங்கே நடந்ததை எல்லாம் அது தன் குஞ்சுகளிடம் சொன்னது.
“”நீங்களும் பெரியவர்களானதும் நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள். அப்போதுதான் மகிழ்ச்சியாக வாழ முடியும்!” என்றது.
“”அம்மா! நீங்கள் சொன்னது போல நல்ல நண்பர்களை நாங்கள் தேடிக் கொள்கிறோம்!” என்றன குஞ்சுகள்.
– டிசம்பர் 10,2010