கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 15,435 
 
 

வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட இந்நேரம் வந்திருக்கக் கூடும்.

துஷ்டி கேட்க வந்தவர்கள் ஆங்காங்கே மர நிழலில் தளர்ந்துபோய் உட்கார்ந்து இருந்தார்கள். தெரு நாய்கூடக் குரைப்பதை மறந்து கிறங்கிப்போய் செம்மண்ணில் குழி பறித்துப் படுத்துக்கிடந்தது. வெயில்பட நின்றபடியே நீண்ட நேரமாக கொட்டுக்காரர்கள் வியர்த்து வழிந்து, சட்டை உடம்பில் ஒட்டிக்கொள்ள… யாரும் கேட்காத போதும் சாவு மேளத்தை உரத்து அடித்துக்கொண்டு இருந்தார்கள். கொட்டுக்காரனின் அவிழ்ந்த வேட்டியில் இருந்து ஒரு காய்ந்த வெற்றிலை நழுவிக் கீழே விழுந்தது. அதைக் குனிந்து எடுத்தபோதுகூட அவன் மேளம் அடிப்பதை நிறுத்தவே இல்லை.

”கணவதி, இன்னும் எம்புட்டு நேரம் பாக்குறது, வெயில் இறங்கினதும் எடுத்திரலாம்ல” என்று அப்பாவு மாமா கேட்டார். அவருடைய முகத்தில் வியர்வை வடிந்துபோயிருந்தது.

”நடுவுள்ளவ வந்திரட்டும். அம்மை முகம் பாக்காமக் கொண்டுபோயிட்டா ஏங்கிப்போயிருவா. பிறகு, தப்பாப்போயிரும்” என்று சொன்னேன்.

”அப்படி இல்லை கணவதி. ராத்திரி போன உசுரு. நேரமாச்சுன்னா, உடம்பு தாங்காது. எல்லாரும் வேலைவெட்டியைப் போட்டுட்டு வந்திருக்காங்க. ஜோலியைப் பாத்துப் போகணும்ல…” என்றார் மாமா.

”போன் பண்ணிப் பாக்கேன்” என்றபடியே நடந்து ஓரமாக வந்து நின்றேன்.

எத்தனை முறை போன் பண்ணுவது? ஒவ்வொரு முறையும் பாஸ்கர் அழுகையோடு, ”மச்சான் வந்துர்றோம். மயானத்துக்குக் கொண்டுபோயிராதீக” என்று கரைந்து அழுத குரலில் சொல்வதைக் கேட்கும்போது கலக்கமாகவே இருக்கிறது. ஆனாலும், இறந்த உடலை வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் காத்துக்கொண்டு இருக்க முடியும்?

கொஞ்சம் தள்ளி வந்து மர நிழலில் நின்றுகொண்டேன். அம்மா இறந்துபோனது எனக்குள் எந்த அதிர்ச்சியையும் உருவாக்கவில்லை. அழுகைகூட முட்டிக்கொண்டு வரவில்லை. ஒருவேளை பிரிவு பழகிப் போய்விட்டதோ என்று மனதுக்குள் தோன்றியது.

”மாமா, உங்களை அம்மா கூப்பிடுறா” என்று ஓடி வந்து சொன்னான் கலைவாணியின் மகன் செந்தில். சாலையில் கூடவே நடந்து வந்தபடியே கேட்டான்.

”மாமா, ஆச்சியை எப்போ எடுப்பாக?”

”எதுக்குடே?”

”ராத்திரி ட்வென்டி ட்வென்டி மேட்ச் இருக்கு, அதைப் பாக்கணும்.”

”அதுக்குள்ள எடுத்திருவாக.”

வீட்டின் வாசலில் சிப்பிப்பாறையில் இருந்து வந்திருந்த பிரம்மநாயகம் மாமா நின்றுகொண்டு இருந்தார். ஆளைப் பார்த்தவுடன் அவரது முகம் துக்கமானது. கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார்.

”சீரும் சிறப்புமா வாழ்ந்துதான்  உங்கம்மா செத்திருக்கா. கலக்கப்படாத… மனுசன் எம்புட்டு நாள் வாழ்ந்திர முடியும்? பூமிக்குப் பாரம் இல்லாமப் போய்ச்சேந்தா சரிதான்.”

அவரது உள்ளங்கையின் வியர்வை என் கையை நனைத்தது. இது போன்ற நெருக்கம் துக்க விசாரிப்பைவிடவும் வேறு நாட்களில் ஏற்படுவது இல்லை.

அவரோடு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மொட்டை அடிப்பதற்காக வந்து காத்திருந்த நாவிதர் கும்பிடு போட்டுவிட்டு, வேலி ஓரமாகப் போய் உட்கார்ந்துகொண்டார்.

பிரம்மநாயகம் கையால் முகத்துக்கு நேராக விசிறியபடியே, ”எல்லாரும் வந்தாச்சா?” என்று கேட்டார்.

நான் தயக்கத்துடன் ”நடுவுல உள்ளவ இன்னும் வரலை மாமா” என்று சொன்னேன்.

”அவ எங்கேயோ வடக்கிலல்ல இருக்கா. சேதி சொல்லியாச்சில்லாலே…”

”கலர் குடிக்கிறீங்களா மாமா?” என்று கேட்டேன்.

”அதைக் குடிச்சா ஏப்பமா வரும். ஊர்ல இருந்து பஸ்ஸு கிடைக்கலை. இல்லேன்னா, காலையில வந்திருப்பேன்” என்றபடியே வெயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அது, தகதக என ஒளிர்ந்துகொண்டு இருந்தது.

டவுன் பஸ் வந்து நிற்கும் ஓசை கேட்டது. யாரோ ஒரு பெண் பேருந்தில் இருந்து  இறங்கி ரோட்டிலேயே மாரில் அடித்துக்கொண்டு, ”என்னப் பெத்த மகராசி… என் சிவக்குளத்துப் பொறப்பே…” என்று புலம்பியபடியே, வேகமாக வந்துகொண்டு இருந்தாள். அம்மாவின் ஊரில் இருந்து வந்திருக்கிறாள் என்பது மாத்திரம் தெரிந்தது.

பிரம்மநாயகம் பந்தலுக்குள் போய் உட்கார்ந்துகொண்டு, அன்றைய பேப்பரை உரத்துப் படிக்க ஆரம்பித்திருந்தார்.

”மாமா, உன்னைய அம்மா கூப்பிட்டா…” என்று செந்தில் கூப்பிட்டான்.

ஹாலின் உள்ளே போனபோது கால்வைக்க இடம் இல்லாமல் ஆட்கள் உட்கார்ந்து இருந்தார்கள். மூச்சு முட்டும் இறுக்கம். ஒரு பாதம் வைத்துக் கடந்துபோகும் அளவு மட்டுமே இடைவெளி இருந்தது.

அம்மாவைக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். இப்படி அம்மா ஒரு நாளும் படுத்துக்கிடந்தவள் இல்லை. அதுவே என்னவோபோல் இருந்தது. உடல் விறைப்பேறி இருந்தது. அம்மாவுக்குப் பிடித்த மாம்பழ கலர் சேலையைக் கட்டியிருந்தார்கள். தலைமாட்டில் விளக்குஎரிந்துகொண்டு இருந்தது.

வீட்டின் உள் அறைகளை விளக்குமாறால் கூட்டிவிட்டு, பாயைப் போட்டிருந்தார்கள். சுவர் காரை உதிர்ந்துகொண்டே இருந்தது. ஓர் அறைக்குள் கலைவாணியின் மகள் விநோதினி மஞ்சள் சுடிதாரில் படுத்துக்கிடந்தாள். அருகில் அவளுடைய இரண்டு வயது மகன் பிரபு, உட்கார்ந்து பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தான். அவள் அருகே வத்தலகுண்டில் இருந்து வந்திருந்த ஜெயா படுத்திருந்தாள்.

அவளை நீண்ட நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் பார்க்கிறேன். தலை நரைத்ததும் பெண்களின் முகம் மாறிவிடுகிறது. ஜெயா எனக்கு இளையவள்தான். எனக்கு ஆகஸ்ட் வந்தால்தான் 52 முடிகிறது. அவளுக்கு 48 அல்லது 50 இருக்கலாம். ஆனால், தலை பஞ்சாக நரைத்துப்போய் இருக்கிறது. வெக்கை தாங்காமல் கையில் விசிறியை ஆட்டியபடியே சாய்ந்துகிடந்தாள். இந்த வீட்டுக்குப் பல வருஷமாக வந்துபோகாத அத்தனை பேரையும் அம்மா செத்து ஊருக்கு வரவழைத்து இருக்கிறாள்.

கலைவாணி சேலையால் முகத்தைத் துடைத்தபடியே அறைக்குள் நடந்து வந்தாள். அவள்தான் எனக்கு நேர் இளையவள். அவளுக்கு அடுத்தவள் சியாமளா. கடைசித் தங்கச்சி மேகலா, தம்பி ஸ்ரீதர், எல்லோரும் திருமணமாகி ஆளுக்கு ஓர் ஊரில் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் இதே அறைக்குள் ஒரே போர்வையை நீளமாக விரித்து, அத்தனை பேரும் படுத்துக்கிடந்திருக்கிறோம். இரண்டு தட்டில் ஐந்து பேரும் மாறி மாறிச் சாப்பிட்டு இருக்கிறோம். டம்ளரில் காபி குறைவாக உள்ளது என்று பிடுங்கிக்கொள்ள சண்டையிட்டு இருக்கிறோம்.

கலைவாணி ரகசியம் பேசுவதுபோலச் சொன்னாள்… ”யண்ணே சியாமா வரலையாம்லே?”

”ஆரு சொன்னது உனக்கு?”

”நானே அவ வீட்டுகாரர்கிட்ட பேசினேன். அவரு மட்டும்தான் வர்றாராம்.”

”எதுக்கு வரலையாம்?”

”அவளுக்கு அம்மா மேல கோவம்.”

”அதுக்கு செத்ததுக்குக்கூடவா வராமப் போயிருவா?”

”அவ புத்தி அப்படி. அவளுக்கு அம்மா மாதிரியே பிடிவாதம் ஜாஸ்தி!”

”செத்துப்போன ஆளோட எதுக்குடி பிடிவாதம்? சியாமா என்ன இன்னும் சின்னப் பிள்ளையா? அவளுக்கும் ரெண்டு பொம்பளைப் பிள்ளை இருக்கு. நாலு பேரு வந்து போயி இருக்கணும்ல, ஏன் பைத்தியக்காரியா இருக்கா?”

”அவ மாப்ளே, காலையில மதுரைக்கு வந்து தினகரன் வீட்டுல இருக்காராம். லேட்டா வந்து பிரச்னை பண்ணணும்னு திட்டமாம்.”

”என்ன பிரச்னைப் பண்ணப்போறாங்களாம்?”

”அவளை நாம யாருமே மதிக்கலையாம். நடுவுல பிறந்தவனு ஒதுக்கியே வெச்சிருக்கமாம்.”

”அப்படி யாரு சொன்னது?”

”அவளா நினைச்சிக்கிடுறா. நல்ல இடத்துல அவளுக்குக் கல்யாணம் பண்ணலையாம். சொத்துசுகம் இல்லாத ஆண்டியாப் பாத்துக் கொடுத்துட்டோமாம். வீடு வாசல் இல்லாத வெறும் ஆளுனு அவளை இளக்காரமாகப் பேசுறோமாம்.”

”அப்படி அவளா நினைச்சிக்கிட்டு இருக்கா.”

”சியாமாவை பாஸ்கருக்குக் கட்டிக்குடுக்க அப்பாவுக்குக்கூட இஷ்டம் இல்லதான்… அம்மாதானே பேசி முடிச்சிவெச்சா?”

”நீயும் ஏன்டி புரியாமப் பேசுறே? பாஸ்கர் மில்லுல வேலை செய்றான். ஏதோ வருமானம் கைக்குப் பத்தாம இருக்கு. ஆனா, பொண்டாட்டி பிள்ளையை ஒழுங்காத்தானே வெச்சிக் காப்பாத்துறான்?”

”அதெல்லாம் இல்லை. அவளைப் போட்டு ரொம்ப அடிப்பாராம். ஒருக்க கையை உடைச்சிருக்காரு. அவ சூரத்துல இருக்கா, அங்கே என்ன நடக்குனு நமக்கு யாருக்குத் தெரியும்? பாவம்.”

”உனக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சது?”

”அது சுசி கல்யாணத்துக்கு வந்தப்போ, அவளே சொன்னா. நடுவுல உள்ளவளாப் பிறந்துட்டா எல்லாக் கஷ்டத்தையும் அனுபவிச்சே தீரணும்னு எழுதியிருக்குனு வாய்விட்டு அழுதா. எனக்கே கஷ்டமா இருந்துச்சு.”

”ஏன், நீயும் நானும் படாத கஷ்டமா? அது என்ன நடுவுல உள்ளவளை மட்டும் ஒதுக்கிவெச்சிட்டாங்க?”

”அப்படிச் சொல்லாதண்ணே. அவ சொல்றது நிஜம்தான். சியாமா என்னைவிட ஒன்றரை வயசு கம்மி. அவளைச் சின்னதுல இருந்தே யாரும் சரியாக் கவனிக்கலே. உனக்கே தெரியுமே? ஸ்கூல்ல படிக்கிறப்போ நான் படிச்ச புத்தகத்தைத்தான் படிச்சா.  என் யூனிஃபார்மைத்தான் போட்டுக்கிடுவா. இவ்வளவு ஏன், அவ கொண்டுபோன டிபன் பாக்ஸ்கூட நான் கொண்டுபோனதுதான். அப்பா என்னை இன்ஜினீயருக்குக் கட்டிக்கொடுத்தாருல, அப்படி அவளைக் கட்டிக்குடுக்கலையே. இவ்வளவு ஏன், நம்ம தாமரை கல்யாணத்துக்கு அவளுக்குப் பத்திரிகைகூட அனுப்பிவைக்கலை. போன் போட்டு என்கிட்டே அழுதா.”

”அதுக்கு அம்மா மேல என்னடி கோவம்?”

”யாருக்குத் தெரியும்? ஆனா, ரெண்டு பேரும் பேசிக்கிடுறதே கிடையாது. அஞ்சு வருசமாச்சு. ரெண்டும் ரெண்டு கடுவாப் பூனைக.”

”நிஜமாவா சொல்றே?”

”ஆமாண்ணே. உனக்குத் தெரியாது. அண்ணிக்குத் தெரியும். ஒரு நாள் அண்ணி கூட சியாமாவைக் கூப்பிட்டு சமாதானம் சொல்லிச்சி. அவ உங்க ஜோலியைப் பாத்துட்டுப் போங்கனு திட்டிட்டா. அவமானமாப்போச்சு.”

”கலை, பாஸ்கர் நிஜமாவே மதுரைக்கு வந்து இருந்துக்கிட்டா நாடகம் ஆடுறான்?”

”எனக்கு அப்படித்தான் தோணுது. தினகரன் வீட்டுக்கு நீயே போன் போட்டுக் கேளு. அம்மா செத்துப்போயிட்டா. இந்த வீட்டை வித்துப் பணத்தை எடுத்துக்கிடணும். அம்மா போட்டு இருக்க ஒத்தவடம் செயின், கம்மலு எல்லாம் அவளுக்கு மொத்தமா வேணுமாம். வம்பை வளக்கத் துடிச்சிக்கிட்டு இருக்கா. பொணத்தை வெச்சிருந்தா பாஸ்கர் ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து எடுக்கவிடாமப் பிரச்னை பண்ணிறப்போறான்!”

”சரி, நான் பாத்துக்கிடுறேன். நீ யார்கிட்டேயும் வாயைத் திறக்காம இரு” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அம்மா என்ற சொல் மாறி பொணம் என்றாகிவிட்டது வருத்தமாக இருந்தது. அம்மாவின் உடலை இன்னமும் எடுக்கவே இல்லை. அதற்குள் வீட்டை விற்பதையும் அம்மாவின் நகையைப் பங்கு போட்டுக்கொள்வதையும் பற்றிய பிரச்னை உருவாகிவிட்டது. சியாமா அப்படி நடந்துகொள்வாளா? இல்லை, கலைவாணிதான் இப்படி இட்டுக் கட்டிச் சொல்கிறாளா? குழப்பமாக இருந்தது. உறவு கசக்கத் தொடங்கிவிட்டால், அதைப் போல மன வேதனை தருவது வேறு ஒன்றுமே இல்லை. கசகசப்பும் எரிச்சலும் வெயிலால் உண்டான கிறுகிறுப்பும் தலை வலியை உருவாக்கிக்கொண்டு இருந்தன.

எந்தப் பிள்ளையின் வீட்டிலும் போய் இருக்காமல் அம்மா தனியாகவே வாழ்ந்தாள். பிடிவாதம்தான் முதுமையின் ஒரே பற்றுக்கோல்போலும். வயது அதிகமாக அதிகமாக அவளுடைய பிடிவாதமும் ஏறிக்கொண்டேபோனது.

”உனக்கு யார் மேலம்மா கோபம்? என்று நானே கேட்டு இருக்கிறேன். அதற்கு எரிந்துவிழுவதுபோலச் சொல்வாள்… ”என் மேலதான் கோபம். வாழ்ந்து ஒரு சுகத்தையும் காணாம செத்துப் போகப்போறமேனு என் மேலதான்டா கோபம். அதுவும் கூடாது, இப்பவே சவம் மாதிரி வாயை மூடிக்கிட்டுக்கிடனு சொல்றா உன் பொண்டாட்டி. எனக்கு யாருமே வேணாம்ப்பா, மண்ணுக்குள்ள புதைச்ச பிறகு கூட யார் வரப்போறா? கோட்டிக்காரியா வாழ்ந்துட்டனேனுதான்டா வயித்தெரிச்சலா இருக்கு!”

அம்மா எதை நினைத்துப் புலம்புகிறாள் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், 16 வயதில் திருமணமாகி வந்து, ஏழு பிள்ளைகளைப் பெற்று, இரண்டை சாகக் கொடுத்து, உருப்படி இல்லாத அப்பாவைச் சமாளித்து, சொந்த பந்தங்களின் பொறாமையை, பிரச்னைகளைச் சமாளித்து, பிள்ளைகளைப் படிக்கவைத்து, நோய்நொடிபார்த்து, திருமணம் செய்துகொடுத்து, தன்னைக் கரைத்துக்கொண்டே வந்தவளுக்கு… திடீர் என ஒரு நாள் உலகம் கசப்பேறிவிட்டது.

அப்பா உயிரோடு இருந்த வரை அவரைப் பேசாத பேச்சே இல்லை. திட்டாத வசையே இல்லை. அவரை மட்டும் இல்லை; வீட்டுக்கு வரும் உறவினர்கள், பிள்ளைகளைக்கூட அவள் சுடு பேச்சால் விரட்டி இருக்கிறாள்.

முதிய வயதில் இதை நினைத்து அப்பா அழுவதைப் பார்த்திருக்கிறேன். காய்ச்சல் கண்ட நாளில் நாக்கில் படும் அத்தனை உணவும் குமட்டுவதுபோல, முதுமையின் ஏதோ ஒரு தருணத்தில்… உலகம், நம்மைச் சுற்றிய மனிதர்கள், அவர்களின் சிரிப்பு, பேச்சு, சத்தம், சாப்பாடு எல்லாமும் கசப்பேறிக் குமட்டத் துவங்கிவிடும்போலும்.

முதுமையில் அப்பாவும் அம்மாவும் பரம விரோதிகளைப் போல சண்டைபோட்டார்கள். எத்தனையோ ஆண்டுகளாகச் சேர்த்துவைத்த கோபத்தைஅம்மா கொப்பளிக்கவிடுகிறாள் என்று அப்பாவுக்குத் தெரிந்தே இருந்தது.

ஆனாலும், அவரால் சினத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பாவின் சகல பலவீனங்களையும் அம்மா பரிகாசத்துடன் சுட்டிக்காட்டவும் ஆத்திரமாக விமர்சிக்கவும் தொடங்கினாள். அப்பாவோ சாப்பாடு கிடைக்காமல் போய்விடக் கூடாதே என்ற நினைப்பில் அவமானத்தைத் தாங்கிக்கொள்ள ஆரம்பித்தார்.

இந்த துவேஷத்தின் உச்சம்போல அப்பா ஒரு நாள் பொது மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார். அம்மா அவரைப் போய்ப் பார்க்கவே இல்லை. அவராக வீடு திரும்பி வந்தபோதும் அதைப்பற்றி கேட்டுக்கொள்ளவே இல்லை. வெறுப்பைவிட மோசமான வியாதி என்ன இருக்கிறது? பிள்ளைகள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவருக்கு ஆழமாக இருந்தது. அதே ஏக்கம் பிள்ளைகளுக்கும் அவர் மீது இருந்தது. ஆனால், அந்த ஏக்கம் ஆழமான வெறுப்பாக மாறியபோது, சண்டைகளும் சச்சரவுகளுமே மீதம் இருந்தன. அதை சியாமா சரியாகவே அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறாள்.

அவள்தான் அப்பாவின் சினத்தைத் தூபம்போட்டு வளர்த்தாள். அவரைத் தன்னோடு அழைத்து நாலு மாதம் உபசரித்து அனுப்பிய பிறகு, அப்பாவின் தோற்றமே உருமாறிப்போயிருந்தது. அவர் பிள்ளைகள் அத்தனை பேர் மீதும் வெறுப்பைக் கக்கினார். தெரிந்தவர்கள், உறவினர்களிடம் சொந்தப் பிள்ளைகளைப் பற்றி ஆவலாதி சொல்லி சந்தோஷப்பட ஆரம்பித்தார். எந்தப் பிள்ளைகளுக்காக வாழ்க்கையைச் செலவிட்டோமோ, அவர்களைத் தன்னால் முழுமையாக நேசிக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்படவே இல்லை.

அவரது மரணம்தான் சியாமாவின் முதல் வெற்றி என்று தோன்றுகிறது. அன்றைக்கே வீட்டை விற்றுவிட வேண்டும் என்ற பேச்சை சியாமா துவங்கினாள்.

”நான் ரெண்டு பொம்பளைப் பிள்ளைய வெச்சிக்கிட்டு நிக்கிறேன். இந்த வீட்டை வித்து பாதி எனக்கு வந்து சேரணும்!” என்றாள்.

அதைக் கேட்ட கலைவாணியின் கணவர் கோபப்பட்டு, ”ஏன் முழுசும் எடுத்துக்கோயேன்!” என்று சொன்னார்.

அந்த பதிலைக் கேட்ட சியாமா உடனே அங்கு இருந்த தனது தண்ணீர்க் குடத்தைத் தள்ளிவிட்டு, ஓங்காரமாகக் கதறி அழுதுக் கூப்பாடு போட்டாள். பிரம்மநாயகம் மாமாதான் அவளைச் சமாதானம் செய்து வைத்துப்போனார். ஆனால், அந்த வெடி பல நாட்களாகப் புகைந்துகொண்டே இருந்து. இன்றுதான் அது வெடிக்கப் போகிறது என்று தாமதமாகவே புரிந்தது.

சியாமாவின் மீது ஆத்திரமாக வந்தது. நடுவில் உள்ளவளாகப் பிறந்தது யாருடைய தவறு? குடும்பத்தில் யாரும் வேண்டும் என்று அவளை நடத்தவே இல்லை. சூழல் அப்படி அமைந்துவிட்டதற்கு யாரைக் காரணம் சொல்வது? எதற்காக இவ்வளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு இருப்பது? நினைக்க நினைக்க ஆத்திரமாக வந்தது. சியாமாவின் கணவன் வருவதற்குள் அம்மாவின் உடலை எடுத்துவிட வேண்டியதுதான் என்று ஏனோ தோன்றியது. வேக வேகமாக ஆட்களைத் துரிதப்படுத்தி சப்பரம் தயார்செய்யச் சொல்லிவிட்டு, அடுத்த காரியங்களைச் செய்ய முயன்றேன்.

அழுதுகொண்டு இருந்த பெண்களின் கூக்குரல் அதிகமானது. வெயில் மெள்ள அடங்கிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. கொட்டுக்காரர்கள் உன்மத்த நிலையை அடைந்து இருந்தார்கள். அந்தச் சத்தம் என்னை வெறியேற்றுவதாக இருந்தது.

பாஸ்கர் வந்துவிடக்கூடாது என்று ஆவேசமானவனைப் போல உள்ளும் புறமும் ஓடிக்கொண்டே இருந்தேன்.

அம்மாவின் சவ ஊர்வலம் புறப்பட்டபோது சாலையில் ஏதோ டாக்சி வருவது போலத் தெரிந்தது. ஊர்வலத்தை நிறுத்த வேண்டாம் என்று சொல்லியபடியே நடக்க ஆரம்பித்தேன். வீட்டின் வாசலில் நின்று பெண்கள் அழுதுகொண்டே இருந்தார்கள்.

ஊரின் வடக்கே இருந்தது மயானம். பனை மரங்களும் ஒற்றை வேம்பும் இருந்த மயானப் பகுதியை நோக்கி செம்மண் சாலையில் சப்பரம் போகத் துவங்கியது. பூக்களை வாரி வாரி இறைத்தார்கள். மயானத்தில் அம்மாவை எரிப்பது என்று முடிவுசெய்து வெட்டியான் தயாராக இருந்தான். உடலைக் கிடத்தி விறகுகள் சுற்றிவைத்து எருவட்டிகளை அடுக்கிவைத்துவிட்டு, ஒற்றை எருவட்டியைக் கையில் வைத்தபடியே, ‘கடைசியா முகம் பாத்துக்கோங்க’ என்ற அவனுடைய குரல் கேட்டபோது தூரத்து சாலையில் பாஸ்கர் வந்த டாக்சி தெரிந்தது. நான் கொள்ளிவைக்க ஆரம்பித்தேன்.

வேட்டி காற்றில் படபடக்க… பாஸ்கர் அழுகையை அடக்க முடியாதவனாக ஓடி வந்து எரிந்துகொண்டு இருந்த சிதையைக் கண்டபடியே, ”அவ்வளவு சொன்னனே… மச்சான், பத்து நிமிஷம் பாடியை வெச்சிருந்தா முகம் பாத்து இருப்பேனே. பிரயாசைப்பட்டு வந்தது வீணாப்போச்சே” என்று கதறினான்.

எதுவுமே தெரியாதவனைப் போல கேட்டேன். ”சியாமா வரலையா?”

”அவ மூதி… வர மாட்டேங்குதா. நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். பிடிவாதமா ரூமுக்குள்ளே போய் கதவை மூடிக்கிட்டா. உங்க தங்கச்சியைப் பத்திதான் தெரியும்ல. எதுலயும் உடும்புப்பிடிதான்.”

”அப்போ மசிரு நீ மட்டும் எதுக்கு வந்தே?” என்று ஆத்திரமான குரலில் கேட்டேன்.

”என்ன மச்சான்… பேச்சு ஒரு தினுசாப் போகுது?” என்றான் பாஸ்கர்.

”புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்துக்கிட்டு நாடகம் ஆடுறது தெரியாதுனு நினைக்கிறியா? செருப்பால அடிச்சிடுவேன். சாவு வீடுனு பாக்கேன். பேசாமப் போயிரு.”

”மச்சான்… பேசுறது எனக்கு ஒண்ணும் புரியலை.”

”நடிக்காதடே. மரியாதையாப் போயிரு. இல்லே, இங்கயே அடிச்சிக் கொன்னு போட்ருவேன்.”

”நான் கிளம்பறப்பவே உங்க தங்கச்சி படிச்சிப் படிச்சி சொன்னா… நான்தான் கேட்கலை. நீங்க எல்லாரும் கூட்டு சேந்து அவ நடுவுல உள்ளவனு ஓரவஞ்சகம் பண்ணி, இருக்கிற சொத்து சொகத்தை எல்லாம் முழுங்கிட்டீக. மச்சான், அவ உடம்புல ஓடுறதும் உங்க ரத்தம்தான். ஆனா, அவளை நீங்க கூடப்பொறந்த ஒரு பொறப்பாவே நினைக்கலை. ஒரு மாசம் நிமோனியா வந்து படுத்துக்கிடந்தா. நீங்க ஒரு ஆளு அவளைப் பாக்க வந்தீகளா? கூடப்பொறந்து என்ன பிரயோசனம்? உங்களை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சது உங்க அப்பன். அவரு புத்திதான உங்க எல்லாருக்கும் வரும்? சியாமா உங்க அம்மா புத்தி. உங்க வீட்ல வந்து தப்பிப் பொறந்துட்டா. மச்சான், நீங்களே எல்லா சொத்து சொகத்தையும் ஆண்டு அனுபவிச்சிக்கோங்க. ஆனா, உங்க அம்மாவை நானும் பெத்த தாயாதான் இத்தனை வருஷம் நினைச்சிட்டு இருந்தேன். அந்த முகத்தைப் பாக்கவிடாமப் பண்ணிட்டீங்களே… நீங்க உருப்படவே மாட்டீங்க. பொண்டாட்டி பிள்ளை எல்லாம் விளங்காமப்போயிரும். உங்களை கோர்ட்டுக்கு இழுக்காம விட மாட்டேன்” என்று கத்தினான்.

கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாஸ்கரை மயானம் என்றும் பார்க்காமல் ஓங்கி முகத்தில் அறைந்தேன். அவன் கதறியபடியே மண்ணில் விழுந்தான். யாரோ ஓடிப்போய் அவனைத் தூக்கினார்கள்.

சியாமா இதற்குத்தான் ஆசைப்பட்டாள். உறவுகள் துண்டாடப்பட வேண்டும் என்று தான் உள்ளூர விரும்பினாள். அப்படியே நடக்கத் துவங்கியிருக்கிறது.

எல்லோரும் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். மச்சானை அடித்த குற்றத்தில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று திகைப்பாக இருந்தது. சட்டெனத் தலை கவிழ்ந்து வெடித்து அழ ஆரம்பித்தேன். அழுகையின் ஊடாகவே சியாமா வசதி இல்லாதவள் என்பதற்காகப் பல நேரம் நாங்கள் அறிந்தே அவளை ஒதுக்கினோம் என்ற உண்மை மனதை அரித்துக்கொண்டேதான் இருந்தது. அதை எப்படி மறைப்பது என்று தெரியாத குற்ற உணர்வோடு பெருங்குரலெடுத்து அழுதுகொண்டு இருந்தேன்!

– நவம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *