கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 7,993 
 
 

என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும் துடிப்பான கடமையுணர்வு, சுறுசுறுப்பு, விசுவாசம், அன்பு, என் தோழமையால் கிடைத்த பெருமை, கவ்ரவம் எல்லாமாகச் சேர்ந்து ஆறு வருடங்களுக்கு முன் என் இரண்டாவது வயதில் நான் அவரை வந்து சேர்ந்த போது பிரியத்துடனும் பாசத்துடனும் இந்த சரித்திர நாயகனின் பேரை எனக்கு சூட்டி மகிழ்ந்தார் என் எஜமானர். அந்த பாரம்பர்யமான பெருமை மிகுந்த நகரத்தில் என் எஜமானரின் வீடு இருந்த தெருவில் மாத்திரமல்ல சுற்று வட்டாரத்திலேயே செல்லப் பிராணிகளில் நான்தான் ராஜா. கடைசி வரை எனக்குப் போட்டியாக எவனும் எழுந்து வரவுமில்லை. நான் எஜமானிடத்தில் வந்து சேர்ந்து ஒரு வருடம் முடிவதற்குள்ளாக எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த வீட்டின் மூத்த மகனும் நானும் மிகவும் நெருங்கி விட்டோம். ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக உறங்குவது என்ற அளவுக்கு வளர்ந்து அவனுடன் பள்ளிக்கூட வாசல் வரை போவேன். பள்ளிக்கூடம் முடிந்து வரும்போது கூட்டி வருவேன். எங்களுடைய நெருக்கத்தை சற்று அதீதமாக நினைத்த வீட்டின் தலைவியார் – தாயார் என்னவெல்லாமோ கண்டித்துப் பார்த்து சலித்துபோய் விட்டு விட்டார்கள்.

அவன் வளர்ந்து வந்த அந்த நகரத்தின் அவனுடைய உலகத்தில் நான் ஒரு அசைக்க முடியாத அங்கம். அவனும் ஒரு நாளும் எந்த சூழ்நிலையிலும், எந்த நாளிலும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. எங்கள் இருவருக்குள்ளும் இறுகியிருந்த அலாதியான புரிதலைக் கூட அவன் தாயார் விபரீதமாகப் பார்க்கிற அளவுக்கு எங்கள் அன்பும் நட்பும் நங்கூரமிட்டிருந்தது. உன்னதமான அங்கீகாரத்தைநான் பெற்றிருந்த அந்த நாட்கள்தான் என் வாழ்வின் அற்புதமான அழகான அடையாளங்கள். எந்தப் பேயின் கண் பட்டதோ தெரியாது. திடும்மென கண்ணுக்கெட்டாத சூட்சுமங்களாய் அந்த தேசத்திலும் நகரத்திலும் புதைவுண்டிருந்த சில உரசல்கள் புகைய ஆரம்பித்தபோது அன்பு மழையில் நனைக்கப் பட்டிருந்தஎங்கள் அன்றாடத்தில் சில தடைகளும் தடங்கல்களும் தவிர்க்க முடியாததாகியது. மனுஷர்க்கு மத்தியில்தான் பிரிவுகளும் பிறழ்வுகளும் வரும் என நினைத்திருந்தேன். எல்லா உறவுகளுக்குள்ளும் விரிசல்கள் வரும் என்பது எனக்கு உறைத்திருக்கவே இல்லை.

என் எஜமானரின் நகரம் அந்த தேசத்தின் வரலாற்றில் தொண்மையானது. அந்த நகர்வாசிகளின் பேச்சிலும் மூச்சிலும் அந்தப் பீத்தல் எப்பொழுதும் கலந்துதானிருந்தது. வெளியில் இருந்து வருபவர்களை உபசரிப்பது, விருந்தோம்பல் எல்லாம் அவர்கள் கலாச்சாரத்தின் உச்சத்தில் இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய பெருமையின் திரை இருக்கும். அந்த நகரத்தின் இரண்டு கல்லூரிகள் தேசத்தின் கல்வி, அறிவுத் தேடல் என்கிற அலகுகளில் மிகப் பெரிய கவ்ரவத்தையும் பெருமையயும் ஆளுமையையயும் முதன்மையான இடத்தையும் பெற்றிருந்தன. நூற்றாண்டை நோக்கி பீடு நடை போடும் இந்தக் கல்லூரிகளின் பிண்ணனியில் பனிரெண்டு வருடங்களுக்கு முன் நகரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப் பட்டு தேசமெங்கிலிமிருந்து அது மாணவர்களை ஈர்த்தது. இந்த கல்வி தளங்களின் பிண்ணனியில் அந்த நகரின் சமூக விழிப்பு திசையும் தேடலும் புரிதலும் எப்பொழுதும் சூடாகவே இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். அந்த மண்ணின் வளமும் தங்கள் உழைப்பில் அதை செழுமையாக்கியிருந்த விவசாயிகளின் அனுபவமும் நகரத்தின் பெருமைக்குரிய குறியீடுகளில் ஒன்று. வணிகத்திற்கும் வெளி நாட்டு சந்தைப் பொருட்களின் தாராளப் புழக்கத்திற்கும் தேசத்தில் பேர் பேற்ற இடம்தான். எல்லாம் சேர்ந்துதான் வினையாகிப் போனதோ என்னவோ? என் எஜமானரின் வீட்டில் எனக்கு கிடைத்திருந்த ஆர்ப்பாட்டமான அன்பும் அங்கீகாரமும் பாதி என்றால் மீதி இந்த நகரத்தின் அழகும் கம்பீரமும் சேர்ந்து என்னை உச்சத்தில் வைத்திருந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

அநேகமாக படைப்பில் எல்லா உயிர்களிடத்திலும் பிரிவுகளும் வித்தியாசங்களும் இருக்கின்றன. அன்றாட வாழ்வாய் இருந்தால் இது ஒரு ப்ரச்னையே இல்லை. மனிதர்களுக்குள் மட்டும் ஏன் இந்தப் பிரிவுகள் புகைந்து கொண்டேயிருக்கின்றன? எனக்குப் புரிவதில்லை. மனிதன் சிந்திப்பதாலும் சிரிப்பதாலும் வந்து சேர்ந்த வினையா? எதிர் காலத்தைப் பற்றி அதிகமாகவே அலட்டிக் கொள்வதால் வருகின்ற ஆபத்தா? வாழ்வின் ஆதாரங்களை பங்கு போடும்போது வரும் அதிகப் பாதுகாப்பு உணர்வின் அடிப்படையில்தான் மனித சமூகங்களின் அவலங்கள் ஆரம்பிக்கின்றனவா? பிராணிகளான எங்களுக்கு அடுத்த வேளைச் சோற்றைப் பற்றிக் கூட அக்கறையில்லை. மனிதனோ ஆயிரம் தலைமுறைகளைக் குறித்த கனவுகளில் மூழ்கிப் போய் இருக்கும் நாட்களின் உறவுகளைச் சிதைக்கிறான். இப்படியெல்லாம் சம்பவிக்குமென்று தெரிந்துதான் தீர்க்கத்தரிசனத்தோடு “அன்றன்றுள்ள அப்பங்களை” மாத்திரம் ஆண்டவனிடம் விண்ணப்பிக்க அந்த தேவ குமாரன் சொல்லித்தந்து போனான் போலும். யாருக்கு புரிகிறது? சொன்னவனை மாத்திரம் பூஜித்து விட்டு அவர் சொன்னவைகளையெல்லாம் வசதியாய் மறந்து போகிற தந்திர பூமியும் அதன் மனிதர்களும். இருப்பதைப் பிரிக்கும் சந்தைப் போட்டியின் அசிங்கமான அடையாளங்களாகத்தான் நடந்து முடிந்த இரண்டு உலகப் போர்களையும் இனம் காண்பிக்கிறார்கள். கொத்துக் கொத்தாக இலட்சோப லட்சம் மனித உயிர்களின் இரத்தத்தினால் அந்த பலி பீடங்களைக் கழுவிவிட்ட பிறகு இந்த ஞானம் மனிதனுக்கு வந்தது.

தங்களின் கடந்து போன வரலாறுகளிலிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்; அல்லது வசதியாக மறந்து போகிறார்கள். இப்படித்தான் இந்த தேசத்துக்கும் இந்தநகரத்துக்கும் விடிந்தது. அது எனக்கும் இப்படி விடியும் என்று நான் நினைத்திருந்ததே கிடையாது. ஒரு தேசிய இனம் என்கிற அளவிலே இந்தநகரத்தின் படித்த கூட்டம் – இளைஞர்கள் தேசமெங்கும் பரவி பரவி மற்றவர்களை விட சற்று அதிகமாக எல்லா வேலைத் தளங்களிலும், உயர் அதிகாரங்களிலும் தொழில்களிலும் தங்கள் தடம் பதித்தனர்; கோலோச்சினர். மாறி வரும் பொருளாதார உற்பத்தி உறவுகளின் பின் புலத்தில், உற்பத்தி சக்திகள் மற்றும் அதிகாரக் குவிப்பால் முரண்பாடுகளும், கல்விக்கேற்ற கவ்ரவமான வசதி வாய்ப்புகளையும் எல்லோருக்கும் வழங்க முடியாதபோது, அந்தஆளும் வர்க்கங்கள் மிகச் சாதுர்யமாக, வசதியாக, தங்களது தேசிய இனத்தின் வாய்ப்புகள் மறுக்கப் பட்ட இளைஞர்களின் கோபத்தை இந்த நகரத்தின் இளைஞர்களுக்கெதிராக திருப்பி விட்டு, அதில் எழுந்த உரசலில் குளிர் காய்ந்து தப்பிக்க முனைந்தன. தேசத்தின் மறு முனையில் வேலையில்லாத இளைஞர்களின் போராட்டம் வெடிக்கிறபோது, வாய்ப்புகளில் சம பங்கு என்கிற அடிப்படையில், இந்த நகரத்து இளைஞர்களின் போட்டிக்கு சில தடைகள் சட்டங்கள் என ஆரம்பித்து நாளா வட்டத்தில் இரண்டு தேசிய இனம்களின் இளம் தலைமுறைதான் எதிரும் புதிருமாக எலியும் பூனையுமாக களத்தில் இறக்கப்பட்ட சொக்கட்டான் ஆட்டம் துவங்கியது.

இளைஞர்களின் வேலை வாய்ப்பு என்பதில் மட்டுமேயல்லாமல் பொருளாதரத்தை கட்டியெழுப்புகின்ற நிர்மாணத் திட்டங்கள், தொழில் ஆதாரங்கள், அடிப்படை வசதிகள் – இவற்றையெல்லாம் திட்டமிடுகின்ற அரசியல் அதிகாரத்தில் வாய்ப்பு பங்கு என எல்லாவற்றிலும் இரண்டு தேசிய இனங்களுக்குள்ளும் எழுந்த போட்டியிலும் உரசலிலும் தேசத்தின் வடகோடியில் பெரும்பாண்மையாய் இருந்த இந்த நகரம் உள்ளிட்ட மக்கள் தாங்கள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப் படுவதாய் உணர்ந்து இயக்கங்களையும் போராட்டங்களையும் தொடுத்தனர்; தொடர்ந்தனர். தங்களது எல்லாப் ப்ரச்னைகளின் சாரத்தையுமே இரண்டு தரப்பினருமே குறுகிய இனவாத போர்வைக்குள் முடக்கிக் கொண்டு முரண் பட்டனர். இரண்டு தரப்பிலுமே இருந்த நியாயமானநிதானமான தீர்வு காண முயன்ற வாதங்கள் இன வாதம் என்கிற அகோர கூச்சலுக்குள் மெளனமாக்கப்பட்டு கல்லறையாகியது. முரண்பாடுகளை இப்படி திசை திருப்புவது, மிக வசதியாக ஆளும் வர்க்கங்களின் ஆசியோடுதான் நடந்தேறின.வாழ்வின் ஆதாரத்திற்கான நீண்ட நெடிய போராட்டத்தின் வரலாறு இயற்கை கொஞ்சும் அந்த தேசத்தின் மேல் ஆக்ரோக்ஷமான , தேசிய இனங்களுக்கிடையேயான போரட்டமாய் அடையாளம் காணப் பட்டது. எல்லா தர்ம நியாய அடிப்படைகளயும், மனிதநேயத்தையும், மனித வாழ்வின் மதிப்பீடுகளையும் புறந்தள்ளிய தேசம், அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள நடந்த ஜன நாயக ரீதியான போராட்டத்தில் அவர்களை வசதியாய் வஞ்சகமாய் அப்புறப் படுத்தியது என்பதுதான் அந்த நகரத்தின் முந்தைய தலைமுறையின் வரலாறு. இந்தத் தகவல்கள் எல்லாமே , என் எஜமானரும் எஜமானியம்மையாரும் தேநீர் அருந்தும் போதும், சாப்பாட்டு மேஜையிலும் மாலை வேலைகளில் அவர்களுடைய நடைப் பயிற்சியின் போதும் அவர்கள் உரையாடலில் விவாதித்து உடன் போன என் செவிகளில் விழுந்தவைதான்.

தேசத்தின் ஆளும் வர்க்கங்களுக்கு ( பெரும்பாண்மை எதிரினம்)கிடைத்த இந்த வெற்றி, இந்த நகரத்தின் பண்பாட்டு அடையாளங்களை அழித்தொழிப்பதின் மூலம் எழுப்பப்படும் பய உணர்வின் மூலம் அவர்களை முற்றிலுமாய் முடக்க முடியும் என்கிற அடுத்த நடவடிக்கையாகத் திட்டமிடப்பட்டு ஒரு நள்ளிரவில் வன்முறை வெறியாட்டத்தை வாந்தியெடுத்தது. மனித வாழ்வின் விழுமியங்கள் மழுங்கிப் போய் தன் இருத்தலை மாத்திரம் நிறுத்த முனைந்த அந்த தேசத்தின் கர்ப்பத்திலிருந்து வன்முறையும் வெறியாட்டமும் இப்படித்தான் வெடித்துச் சிதறியது. நகரின் பழம் பெரும் நூலகம் முற்றிலுமாய் எரிக்கப் பட்டு ஒரே இரவில் நகரத்தின் மொத்த மக்களும் அவர்கள் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டு, முகங்களில் வடிந்த வேதனையுடன் முழு உலகிற்கும் வேடிக்கை காட்சியாய் மறு நாள் காலை வீதிகளில் நின்றனர். அணிந்திருந்த இரவு உடையுடனும் தூக்கமிழந்த கண்களுடனும் பசியுடனும் எனது சின்ன எஜமானும் நானும் தெருவோரத்தில் நின்றிருந்தோம். ஒரே புகையும் வெடிச் சத்தமும் குழப்பமுமாய் – சற்று தள்ளி எங்கள் வீடு பாதி உருக் குலைந்திருந்தது. என் சின்ன எஜமான் என்னை இறுகப் பற்றிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எனக்கு முந்திய நாள் இரவின் சம்பவங்கள் முதலில் புலப்படவில்லை; ஆனால் மிகப் பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டது என்பது மட்டும் புரிந்தது. அன்று மதியத்திற்கு மேல் எஞ்சிய பொருட்களை ஒரு வண்டியில் சுமையேற்றி நாங்கள் இடம் பெயர்ந்தோம். இந்தச் சம்பவத்திற்கு பின்னர்தான் ஏற்கெனவே புறக்கணிப்பின் முகவரிகளை தங்கள் முதுகுகளில் சுமந்திருந்த தேசத்தின் வட பகுதி, முக்கியமாய் அந்த நகரத்தின் இளைஞர்கள் தங்கள் விழிகளில் வழிந்த நீரை கரங்களினால் அல்ல துப்பாக்கி முனைகளினால் துடைத்தெடுப்பது என்கிற முடிவுக்கு வந்தனர். அவர்களில் முன்னதாகவே சிலர் இன்னொரு தேசத்தின் கொரில்லா விடுதலை போராளிகளிடம் பயிற்சி பெற்று இங்கு அப்படியொரு படையை உருவாக்குகிற முயற்சிகளில் இரங்கியிருந்த போது இந்த சம்பவம் அவர்களுக்கு மற்றவர்களை அணி திரட்ட மிகவும் சாதகமாக அமைந்து விட்ட்து. எதிரிக்கும் ஜனநாயகத்துக்கும் மனிதத்துவத்திற்கும் எள்ளலவிலேனும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதை உணர்ந்த அவர்கள் கரங்களில் இப்படித்தான் ஆயுதங்கள் அரங்கேறின. இரத்தம் சிந்தும் அரசியலாக யுத்தம் அவர்கள் மீது திணிக்கப் பட்டது.

தேசத்தின் எங்களது வட கிழக்கு பிராந்தியங்கள் முழுதும் ஒரு துவந்த யுத்த களமாகவே புணருத்தாரணம் பெற்றன. ஒரு கட்டத்தில் அந்த போர் மேகத்தை அப்படியே பேணிக் காப்பதுதான் இரண்டு தரப்பினருக்குமே வசதியாகிப் போனது. வெடி மருந்தின் நாற்றம் கலந்த காற்றும் கருகிக் கிடக்கும் தெருக்களும் வீடுகளும் அவ்வப்பொழுது வீதிகளில் அப்புறப் படுத்தப் படாத மனித சடலங்களும் எங்களுடைய அன்றாடமாகி விட்டன.

பக்கத்திலிருந்த ஒரு சிற்றூருக்கு தற்காலிகமாக இடம் பெயர்ந்த எட்டு மாத காலங்களில் என் எஜமானர் நகரத்தில் சிதைந்திருந்த வீட்டை சரி செய்து மறு படியும் திரும்பினோம். நகரம் முற்றிலுமே மாறிப் போய் அது இன்னமும் விதவைக் கோலத்தில் இருப்பதாகவே எனக்குப் பட்டது. மிகத் தேவையான காரணங்களுக்கேயல்லாமல் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்வதில்லை. சின்ன எஜமானுடன் பள்ளி செல்வதெல்லாம் கனவாகி விட்டது. நகரத்தின் பழைய பளபளப்பும் பரபரப்பும் எல்லாம் புகை மண்டிய ஓவியத்தைப் போல, தனக்குத் தானே முக்காடு போட்டுக் கொண்டு முடங்கிப் போயிருந்தது. எப்பொழுதாகிலும் மக்கள் அங்கங்கே நின்று நிலவரங்களை கொஞ்சமாய் பகிர்ந்து கொண்டு உடனே கலைந்து வீடுகளுக்கு திரும்பி விடுவார்கள். என் எஜமானர் எஜமானியம்மா உரையாடல்கள் கூட மிகவும் மெல்லிய சத்தத்தில் சுரத்தில்லாமல் சுவர்களுக்கு கூட கேட்டு விடக் கூடாது என்பதை போலத்தான். எல்லாச் சுதந்தரமும் மறுக்கப் பட்டு வீட்டின் வெளி முற்றமும் வீட்டைச் சுற்றி வருவதும் கூட வாரத்திற்கு ஒரு முறைதான் என்றாகி என் வாழ்வே அஸ்தமித்து விட்டது. தன்னை விட என் சிறிய எஜமான் என்னை மிகவும் பத்திரமாய் பாதுகாத்து வந்தான். இரவில் வெடிச் சத்தம்- விபரீதம் தெரிகிற போதெல்லாம் என்னையும் சேர்த்து இழுத்து அனைத்துக் கொண்டு கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொள்வான்.

சமரச முயற்சி என்கிற பெயரில் பக்கத்தில் இருந்த பெரிய தேசத்தின் இராணுவம் வந்து சேர்ந்தது. நகரவாசிகள் ஒரு பெரு மூச்செறிந்து இனி விடியல்தான் என்று அங்கங்கே நின்று பேச ஆரம்பித்தார்கள். அந்த ராணுவத்தின் சில அதிகாரிகள் என் எஜமானிடத்தில்வந்து பேசி விட்டு போனார்கள். என் எஜமானிடத்தில் மாத்திரமல்ல; அநேகமாக தெருவில் எல்லா வீடுகளிலும் சென்று விசாரித்தார்கள்; பார்வையிட்டார்கள். எல்லாம் சரியாகும் என்ற இந்த நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகள் எல்லாம் சில நாட்கள்தான் நீடித்தன. எந்த தேசத்து இராணுவம் என்றால் என்ன? அது இராணுவம்தான்; சொன்னதைச் செய்யும் கிளிப் பிள்ளைதான் அது; அதற்குத்தான் அது போஷிக்கப் படுவதும், போதிக்கப் படுவதும். சந்தேகத்தின் பேரில், பாது காப்பிற்காக என்ற அடிப்படையில் துவங்கிய அவர்கள் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மேலும் பகை வெடிக்கக் காரணமாயிற்றே தவிர அமைதிக்கான ஒரு வழியுமில்லை. சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இந்த நகரம் பகடைக் காயாக உருட்டப் படுவதாக கூறி இளைஞர் படைகள் இவர்களிடமும் உரச, தாக்குதலை ஆரம்பிக்க, சமாதானம் சமரசம் என்பதெல்லாம் கேள்விக்குறிகளாய் மாறின. மறுபடியும் குண்டுகள்; எறி கணைகள்; துப்பாக்கி சத்தங்கள்; இராணுவத்தின் அத்து மீறல்கள்; அடாவடித்தனமான அணுகு முறைகள். அமைதியை இனி முற்றிலுமான அழிவில்தான் தரிசிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட நகரத்தில் மறுபடியும் புலம் பெயரும் சோக நாடகங்கள் அரங்கேற ஆரம்பித்தன.

என் எஜமானர் தனது பல்கலைகழக பேராசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டார். தேசத்தின் மைய்யமான இன்னொரு நகரத்திற்கு தற்காலிகமாக குடி பெயர்ந்து பின் வெளிநாடு செல்வதான திட்டமிடலுடன் புறப்படத் தயாரானோம். எனக்கு ஒரு விதத்தில் மிகப் பெரிய விடுதலையைப் போல உணர்ந்தாலும் அவ்வளவுசமாதானம் என்று சொல்ல முடியாது.

எரிந்து கொண்டிருந்த நகரத்திலிருந்து ஒரு அதிகாலை, வேனில் ஏற்றப்பட்ட சாமான்களுக்குப் பின்னால் எனக்கு சின்ன எஜமான் வசதி செய்து தந்திருந்த இடத்தில் அமர்ந்து, விடை பெற்றேன். எனக்கு நிறைய அன்புக் கட்டளைகள் இடப்பட்டிருந்தன. ஆபத்து அதிகம் என்பதால் எக்காரணத்தை முன்னிட்டும் வேனை விட்டு வெளியே வரக் கூடாது. இரவு தங்குமிடத்திற்கு முழுக் குடும்பமும் வந்து சேர்ந்து விடுவதாக ஏற்பாடு. வழி நெடுக யுத்தத்தின் கோர தாண்டவத்தை கண்டு அதிர்ந்து போனேன். ஆயுதங்களினால் மாத்திரம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நடத்தப்படும் சமரில் மனிதர்கள் எல்லா தர்ம நியாயங்களையும் காற்றில் பறக்க விடுகிறார்கள். பள்ளிகூடங்கள், மருத்துவ மனைகள், கும்பிடும் கோவில்கள், பூத்துக் குலுங்கும் பூங்காக்கள் என அழிவும் நாசமும் எதையும் விட்டு வைக்க வில்லை. காணச் சகியாமல் நான் உள்ளே முடங்கிக் கொண்டேன். இரண்டொரு முறை மேலே விர்ரென்று சென்ற எரிகனைகள், துப்பாக்கிச் சத்தங்கள், பத்து கிலோ மீட்டருக்கு இடையிலான சோதனைச் சாவடிகள், கேள்விகள், விளக்கங்கள் என்று ஒரு வழியாக நானும், ஒட்டுனர் போக என் எஜமானரின் நம்பிக்கைக்குரிய இருவருமாய் இரவு தங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

பாதிச் சோர்வும் மீதி பயணக் களைப்புமாய் உறக்கத்தில் கழிந்தஇரவுக்குப் பின்னர், விடியல் முகத்தை என் நாசிகளில் ஏற்றி, முன்னங்கால்கள் இரண்டையும் முன்னுக்குத் தள்ளி சோம்பல் முறித்து துள்ளி எழுந்து என் எஜமானர்களை தேடினேன். திட்டப் படி அவர்கள் இரவே வந்திருக்க வேண்டும். வந்திருந்தால் என் சிறிய எஜமான் என்னிடம் வந்திருப்பானே? என்ன ஆயிற்று? ஆனால் வேன் புறப்படத் தயாரயிருந்தது போல் தோன்றியது. அவர்கள் மூவரும் வேனை விட்டுத் தள்ளிநின்று ஏதோ பேசுவதும், திரும்ப ஒருவர் உள்ளே போய் திரும்ப அவர்களிடம் வந்து விவாதிப்பதும் தெரிந்தது. ஆக என் எஜமானர் குடும்பம் வரவில்லை; அது உறுதியாகி விட்டது. ஏமாற்றமும் லேஸான திகிலும் தொடர்ந்தஎரிச்சலுமாய் நான் பரபரப்பானேன். ஆனால்வேன் நகரத் தொடங்கியது. எனக்குள்ளே சில சந்தேகங்கள்; தொடர்ந்த பயணம் எனக்கு உடன் பாடுமில்லை; பிடிக்கவுமில்லை. என் எஜமானர் குடும்பம் இல்லாத நாட்களா? என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. பெரிய தூரமில்லை; திரும்பிப் போகலாம். எஜமானர்கள் கோபப் பட்டலூம் வருத்தப் பட்டாலும் சமாளிக்கலாம்; ஆனால் என்ன என்று தெரிய வேண்டும். போயாக வேண்டும். தீர்மானித்து விட்டேன். மேலே சாமான்களுக்கு மேல் அந்தமனிதர் அரை மயக்கத்தில் இருந்தார். ஒரு நாற்காலியின் காலில் சுற்றப் பட்டிருந்தஎன் சங்கிலி ஏற்கெனவே பயணத்தின் மேடு பள்ள குலுக்கல்களின் உபயமாக வெளியே வந்திருப்பதை பார்த்தேன். புறப்படுவது எளிதாயிற்று. அடுத்து வந்ததிருப்பத்தில் தெரிந்த புதரை நோக்கி பாய்ந்து ஓசைப் படாமல் சுருங்கிக் கொண்டேன். வேன் போய்க் கொண்டிருந்தது. நான் விடுதலையாகியிருந்தேன். புதரின் ஓரத்தில் நிதானித்தேன். சங்கிலி ப்ரச்னைதான். முன்னங்கால்களை நன்றாக நீட்டி குனிந்து ஒரு காலால் சங்கிலியை எடுத்து என் கழுத்தில் சுற்றினேன். ஏழு எட்டு சுற்றுகளுக்கு மேல். சங்கிலியின் முனையை வாய்களில் பற்றிக் கொன்டேன்; புறப்பட்டேன்.

என் வாழ் நாட்களிலேயே சவால் நிறைந்த பயணம்தான். ஆபத்துகளை நான் எதிர் நோக்கியிருந்தேன்தான். சாலையின் ஓரங்களிலிருந்த மரங்கள் கூட குண்டுகளால் துளைக்கப் பட்டு அலங்கோலமாகியிருந்தன. நாலு கால் பாய்ச்சல் என்பது முழு பயணத்திலும் சாத்தியப் படவில்லை. பல சமயங்களில் தன் இரையெடுக்க ஊர்ந்து நகழும் சர்ப்பத்தைப் போல புதர்களூக்கூடே தரையோடு தரையாய் போராட வேண்டியிருந்தது. வந்த வழியின் தடம் தேடுவது எனக்கு ஒரு பெரிய விஷயமேயில்லை; ஆனால் பாதையெங்கும் மரணம் தன் கோர முகம் விரித்து வைத்து காத்திருந்தது. எச்சரிக்கையாய் நிதானமாய் சாத்தியப்பட்ட வேகத்தில் தீவிரித்தேன். தெருவோரத்தில் வீசப்பட்டிருந்த பிஸ்கட் துண்டுகள் வழியில் குறுக்கிட்ட ஒரு வாய்க்கால்நீர் என்று பசியாற்றி தொடர்ந்தேன். சோதனைச் சாவடிகள் எல்லாம் சோதனை நிமிடங்கள்தான். அவைகளை சுற்றி வளைத்து வந்து தப்பித்தேன். வாகனங்கள் அணிவகுத்து காத்துக் கிடப்பதுதான் சோதனை சாவடியை தவிர்ப்பதற்கான அடையாளம்.

அப்படியும் ஒரு சாவடியில் ஒரு இராணுவ வீரன் திணவெடுத்துப் போய் தன் துப்பாக்கியால் என்னைக் குறி வைத்தான். என் அதிர்ஷ்டத்திற்கு கிடைத்த பள்ளத்தில் குதித்துத் தப்பித்த போது குண்டு என்னை தாண்டி மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருதைச் சீண்ட அது உச்ச ஸ்தாயியில் அலறி ஓடி விழ அந்த களேபரத்தில் அரைக் கிலோ மீட்டர் தாண்டி தப்பித்து விட்டேன். தேசத்தின் பிரதானமான நெடுஞ்சாலையில் உயிர்கள் படும் பாடு இது.யுத்தம் அவனுடைய உயிருக்கு எந்தஉத்தரவாதத்தையும் தராத போது ஒரு இராணுவ வீரனுக்கு இன்னொரு உயிரின் அருமையோ பெருமையோ அர்த்தமோ புரியாமல் போவதில் வியப்பதற்கு ஏதுமில்லைதான். வசதியாய் ஊர்ந்த ஒரு திறந்த வேனில் பாய்ந்து தொற்றிக் கொண்டு அடுத்த சோதனைச் சாவடி வரும் வரையிலான என் பயண நேரத்தை குறைத்துக் கொண்டேன்.

எங்கள் நகரம் நெருங்க நெருங்க புகை மண்டலமும், நாற்றமும் வெடிச் சத்தமும் தொடர்ந்து அலறிய வண்னம் இருந்தன. தலைக்கு மேல் விர் விர்ரென்று எறி கணைகள் பறந்த வண்னமிருந்தன. சாலைகளில் அதிகமாய் இராணுவ நடமாட்டமே தவிர மக்களின் அசைவு என்பது வெகு அரிதாகவேயிருந்தது. நகரில் நுழையும் முன் நிதானித்தேன். பிரதான வீதியை விட்டு சாலையின் பக்கத்து சந்துகளில் புகுந்து தீவிரித்தேன். முந்திய இரவில் மிகப் பெரிய இரத்த ஒத்திகை நிறைவேறி முடிந்திருப்பது என் நாசிகளில் எகிறியது. அநேக வீடுகளின் முன் பக்கக் கதவுகள் குண்டுகளால் துளைக்கப் பட்டு சிதைக்கப் பட்டிருந்தன. பாதி வீடுகளுக்கு மேல் மக்கள் நடமாட்டத்தின் அறிகுறியே இல்லை. திகில் என்னைச் சூழ்ந்தது. நகரின் அந்த முக்கிய கோயிலைக் கடக்கும் போது அதன் மண்டபமும் முற்றமும் கொள்ளாத அளவுக்கு அங்கே ஜனக் கூட்டம் முகத்தில் அறையப்பட்டக் கலவரத்துடன் நெருக்கிக் கொண்டு அமர்ந்திருப்பதும் அவர்களைச் சுற்றி துப்பாக்கிகளுடன் இராணுவ வீரர்கள் அரணாய் நிற்பதும் என் கண்களில் பட்டது. இரண்டு மூன்று நிமிஷம் நின்று தீவிரமாய் முகர்ந்து பார்த்தேன். பிடி கிடைக்க வில்லை. இன்னும் பாதுகாப்பானதூரத்தில் சுற்றி நெருங்கி சுற்றி சுற்றி வந்து எஜமானரின் முகம் தேடினேன். இதற்குள் பரிச்சயமான அசைவுகளைக் கொடுத்திருப்பார். எனவே வீட்டைநோக்கி விரைந்தேன்.

வழியில் எந்தநடமாட்டமும் இல்லை. எஜமானரின் வீடு உட்பட அநேக வீடுகளில் இருந்து எரிந்து தணிந்த தீயின் புகை இன்னமும் மேலெழும்பி படர்ந்து கொண்டிருந்தது. ஒரு கார் இன்னமும் வீதியோரமாக நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் முன் கதவு விரியத் திறந்து கிடந்தது. கதவின் அருகிலிருந்த ஜன்னல் சிதறி நொறுங்கி சுவரில் ஒரு பெரிய விரிசல் விழுந்திருந்தது. நான் பயந்திருந்த சம்பவம் நடந்தேறி முடிந்து விட்டிருந்தது. ஹாலுக்குள் மெதுவாய்ச் சென்று நிதானித்தேன். என் வலது புறச் சுவரில் தெறித்துக் காய்ந்திருந்த இரத்தக் கறைகள்; கண்களில் நீர் முட்ட கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் சுவரை பிறாண்டினேன். “சீஸ் – சீஸ்” சத்தம் எங்கிருந்தும் கேட்கிறதா என்ற நப்பாசையில் காதுகளை விடைத்துப் பார்த்தேன். ஏமாற்றத்துடன் ஒரு பெரிய குரலையெழுப்பிய நான் இப்பொழுதுதான் தரையைப் பார்த்தேன். அந்த நிலமெல்லாம் இரத்தம்தான்.

எல்லாம் முடிந்ததா? இல்லை இந்த போராட்டத்தின் மறு பக்கம் இனிதான் ஆரம்பமா? தரையை முகர்ந்தேன்; எழுந்தேன்; நிமிர்ந்தேன்; உடலை ஒரு சிலிர்ப்பு சிலுப்பினேன்; இந்தஇமைப் பொழுதில் இப்பொழுது நானும் ஒரு இராணுவ மிருகம் ஆகிவிட்டேன். உறும ஆரம்பித்தேன். இரத்தம் எங்கே? என் எஜமானனின் இரத்தமும் சதையும் எங்கே? இது வரையிலும் நான் அன்பும் பண்பும் பாசமும் பொழியப் பட்டிருந்த செல்லப் பிராணிதான்; இப்பொழுதுதான் நான் ஒரு மிருகம்; வெறி பிடித்த மிருகம்; முகர்ந்தேன் – இரத்தம் சமையல் அறையின் நடுவாக இழுக்கப் பட்டு பின் வாசல் வழியாக உடைக்கப்பட்டச் சுற்றுச் சுவர் தாண்டி சந்தின் வழியாக – நான் தொடர்ந்தேன், எப்படியும் என் எஜமானரை பார்ப்பேன். எப்படியாய் பார்ப்பேன்? ஓட ஓட கோபமும் வெறியும் தலைக்கேற தெருவில் தெரிந்த ஒரு பெரிய வாகனத்தின் டயர் தடத்தை முகர்ந்து தொடர்ந்தேன். வீதியிலிருந்து பல்கலைக்கழகத்தின் பக்கமாய் விரிந்து பரவும் மைதானத்திற்குள் நுழைந்தேன்.

பெரிய மைதானத்தின் ஒரு பக்கம் முழுதும் இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். நேர் எதிராக பல்கலைகழகத்திற்குள் நுழையும் மைதானத்தின் வாசலையொட்டி திரள் கூட்டம் மக்கள் அமர்ந்திருந்தனர். அந்தக் கூட்டத்திற்கும் கூடாரங்களுக்கு மத்தியிலுமாக நான் பாய்ந்தோடினேன். ஏழெட்டு மனித சடலங்கள்; அவற்றிலிருந்து இடைவெளி விட்டு சற்று தனியாக – ஒடிப் போய் சுற்றி சுற்றி வந்தேன். பெரு மூச்சும் அழுகையும் கோபமுமாய்; “சீஸ் – சீஸ்” என்று என்னை செல்லமாய் அழைக்கும் சின்ன எஜமானனின் செல்ல முகம் சிறிது சிதைக்கப் பட்டு – முகர்ந்து முகர்ந்து பார்த்தேன்; நாக்கால் பாதங்களை நக்கி விட்டுப் பார்த்தேன்; இரத்தம் உறைந்து போன வெறும் சதைதான் என் சின்ன எஜமானன் என்று தெரிந்த போது சுருண்டு விழுந்து புரண்டு அழுவதை தவிர வேறென்ன செய்ய? எழுந்தேன்; அழுகை கரகரத்து கரைந்தது – ஆனால் வெறி?

என் அழுகையய்யும் ஆர்ப்பாட்டத்தையும் கூக்குரலையும் கேட்டு ஒரு கூடாரத்திலிருந்து ஒரு ஜவான் வந்தார். கீழே குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து என்னை அவர் விரட்ட முனைந்தபோது நான் அவரை நோக்கி பாய்ந்தேன்: அவர் சுதாகரித்துக் கொண்டு என்னைத் தவிர்த்து தன் சக வீரர்களுக்கு அபயக் குரல் எழுப்பினார். பாதித் தூங்கியெழுந்த கண்களுடன் கைய்யில் ஒரு சிறு கம்புடன் ஒரு இளம் இராணுவ வீரன் “போ- போ” என்று எரிச்சலுடன் விரட்டினான். நான் நிதானித்தேன்; சற்றே பின் வாங்கினேனேயொழிய – அவனை தீர்க்கமாய் பார்த்தேன் – காதுகள் விடைத்தேன் – சற்று முன்னேறி உறுமலுடன் முகர்ந்தேன் – என் யுத்த சன்னதம் அவன் முகத்தில் எழுப்பிய கலவர ரேகைகளை கவனித்தவாறெ இன்னும் முகர்ந்தேன். அவனுடைய பாதத்தருகே இராணுவச் சீருடையின் கீழ் மடிப்பில் இரத்தம் – இன்னும் முகர்ந்தேன் – அதே இரத்தம் – என் பிரிய சின்ன எஜமானனின் இரத்தம் – இரத்த வெறி பிடித்த பேயே இப்பொழுது எனக்குத் தேவை உன் இரத்தம் – அத்தனை கோபத்தையும் உள் வாங்கிய வெறியில் ஒரே பாய்ச்சலில் – இப்பொழுது அவனது கழுத்தின் இரத்தம் என் வாய்க்குள் வந்திருந்தது. அவன் தடுமாறிக் கீழே விழுந்தான். பிடித்த பிடியை விடாமல் நானும் அவனோடு விழுந்தேன். அவனுடைய மரண அலறல் மைதானத்தைய்யே நிரப்பியது. நான் விடுவதாக இல்லை. எல்லாம் முடிந்தால் இவனும் முடிய வேண்டும் – நான் விடுவதாக இல்லை.

என்னுடைய ஏழெட்டு நிமிட தாக்குதலின் களேபரத்திற்கு பின் என் வயிற்றுக்கு மேல் விர்ரென்ற சத்தத்துடன் சூடாக உணர்ந்தேன். இப்பொழுது என்னுடைய இரத்தம். இன்னும் ஒரு சூடு. அதற்கும் சிறிது பின்தான் என் பிடி விலகியது. மரண அவஸ்தையில் வீறிட்டு அடங்கிக் கொண்டிருந்த என் எஜமானனின் பலியை மற்ற வீரர்கள் ஒரு ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு ஓடினர். என் எஜமானனின் உடலை விட்டு தள்ளியிருந்த மக்கள் கூட்டத்தில் பாதிப் பேர் எழுந்து நின்று என்னுடையஇந்த உக்கிர சம்ஹாரத்தில் உறைந்திருந்ததும் என் செல்ல எஜமானனின் பட்டுப் பாதங்களும்தான் நான் கடைசியாகப் பார்த்தது. சிறிய காற்றெழுப்பிய புழுதி என் காயங்களையும் கண்களையும் மூடியது.

சீஸரின் இறுதி யுத்தம் இன்று நடந்திருந்தால் அது இதற்குள் “ வாட்ஸப்பில்” வடிவெடுத்து வைரலாகியுருக்கும். இன்றைக்குக் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளுக்கு முன் சீஸர் தன் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த போது “வாட்ஸப்பும் “ இல்லை; அண்ட்றாய்டும் இல்லை; ஐஃபோனும் இல்லை. என்றாலும் நெஞ்சை உறைய வைத்த சீஸரின் சமரை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு பத்திரிகை ஒரு ஓரத்தில் தனக்கேயுரிய ஏகடிய வார்த்தைகளில்“யாழ்ப்பாணத்தாரின் நாய்கள் கூட வஞ்சம் தீர்க்கின்றன “என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *