(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
விடாமுயற்சியை உடையவன் ஆதல்
விதர்ப்ப நாட்டு வீமன், ”தன்மகளாகிய தமயந் திக்குச் சுயம்வரம்” என்று அனைவருக்கும் ஓலை அனுப்பி எல்லா அரசரையும் அழைத்தான். அனை வரும் வந்து சேர்ந்தனர்; தேவர்களும் வந்தனர். தமயந்திக்கு நளன் மேல் விருப்பம் என்று வந்த நான்கு தேவர்களும் நளன் வடிவம் கொண்டு மண்டபத்தில் இருந்தனர். தமயந்தி மாலையை எடுத்து வந்தாள். பார்க்கும் போது ஐந்து நளனைக் கண்டாள். உண்மை நளன் யார் என்று விளங்க வில்லை. தன் விதியை நொந்தாள். வருந்தினாள். முயற்சிக்கு விதியும் தோற்கும் என்ற பெரியார் வாக்கை நினைந்து முயற்சி செய்து பார்த் தாள், நால்வர் கால் நிலத்தில் படவில்லை. கண் இமைக்கவில்லை. ஆகிய இவற்றை முயற்சியாகப் பார்த்ததில் அறிந்தாள். ஐந்தாவதாக உள்ள நளன்கால் பூமியில் பட்டது. கண் மூடித்திறந்தது. மாலை வாடியிருந்தது. இவற்றைக்கண்டு இவனே உண்மை நளன் என்று மாலை சூட்டி மகிழ்ந்தாள். நளன் உருவுடன் வந்த தெய்வத் தன்மையுள்ள தேவர்களும், ”முயற்சித் தெய்வத்தால் நாம் தோல் வியடைந்தோம்” என்று வருந்திச் சென்றனர். இக்கருத்து, குறளிலும் உள்ளது.
பொறியின்மை யார்க்கும் பழியன்று; அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி. (45)
பொறியின்மை = பயனைத்தருவதாகிய விதி இல்லாமை
யார்க்கும் = எப்படிப் பட்டவருக்கும்
பழி அன்று = தீமை ஆகாது.
அறிவு அறிந்து = அறியவேண்டியவைகளைத் தெரிந்து
ஆள்வினை இன்மை = ஆளும் திறத்தோடு தொழில் செய்யாமையே
பழி = தீமை ஆகும்.
கருத்து: விதியில்லாமை யாவர்க்கும் பழி ஆகாது; முயற்சி இல்லாமை பழி ஆகும்.
கேள்வி: நல்விதி இல்லாரையும் வெற்றி பெறச் செய்வது எது?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.