உயிர் இனங்களுக்குள் உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 1,665 
 
 

ஒரு காட்டில், புறாக்களைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் வளை விரித்து இருந்தான், அதில் தானியங்களையும் தூவி இருந்தான்.

அதைக் கண்ட புறாக்கூட்டம் வளையுடன் இருந்த தானியங்களைத் தின்றன.

பிறகு, பறக்க முயன்றபோது, வலையில் மாட்டிக் கொண்டன.

புறாக்கள் எல்லாம் ஒருமிக்க முயன்று, அலகால் கவ்வியபடி, வலையோடு பறந்து சென்று, சிறிது தொலைவில் இறங்கின. அந்தப் புறாக்களுக்கு எல்லாம் பெரிய புறா ஒன்று, தனக்குப் பழக்கமுள்ள ஒரு எலியிடம் வலையோடு சென்று, நிலைமையைக் கூறியது.

அந்த எலி தன் பற்களால் வலையைக் கடித்து, புறாக்களை விடுவித்தது. புறாக்கள் மகிழ்ச்சியுடன் பறந்து சென்றன.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காக்கையானது, தனக்கு ஒரு நட்பு இருந்தால், ஆபத்து வேளையில் உதவியாக இருக்குமே என்று கருதியது.
எலியிடம் சென்று நாம் இருவரும் நட்பாக இருப்போம் என்றது காக்கை எலி அதை நம்பவில்லை, “என்னைக் கொத்தி தின்பதற்காகவே, என் நட்பை நீ விரும்புகிறாய்” என்று கூறி, புதருகுள் ஓடியது.

காக்கை பலவாறு எடுத்துக் கூறியது. பிறகு எலியும், காக்கையும் நட்புக் கொண்டன.

ஒரு நாள் காக்கை, எலியே! சிறிது தொலைவில் உள்ள நதியில் எனக்கு நட்பான ஆமை ஒன்று உள்ளது, அங்கே சென்றால், இரை நிறையக் கிடைக்கும் பயமின்றி சில நாட்கள் தங்கலாம் என்று கூறியது.

எலியும் அதற்குச் சம்மதித்தது. இரண்டும் ஆமையிடம் சென்றன.

அவற்றை மகிழ்ச்சியோடு வரவேற்று இரை அளித்தது ஆமை. அப்போது, ஒரு வேடனுக்குப் பயந்து ஒரு மான் ஓடிவந்தது.

எலி, காக்கை, ஆமை மூன்றும் மானுக்கு அடைக்கலம் தந்து நட்போடு வாழ்ந்தன.

ஒரு நாள், வேடனின் வலையில் மான் அகப்பட்டுக் கொண்டது.

மரத்தின் மீது இருந்த காக்கை, அதைப் பார்த்ததும் உடனே ஆமையையும் எலியையும் கூட்டிக் கொண்டு போய் மானை விடுவித்தது.

அந்தச் சமயம் வேடன் வந்தான். எலியும், மானும், காகமும் வேடனிடம் அகப்படாமல், தப்பி ஓடி விட்டன. ஆனால், ஆமையால் வேகமாக ஓட இயலாததால், வேடன் அதைப் பிடித்து கூடையில் போட்டு விட்டு, உணவு அருந்தச் சென்றான். ஆமை அகப்பட்டுக் கொண்டதை நினைத்து எலி, காகம், மான் மூன்றும் வருந்தின.

மானுக்கு ஒரு யோசனை தேன்றியது. அப்படியே செய்யலாம் என எலியும் காகமும் தீர்மானித்தன.

மான் செத்துப் போனது போல், படுத்துக் கொண்டது, அதன்மீது காக்கை அமர்ந்து தன் கண்ணைக் கொத்துவது போல் பாசாங்கு செய்தது.

மான் செத்துக் கிடப்பதாக வேடன் நினைத்து ஆமையிருந்த கூடையை அப்படியே போட்டு விட்டு, மான் கிடந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

இதுவே நல்ல சமயம் என்று நினைத்த ஆமை, அருகில் இருந்த நதிக்குள் குதித்து மறைந்தது.

ஆமை தப்பியதைக் கண்ட மான், விர்ரென்று பாய்ந்து ஓடிவிட்டது.

காக்கை பறந்து மரத்தின் மீது அமர்ந்தது. எலி தூரத்தில் நின்று பார்த்து மகிழ்ந்தது.

ஆமையும், மானும் ஏமாற்றியதை எண்ணி வேடன் வருத்தத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.

பிறகு, அந்த ஜீவன்களும் ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து வாழ்ந்தன.

– மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள் – முதற்பதிப்பு: ஜூன் 1998 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *