தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 9,668 
 

மாறனுக்கு எப்போதும் விளையாட்டுதான். மற்ற குழந்தைகளைப் போன்று ஐந்து வயதில் கல்வி கற்றிடச் செல்லவில்லை.

இலக்கையே நோக்கு

ஒருநாள் தோழர்களுடன் விளையாடிவிட்டுக் களைத்துப் போய் வீட்டிற்கு வந்தான்.

“”எங்கே போய்விட்டு வருகிறாய்?” என்றாள் உரலில் இட்டிருந்த நெல்லைக் குத்தியவாறே அவனுடைய அம்மா.

“”பள்ளி சென்று பாடம் படித்துவிட்டுத்தான் வருகிறேன்… அம்மா…” என்று விளையாட்டாகப் பதில் சொன்னான் மாறன்.

“”இந்த உலக்கை பூத்தாலும் பூக்கும்… நீ ஒருநாளும் படிக்கமாட்டாய்…” என்றாள் கோபத்துடன் மாறனின் அம்மா.

மாறனின் உள்ளத்தை அம்மாவின் சுடுசொல் சுட்டது. “நான், மற்ற சிறுவர்களைப் போல பள்ளிக்குச் செல்லாமல் காலத்தை வீணாக்கிவிட்டேனே…’ என்று தனக்குத்தானே கவலைப்பட்டான் மாறன்.

மறுநாள் காலையில் குருகுலம் சென்று குருவின் கால்களில் விழுந்து வணங்கினான்.

“”என்னையும் உங்கள் மாணவனாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஐயா… நானும் மற்ற மாணவர்களைப் போல் கல்வி கற்க வேண்டும்…” என்றான் மாறன்.

குருவுக்கு அவனது விளையாட்டுத்தனத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால் மாறனைத் தன் மாணவனாகச் சேர்த்துக் கொள்ள இயலாது என்று கூறிவிட்டார்.

மாறனால் அழுகையை அடக்கமுடியவில்லை. “”ஐயா, எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்… நான் ஒழுங்காகப் படிப்பேன்…” என்றான்.

மாறன் பரிதாபமாகக் கெஞ்சியதைப் பார்த்த குருவின் மனம் இளகியது. மாறனை மாணவனாகச் சேர்த்துக் கொண்டார், ஒரு நிபந்தனையோடு.

“”இன்றிலிருந்து மற்ற மாணவர்களைப் போன்று உன் வீட்டிற்குச் செல்லக் கூடாது. என்னோடுதான் தங்கியிருக்க வேண்டும்; என்னோடுதான் உண்ண வேண்டும்; உறங்க வேண்டும். இதற்கு நீ சம்மதித்தால் உன்னை என் மாணவனாக ஏற்றுக் கொள்கிறேன்..” என்றார் குரு.

மாணவர்கள் அனைவருக்கும் நண்பகல் உணவு குருவுடன்தான். குருவின் அருகில் அமர்ந்து உண்ணும் வகையில் மாறனுக்குத் தன் அருகில் இலை போடுமாறு மனைவியிடம் கூறியிருந்தார். நண்பகல் உணவின் போது மாறனுக்கு மட்டும், இலையில் எல்லா நாட்களும் வேப்பிலைத் துவையலும் வைத்துப் பரிமாறுமாறும் கூறியிருந்தார்.

ஆண்டுகள் சில கழிந்தன. ஒரு நாள் கூட மாறன் வேப்பிலைத் துவையலின் கசப்பின் உணர்வைத் தன் முகத்தில் காட்டவே இல்லை.
ஒருநாள் நண்பகலில் வழக்கம்போல், சாப்பிட்டபின் குருவுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தான். மற்ற நாட்களைப் போன்றில்லாமல் அன்று குருவிடம் தயக்கத்துடன் எதையோ கூற நினைத்தான்.

அவனது மனக்குறிப்பை அறிந்து, “”மாறா… என்ன வேண்டும்? தயங்காமல் சொல்…” என்றார்.

“”ஐயா, இன்று சாப்பிட்டபோது, அம்மா வேப்பிலைத் துவையல் வைத்திருந்தார்கள்… கொஞ்சம் கசப்பாக இருந்தது…” என்றான் மாறன்.

குரு, எழுந்து மாறனை ஆரத் தழுவிக் கொண்டார். “”மாறா… இத்தனை நாட்களும் உணவு முதலான எதையும் பொருட்படுத்தாமல், உன் மனத்தில் படிப்பு ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்தாய். உன் அறிவு இப்பொழுது முழுமை அடைந்துவிட்டது. கசப்பு முதலான சுவைகளை நீ உணர்கின்றாய். இனி நாளையே உன் வீட்டிற்குச் செல்லலாம்..” என்று குரு மாறனை ஆசீர்வதித்தார்.”

இலக்கை மட்டுமே நோக்கி முயல்பவன் வெற்றி பெறுவான்.

– செ.சத்தியசீலன் (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *