அந்த இரு நெருப்பு விழிகள்

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 20,445 
 

பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது. “திகில் படம்’ என்றால் சம்பத்துக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் தேர்வுக்குப் படித்துக் கொண்டு இருந்த பாலுவை கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு திகில் படம் பார்க்கச் சென்றான் சம்பத்.

அந்த இரு நெருப்பு விழிகள்படம் முடிந்ததும் அவர்கள் இருவரும் தங்கள் சைக்கிள்களில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அதற்குள் இடி, மின்னல்களுடன் மழை கொட்டத் தொடங்கியது. அவர்கள் நனைந்துக் கொண்டே வீட்டிற்கு சென்றனர்.

கதவைத் தட்டினான் சம்பத்.

அப்பா தான் கதவைத் திறந்தார்.

“”ஏன் இப்படி மழையில் நனைந்து கொண்டு வந்து நிற்கிறாய்? தேர்வு சமயத்தின் போது படம் பார்த்தாக வேண்டுமா? சரி,சரி. உள்ளே போய் முதலில் உடைகளை மாற்றிக் கொள்,” என்றார் அப்பா.
சம்பத் வீட்டிற்குள் சென்று உடைகளை மாற்றிக் கொண்டு, அம்மா வைத்த தோசையை சாப்பிட்டு விட்டு, கடிகாரத்தை பார்த்தான்.

மணி பதின்னொன்று. அதிகாலையில் எழுந்து படிப்பதற்காக நான்கு மணிக்கு அலாரம் வைத்து விட்டு, “கொஞ்ச நேரம் படிக்கலாம்’ என்று எண்ணிப் பாடப்புத்தகத்தை எடுத்துப் படிக்கலானான் சம்பத்.

அந்த நேரத்தில் அம்மா பால் கொண்டு வந்தாள்.

“”அதை மேஜையில் வைத்து விட்டுப் போ அம்மா! சூடு ஆறியதும் குடிக்கிறேன்,” என்றான் சம்பத்.
அம்மா மேஜையில் பாலை வைத்து விட்டுப் போனாள். சம்பத் ஆழ்ந்து படித்ததால், பாலையே மறந்து விட்டான்.

திடீரென்று, “கரென்ட்’ போய் விட்டது. எங்கும் இருள் சூழ்ந்தது. வெளியே மழை பலமாக பெய்து கொண்டு இருந்தது. “கரென்ட் எப்போது வருமோ?” என்று பக்கத்தில் இருந்த கட்டிலில் படுத்தான் சம்பத்.

சிறிது நேரத்தில், ஏதோ சத்தம் கேட்கவே சம்பத்தின் மனம், “திக், திக்’ என்று அடித்துக் கொண்டது. பயத்துடன் பார்த்தான். இருட்டுக்குள் சிவப்பாக இரண்டு நெருப்புத் துண்டுகள் அறைக்குள் சுற்றி வந்தன.

அதைப் பார்த்ததும், அந்தத் திகில் படம் அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் படத்தில் இப்படித்தான் இரண்டு பேய்க் கண்கள் ஒருவனைப் பழி தீர்க்கத் தேடி அலையும்.

அவர்கள் படம் பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில் ஒரு புளிய மரம் இருந்தது. அதில் கொள்ளி வாய்ப் பிசாசு இருப்பதாக, ஊரில் பேசிக் கொள்வார்கள். அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுதான் என்னை பின் தொடர்ந்து வந்து விட்டதோ?

அப்படி எண்ணிய சம்பத்தின் உடல் நடுங்கியது. அந்த மழை நேரத்திலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. போர்வையை எடுத்து முகத்தில் போர்த்திக் கொண்டான்.

திடீரென்று ஏதோ விழுந்து உடைவது போல ஒரு சத்தம் வந்தது. அதற்குப் பிறகு எதையோ துழாவிக் குடிக்கும் ஒலி கேட்டது.

“சரிதான்! பிசாசு ஏதேதோ செய்கிறது, கண்களை இறுக மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு கரெண்ட் வந்தது. விளக்கு எரிந்தது. சம்பத் போர்வையை விலக்கினான்.
பால் இருந்த பளிங்குக் கிண்ணம் கீழே உடைந்து கிடப்பதையும், அதில் இருந்து வழிந்து ஓடிய பாலை ஒரு பூனை குடித்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தான் சம்பத்.

படிக்கும் கவனத்தில், அம்மா பால் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனதை சம்பத் மறந்தே போனான். ஆனால், ஒரு திருட்டுப் பூனை அதைப் பார்த்து விட்டு இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு பாலைக் கொட்டிக் குடித்துக் கொண்டிருந்தது.

வெளிச்சத்தைப் பார்த்ததும் பாலைக் குடித்துக் கொண்டிருந்த பூனை, ஜன்னல் வழியாக வெளியே குதித்து ஓடி விட்டது.

தன் வீண் பயத்தை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சம்பத்.

“இரவு நேரத்தில் பூனையின் கண்கள் பார்ப்பதற்கு நெருப்புத் துண்டுகள் போல இருக்கும், என்று கீழ் வகுப்பில் படித்தது அப்போது நினைவுக்கு வந்தது. அதைக் கொள்ளி வாய்ப் பிசாசு என்று எண்ணியது எவ்வளவு முட்டாள்தனம்?’ என்று எண்ணிய போது, சம்பத்துக்கு வெட்கமாக இருந்தது.
“இனி எதற்கும் பயப்படக்கூடாது’ என்று தீர்மானித்துக் கொண்டான் சம்பத்.

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *