தமிழ்க் கதைஞர் வட்டம் பரிசளிப்பு
சிறுகதை படிப்பவனுக்கு புரியும்படி இருக்க வேண்டும்
தகவத்தின் கடந்த கால அனுபவத்தை மாத்திரம் எழுத்துக் கொண்டு பார்த்தால் சிறுகதை என்ற வடிவம் பற்றிய உணர்வு எழுத்தாளர்களிடையே வளர்ந்திருக்கிறது என்பதையும், வாசகர்களிடையே வெறுமனே கதைகள் மாத்திரம் படிக்கிறோம் என்ற உணர்வின்றி கதைகளில் வடிவம், சம்பவம், பாத்திர அமைப்பு முதலிய இலக்கிய கூறுகளையும் கவனிக்க வேண்டும் என்ற விமர்சன நோக்கும் உருவாகி இருக்கிறது என்பதைக் காண முடிகிறது. தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு 2010 விழா கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்ற போது தலைமையுரை ஆற்றிய தகவம் தலைவர் மாத்தளை கார்த்திகேசு இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தலைமையுரையாற்றிய மாத்தளை கார்த்திகேசு,
‘எவருடைய இதயம் ஏழைகளுக்காக கண்ணீர் வடிக்கிறதோ அவரையே நான் மகாத்மா என்பேன்’ என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர் என்று குறிப்பிட்டதோடும் மேலும் தொடர்ந்தார்.
சிறுகதை மனித உள்ளத்தின் அடைய முடியாத ஆசைகளின் எதிரொலி என்றார் புதுமை பித்தன். சுற்றி நிகழும் கொடுமை, சூழலில் நிகழும் அவலம் இவற்றைக் கண்டும் காணாமல் பார்த்தும் பார்க்காமல் பாதையோரத்தில் செல்கின்ற நடைபாதை வாசியல்ல எழுத்தாளன். அவனுக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும்.
சுற்றி நிகழும் அழுகையின் குரல் புரிய வேண்டும். அகிலத்தின் அவலத்தில் அவன் மூழ்கி எழவேண்டும். அப்பொழுதான் அவனது கதை மாந்தர்களும் சமூகத்திடையே மின்னிச்சிறப்பார்கள். எனவே எந்த எழுத்தாளனுக்குச் சமுதாயத்தின் மீது அக்கறை இருக்கிறதோ அந்த எழுத்தாளனுக்கு அவனுடைய படைப்புகள் எதிர்காலத்தில் பேசப்படும் படைப்புகளாக மிளிரும். சிறுகதை என்றால் என்ன? அது எப்படி அமைதல் வேண்டும் என்று எளிதில் வரையறுத்துக் கூறமுடியாது. சிறுகதை என்றால் அதற்கு ஒரு வடிவம் தேவையா? அப்படியென்றால் அந்த வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது பற்றி திட்டவட்டமாகக் கூற முடியாது.
ஒரு நிகழ்ச்சி, ஓர் அனுபவம், ஓர் உணர்ச்சி, படித்த ஒரு செய்தி என்று எது வேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்க முடியும். ஆனால் எது அடித்தளமானாலும் அதில் இலக்கிய மணம் கமழ வேண்டும். படிப்பவனுக்கு புரியும்படியாக இருக்க வேண்டும்.
சிறப்பான கதை என்பது எதை உள்ளடக்கி இருக்க வேண்டும் எந்தெந்த அம்சங்களைத் தாங்கி வரவேண்டும் என்பதை பொறுத்திருக்கிறது. எழுத்தாளனுக்குப் பல அனுபவங்கள் நேரலாம். பல அனுபவங்கள் பலவகைளில் எழுத்தாளனை வந்து அடையலாம். அவற்றை நேரடி வர்ணனையாகவோ திடீர் திருப்பங்களுடனோ, பரிதாபக் கூற்றாகவோ, உச்சமிகையாகவோ, கதை சொல்வதும் கதை அல்ல.
கதைகள் இப்படி நேர்வது இல்லை. கதைகளின் தேர்வு அவற்றின் ஊற்றுக்கண்ணின் ஆழத்தின், அதன் இயல்பின் தன்மையைப் பொறுத்து நிகழ்கிறது. அந்த ஊற்றுக் கண்ணின் ரகசியங்களைத் தன்னூல் பொதித்து கொண்டு வருவதே சிறப்பான கதை. பூடகமாகவும், வெளிப்படையாகவும் பின்னிக்கொண்டு அமைகிறது ஒரு நல்ல கதை. சில சமயம் சுரீர் என்ற வலியையும் பசித்த மகவு தாயைப் பார்த்தவுடன் கொள்ளும் ஆவலையும் அப்படியா என்ற வியப்பையும், ‘யம்மா’ என்ற அற்புதத்தையும் இப்படியுமா என்ற உணர்வையும் ஏற்படுத்தவல்லது. ஒரு நல்ல கதை ஊற்றுக் கண்ணிலிருந்து பீரிட்டுக் கிளம்பிய பின் பல திசைகளில் பாய்ந்து பல தளங்களைச் சுற்றியபின் இலேசாக பட்டு பூச்சியைப் போல் அமர்ந்துகொள்ளும் சிறப்பான சிறுகதை.
ஒரு சிறுகதையை நல்ல முறையில் யாரும் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு. வாழ்க்கையில் நிறைந்த அனுபவம் உடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், உரை நடை அவசியத்தையும், வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்களை அறிந்தவர்கள் நிறைந்த நூற் பயிற்சி உடையவர்கள்தான் நல்ல முறையில் சிறுகதைகளை படைக்க முடியும். வாழ்க்கையை கண்டு அதை ஒளிப்படம் பிடிப்பது சிறுகதை அல்ல. அவ்வாறான சிறுகதைகளின் ஆயுளும் அற்ப ஆயுளாகவே முடிந்துவிடும் என்று கூறினார் கார்த்திக்கேசு.
– செப்டம்பர் 12, 2010
– நன்றி (http://www.thinakaran.lk/vaaramanjari/2010/09/12/?fn=f10091212&p=1)
ஆரம்ப கால சிறுகதை எழுத்தாளர்களுக்கு சரியான வழிகாட்டி.யாரும் சொல்லாத கருத்துகள் பல சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி.