கடவுள் கண் திறப்பார்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,266 
 
 

சூரியபுரம் என்னும் நாட்டை வீரவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் இரவு நேரங்களில் மாறுவேடத்தில் மந்திரியை அழைத்துக் கொண்டு நகர சோதனைக்குச் செல்வார்.

கடவுள் கண் திறப்பார்அப்படி ஒருநாள் மந்திரியை அழைத்துக் கொண்டு நகர்வலம் செல்லும்போது ஒரு வீட்டில் மனைவி, குடும்பத்தின் வறுமையையும் குழந்தைகளின் பரிதாப நிலையையும் குறித்துத் தனது கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அதற்குக் கணவன் “”ராஜா கண் திறப்பார்… பொறுத்திரு…” என்று பதில் சொன்னார்.

இன்னொரு வீட்டிலும் இதேமாதிரி, மனைவி தனது கணவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். அதற்கு அவளுடைய கணவன் “”கடவுள் கண் திறப்பார்… பொறுமையாக இரு…” என்று பதில் கூறினார்.

இந்த இரண்டையும் கேட்ட ராஜா, மந்திரியைப் பார்த்து, “”இவர்களில் யார் சொல்வது சரி?” என்று கேட்டார்.

அதற்கு மந்திரி, “”ராஜா கண் திறப்பார் என்பதை விட கடவுள் கண் திறப்பார் என்று சொன்னதுதான் சரி. அவனே பலன் அடைவான்” என்றார் மந்திரி.

ராஜா அதையும் சோதித்துப் பார்த்துவிட விரும்பினார்.

அரண்மனைக்குத் திரும்பினார்கள்.

மறுநாள் ஒரு பூசணிக்காயைக் கொண்டுவரச் சொல்லி, அதில் துவாரம் போட்டு உள்ளேயிருந்த விதைகளையும் சதையையும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பொற்காசுகளை நிரப்பி மூடச் செய்தார். இதை அவர் யாருக்கும் தெரியாமல் செய்தார்.

பிறகு, ராஜா கண் திறப்பார் என்று கூறியவனை வரவழைத்து, அவனுக்கு அந்தப் பூசணிக்காயை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்.

அன்றிரவு, ராஜாவும் மந்திரியும் மாறுவேடத்தில் நகர சோதனைக்குப் புறப்பட்டார்கள்.

“ராஜா கண் திறப்பார்’ என்று சொன்னவன் வீட்டில் என்ன நடக்கிறது என்று மறைந்திருந்து கேட்டார்கள்.

கணவன் வெறுப்போடு, மனைவியிடம் சொன்னான், “”நான் இவ்வளவு நாளும் ராஜா கண் திறப்பார் என்று காத்திருந்தேன். ராஜா என்னைக் கூப்பிட்டனுப்பி ஒரு பூசணிக்காயை கொடுத்தார். இந்த ராஜாவின் புத்தியைப் பார்த்தாயா? கேவலம், ஒரு பூசணிக்காயைப் போய்க் கொடுத்திருக்கிறார். நான் அதை ஒரு கடைக்காரனிடம் விற்றுவிட்டேன். இனிமேல் ராஜாவை நம்பிப் பிரயோசனமில்லை..!” என்று கூறினான்.

இதைக் கேட்ட ராஜா, அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்.

அதன்பிறகு, ராஜாவும் மந்திரியும் “கடவுள் கண் திறப்பார்’ என்று கூறியவனின் வீட்டுக்குப் போய், மறைந்திருந்து அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள்.

அந்தக் கணவன் தனது மனைவியிடம், “”கடவுள் கண் திறப்பார் என்று நான் சொன்னது உண்மையாகிவிட்டது. இன்றைக்குக் கடையில் ஒரு பூசணிக்காயை வாங்கினேன். அதை அறுத்துப் பார்த்தபோது, நிறையப் பொற்காசுகள் இருந்தன. கடவுள் அருளால் நம்முடைய வறுமை இன்றோடு ஒழிந்தது” என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தான்.

இதைக் கேட்டதும், கடவுள்தான் எல்லாவற்றுக்கும் மேலானவர். அவர்தான் எல்லோரையும் காப்பாற்றுகிறார் என்பதை அரசர் புரிந்து கொண்டார்.

– எம்.ஜி.விஜயலட்சுமி கங்காதரன், மதுரை. (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *